ஸ்ரீரங்கத்தில்  ராஜகோபுரம் எவ்வளவு புகழ்பெற்றிருக்கிறதோ அதே அளவு புகழ் கொண்டது தெற்குவாசல். உண்மையில் ராஜகோபுரத்துக்கு முன்பே  எழுபது வருடங்களுக்கு மேலாகவே தெற்குவாசல் பிரபலமானது.   மொத்தமே அரைகிலோமீட்டர் தான். சாலையின் இருபக்கமும் உப்பு மிளகாய்கடையிலிருந்து மாவுமெஷின் மளிகைக்கடை பாத்திரக்கடை துணிக்கடை பூக்கடை ஹோட்டல்கள் என சகலகடைகளும் கொண்ட  கடைத்தெரு தான் தெற்குவாசல்! எழுபதுகளில் இளம்பெண்கள் கோயிலுக்குப்போகிற சாக்கில் தெற்குவாசல் கடைகளில் உலாபோவது வழக்கம்.

ரங்கவிலாஸ் ஹோட்டலில் ரவாதோசை காபி சாப்பிடாமல் நானும்  வைஜெயந்தியும் வீடு திரும்பியதில்லை. ஹோட்டல் என்றால் பெரிதாக ஹால் டேபிள் மேலே மின்விசிறி சர்வர்கள் என கற்பனை செய்துவிடவேண்டாம். தெற்குவாசல் போகிறவழியில் வருகிற நாலுகால்மண்டபத்தை ஒட்டிய உள்ளடங்கிய இடம்.காரை பெயர்ந்த தூண்கள்கொண்ட ஒரு பழைய நாள்வீடு. பெரிய கூடம். அதில் அழுதுவடியும் இருபதுவாட்ஸ் பல்பு, ஆஸ்பித்திரிபெஞ்சுகள் போலநான்கு கன்னியர்கள் அமர்ந்தால் முனகும்.அதையொட்டி மர நாற்காலிகள். சுவரோ மேக் அப் இல்லாத நடிகைகள்போல காட்சி அளிக்கும். கூடத்தை ஒட்டிய சமையற்கட்டில் பங்கஜம் மாமி அவள்பெண் செஞ்சுலஷ்மி அவள்தம்பி நரசிம்மன் என்கிற நச்சு. கூடத்து நுழைவுப்பகுதியில் ஊதுபத்தி மணக்க  அரங்கர்படத்துடன்,கல்லாப்பெட்டியில் ஆராமுது மாமா.காலை 7முதல்  காலை11 மணிவரை மட்டுமே தோசையும் காபியும் கிடைக்கும் அப்புறம்  ஹோட்டலை மூடிவிடுவார்கள். பக்கவாட்டில் ஒரு சின்னக்கதவுமட்டும் வீட்டு வாசற்படி நிலைக்கதவோடு திறந்திருக்கும். வீட்டுச்சூழ்நிலை என்பதால் அந்த நாளில் எங்களைப்போன்ற இளம்பெண்களுக்கு பாதுகாப்பு என ரங்கவிலாஸ் ஹோட்டலுக்கு மட்டும் எங்கள் வீடுகளில் அனுமதி.

   ஆராமுது மாமா தான்முதலாளி.மாமி டிபன்காபி பொறுப்பு. அந்தஹோட்டலின் விசேஷம் எப்போதும் ரவாதோசை எப்போதும் காபிதான் வேறு டிபன் பானங்கள் கிடையாது.

பங்கஜம் மாமிக்கு என்மீது அலாதிப்பிரியம். அப்பா எழுத்தாளர் என்பதால்  அவர் கதைகளின் ரசிகையாம். எனக்கு மட்டும் ரவாதோசையை கூடுதல் முறுகலாய்ப்போடுவாள். வைஜெயந்தி அதற்கு முறைப்பாள். காபி திக்காய்  நல்ல பசும்பாலில் மணக்கமணக்க தருவாள்.அந்த பித்தளை டவரா டம்ளரின் பாத்திர வாசனையோடு அப்போது அரைத்துப்போட்ட காபிப்பொடியின் மணம் நாசியில் நுழைந்து மனசில் தங்கும்.
”மாமி… நான் மட்டும் மஹாராணியா இருந்தால் இந்தகைக்கு தங்கவளைபோடுவேன்” என்பேன். மாமி தன் கவரிங் வளையைவருடியபடி சிரிப்பாள்.. ஏழ்மையிலும் மாமியிடம் ஒரு வசீகரம் இருக்கும். தொழிலில் நேர்மையும் இருக்கும்.

ஆயிற்று கல்யாணமாகி நாற்பதுவருஷம்! கல்லூரிக்குள் நுழையும்போதே  அப்பாவிற்கும் வேறு ஊர் மாற்றலாகிவிடவும் ஸ்ரீரங்கம் பக்கம்  வரவே இல்லை.திருமணமாகி அமெரிக்கா போன எனக்கு இப்போதுதான் இந்த  அறுபது வயதில் ஸ்ரீரங்கம் எட்டிப்பார்க்க வேளை வந்திருக்கிறது. கணவரும் புத்திரபாக்கியங்களும் வழக்கம்போல் அமெரிக்காவை விட்டுக்கிளம்பவில்லை.

காரை அம்மாமண்டபக்கரை ஓரம் தங்கிய ஹோட்டலிலேயே  விட்டுவிட்டு காலை ஏழுமணிக்கு எழுந்துகுளித்து இதோ நடக்க ஆரம்பிக்கிறேன்.

நெற்றிப்பொட்டில் சில வியர்வை முத்துக்கள். ஒரு கிலோமீட்டருக்கு மேல்  துரிதநடை தந்த பரிசு. காவல் நிலையம் தாண்டியதும் கண் எதிரே  ப்ரும்மாண்ட ராஜகோபுரம் ’என்ன இப்போதான் வழி தெரிஞ்சுதா?’ என்று கேட்டது,

காலைநேர பள்ளி சிறார்கள் சீருடையில் சிட்டாய் பறந்து கொண்டருந்தனர். ஸ்ரீரங்கம் மெயின்ரோட்டிலி௫ந்து மெயின்கார்ட் கேட்  திருச்சி ஜங்ஷன் செல்லும் பிரதான சாலையில்தான் எத்தனை மாற்றங்கள். வாசன் மெடிக்கல்ஸ், ரோஸ்கலர் வாட்டர் ஒன்றையே எல்லா  வியாதிக்கும் எப்போதும் தரும் டாக்டர் சேஷன் (கோபக்காரர் ஆகவே அல்சேஷன் என்று நாங்கள் சொல்லிக்கொள்வோம்) க்ளினிக்  சின்ராசு நாட்டு மருந்துக்கடை, ஆண்டாள் போட்டோ ஸ்டூடியோ. எல்லாம் காணாமல் போய்விட்டன. ஜெராக்ஸ் கடைகள் போன் கடைகள், ஸ்வீட் கடைகள்,, பங்களா மாடல் வீடு என அவை உருமாறி விட்டன. ராஜகோபுரம் எதிரில் காந்தி (சிலை) மட்டும் அதே சிரிதத முகத்துடன்  தெரிந்தார்.

நல்ல காபிக்கு நாக்கு ஏங்கியதால் கால் ரங்கவிலாஸ் ஹோட்டல் நோக்கி  விரைகிறது. ஹோட்டல் இருக்குமா அதுவும் காணாமல் போயிருக்குமா  என நினைக்கும்போதே தெற்குவாசல் சாலையில் வலப்பக்கம்  மாவுமெஷின் சத்தம் கேட்கிறது. (ஓனர் மாமா வேஷ்டியெல்லாம் மேலே வெறும் உடம்பெல்லாம் அப்போது மாவு அப்பியிருக்கும்) அருகில்  வாசலில் கொட்டை எழுத்தில் ’ரவாதோசை, காபி ரெடி ’என்ற அறிவிக்கும் (அதேஉடைந்த) மரப்பலகை.

கடைக்குள் நுழையும்போது கல்லாப்பெட்டியில் ஆராமுதுமாமா சுவரில் மாட்டியிருந்த ரங்கனுக்கு ஊதுபத்தி புகையை காண்பித்துக் கொண்டிருந்தார். உள்ளே பால் கொதித்துக்கொண்டிருக்கும் வாசனை.. அதே மரபெஞ்சு.கிழவிக்கு மேக் அப் போட்டமாதிரி அசட்டுபிசட்டு ரோஸ் கலர் வர்ணம் அடித்த சுவர். ஒரு நொண்டி பூனை மியாவிக்கொண்டு சமையற்கட்டுக்கும் கூடத்துக்குமாக வலம் வந்துகொண்டிருந்தது. பரிச்சயமான பூனைபோலும். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.   பெஞ்சில் இலை போட்டுப்பரிமாறிய ரவாதோசையை  சாப்பிட்டுக்கொண்டிருந்த பழுத்தபழமான ஒருவர்,” பங்கஜம் ….  வெளியூர்க்காரா வந்திருக்கா.. ஆராமுது வழக்கம்போல பரப்ரும்மம்.. ஹ்ம்ம்.. நீ சமையற்கட்டை விட்டு வந்து கவனியேன்” என்றார்..

பங்கஜம் மாமி ஓடிவந்தாள் கையில் தோசை துடுப்புடன். என்னைக்கண்டதும்,”மைதிலியா நீ? ஆள்மாறவே இல்லையேடி …கொஞ்சம் வெயிட்போட்ருக்கே ஆனா மத்தபடி அப்படியே இருக்கே…இப்பதான் மாமி ஞாபகம் ஹோட்டல் ஞாபகம் எல்லாம் வந்துதா?” என்று அன்பும் உரிமைகலந்த கோபமுமாய் கேட்டாள். எழுபத்தி ஐந்துவயது இருக்கும். ஆனாலும்  ஒடிசலான உடம்பும் அந்தப்புன்னகையும் மாமியை  அடையாளம் காட்டின.

”நீங்களும் மாறலயே மாமி..அதே  சிரிப்பு” என்றேன். பரஸ்பரம் பேசிக்கொண்டதும் அதே சுவையான மொறுமொறு தோசை மணக்கும் பித்தளைடம்ளரில் காபி.

“ஏன் மாமி ஹோட்டல் விரிவுபண்லயா எல்லாம் அப்டியே இருக்கே?”

“இல்லம்மா.. நச்சு இருபதுவருஷம் முன்னாடி விபத்துல போய்ட்டான் செஞ்ச கல்யாணம் சரியா அமையல.. ஆத்துக்கு வந்துட்டா…கைல பணம்  புரளவே இல்ல..ஏதோ வர்ரது இப்படி வாழத்தான் சரியா இருக்கு..  எல்லாம் ரங்கன் செயல்னு போயிண்டு இருக்கோம்… அதுகிடக்கட்டும்.. எத்தனை நாள் ஊரில் இருக்கப்போறே?”

“இன்னிக்கும் நாளைக்கும் மாமி..”

“அப்படின்னா நாளைக்கும் கார்த்தாலை இங்கே வந்துடு..ரவாதோசை காபி  உனக்குப்பிடிக்குமே?”

“கண்டிப்பா வருவேன். ஊர் வந்ததே பெருமாள் சேவிக்கறதைவிட  உங்க கையால சாப்பிடத்தான்..நாளைக்காலை வந்துடுவேன்…”

சாப்பிட்ட பில் தொகையுடன் மாமிக்கு அன்பளிப்பாக ஐநூறு ரூபாய் நீட்டினேன் மாமி சிரிப்புமறையாமல், ”நாளைக்கு நீ சாப்பிடவந்து சாப்டதுக்கு பணம்கொடு போதும்” என்றாள்..

“நீங்க மாறவே இல்லை மாமி”

“மாறிட்டேனே..அப்பல்லாம் போன் பேசவே தெரியாது  இப்ப செல்போன்லாம் பேசக்கத்துண்டேன். உன் நம்பர் சொல்லேன் குறிச்சிக்கறேன்..”

மாமியிடம் விடைபெற்று மறுபடி தெற்குவாசல் வழி  கோவிலுக்குப் போகுமுன்பு வீதிகளை சுற்றிப்பார்க்கும் ஆவலுடன் நடக்கிறேன்.

ஊர் மாறிவிட்டது.

தெற்குவாசலை ஒட்டிய சித்திரைவீதிகளில் ஒரு காலத்தில் குடுமி வைத்த மாமாக்கள், மடிசார் மாமிகள் இருந்த தெரு. இப்பொழுது அரை ட்ராயர் போட்டுக்கொண்டு, ஐபோனில் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மாமாக்கள். நைடீசுடன் சிலமாமிகள்.

மார்கழி மாதம், நவராத்திரி நாட்களில் வீதிகள் களைகட்டும். கோலங்களும் பஜனைகோஷங்களுமாய் கலகலப்பாக இருக்கும். தேர்த்திருவிழா நாட்களில் ஸ்ரீரங்கத்து ஹீரோக்கள் வடம் பிடிக்கவும் எங்களைபோன்ற இளம்பெண்களின் மனங்களில் தடம் பதிக்கவும்  செய்யும் சாகசங்களைப்பார்க்கவேண்டுமே ஆஹா!

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு என அறிவுக்கு எட்டுகிறது. ஆனால் மனதோ ஏற்க மறுக்கிறது. எண்பதுகளின் இறுதியில்  விட்டுச்சென்ற ஊரை மனம் தேடித்தேடி சென்றது,

ஹாண்ட் பாக்கில் செல்போன் குரல்கொடுத்தது.

“மைதிலி. எங்க இருக்கே ஊர் வரபோறதா மெசேஜ் போட்டு இன்னும் என் வீடுவரலயாடி?  நான் இங்கயே பொறந்து இங்கயே வாழ்க்கைப்பட்டு இருக்கேன், மங்கம்மா நகர்ல வீடு அட்ரஸ் வாட்ஸ் அப்ல அன்னிக்கே  போட்டுட்டேன். மறந்துடாதே ஹோட்டல் அது இதுன்னு தங்காமல் மரியாதையா இங்கவந்து தங்கணும்.. அமெரிக்கா அளவு இல்லேன்னாலும் ஓரளவு வசதிதான். நாளைக்கு முழுக்க நாம் திருச்சி சுத்தப்போறோம். உங்க அமெரிக்காமாதிரி திருச்சிலயும் மால் நெறய வந்தாச்சு..நாளைக்கு உன்னை அதுலஒண்ணு அழைச்சிட்டுப்போகனூம்னு என் ஹப்பி சொல்றார். அங்க ஒரு ஹோட்டல்ல பூரிமசால் காபி உன்னை சொர்க்கத்துக்குக் கூட்டிப்போகும் வாடி அங்க போகலாம்..”

வைஜெயந்தியின் உத்தரவை மீற முடியாது. அம்மாமண்டபத்தில் தங்கி இருக்கும் ஹோட்டல் விலாசம் கேட்டு நேரே வந்தவள் அதட்டலுடன்   மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் இருக்கும் அவள் வீட்டிற்கும்  என்னைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். நாள் முழுவதும் பேசியே பொழுது ஓடிவிட்டது

மறுநாள் காலை எட்டுமணிக்கு காரில் திருச்சிக்கு வருகிறோம். வழியில்  அகண்டகாவிரி ஆடிமாதம் என்பதாலோ என்னவோ நீர்பொங்கிவழிந்து கணப்பட்டது.

திருச்சி சிங்காரத்தோப்பும் சின்னக்கடைவீதியும் கலகலவென்று கண்ணைக்கட்டுகின்றன. வைஜெயந்தி சொன்ன ரெஸ்டாரண்டில் பூரிமசால்காபி சாப்பிட்டு பழைய நினைவில் ”மைக்கேல்ஸில் ஐஸ்க்ரீம்டி” என்றேன்.

“என்னடி நீ…அமெரிக்கவாசியாகியும் பாஸ்கின்ராபின்ஸ் ஐஸ்க்ரீம்  கேட்காம என்னடி நீ..” என அங்கு அழைத்துப்போனாள்.

ஸ்ட்ராபெர்ரிஐஸ்க்ரீம் ..

அதை சுவைத்துக்கொண்டிருக்கும்போது..

எனக்கு போன்வருகிறது. செல்லை எடுத்துப்பார்க்கிறேன். பங்கஜம் மாமிதான்.

“ஹலோ மாமி?”

”ஹலோ மைதிலி.. இன்னிக்கும் வரேன்னு சொன்னியே. மணி எட்டுலேருந்து காத்துண்டு இருக்கேன்… 11மணி ஆச்சேம்மா.. கடை மூட்ற நேரம்,,முறுகலா ரவாதோசை காபி சாப்பிட  வரயா..” குரலில் அன்பு குழைகிறது. 

“இல்லமாமி. வெளி வேல கொஞ்சம். வரமுடியுமான்னு தெரியல.” என்றேன் சற்று குற்ற உணர்வோடு.

“ஆமாமாம்… வெளிநாட்டிலேருந்து வந்திருக்கியே.. நிறைய பேரைப்பாக்கணும்..பேசணும் இல்லையா…ஆனா  மைதிலி, நம்மஊர் முன்போல இல்ல…நிறைய பேர் மாறிட்டா” என்று போனை வைத்தாள்.

’மாறியது  யார்’ என்று மனசு கேட்கிறது.

ஐஸ்க்ரீம் நாக்கில் கசக்க ஆரம்பிக்கிறது.

***

ஷைலஜா.

இயற்பெயர் மைதிலிநாராயணன். ஸ்ரீரங்கத்து மண். கணவர், மற்றும் இரண்டு மகள்கள். தற்போது வசிப்பது கோவையில். இதுவரை 400 சிறுகதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன். 12  நாவல்கள் வந்துள்ளன. பாடல்கள் பல நான் எழுதுவதை இசை அமைத்து எங்கள் குடியிருப்பில் பாடுகிறார்கள்.

அப்பா ஏ.எஸ்.ராகவன் எழுத்தாளர். சித்தப்பா மகன் இந்திரா சௌந்தர்ராஜன்..

கல்கி அமுதசுரபி தினமலர் கலைமகள் இலக்கியபீடம்  குவிகம் மாத இதழ் பெங்களூர் தமிழ்ச்சங்கம் இணையப்பத்திரிகைகள், அமெரிக்கதென்றல் இதழ் முதலியன நடத்திய   நாவல், குறுநாவல்,சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன். விகடன் நடத்திய பவழவிழாப்போட்டியில் 30000 ரூ என்  படக்கதை தொடருக்குப்பெற்றது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சி. விளம்பரப்படம் குறும்படங்களுக்கு குரல்கொடுத்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவின் கையினால் பெங்களூர் நாடகவிழாவில் சிறந்த நடிகை விருது வாங்கினேன். திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு உரை நிகழ்த்துகிறேன்.. கலகலப்பான குடும்பப்பெண்மணி.

மற்ற பதிவுகள்

One thought on “மாறியது யாரோ!

  1. பிறந்த ஊர் விட்டு வேறு ஊர்/நாடு சென்று வருடங்கள் தாண்டி மீண்டும் தன் ஊர் மண் வாசனை நுகரும் போது கிடைக்கிற உணர்வுகள் வாசகன் நெஞ்சிலும். வார்த்தை தவறி விட்டாய் , ரவா முறுகல் தோசை காபி காக்க வைத்தாய், ஏன் ? என பங்கஜம் மாமி கேட்பது போல தோன்றுகிறது, ஊரைப் பார்த்த சந்தோஷம் போல தோழியைப் பார்த்த குஷியில் ரவா தோசை மறப்பது புரிகிறது , ஆனால் மாமிக்கு என்ன பதில் சொல்ல இயலும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *