சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்

ஒரு நல்ல கம்யூனிஸ்ட் இதயத்தில் இருந்து பேசுவான். மனதில் இருந்தே வெளிப்படுவான். அறிவை தேடி ஓடுவான். ஆராயாமல் எதையும் நிகழ்த்த மாட்டான். அன்பை போதிப்பான். காதலால் வாழ்வான். மற்றோருக்கும் சேர்த்து போராடுவான். மானுடம் மீட்க… இருக்கும் மௌனங்களை எல்லாம் கலைந்து கொண்டே இருப்பான். எழுதுவான்… பேசுவான்… படிப்பான்… விழித்துக் கொண்டே இருப்பான்…. உறக்கம் விடுப்பான். உன்னதம் அணிவான். உண்மையை தான் செய்வான். உள்ளத்தில் இருந்தே வாழ்வான்.

“சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்”- இந்த நூல் “தோழர் கே. பாலதண்டாயுதம்” அவர்களின் சிறைக்குறிப்புகள்.

நூலை தொகுத்து இப்படி ஓர் அற்புதமான படைப்பை நமக்கு வழங்கிய “தோழர் ப. பா. ரமணி”. அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள். பெரும்பணியை அருங்கனிவோடு செய்து விட்டார். தரமான நூல். நம் அனைவரின் கையிலும் தவழ வேண்டிய நூல்.

ஒரு நல்ல கம்யூனிஸ்ட் இந்த நூலை படித்து முடிக்கையில்… மீண்டும் தன்னை சுய விமர்சனத்துக்கு உள்ளாக்குவான். தன்னை சரி செய்து கொள்ள கிடைத்த வாய்ப்பு இந்த நூல்.

படிக்க படிக்க ஒவ்வொரு பக்கத்திலும் தோழர் பாலன் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்தது போலவே உணர்ந்தேன். பல இடங்களில் வீரம் பூத்தாலும்… சில இடங்களில் கண்ணீரும் பூத்தது தான் அவரின் உணர்வு பூர்வமான வாழ்வில் இருந்து நாம் கண்டடைந்தது. அவருள் கவித்துவம் எப்போதும் இருந்திருக்கிறது. தான் ஒரு நல்ல கம்யூனிஸ்ட் ஆக மட்டும் அவர் விரும்பவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் மேதை ஆகவும் அவர் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான உழைப்பும் அவரிடம் இருந்திருக்கிறது.

சிறையில் இருக்கையில்… ஆதங்கத்தின் சுழற்சியில்… காலத்தை வீணாக்கி கொண்டிருக்கிறோம் என்ற பரிதவிப்பு அவரை சூழ்ந்து கொண்டு அவரை தவிக்க செய்வதை புரிய முடிந்தது. தூக்கத்தையும் சோம்பலையும் தூக்கி எறிந்து விட்டு லட்சிய படைப்புகளை ஆக்க வேண்டும் என்றும் அவர் உறுதி எடுத்துக் கொள்வதில் இருந்து…சிந்தனையின் வழியே நீண்ட நெடிய பயணத்துக்கு சொந்தக்காரர் என்றும் உணர முடிந்தது. பத்தாண்டுகள் சிறையில். சிறையில் இருந்த ஒவ்வொரு நாளும் அவர் மனதின் உறுதி… கூடிக் கொண்டே போனதே தவிர துளியளவும் குறையவில்லை.

அன்பன்… சாகசன்… காதலன்… கலகன்… சிந்தனையாளன்… சீரிய தொலைநோக்கன்… சமூக விடுதலைக்கு அனுதினமும் யோசித்தவன் என்று தோழரின் வடிவங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது. மகத்துவம் அவரின் சொற்களில்… குறிப்புகளில் இருப்பது கண்டு உள்ளம் நடுங்க உணர்ந்தேன். ஆழ்ந்த சிந்தனைக்கு நம்மை இழுத்து செல்லும் போராளி. போராட்டத்தின் ஒவ்வொரு முனையிலும் தன்னலம் அற்ற பொதுவன். தன்னை தானே சுத்திகரிப்புக்கு ஆளாக்கிக் கொண்டே இருப்பது தான் ஒரு கம்யூனிஸ்ட்- ன் முதல் வேலையாக உணர்கிறார். சோம்பலற்ற கள பணியே கம்யூனிஸ கோட்பாட்டின் அடித்தளம்…என்று புரிய வைக்கிறார்.

நிறைய… நிறைய படிக்க வேண்டும்… அது தொட்டு எழுத வேண்டும்… என்ற ஆவலும் அதை நிறைவேற்ற கடுமையான மன உறுதியையும் மேற்கொள்ள அவர் தினம் தினம் முற்பட்டதை நாம் அறிகிறோம். தன்னை தானே நொந்து கொள்ளும் தருணங்களும் அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஒரு காரியத்தை நினைத்த வேகத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவல்… அது இயலாமல் போகையில்… அல்லது தள்ளி போகையில்… அது குறித்தான தவிப்பு என்று சீறிப்பாய காத்திருக்கும் தோட்டாவின் வேகம் தான் தோழர். கே. பாலதண்டாயுதம்.

மேற்கோள் காட்டுகையில் பாரின் ரதி பாரதி.. இலக்கிய பிதாமகன்கள் தாஸ்தாவெஸ்கி……டால்ஸ்டாய்…மனதின் ஆழம் வரை தோன்றி துருவி எடுக்கும்… மாயகோவ்ஸ்கி… தோழர் லெனின்… தோழர் மா சே  துங்… கசப்பு இனிப்பன் மாக்சிம் கார்க்கி…. டான் குயிட்சாட்….நம்ம பாட்டி அவ்வை… என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உலகத்தில் இருக்கும் நல்ல படைப்பாளன் யாவரையும் கற்றுணர்ந்த கல்விக்கூடம் தோழர் என்றால் மிகையில்லை. மேற்கோள்கள் வெகு இயல்பாக வந்து எழுகிறது.

உடற்பயிற்சியின் உன்னதத்தை உளமார உருகி விவரிக்கிறார். சோம்பலை போல விபத்து மானுட குலத்துக்கு வேறு ஒன்று இல்லை என்கிறார். சிறைக்குள் இருந்தாலும் ஒரு துரு துரு பர பர என சிந்தனை முழுக்க சிறகு தான். சிலிர்ப்புகள் நிறைந்த மனதின் வழியே அவர் கண்டடைய முனைந்ததெல்லாம்… மானுடம் நலம் பயக்கும் மகோன்னதம் தான். கோபம் என்றால் சிந்தனை நின்று விட்டது என்று அர்த்தம் என்று சொல்லும் தோழர்… தனக்கு வரும் கோபம் குறித்தான குற்ற உணர்வை பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறார். ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் மனிதனின் சிந்தனை… கம்யூனிஸ சித்தாந்தத்துக்குள் மிக அழகாக தன்னை பொருத்திக் கொள்ளும் என்று உணருகிறோம்.

முழு நேர எழுத்தாளன் நம் சமூத்தில் எப்படி பார்க்கப்படுகிறான்…. அவன் பாடு என்னவாக இருக்கிறது என்று போகிற போக்கில் போட்டு தாக்குகிறார். எழுதுபவன் தான் இந்த சமூகத்தின் கண்ணாடி. அதுவும் கம்யூனிஸ எழுத்தாளன் ஒரு படி மேலே சென்று இந்த பூமிக்கு பொறுப்பாளனாகவும் ஆகிறான் என்கிறார்.

“Writers are engines of the human soul” – J.V. Stalin

“A communist must master the sum of human knowledge” – V.I. Lenin

இது போல ஆங்காங்கே ஆங்கில மேற்கோள்கள் அசாத்தியமாக வந்து எழுகின்றன. அவரின் பல தரப்பட்ட படிப்பறிவு… பட்டறிவு… சுய சிந்தனை என்று ஓர் என்சைக்கிளோபீடியாவாக இருந்திருக்கிறார் என்று உணர்கையில் சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை. ஆச்சரியமாக அவ்வப்போது அவரின் அட்டைப் படத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். தீர்க்கத்தின்… தியாகத்தின் சதுரம் அவர் நெற்றியில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த கண்ணாடி வட்டத்தின் வழியே அவர் பார்க்க ஆசைப்பட்ட சமூகத்தை நானும் பார்ப்பதாக ஒரு நம்பிக்கை.  

சிறைக்குள் தனது 41 வது பிறந்த நாள் அன்று அதை யாரிடமும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்று எழுதுகிறார். அதனுள் இருக்கும் பிறந்தநாள் குறித்தான சிறுபிள்ளை தவிப்பு சில நொடிகள் வந்து போகிறது. சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று சொல்வதில் இருக்கும் தன்னம்பிக்கையில் உற்சாகம் கூடுகிறது. ஆனாலும் சிறை அவரை சோம்பலுக்குள்…மன சோர்வுக்குள் ஆக்குவதையும் அவர் உணர்ந்தே இருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளையும் அவர் குறிப்பில் எழுதிக் கொண்டே போகிறார். பொது நலனுக்காக தன் நலனை பலி கொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் மனநிலையின் திரை இப்படி மாறி மாறி அசைவதை…. அந்த மனதில் எழும் சொல்லொணா துயரத்தை…. அதையே பலமாக ஆக்குவதற்கு அவர்கள் செய்யும் முயற்சியை என்று அதி பயங்கரம் தான் தன்னலமற்றவனின் வாழ்வும் போக்கும்.

பரந்து பட்ட அறிவு… தேடல்… உள்ள மனம் அவருக்கு. படித்தும் எழுதியும் விவாதித்தும் யோசித்தும் என்று எல்லா தரப்பிலும் தன் மூளையை கூர் தீட்டிக் கொண்டே இருந்த சமூக வல்லுநன். மனைவிக்கு எழுதும் கடிதமாகட்டும்… தோழர்களுக்கு எழுதும் கடிதமாட்டும்…அதில் அவரின் இதயம் தான் பேசி இருக்கிறது. தோழர்கள் யாருக்காவது முடியாமல் இருப்பது தெரிந்தால்… அவர்களுக்கு பண உதவி செய்வதாகட்டும்… மனிதன் மற்றவர்களுக்காக வாழ்ந்த மாமனிதன்.

நூலில் பாதிக்கு மேல் கடிதங்களும்… நாட்குறிப்புகளும் தான். கம்யூனிஸ வாழ்வு குறித்த போதாமை அவரிடம் இருந்திருக்கிறது. இன்னும் இன்னும் வளமான ஆன்ம சுத்திகரிப்புக்கு உள்ளான இதயத்தை பெற்று விட தவித்திருக்கிறார்.

Self education and self modalation இரண்டும் கூடவே நடைபெற வேண்டும் என்று தன்னையே… அதற்கு சோதனை கூடமாகவும் ஆக்கிக் கொண்ட பாடன்.

Imitation is born of inferiority complex – யாரிடம் இருந்து கற்றுக் கொள். ஆனால் யாரையும் காப்பி அடித்து விடாதே என்கிறார். தீர்க்கம் ஒவ்வொரு சொல்லிலும். இயக்கமே அவரின் ஒவ்வொரு செல்லிலும்.

தனது இந்த 40 ஆண்டுகளில் பொறுமை இன்மையால். நிறைய இழந்திருப்பதாக கூறும் தோழர்… பொறுமையை லாவகமாக்கிக் கொண்டால்.. அதன் பலன் அளப்பறியது என்கிறார். உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அவர் உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறார். உள்ளூர் இலக்கியத்தில் இருந்து உலக இலக்கியம் வரை அலசிக் கொண்டே இருந்திருக்கிறார். எப்போதும் சமூகம் சார்ந்த சிந்தனை தான். நாடு பற்றிய அக்கறை தான். கேள்விகளும் யோசனைகளுமாக… சமூக அரணை தன் உடலாலும் உயிராலும் சிந்தனையாலும்… எப்போதும் கொண்டிருக்கும் தோழர்… சிவப்பு சித்தாந்தத்தின் சித்திரம். உலகத்துக்காக உயிரை விடுவது தான் கம்யூனிசத்திற்கான அழகு என்று சொல்லும் தோழர்….காலத்துக்கும் மக்களின் நாயகன் தான்.

எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம்… கற்றதை சொல்லி தர வேண்டும் என்ற எண்ணம்… இன்னும் கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தால் சென்று சேர்ந்திருக்க வேண்டிய தூரத்தை இன்னும் கொஞ்சம் நெருங்கி இருக்கலாம்… இனியாவது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு போராளிக்கான வாழ்வு பற்றிய படிப்பினை என்று… ஒவ்வொரு நொடியும் போராட்ட குணம் தான் அவர் தனக்கு தானே உடுத்தி கொண்ட ஆயுதம்.

தோழர் பாலன் ஓர் அதிசய பிறவி.. யாருக்கும் அஞ்சாத இரும்பு நெஞ்சம் படைத்தவர் – இப்படித்தான் மூத்த “தோழர் நல்லகண்ணு” அவர்கள் தன் அணிந்துரையை ஆரம்பிக்கிறார்.

வீட்டுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் சிறைச்சாலையில் அவருக்கு இருந்தது. ஆனாலும் படித்த நூல்களின் வழியே அதை கடக்கும் மனப்பக்குவம் பெற்றார். இன்னும் சொல்ல போனால்… சிறைக்குள் இருப்பவன் மனமும் உடலும் மெலியும்… ஆனால் தோழர்க்கு வலுவானது. காரணம் உள்ளே எரிந்து கொண்டிருந்த சமூகத்தின் பால் கொண்ட தீராத வேள்வி.

லெனினை பின்பற்றி தன்னை தூய்மை படுத்திக் கொள்வதாக சொல்லும் தோழர் கம்யூனிச வாழ்வின் சிறந்த வழிகாட்டி.

சிறைக்குள்ளும்… தேவையெனில் போராட தயங்காதவர். உடன் இருக்கும் சிறைவாசிகளின் மன நிலையில் நன்மை பயக்கும் மாற்றங்களை கொண்டு வந்தவர். களத்தின் வழியே தன்னை காலத்தில் நிறுத்திக் கொண்ட இந்த சிவப்பு மனிதனை கம்யூனிஸ்ட் கைகள் மட்டுமல்ல… சமூக கைகளும் கொண்டாட வேண்டும். அது தான் ஓர் உன்னத மனிதனின் தியாகத்துக்கும்…. இந்த சமூகத்தின் விழிப்புக்கும் தன் கண்களை மூட கொடுத்த தவத்துக்கும் கிடைக்கும் மகா அர்த்தம்.

++

கவிஜி

மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி  கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *