வகுப்பறையில் தினமும் ஒரு அணுகுண்டாவது போட்டே தீர்வது என்று ஹிரோஷிமா சபதம் எடுத்திருந்தான். ஒரு நாளேனும் தவறாமல் அதை நிறைவேற்றியும் வந்தான்.
அணுகுண்டு போடுவதை கின்னஸ் சாதனைகளில் சேர்க்கக் கூடுமெனில், நிச்சயமாக இது யாராலும் முறியடிக்கப்பட முடியாத சாகசமாகவே இருக்கும். ஏனென்றால், ஆறாம் வகுப்பு முதல் எம்.எட்., முடிய, தொடர்ந்து பதினான்கு வருடங்களாக அந்த சாகசத்தை அவன் நிகழ்த்தியிருந்தான்.
அபாணவாயு – ஆரோக்கியக் குறைவு, உடல் உபத்திரவம், அஜீரணக் கோளாறு ஆகியவற்றின் விளைவு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பொதுவாக சில வயோதிகர்களும், நடுத்தர வயதினர்களுமே இந்தக் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். அரிதாக சிலருக்கு இளமையிலேயே இக் குறைபாடு நேர்வதுண்டு. எப்படியாயினும், நாற்றமில்லாத வரை அவர்களுக்கு அவதி; நாற்றத்தோடிருந்தால் அருகே இருப்பவர்களுக்கு அவதி.
அபாணம், உடல் ரீதியாக எந்த வித வலியையோ, அவஸ்தையையோ ஏற்படுத்தாவிட்டாலும், உளவியல் ரீதியாக உளைச்சல் கொடுக்கக் கூடியது. நாகரிக சமூகத்தில் நகைப்புக்கும், முகச் சுளிப்புக்கும், மூக்கைப் பொத்துதலுக்கும் உரித்தான அருவருப்புச் செயலாகவே அது இருந்துவருகிறது. சத்தம் மட்டுமாக வந்தால் மற்றவர்களின் நகைப்புக்கு மட்டும் ஆளாவோம். நாற்றத்தோடு இருந்தால் முகச் சுளிப்புக்கும், வெறுப்புக்கும், அவமானத்துக்கும் உள்ளாவோம்.
இந்த சமூக நியதிகளுக்கெல்லாம் நேர் மாறானவன் ஹிரோஷிமா. வெட்கம், மானம், சூடு, சொரணை போன்ற தன்மான உபத்திரவங்கள் அவனுக்குக் கிடையாது. சபை நாகரிகம், சபைக் கூச்சம் போன்ற அநாகரிகங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
மற்ற வட்டாரங்களில் எப்படியோ, கொங்கு வட்டாரத்தில், ஓசையுடனோ ஓசையின்றியோ நாற்றத்தோடு வெளியேறுகிற அபாண வாயு குசு என்றும், நாற்றமின்றி ஓசை மட்டுமாக வெளியேறுவது புருக்கு என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் ஹிரோஷிமாவுடையது நாற்றமில்லாக புருக்கு வகைதான். எனினும், ஊர் – உலகம் அதைக் குறையாகவே காணும். அவனோ, அதை இயற்கையின் கொடையாகவே கருதினான்.
நம்மால் செய்ய இயலாத வீர தீரங்களையும், சாகசங்களையும் செய்பவர்களையே நாம் கதாநாயகர்கள் என்கிறோம். அவ் வகையில் ஹிரோஷிமா அதிவீர பராக்கிரம நாயகன் எனலாம். காரணம், உலகம் பழிக்கிற குறையையே தனது நிறையாக்கி, சாதனைகள் புரிந்ததுதான்.
அபாணம் விடுவது அவனுக்குக் கொண்டாட்டம். அவனைப் போல அவ்வளவு உற்சாகமாகவும், அனுபவித்தும் அபாணம் விடுகிற மனிதனை வேறெங்கும் நான் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.
மேலும், அபாணம் விடுவதில் அவன் ஒரு கலைஞன். அந்த வாயுவைக் கட்டுக்குள் அடக்கி, அபாணம் விடுவதைக் கலையாக வளர்த்தெடுத்து, அதில் ஜாலங்கள் காட்டும் அவனைப் போன்ற அபாண வித்தகர்கள் உலகில் வேறெவரும் இருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
*******
சிறு வயதிலிருந்தே தனது அபாணத் திறமைகளைக் காட்டி அவன் செய்த சாகசங்களும், வீரப் பிரதாபங்களும் சொல்லி மாளாது.
எங்கள் எலிமென்ட்ரி சோட்டாளிகளில் மற்றவர்கள் மானசீக பைக்கை ஓட்டுவதற்கு ஹேண்டில் பாரைப் பிடித்திருப்பது போல கைகளை வைத்துக்கொண்டு, காலால் பாவனைக் கிக்கரை உதைத்து, ‘டுர்ர்ர்’ரென வாயால் ஒலியெழுப்பியபடி, எக்ஸலேட்டரை முறுக்கி ஒடுவோம். ஹிரோஷிமாவோ, “நீங்க வாயிலதான்டா ஸ்டாட் பண்றீங்கொ? நாம் பாரு எப்புடி ஸ்டாட் பண்றன்னு” என்றுவிட்டு, கால் தூக்கி கிக்கரை உதைத்ததும், ‘டர்ர்ர்…’ரென்று பொறத்தாண்டி சத்தம் கிளம்பும்.
அதே போல, யாரையாவது எளக்கநாட்டம் பண்ண வேண்டுமென்றால், அவர்கள் எதிரே போய் புறம் காட்டி, ஒரு காலை நாய் மோளுவது போல தூக்கி நின்று, மூஞ்சிக்கு நேராக ‘பர்ர்ர்…’ விடுவான். பெரியவர்களும் அவனது இலக்கிலிருந்து தப்ப முடியாது. நாலு பேர் கூடி நாயம் பேசிக்கொண்டிருக்கும்போது அலுங்காம பக்கத்தில் போய் ‘பர்ர்ர்’ விட்டுவிட்டு ஓடிவிடுவான். அவர்கள் காச்சு மூச்சுனு சத்தம் போட்டுக்கொண்டு டென்ஷனாவதில் அவனுக்கு ஒரு சந்தோஷம்.
விரும்புகிறபோது அபாணம் விட அவனால் முடியும். அதுவும் எப்படி? தமிழ் திரைப்பட நாயகன் வில்லனுக்கு தேதி, நேரம் குறித்து, அவனிடமோ போலீஸிடமோ சவால் விட்டுவிட்டு, பாதுகாப்புகளையும் தடைகளையும் மீறி, திட்டமிட்டபடி கொன்றே தீர்வது மாதிரி, இன்ன நேரம் – இன்ன இடம் என நிச்சயித்துவிட்டு, அப்படியே விடுவான்.
அபாணத்தில் அவன் காட்டும் வித்தைகளைச் சொன்னால்தான் அதில் அவன் கலைஞன் என்பது உங்களுக்கும் புரியும்.
அபாணம் வரப்போகிறது என்பது தெரிந்ததுமே அதை அறிவித்துவிட்டு, முன்கூட்டியே எண்ணிக்கை நிர்ணயித்து, மூன்றோ, ஐந்தோ, ஏழோ பகுதிகளாகப் பிரித்து, சில நிமிட இடைவெளிகளுக்குப் பிறகு துண்டு துண்டாக தவணை முறையில் வெளியிடுவது அதில் ஒன்று. ஒலியளவைக் கூட்டவும் குறைக்கவும் செய்வது அடுத்தது. அதைவிட அற்புதம், கையால் பொத்திப் பொத்தி எடுப்பதன் மூலம் அபாண ஓசையை இசையாக மாற்றிக் காட்டும் ஜாலம்.
எனக்கென்ணவோ இந்த சாகசங்களை விட முக்கியமாகப் படுவது, அபாணம் வரப்போகிறது என்பது தெரிந்தவுடன் அவன் அடைகிற கிளர்ச்சியும், அதை விடும்போது அவன் அடைகிற பரவசமும்தான். பரமானந்தம் என்பார்களே,… அதை அப்போது அவனது முகத்தில் காணலாம்.
மற்றவர்கள் முன்னிலையில் தனது வித்தகங்களை அரங்கேற்றுவதில் அவனுக்கு அலாதிப் பெருமிதம். அதிலும் மக்கள் கூடியுள்ள இடங்கள், சபை நாகரிகம் கடைபிடிக்கப்படுகிற பகுதிகள், புனிதம் காக்கிற தருணங்கள் ஆகியவற்றில் எதிர்பாராத அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதென்றால், அமெரிக்க வல்லரசைப் போல ஆணவத்தோடு கூடிய பெருமிதம் கொள்வான்.
*******
துவக்கப் பள்ளிக் காலத்தில் அவன் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வகுப்பில் குண்டு போடுகிறவனாக இருந்தான். உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பிறகே வகுப்பில் தினம் ஒரு குண்டாவது போட்டே தீர்வது என்கிற சபதத்தை எடுத்தான்.
என்ன காரணத்துக்காக அப்படியொரு வினோத சபதத்தை எடுத்தான் என்பது நினைவில்லை. ஆனால், அந்த சபதத்தின் மூலமும், அதைத் திறம்பட நிறைவேற்றியதன் மூலமும், வகுப்பில் மட்டுமன்றி பள்ளியிலும் ப்ரபலமாக ஆகிவிட்டான். தொடர்ந்து மூன்று நாட்கள், காலைப் ப்ரார்த்தனையிலேயே குண்டு போட்டதால் அவனது திறமை பள்ளி மொத்தத்துக்கும் அறியப்பட்டது.
ப்ரார்த்தனை நேர அபாணத்தை தேசிய அவமதிப்பாகக் கருதிய தலைமையாசிரியர், அவனைத் தனது அறைக்கு வரவழைத்து, ஒழுங்கீன நடவடிக்கை எடுப்பதற்கும், கடுந் தண்டனை வழங்குவதற்கும் உத்தேசித்திருந்தார்.
ஆனால் கொண்டைப் பிரம்பைத் தூக்கியதுமே, “சார்,… சார்…! சின்ன வயிசுலருந்தே எனக்கு இந்தப் பிரச்சனை இருக்குதுங் சார். ரெண்டு நேரம் வெளிக்குப் போவனுங் சார். உரளைக் கௌங்கு, மொச்சைக் கொட்டை, வாளக் காயி… இதெல்லாம் சாப்படவே மாட்டனுங் சார். இருந்தாலும் புருக்கு வந்துட்டே இருக்குதுங் சார். என்னென்னமோ மருந்து சாப்புட்டும் நிக்கவே மாட்டீங்குதுங் சார்…” என்று மற்ற ஆசிரியர்களிடம் போலவே கூசாமல் புளுகு மூட்டையை அவரிடமும் அவிழ்த்துவிட்டு, குய்யோ முறையோ என்று அழுகாச்சியும் பிடித்தான்.
“அடப் பாவமே…! இந்த சின்ன வயிசுலயே உனக்கு இப்புடியொரு கொடுமையா?” என்று அவரும் பரிதாபப்பட்டு தாட்டியுட்டுவிட்டார்.
உருளைக் கிழங்கு பொரியல், மொச்சைக் கொட்டைக் குழம்பு, வாழைக்காய் வறுவல் என்றால் டவுசர் பட்டனை அவுத்துவிட்டு, செங்கட்டு கட்டி, வரிந்து கட்டிக்கொண்டு வகுப்புக்கு வருவான் என்பது எங்களுக்கல்லவா தெரியும்!
சபதப்படி வகுப்பில் போடுகிற குண்டை, ஆரம்பத்தில் ஏதோ ஒரு பாடவேளையில் என்பதாகவே, வரும்போது வருகிறபடி விட்டுக்கொண்டிருந்தான். பிற்பாடு நாங்கள்தான், எங்களுக்கு ஆகாத ஆசிரிய – ஆசிரியைகளின் பாடவேளைகளில் அதைச் செய்யப் பணித்தோம். அவனும் அதை ஏற்றுக்கொண்டு, எங்கள் சார்பாக தினம் ஒரு ஆசிரியரைப் பழி தீர்த்தான். மாதாந்திர சோதனைத் தேர்வு, விடைத் தாள்கள் வழங்குதல், ப்ராக்ரஸ் ரிப்போர்ட் விநியோகம் ஆகிய தருணங்களில் அந்த துக்கங்களைக் கொண்டாடும் விதமாக சிறப்பு அணுகுண்டு ஒன்றும் அவனால் வெடிக்கப்படும்.
பள்ளிக்கூடத்தில் மட்டுமன்றி, ஊருக்குள்ளும் அவனது புகழ் கொடிகட்டிப் பறந்தது. ஹிரோஷிமா வருகிறான் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கும் எச்சரிக்கையாக எட்டடி தள்ளியே நிற்பார்கள். அவனும் கல்யாண வீடு, இழவு வீடு, கோவில் வளாகம் என்று இடம் – பொருள் – ஏவல் பாராமல், மக்கள் கூட்டத்தில் தன் மகிமைகளைக் காட்டுவான். மற்றவர்கள் சிரிக்கவும், விலகி ஓடவும் செய்தால்தான் அவனுக்குத் திருப்தி.
மேல் நிலைப் பள்ளியில் முதல் நாள், முதல் பாட வேளை. வகுப்பாசிரியர் மாணவ – மாணவிகளை வரிசையாக எழுந்து பெயர், ஊர் சொல்லச் சொல்லி அறிமுகப்பட்டுக்கொண்டிருக்கும்பதே டமாரென்று பாம் போட்டுவிட்டான். வகுப்பே கெக்கபிக்கே என்று சிரித்தது.
“மங்களமான ஒப்பனிங்! யார்ரா அந்தப் பிரகிருதி?” ஆசிரியர் கேட்க, ஹிரோஷிமா எழுந்து நின்று, “நான்தானுங் சார்” என்றான் பெருமிதமாக.
உயர்நிலைப் பள்ளி சாதனையை ப்ளஸ் ஒன்னிலும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருந்த அவன், தனது சாதனையைத் தானே முறியடிக்கும் விதமாக, ப்ளஸ் டூ வகுப்பில் தினம் இரு பாம் திட்டத்தைக் கைக்கொண்டான். வகுப்பு நாட்களில் மட்டுமன்றி, பொதுத் தேர்வின்போதும் தவறாமல் அதை நிறைவேற்றினான்.
*******
ஹிரோஷிமாவின் அபாண மகிமைகளுக்கு அதுவரை சாட்சியாக இருந்த எனக்கு, கல்லூரியில் அதைத் தொடரும் பாக்கியம் கிடைக்கவில்லை. குடும்ப ஏழ்மை காரணமாக படிப்பை நிறுத்தியாக வேண்டிய சூழ்நிலை. ஓரிரு வருடங்கள் வெட்டி ஆப்பீர் வேலை பார்த்துவிட்டு, பிறகு பல்வேறு வேலைகள், தொழில்கள் மாறிக்கொண்டிருந்தேன். அவன் அடுத்தடுத்த பட்ட மேற்படிப்புகளைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.
ஆசிரியக் கெடுபிடிகள் மிக்க பள்ளிக் காலத்திலேயே அணுகுண்டு எனது பிறப்புரிமை என அத்தனை அட்டகாசங்கள் செய்தவன், கட்டறுத்துவிட்ட கல்லூரிக் காலத்தில் செய்த சாகசங்கள் சாமானியமானதாகவா இருக்கும்? அங்கே அவன் அடித்த கூத்துகளைச் சொல்வதெனில் சிறுகதை போதாது; நாவல் எழுத வேண்டும்.
கல்லூரியில் அவனுக்குப் புது நண்பர் வட்டம், ரசிகர் வட்டம் உருவாகிவிட்டாலும், உள்ளுர்க்காரர்களான எங்களது பழைய நட்பையும் தொடர்ந்துகொண்டிருந்தான்.
அவனும், வீட்டு விசேஷங்கள் மற்றும் ஊர்த் திருவிழாக்களின்போது அவனது அழைப்பில் வருகை தருகிற அவனது கல்லூரி நண்பர்களும் சொல்வதிலிருந்து, ஹிரோஷிமா கல்லூரியிலும் ஒரு கதாநாயகனாகவே விளங்கினான், அவனது சபதமும் தவறாமல் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது என்பது உறுதியாயிற்று.
அதைவிட முக்கிய விசேஷம் என்னவெனில், படிப்புக் காலத்துக்குப் பிறகும் அவனது சபதம் ஆயுள் பரியந்தம் நீடிக்கும்படியான படிப்பை அவன் தேர்ந்தெடுத்திருந்ததுதான். ஹிரோஷிமா எம்.ஏ., எம்.எட்.,, – இப்போது ஒரு பள்ளி ஆசிரியர்.
“மிந்தி அத்தனை அட்டகாசம் பண்ணீட்டிருந்ததெல்லாம் செரீடா! இப்ப நீயி ஒரு வாத்தியாரு. க்ளாஸ்ல எப்புடி?” என்று கேட்டால், “அப்ப பெஞ்ச்சுல ஸ்டூடன்ட்டா உக்காந்து செஞ்சத, இப்பச் சேர்ல வாத்தியாரா உக்காந்து செய்யறேன். அவ்வளவுதான் வித்தியாசம்” என்பான்.
*******
கதையை இங்கே முடித்துவிடலாம் என்றால், இதை விட முத்தாய்ப்பான ஒரு சம்பவம் இருக்கிறது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஹிரோஷிமாவின் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைத் தோழனாக மணவறையில் அவனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தேன். தாலி கட்டும் வேளை, ‘மாப்பிள்ளை டென்ஷ’னோடு வேர்த்து விறுவிறுத்து, கைக்குட்டையால் அடிக்கடி முகம் துடைத்துக்கொண்டிருந்த அவன், தாலி கட்டி முடிந்ததுமே என்னைப் பார்த்துக் கமுக்கமாக சிரித்தான்.
“என்னடா?” என்றேன்.
“உனக்கும் கேக்குலயா?”
“என்னது?”
“வேறென்ன? நம்ம ஐட்டந்தேன்! நெம்ப நேரமாவே முட்டீட்டிருந்துது. உட முடியாம அடக்கீட்டு அத்தன நேரம் டென்சன்ல இருந்தன். தாலி கட்டம்போது டமால்னு போட்டுட்டன். டும்டக்கா சத்தத்துல ஆருக்குமே கேக்குல!” என்றான்.
*******
கதையை அங்கேயாவது முடித்துவிடலாம் என்றால், அதை விட அபாரமான சம்பவம் ஒன்று, நேற்று சாயங்காலம் நடந்தது.
பிரசவத்துக்காக பிறந்த வீடு சென்றிருந்த ஹிரோஷிமாவின் மனைவி, குழந்தையுடன் நேற்று புகுந்த வீடு திரும்பியிருந்தாள். குழந்தையைப் பார்க்க அண்டை அயலார் கூடியிருந்தனர். பிரசவ தினத்தில் ஆஸ்பத்திரியில் பார்த்ததற்குப் பிறகு குழந்தையைப் பார்க்கப் போகவில்லையே என்பதால் நானும் அங்கு போயிருந்தேன்.
ஹிரோஷிமா, சிசுவை என்னிடம் கொடுக்கும்போது ‘டர்ர்ர்…’ என்று சத்தம். ஹிரோஷிமாவிடமிருந்து அல்ல; அவனது கையேந்தலில் இருந்த ஐந்து மாத சிசுவிடமிருந்து – அதுவும் பெண் சிசு!
அங்கிருந்த அனைவரும் சிரிக்கக் கூட மறந்து, திகைப்பில் வாய் பிளந்துவிட்டோம்.
ஹிரோஷிமாவோ, குடிந்தையைப் பார்த்து, “நீ என் மகதான்ங்கறத ரூப்பிச்சுட்ட. உனக்கு நாகசாகின்னே பேரு வெச்சர்றன்” என்றான் பெருமிதத்தோடு.
*******

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.