இறுக்கத்தின் முடிச்சை
லாவகமாக
அவிழ்த்து வீசுகிறது
ஒரு கேள்வி
,
மங்கல வீட்டின் மகிழ்வை
விசும்பலாக
உருமாற்றி விடுகிறது
ஒரு கேள்வி
,
பிள்ளைகளின் பேருவகையை
காட்டுக் கூச்சலாக்கி
காதுகளைப் பிளக்கிறது
ஒரு கேள்வி
,
மகிழ்ச்சி பூத்துக் கிடந்த
வீட்டின் அறையை
மௌன மடமாக்கி விடுகிறது
ஒரு கேள்வி
,
ஒரு கேள்வியில்
மத்தாப்பின் படபடப்பும்
மெல்லப் பூக்கிறது
வெடிகுண்டின் அகங்காரமும்
தலை தூக்குகிறது
,
கேள்வி முளைக்கும் இடத்தில் தான்
தீர்வுக்கான விடையும்
தென்படுகிறது
,
கேள்வி உயராத இடத்தில்
அறியாமையே
ஆளுமை செய்கிறது
,
பிள்ளைப் பருவத்து கேள்விகளில்
நிரம்பி வழிபவை
தேடல்கள்
,
முதிர் பருவத்து கேள்விகளில்
முகம் காட்டுபவை
அனுபவங்கள்
,
இரண்டுக்கும்
இடைப்பட்ட காலங்களில்
தனக்குத்தானே
கேட்டுக் கொள்ளும் கேள்விகளும்
அவைகளுக்கு
தானே கண்டு கொள்ளும்
பதில்களும்
விசித்திரமானவை
வாழ்வில்
விலக்க முடியாதவை.
00

“இலையளவு நிழல்” “புன்னகையின் நிறங்கள்” என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
வார, மாத இதழ்களில் தொடர்ந்து எனது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.