ஓரான் பாமுக்கின் “கருப்புப் புத்தகம்”

மானுட சிக்கல்… காலத்துக்கும் ஒருவன் இன்னொருவனாக முயற்சிப்பதில் தான் இருக்கிறது. மானுட மர்மம் அதன் வழியே வெளியேறிதான் வாழ்வின் குறுக்கு சந்துகளை தேடுகிறது.

நான் இன்னொருவன் ஆக ஆசைப்படுவதில் இருக்கும் லௌகீகம். நான் நானாகவே இருக்க…. போராடும் சுயம். இரண்டுக்கும் இடையே மானுடன் காலத்துக்கும் மர்மம் சுமக்கிறான். ஓரடி முன்னும் ஈரடி பின்னுமாக இருக்கும் வாழ்வின் லட்சணங்கள்… கண்ணாடிக்கும் பின்னாடி இருக்கும் ரகசியம். எல்லா மனிதனுமே இன்னொரு மனிதன் ஆக தான் ஆசைப்படுகிறான். இருக்கும் இடம் எப்போதும் இயல்பாக… இன்னொருவன் இடம் எப்போதும் இச்சை. யோசிக்க… புரியும் வாழ்வின் இன்மை. யோசித்தால் தான் புரியும் இன்மையின் உண்மை.

“கருப்புப் புத்தகம்” என்று ஏன் பெயர் வைத்தார் என்று புரிபடுவதில் இருக்கிறது முழு புத்தகத்தின் முக்தி. ஓரானை அறிமுகம் செய்தது சாரு. நன்றிகள்.

ஓரான் பாமுக். என்ன பேர் இது என்று கண்டு பிடித்து இஸ்தான்புல் சென்று சேர்கையில்… நிழல் பூசி நித்திரை அற்று அலையும் ஒருவனைக் கண்டேன். அவனிடம் ஓரான் யார் என கேட்டேன். அவன் காட்டியவனை கேட்கையில் அவனும் இன்னொருவனைக் காட்டினான். கிடைத்த ஜெலால்… காலிப் ஆக ஆவதின் மர்மமே… முழுதும் படர்ந்த முள் மீது தவழும் முகத்திரை.

எழுதிக் கொண்டு போவது இயல்பு. எழுத்தை வரைந்து கொண்டு போவது தான் பாமுக். வீதியில் இறங்கி மனிதர்களின் முகம் காண். கதைகள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொல்லும் பாமுக்கின் கதை சொல்லும் பாங்கு.. பாங்குண்ட ஓங்கு. முதல் முறை திணறிய நான் மறுமுறை தான் முத்தெடுத்தேன். முத்தெடுக்க இந்தியா என்ன இஸ்தான்புல் என்ன. திரைகடல் தாண்டியும் எழுத்தெடுக்கும் இந்த சங்கு.

காலிப்பின் மனைவி ரூயா காணாமல் போகிறாள். காலிப் தேடுகிறான். தேடுவதில் ஒரு தொலைதல் தொடங்குகிறது. அவளோடு ஆசையில் திரிந்த இஸ்தான்புல் முழுக்க அச்சத்தில் தேடி அலைகிறான். இப்போது தான் ஊர் அவன் கவனத்துக்கே வருகிறது. வறண்டு போக போகும் பாஸ்பரஸ் நகரம் அவனை சல்லடையாக சலிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வழியாகவும் அவன் வேறொரு மனிதனாக மாறிக்கொண்டே இருக்கிறான். பாலத்தில் நகரும் கூட்ட நெரிசல்களில் தனித்திருக்கும் அவனுள் தான் எத்தனை எத்தனை மனிதர்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று.. ஒன்றைத் தொட்டு ஒன்று என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு காலிப். அத்தனை மனிதர்கள் இருந்தும் ஒற்றை ரூயாவை காணவில்லை. நினைத்து பார்க்கிறானா… நிஜத்தில் பார்க்கிறானா என்று குழம்பும் நொடிகளை பக்கத்துக்கு பக்கம் சிதற விட்டிருக்கும் ஓரான்… ஒரு சமயம் நம்மையே கதையை சொல்ல விட்டு விலகியும் கொள்கிறார்.

வேடிக்கை பார்ப்போரெல்லாம் மேடைக்குள் நுழைந்து நடிக்கவும் செய்யும் மாயத்தை நூல் முழுக்க நிகழ்த்துகிறது… ஓரானின் எழுதுகோல். நுட்பமும்… விளக்கமும்… நுட்பத்தில் நுணுக்கமும்.. நுணுக்கத்தில் துலக்கமும் என்று விரிவடைந்து கொண்டே போகும் பாத்திரங்களின் வாழ்வு… பிரமிப்பு. நூலின் சுமை தான் நமக்கு படையல்.

அவனையும் அறியாமல் அவன் தன் அண்ணன் ஜெலால் சாலிக் பே ஆவதற்கும் நினைத்திருக்கிறான். அதன் படிமத்தை நாம் ஆங்காங்கே எந்த வித அறிவிப்பும் இன்றி திடும்மென உணர முடிகிறது.

ஜெலால் காலிப் ரூயா மூவருமே பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் தான். ஒன்றாக விளையாடியவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். ஜெலால் “எலியட்” தினசரி பத்திரிக்கையில் ஒரு பத்தி எழுத்தாளர். அவன் எழுதாத எழுத்து இல்லை. கழுத்து இல்லாத கரப்பானாக பல தலைகளை உருட்டி பார்க்கிறது அவன் எழுத்து. அவன் முப்பது வருடங்களாக எழுதுகிறான். கொஞ்ச நாட்களாக தலைமறைவு வாழ்க்கை. மனித பயம் இல்லை. மானுட பயம் உண்டு. உள்ளொன்று தோன்றி வெளியொன்று காட்சி ஆகும் தருணங்களை அவன் நான்கு சுவற்றுக்குள்ளாகவே மறைத்துக் கொள்கிறான். அவன் முகமாய் அவன் எழுத்து தான். நகரத்துக்குள் இருந்தாலும்… ஒரு குறுகிய மாடியில் மறைந்தாற் போன்ற சிறு அறையில் ஒரு மர்மத்தின் சுவடாக அவன் வாழ்கிறான்.

அவ்வப்போது அண்ணன் ஜெலால் அறைக்கு காலிப் செல்வது வழக்கம். பத்தி எழுத்தாளனும் எப்போதும் பற்றிக் கொண்டிருக்கும் இஸ்தான்புல் நெருப்பில் இருந்து மை எடுப்பவன் தான். அதிகார வர்க்கத்தின் அட்டூழியத்தை எந்த ஊர் எழுத்துக்காரனும் எதிர்க்க தான் செய்வான். எழுதுகிறவனின் ஆரம்பம் காதலாக இருந்தாலும் அவன் நல்ல எழுத்துக்காரனாக வந்து சேரும் இடம் புரட்சியாக தான் இருக்கும். ஜெலால் துருக்கிய கிளர்ச்சிக்காரன்.

அலைபேசியில் ஜெலாலின் நீண்ட கால வாசகர்.. அலைபேசியை எடுத்த காலிப்பை ஜலால் என்று நம்பி பேசும் பேச்சுகள்… உன்னை கொலை செய்ய வேண்டும்… உன் முகவரி குடு என்று கேட்கும் நொடிகள்…. என்று எல்லாமே காலிப்- க்கு அண்ணனின் பயங்கர அனுபவத்தை உணர்த்துகிறது. ஆனாலும் அவர்களிடம்… தான் ஜெலால் தான் என்று சொல்லி பேச்சை தொடர்கையில்… இன்னொருவராக இருக்கவே ஒவ்வொரு மனமும் விரும்புகிறது என்ற அடிக்கோடிடுதல் அற்புதமாக நிகழ்கிறது. முப்பது வருடங்களாக பத்தி எழுத்துகளின் வழியாக தன்னை பதிய வைத்திருக்கும் ஜெலால்… ஒரு மர்ம முடிச்சை தினம் தினம் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். எல்லாமே பூடாகரமாக தான் எழுதி இருக்கிறான். எழுத்துகளின் இடையே குறியீடுகள் இருக்கும். வரிகளுக்கு இடையே யாருக்கோ செய்தி இருக்கும்.

எப்போதும் துப்பறியும் நாவலை படிக்கும் ரூயா… அந்த கதையில் வரும் நாயகியை… தான் தான் என்றே நம்புகிறாள். நிஷாந்தஷியை சுற்றுகையில் கூட தன்னை ஒரு சூப்பர் டூப்பர் பாத்திரமாக தான் உணர்கிறாள். அவள் மர்மம் அவளுக்கு. அது அவளுக்கு தேவையாகவும் இருக்கிறது.

ஜெலால் கூட ஜெலாலாக இருக்க விரும்பாதவன் என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. படிக்கும் நாமும் கூட ஓரான் பாமுக்காய் மாறி விடும் பக்கங்களுக்காக காத்திருக்கிறோம். மனைவி ரூயா காணாமல் போயி இரண்டு நாட்களாகி விடுகின்றன. தேடல் தொடர்கிறது. நினைவலைகள் வழியே காலிப்பின் கால்கள் நிஷாந்தஷி வீதிகளை சதா வலித்து கொண்டே இருக்கின்றன. சிறு வயது வாழ்வு.. பழஞ்சித்திரமாக அவன் கண் படும் இடத்திலெல்லாம் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அவன் காணும் முகமெல்லாம் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கின்றன. அந்த ஊரின் வாழ்வும் அந்த ஊரின் தாழ்வும் ஒவ்வொரு கண்களிலும் மினுமினுக்கிறது. ஆறு பேசுகிறது. தெரு பேசுகிறது. எல்லாமே மாறுபட்ட பேச்சு. எதிர்ப்படும் உறவுகள்.. நட்புகள் என்று அவரவர் இன்னொருவராகவே பேசுகிறார்கள். படிக்க படிக்க நமக்கும் கூட தோன்றியது. நம்மையும் கவனித்து பாருங்கள். நாம் கூட எப்போதும் இன்னொருவராக ஆகி விட தானே பெரும்பாலும் இயல்பாக கொண்டிருக்கிறோம். நான் வளர்ந்து அவன் மாதிரி ஆகிடுவேன். நான் பெரியவனாகி இவன் மாதிரி ஆகிடுவேன். நாம் நம்மை ஒரு பொருட்டாக எப்போதும் நினைப்பதில்லை. இன்னொருவனின் நிழலில் முகம் காட்டும் வாழ்வு திருட்டை வெற்றியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி கிளர்த்தி விடும் இடம் ஏராளம். ஓரிடத்தில் கதையை அப்படியே நிறுத்தி விட்டு.. இனி படிப்பவர்கள் எழுதிக் கொள்வார்கள் என்று எழுதி இருந்ததை படிக்கும் போது நாம் எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ… அப்படித்தான் இருந்தது எழுதி இருந்தது. இருட்டில் நடமாடும் வெளிச்சத்துக்கு இருட்டு தான் துணை. மனதின் திரைகளை பேசும் பத்திகள் அதிகம். மானுட ரகசிய கொக்கிகள் அவிழும் இடங்கள் உண்டு. சிந்தனையின் சித்திர நிழலை அணிந்து கொண்டு அலையும் உருவங்களை நம் போன்றே நினைக்கும் பக்கங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் கலைத்து போட்டு ஒழுங்கைத் தேடும் மானுட ஆராய்ச்சி நிறைய. ஊடுபாவும் உணர்வுகளின் மத்தியில் பழக்கத்தின் அடிப்படையில் நிகழும் நம்பிக்கையை தராசிடும் இடங்களில் நாம் யார் என்ற கேள்வி நிச்சயம்.

ஜெலாலும் காணாமல் போய் விட்டிருக்கிறான் என்று அவன் அறையில் ரூயாவைப் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா என்று தேடுகையில் உணர முடிகிறது. எப்போதும் சங்கேத குறிகளோடு பத்தி எழுத்தை எழுதுறவன் ஜெலால். அதில் ஒரு குறியீடு இருக்கும். சூட்சுமம் இருக்கும். தொடர்ந்து ஒரு நாள் கூட விடாமல் எழுதப்படும் ஜெலாலின் பத்திக்காகவே அந்த பத்திரிகை அதிகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கிறது என்பது சிறப்பு. ஜெலால் காணாமல் போன பிறகு அவனுக்கு பதிலாக காலிப் எழுதிக் கொண்டு சென்று – அவன் எங்கு போயிருக்கிறான் என்று கண்டுபிடிக்கும் யுக்திக்காக – பத்திரிகை அலுவலகத்தில் அவன் இல்லை… வரவில்லை என்று தெரிந்து கொண்டு… இதை அண்ணன் கொடுத்து வர சொன்னார் என்று சொல்லி… அண்ணன் போல தானே எழுதிய பத்தியை கொடுத்து விட்டு திரும்பி வருகையில்.. ஒரு ஜெலாலின் நடை தான் காலிப்-க்கு.

மனைவிக்கு தான் இரண்டாவது கணவன் என்ற குறுகுறுப்பு காலிப்பு- குள் தேடலை உந்தி உந்தி தள்ளிக் கொண்டே இருப்பதை அவன் ஜெலால் அறையில் அவனாடை அணிந்து கொண்டு ஜெலாலாகவே தேடுகையில் இன்னும் தீவிரமாக உணர முடிந்தது.

ஜெலால் தொடாத டாபிக்கே இல்லை. எல்லாவற்றை பற்றியும் எழுதி இருக்கிறான். எல்லா கால முக்கிய சம்பவங்களையும் அவன் எழுத்தாக்கி இருக்கிறான். எழுத்து அவனை இறுக்கி போட்டு விட்டது. அது அவனை உரிந்து உரிந்து ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. எழுதி எழுதி எழுத்துக்குள்ளாகவே தன்னை மறைத்துக் கொண்ட ஜெலால் -க்கு இந்த நூலில் முகமே கிடையாது. அகம் மட்டும் தான். யார் வேண்டுமானாலும் ஜெலால் ஆகிக் கொள்ளலாம். நான் கூட ஒரு கட்டத்தில் ஜெலால் ஆகிக் கொண்டேன். மனிதர்களுக்காக எழுதி.. ஒரு கட்டத்தில் மனிதர்களிடம் இருந்து விலகி.. தனியே ஒரு அறைக்குள் பகலும் இரவும் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் தனித்திருக்க பழகிக் கொண்டான். இஸ்தான்புல்லையே அவன் தான் ஆட்டுவிப்பது போன்ற மனநிலை அவனை கொஞ்சம் சிதைக்கவும் கூட செய்திருக்கிறது. யாரிடமும் பேச அவனுக்கு ஒன்றுமில்லாமல் போனது. தன்னிடம் பேசுவதை தான் எழுதி எழுதி பத்தி எழுத்தாக பத்திரிகைக்கு மட்டும் அனுப்புகிறான். அது மட்டும் தவறுவது இல்லை. என்று எழுத வில்லையோ அன்று அவன் உலகில் இல்லை என்று தான் புரிந்து கொள்கிறோம். அவன் இல்லாத போது அவனாக எழுதும் காலிப் மீது நமக்கு அச்சமும்.. சந்தேகமும் ஒரு சேர வருவதை தடுப்பதற்கில்லை. ஒருவன் இன்னொருவனாக ஆவதில் இருக்கும் ஆதி சிக்கல் இது.

இருப்பதிலேயே பெரும் சுமை… தான் என்பது தான். அதனால் தான் ஒவ்வொரு உயிரும் வேறொரு உயிர் மீது அன்பு செலுத்தி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. ஓரான் செய்த மாயம் பெரிது. எனக்கொன்று சொல்லும். உங்களுக்கொன்று புரியும்.

ஜெலால் அறையில் அவன் நிழலாக நடமாடும் காலிப்… அந்த இரவில் ஒரு நெடுந்தூர வாழ்வின் தலைகீழ் விதியை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். மீண்டும் மீண்டும் புதைந்து போவதில் இருக்கும் ஆக்கம் அவஸ்தை பிறகு பழகிய விளையாட்டாக மாறுவது போல அவன் தன்னை அவனாக நினைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோற்ற பிழையை நாமே உருவாக்கும் இடமும் அதுவே.

மனிதர்களுக்குள் உண்டான எண்ண பரிமாற்றங்கள்.. உறவு உரிமைகள்.. ஆழ்மன நிழல் வரையறைகள்…ஆசைகளின் அளவீடுகள்… இன்னொரு மனிதனின்பால் கொண்ட இனம் புரியாத இச்சைகள்… என்று இஸ்தான்புல் பூளோக வரைவில் நிறைந்து கரைந்திருக்கும் பாமுக்… வித்தைக்காரன். தமிழில் மொழி பெயர்த்திருப்பது பேராசிரியர் எத்திராஜ் அகிலன். பெரும் வேலையை செய்திருக்கிறார். வாழ்த்துவோம். வணங்குவோம். எதிர்பாராத வரிகள்… நேரிடையாக எதிர்கொள்ளாமல் வேண்டும் என்பதையே வேண்டாம் என்றும் வேண்டாம் என்பதையே வேண்டும் என்ற சொற்கூறுகளின் விளையாட்டு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அதை அப்படியே தமிழுக்கு மாற்றிய பெயர்ப்பு சிறப்பு.

படிப்பவனுக்கே பாதி உயிர் போய்விட்டது என்றால் படைத்தவனுக்கு.

வரிக்கு வரி வாரி விடும் நடை. கண்கள் சிமிட்டினாலும் நெற்றி வலி வந்து விடும். பெரும் தியானத்துள் செல்வதை போல தான். ஒரு முறை கண்டிப்பாக பத்தாது. வறட்சி நிறைந்த வாழ்வின் வசந்தத்தை கொஞ்சம் உற்று நோக்க வேண்டும். இரண்டாம் முறைக்கு “கருப்புப் புத்தகம்” என்னிடம் அகப்பட்டுவிட்டது. ஐம்புலன்களும் நூலுக்குள் சிக்க… பக்கம் பக்கமாய் பட்டம் பறக்க தொடங்கி விட்டது. படிக்க படிக்க எத்தனை கேள்விகள். வாழ்வின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே போவதில் இருக்கும் ஆனந்தம்… எழுதுவதற்கில்லை.

ரூயா என்ன ஆனாள். ஜெலால் கிடைத்தானா. காலிப் என்பவன் யார். இந்த இஸ்தான்புல் நாவல் இஸ்தான்புல்க்கு மட்டும் தானா. பதிலிகளின் இடம் மானுடத்தில் மையமா… மறுமையா. உடன்பாடுகளும் முரண்பாடுகளும் மாறி மாறி விசாரணைக்குட்படும் போக்கில் ஓரான் தனி ஒருவன். அவனுக்கு பதில் பாமுக் என்ற மறு ஒருவன். ஒருவனை தேடுவது என்பது இந்த உலகில் முடியாத காரியம். கிடைப்பவர் எல்லாருமே கண்டுபிடிக்கப் பட்டவர்கள் கிடையாது. கிடைத்தவர்கள். காணாமல் போனவன் திரும்ப வருகையில்… வந்தவன் காணாமல் போனவன் தானா என்று நாம் யாருமே விசாரணை செய்வதில்லை. தொலைந்தவன் கிடைத்த நிம்மதி அதற்கு வழி விடாது. கிடைத்தவனுக்கு தெரியும் கிடைத்தவன் தொலைந்தவன் இல்லை என்பது. ஒருமுறை காணாமல் போகிறவன் மறுமுறை புதியவனாகிறான். இன்னொருவனாகும் பதிலியாகத்தான் அவன் மிச்ச வாழ்வு இருக்கும்.

“அல்லாதீனின் கடை” ஒரு பாத்திரமாகவே கடைசி வரை வருகிறது. அது தான் கதையின் கடைசி முடிச்சை அவிழ்த்தும் காட்டுகிறது.

600 பக்க நாவல்… அசராமல் எதிரே இருப்போருக்கே கதவு திறக்கும். மேனா மினுக்கி ரீடிங்- க்கு செவிட்டில் அறைந்து சித்தம் கலக்கி விடும். தியானம் போல ஏந்துகிறவனுக்கு இந்த பாத்திரம் கனி கொடுப்பது நிச்சயம். தன் முகத்தை கையில் வைத்துக் கொண்டு அலையும் மானுட தர்க்கம் ஒரு மாபெரும் மர்மம். அதன் போக்கு தான் இந்த சின்ன வாழ்வு. மிச்சத்தை படித்து பாருங்கள்.

கவிஜி

மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி  கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *