கவிதையை வாசிப்பதென்பது கவிஞனின் மனநிலையோடு உரையாடுவதல்ல.கவிதையின் மனநிலையோடு உறவாடுவதே ஆகும்.
கவிஞனின் மனநிலைதானே கவிதையாகிறது என்றாலும் கவிதையைப் புரிந்துகொள்ள கவிஞனைப் பற்றிய புரிதல் அவசியமாகாது ; அதற்கு ஒரு வாசகன் மெனக்கெட வேண்டியதில்லை.
ஏனெனில்,
நவீன கவிதை, புரிதலுக்கு எழுதியவனைவிட வாசிப்பவனையே அதிகம் சார்ந்திருக்கிறது. அப்படியென்றால் எழுதப்பட்ட கவிதைக்குக் கவிஞனுடனான உறவு ஏதுமில்லை என்பதாகிவிடாது.
ஆனாலும், நவீன கவிதையில் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவை மேலாண்மை செய்யும் உரிமை கவிஞனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அதேசமயம், ஒரு கவிஞனின் கவிதையைத் தொடர்ந்து படிக்கும் வாசகன், கவிதையோடு கவிஞனையும் பின்தொடரத்தான் செய்கிறான்.
கவிஞனது இயல்பு சிறுகச்சிறுக அவனுக்குப் பிடிபடத் தொடங்குகிறது.
நாளாக நாளாக கவிதை, நன்கு தெரிந்த ஒருவரின் மொழியாக உருமாறுகிறது. அந்த மொழி ஒரு வாசகனுக்கு உவப்பாகவே இருக்கவேண்டும் என்பதில்லை. முரண்பட்டும் அமையலாம். ஆனாலும்,
அம்மொழி, முரண்பாடும் உடன்பாடும் இணைந்த ஓர் வாதையாக வாசகனைத் தொடர்வது பற்றியே இக்கட்டுரை பேச விழைகிறது.
ஒரு வாசகன் இறுகப் பற்றியிருக்கும் ஒரு நம்பிக்கையின் பிடியை ஒரு கவிஞன் மிக நாசூக்காக வலுவிழக்கச் செய்யும் கவிதையின் இயல்பு பற்றியும் இக்கட்டுரை பேச விழைகிறது.
கவிஞன் தான் வாழும் சமூகத்தில் ஓர் அங்கமானவன் என்றாலும் சமூகத்தின் பெரும்பான்மைக் குணங்களோடு முரண்படுவதே கவிஞனின் இயல்பாக இருக்கிறது. அதனாலேயே அவன் கவிஞனாகவும் இருக்கிறான். சமூகத்தோடு முரண்படுவதென்பது ஒரு புதிய அல்லது மேம்பட்ட சமூகப் பண்புகள் எனக் கவிஞன் கருதுகின்றவற்றின் மீது கொண்டிருக்கும் பற்றுதல்தான்.
இங்கு ஒரு பெரும்பான்மைச் சமூக நம்பிக்கைக்கு எதிர்நிலையில் தம்மை நிறுத்திக் கொண்டு வாசகனுடன் விவாதிக்கும் கவிஞர், நம்பிக்கையின் மீது வாசகன் கொண்டுள்ள பற்றை, பகை உணர்வு தோன்ற முன்வைக்காமல், வாசகனுக்கு ஒத்த மனநிலையில் நின்று பேசிப்பேசி, அவனது மனச்சமநிலையைக் குலைப்பதோடு, இன்னெதென்று சொல்ல விடமுடியாத ஒரு வாதையையும் தந்துவிடுவதையே இங்குப் பேச முயல்கிறேன்.
நான் நேரடியாகவே விசயத்திற்கு வந்துவிடுகிறேன். கவிஞர் ஞானக்கூத்தனின் கடவுளைப் பற்றிய கவிதைகளும், இறை நம்பிக்கையுள்ள ஒரு வாசகனின் மனப்போராட்டமுமே இங்கு விவாதிக்கப்படுகிறது.
கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதைகளில் அடிக்கடி கடவுள் தென்படுகிறார். கடவுளுக்குக் ‘ கடவுள் ‘ என்ற முக்கியத்துவத்தை அக்கவிதைகள் தருவதில்லை.
உலகின் இதய ஸ்தானமென்று சிவனடியார்கள் கருதுகிற தில்லையில், உலக உயிர்களின் வாழ்வுக்காக ஓயாது நடனமிடும் சிவபெருமான், கவிஞரின் எழுது மேசையில் வைக்கப்பட்ட பொருள்களோடு தானும் ஒருவராக ஒரு ஓரமாக நின்று ஆடிக்கொண்டிருக்கிறார்.
( மேசை நடராசர்)
கவிஞர் கடவுளைப் பொருட்படுத்தாதவராக இருக்கிறாரே! என மனம் சங்கடப்படுகிறது. கவிஞர் தனக்கு எல்லாம் ஒன்றே என்கிறாரோ? எல்லாவற்றையும் ஒரே தன்மையில் வைத்துப் பார்ப்பது ஆன்மிகத்திற்கும் பகையான ஒன்றல்லவே என்று மனம் சமாதானப்படுகிறது.
/ எத்தனைக் கைகள்
கடவுளுக்கு இருந்தாலும்
அவற்றில் இரண்டு
மனிதா உன்னுடையவைதாம்/
( யார் கை?)
என்கிறார். கவிஞருக்குக் கடவுளின் மீதான நம்பிக்கையைவிட மனிதர்கள் மீதான பிரியம் அதிகம் என்று எண்ணிக்கொண்டேன்.
/ குட்டித் தவளைகள்
விளையாடும் சாலையில்
காசிக்குப் போகும் பயணியே
பார்த்து நட /
( இரண்டு பாதைகள்)
என்கிறார். கண்ணுக்குத் தெரிந்த உயிர்களிடத்துச் செலுத்தும் அன்பே, அகம் மட்டுமே உணரும் ஆண்டவனை அடையும் வழி என்பது எனக்கு ஒன்றும் முரண்பாடாகத் தெரியவில்லை. “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுவதும் “,1
“நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”2
என்பதும் நம் மரபில் உள்ளவைதானே என மனம் நினைக்கிறது.
/ எங்கும் கடவுள் இருக்கிறார். உண்மைதான்/
என்கிறார். கடவுள் இருப்பதை ஒத்துக்கொள்பவராகத்தான் கவிஞர் இருக்கிறார். அப்புறமென்ன? என மனம் நினைக்கிறது.ஆனால்,
/ மண்ணில் நாம் இருக்கிறோம்
நல்ல வண்ணம் வாழ/
/ விண்ணிலும் கடவுள் இருக்கிறார். அங்கே
இருப்பதால்தான் கடவுளாய்
அவர் இருக்கிறார்/
( நல்ல வண்ணம் வாழலாம்)
என்று சொன்னதும் நமக்குக் கவிஞரின் மேல் கோபம் கோபமாக வருகிறது. மண்ணிலிருக்கும் மனிதருக்கு கடவுளால் பயனில்லை என்று கருதுகிறாரே? என நாம் நினைக்கும் முன்பே
/ ஒன்றும் அறியாமல் ஒன்றும் உணராமல்
ஒன்றாய் இருப்பதும்
ஏதுக்கடி குதம்பாய் – அவர்
ஒன்றாய் இருப்பதும்
ஏதுக்கடி/ ( ஏதுக்கு)
என்று அதை உறுதிப்படுத்துகிறார். ‘எல்லாம் அறிந்தவன் ; எதையும் உணர்ந்தவன் என்று நம்பும் இறைவனைக் கீழிறக்குகிறாரே? கவிஞர் சொல்வது
“ஏகன் அநேகன்” 3 என்பது போலவும் தெரிகிறது ; “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இலாருக்கு ஆயிரம் திருநாமங்கள் பாடி” 4 என்பது போலவும் இருக்கிறது.ஆனால் இரண்டும் இல்லாதது போலவும்தெரிகிறது.
கடவுள் இருக்கிறார் எனச் சொன்னவர் இப்போது இல்லை எனவும் சொல்கிறாரே என மனம் கலவரமடைகிறது.
கடவுள் இருப்பதாகச் சொன்ன கவிதைகளை இன்னும் கூர்ந்து பார்க்கும்போதுதான் புரிகிறது.அவர் மாற்றிமாற்றிச் சொல்லவில்லை. ஒன்றையேதான் உறுதியாகத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.அதன் தொனி ‘ கடவுள் இருக்கிறார் ‘ என்பதல்ல ;
‘ இருப்பதாகச் சொல்லப்படுபவர்’ என்பதே. இப்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவர்மேல் கோபம் வருகிறது.
/ திண்டுக்கல் எத்தனை தூரமென்று
செங்கல்பட்டில் தெளிவாய்க் கூறும்
உனது தீர்க்கதரிசனம்
பரதெய்வம் காணுமோ
இதுவும் தெய்வமா என்று
கேட்பவர் கேட்கட்டும்மைல்கல்லே
எனக்குக் கண்ணில் நீ மகாலிங்கம்
ஆனால் கொஞ்சம் சப்பட்டை/
( தொலைகாட்டிக்கல்)
என்று மைல் கல்லைக் கவிஞர் கடவுளென வணங்குவதைப் பார்த்து இதென்னடா கூத்து? கவிஞருக்குக் கொஞ்சம் மனப்பித்தோ? என எண்ணி நகைத்தால், ‘கல்லில் உருவமான கடவுளால் ஒன்றும் பயனில்லை , பயனைத் தரும் கல் எதுவானாலும் தெய்வம் என்கிறார்’ என்று கவிதையின் பொருள் முன்வந்து நிற்கையில் வரும் கோபம் கொஞ்சநஞ்சமல்ல.
அப்படியானால் உருவமாக்கி வணங்கப்படும் எந்தச் சாமியையும் இவர் பொருட்படுத்தமாட்டாரோ என நினைக்கையில்
/ மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்புக் கணபதியை
எனக்குப் பிடிக்கும்.
ஏனெனில்,
வேறெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க? /
என்கிறார். எல்லோருக்கும் கடவுளைப் பிடிப்பதற்குக் காரணம் ஒன்றாகவே இருக்கையில், கவிஞரோ உடைக்க ஒப்புக்கொள்வதால் கணபதியைப் பிடிக்கிறது என்கிறாரே?!
கணபதியைக் கரைக்கத்தானே செய்வார்கள். உடைக்கமாட்டார்களே?!
தென் மாவட்டங்களில் முளைக்கொட்டுத் திருவிழாவின் கடைசி நாளில் அம்மனைத் தண்ணீருக்குள் பூரிக்கச் (கரைக்க) செய்வதுதானே வழக்கம்!?
கி.ராஜநாராயணன் தம் ஊரில் நடந்த அம்மன் திருவிழா பற்றி வேறுவிதமாக எழுதியிருக்கிறாரே!அம்மனைச் செய்து சப்பரத்தில் ஏற்றி வணங்கித் திருவிழா கொண்டாடிய பிறகு ஊர் எல்லையில் கொண்டுபோய் சப்பரத்தின் கம்புகளை உருவி அம்மனை அடிஅடியென்று அடித்துச் சல்லிசல்லியாய் நொறுக்கிவிட்டே ஆண்கள் வீடு திரும்புவார்கள் என்பாரே! அதுபோல பிள்ளையாரையும் அடிக்கும் வழக்கமும் கிராமங்களில் உண்டே! கவிஞரோ கரைக்கும் கணபதியை உடைப்பதாக எழுதியிருக்கிறாரே?
ஓ! இது அரசியல் கவிதையா?விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து கரைக்கிறேன் என்ற பெயரில் பெரிய விநாயகர் சிலைகளை உடைத்துக் கடலில் வீசுவதைத்தான் கவிஞர் நையாண்டி செய்கிறாரா! ஆக, இதிலும் கணபதியைப் பிடிக்கும் என்று கவிஞர் சொல்வதும் நையாண்டிதானா? கவிஞர்மேல் கோபம் கூடிக்கொண்டே போகிறது.
பகுத்தறிவு பேசும் தமிழ்க்கவிதைகள் வழக்கமாகக் கடவுளை அணுகும் தன்மையிலிருந்து விலகி, சமூகத்தின் ஆகப் பெரிய நம்பிக்கையை நக்கலும் நையாண்டியுமாக தன் கவிதையில் வைத்துச் செய்கிறாரே? சரி சரி. பகுத்தறிவுக் கவிதைகளில் இது ஒரு பாணி, கடவுளை மறுக்கும் நவீன கவிதையின் புதிய மோஸ்தர் எனக் கடக்க முற்படும் போது,
கவிஞரின் இந்தக் கவிதை முன்னுக்கு வந்து நிற்கிறது.
/ பக்தர்களுக்குப் பெயர் மறந்துபோன
ஒரு தெய்வம் நள்ளிரவில் தயங்கித் தயங்கி
வீதி தோறும் நடக்கிறது.
எந்தக் கோயிலிலும் தனக்கொரு சன்னதி
இல்லை என்று தெரிந்து கொண்ட
அந்தத் தெய்வம்
கோயில்களில் வீற்றிருக்கும்
சக தெய்வங்களை ஆதங்கத்துடன்
எண்ணிப் பார்க்கிறது.
விசாரணையின்போது வீட்டில்
இல்லை என்பதால் பதிவேட்டில்
நீக்கப்பட்ட பெயர்போல
அதன் பெயர் ஆகிவிட்டது.
கோயிலை விட்டு தான் வெளியே
வந்ததைப் பற்றி அதற்கு ஞாபகம் இல்லை.
தனது பெயரைத் தனது மனதில் தேடும்
அந்தத் தெய்வம் ஒரு
வீதி முனையில் உட்கார்த்திருக்கிறது./
( கிரக தேவதை)
கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்கிறேன்.கவிதை கைவிடப்பட்ட பெரியவர்களைப் பேசுகிறதா? தெய்வத்தைத்தான் பேசுகிறதா?தெய்வங்களும் கைவிடப்படுகின்றனா? ஆம்! ஆம்! என
குரல்கள் ஒலிக்கின்றன.
வளமான தமிழ் நிலத்தின் பெருங்கடவுளாகக் குறிக்கப்படும்
விண்ணரசு ஆளும் ஆயிரம் கண்ணோனான இந்திரனே முதலில் வருகிறான்.
பனைக்கொடியும் பால்நிறவண்ணமும் கொண்ட பலராமனும் முந்தியடித்துக்கொண்டு பின்னால் நிற்பது தெரிகிறது. வாசகனான எனக்கு மட்டும்தான் தெரிகிறார்களா? கவிஞர் அவர்களைக் காணவில்லை என எண்ணுகிறீர்களா? தவறுதவறு,
கவிஞரின் ‘ பிரஜாபதியின் திரும்பாத ஜீவன்கள்’ கவிதையைப் படித்தீர்களா?
மனம் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகிறது. கடவுளை மறுக்கும் கவிஞன் என நான் கொண்டிருந்த கோபம் கணப்பொழுதில் மறைந்து, கவிஞனின் கையைப் பிடித்துக்கொள்ளத் தோன்றுகிறது. கடவுளைப் பேசும் வேறு எவருக்கும் இல்லாத, தொலைந்த கடவுள்களைப் பற்றி, கடவுளை மறுக்கும் ஒருவர் பேசுகிறாரே! இதை என்னவென்பது?
காலமாற்றத்தில் பெருங்கோயில் தெய்வங்களின் புகழுக்கு மத்தியில் மறக்கடிக்கப்பட்டு, சிற்றூர்களின் பொட்டல்காடுகளில் கைவிடப்பட்ட தெய்வங்கள் வரிசையாக நினைவில் வந்து நிற்கின்றன.
/ அந்தத் தெய்வம் ஒரு
வீதிமுனையில் உட்கார்ந்திருந்தது/
என்ற வரிகள் மனத்தைப் பிசைகின்றன. மன்னனும் மனைவியும் மாய்ந்த பின்பும் அடங்காத சினத்தால் மதுரை மாநகரை எரித்துவிட்டு,
குற்றவுணர்வுடன் மதுரை வீதிகளில் நிலைகொள்ளாமல் நடந்து திரிந்த, கணவனை இழந்த கண்ணகியிடம் பேசி, அவளைச் சாந்தப்படுத்திய மதுராபதித் தெய்வம் வேறு இந்த வரிகளில் நினைவுக்கு வருகிறது. கைவளையல்களை உடைத்தெறிந்து விட்டு மேற்கு நோக்கிக் கண்ணகி கிளம்பிப் போன பின்பு, தன்னந்தனிமையில் தன் காவல் நகருக்கு நேர்ந்த குற்றமும் தண்டனையும் குறித்து ‘வீதி முனையில் உட்கார்ந்து’ மனம் கசிந்த அந்த மதுரைத் தெய்வமும் நினைவுக்கு வருகிறது. நள்ளிரவில் கிராமத்துத் தெய்வங்கள் ஒன்றுகூடிக் கிசுகிசுக்கும் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்துவிடுகிறேன். ஒரு கவிதை இப்படிச் செய்யலாமா?
இதாவது பரவாயில்லை. மனதைக் கலங்கத்தான் வைத்தது.ஆனால், புத்தியை பேதலிக்கச் செய்தது, பின்வரும் இந்தக் கவிதைதான்.
என் உளம் நிற்றி நீ
———————————-
எங்குத் திரும்பினாலும் நிற்கிறார்கள்
கொடுத்த கடனைத் திரும்பக்
கேட்கும் தெய்வங்கள்
நான்கு கைகளில் ஒன்றைக்கூட நீட்டாமல்
பார்வையைக் கொண்டே
தா என்கிறார்கள் அவர்கள்
என்ன கடன் வாங்கினேன். எதற்கு
வாங்கினேன்.எந்தப் பிறவியில் வாங்கினேன்
என்பதெல்லாம் ஞாபகம் இல்லை.
கொடுத்த கடனின் விவரங்கள் சொல்ல
அவர்களும் மறுக்கிறார்கள்
கோயில் தொடர்பான ஓசைகள் கேட்டால்
எனக்குக் கடன்தான் ஞாபகம் வருகிறது.
முத்துப் பல்லக்கில் தெய்வம்
ஊர்வலமாக வந்தால் எங்கேயாவது
ஓடி ஒளியலாமா என்று நினைக்கிறேன்
தீபம் ஏற்றினேன் /
தெய்வம் யாருக்குக் கடன் கொடுத்தது.
வாழ்வை வரமளிப்பதல்லவா தெய்வம்.
நாம்தானே தெய்வத்தின்முன் இரந்து நிற்போம். எங்கும் தெய்வம் இரந்து நிற்கிறது என்கிறாரே கவிஞர்?!
‘ நீ உலகம் எல்லாம் இரப்பினும்’ 5 என்றாளே ஈசனின் அம்மை.
அப்படியா இது?
இப்படி ஒரு மனப்பித்து கவிஞருக்கு ஏன் வந்தது?
பக்தி என்பது இங்கு கொடுத்தல் – வாங்குதல் என ஆகிவிட்ட நிலைதான் காரணமா? தெய்வங்கள் கடன்காரர்கள் ஆகத் தெரிவது பதிலுக்குப் பதில் என்ற நேர்ச்சை வழக்கம்தானா?
அடிப்படைப் பக்தியோ, ஆழ்ந்த பக்தியோ எல்லாமே இங்குக் கொடுப்பதும் பதிலுக்கு ஒன்றைக் கேட்டுப் பெறுவதுமாகத்தானே இருக்கிறது!
பொருளோ, அன்போ, முக்தியோ எல்லாம் இங்கு ஒன்றை வைத்து ஒன்றைப் பெறுவதாகத்தானே இருக்கிறது. கவிஞர் இக்கவிதையில் மெய்யடியராகவே தோன்றுகிறார்.
தெய்வத்தின் மீதும் சமர்த்த அன்பையே விரும்பும் ஞானப் படிநிலை அல்லவா இது ! தெய்வத்தைச் சரியாகக் காணாத மனிதர்களை நோக்கி, தெய்வத்தை கண்ட ஒருவர் காட்டிட முயல்வதைப்போல் அல்லவா இது இருக்கிறது.
“———————————கைதொழுது காண்பார்க்கும் காணலாம் காதலாற் – காண்பாருக்குச் சோதியாய் சிந்தையுளே தோன்றும் ” 6
மெய் உணர்வு ததும்ப, ‘தீபம் ஏற்றினேன்’ என்றே கவிதை நிறைவு பெறுகிறது. கவிஞரும் வாசகரும் ஒன்று கலந்துவிட்ட உணர்வாகவே அத்தீபம் ஒளிர்கிறது.
மணி மீனாட்சிசுந்தரம்.
உதவிய நூல்கள் :
———————————
1. ஞானக்கூத்தன் கவிதைகள்,
( முழுத் தொகுப்பு )
பதிப்பாசிரியர் : திவாகர் ரங்கநாதன்,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001
2.கி.ரா( தொகுதி -2 ) சிறுகதைகள்,
நாடகங்கள், அன்னம் பதிப்பகம்,
தஞ்சாவூர் – 613007.
கட்டுரைக் குறிப்புகள்
—————————————-
1- திருவருட்பா – வள்ளலார்
2-திருமந்திரம் – திருமூலர்
3,4 -மாணிக்கவாசகரின் வரிகள்
5,6 – காரைக்கால் அம்மையார் வரிகள்.
000
ஞானக்கூத்தனின் பார்வையில் இருந்த கடவுள், மணி.மீனாட்சிசுந்தரம் ஐயாவின் பார்வையில் உள்ள கடவுள் கேள்விக்குட்படுத்தல் நல்ல ரசனை. சிறப்பு ஐயா. வாழ்த்துகள்