நானும் மலைச்சாமியும்

சுருளி நாய்

அவன் நாய் தான். அதற்காக இப்படியா. கழுத்தில் இருக்கும் சங்கிலி இறுக தொடங்கி விட்டது.

சங்கிலி பற்களின் வாய்… கழுத்தை கடித்து நெருக்குவதை உணர்ந்த நாய்க்கு கண்கள் சற்று பெரியதாகி… காது கூட அவ்வப்போது விடைத்து விடைத்து அடங்கியது. அவன் வீட்டுக்கு இழுக்கிறான். அது ரோட்டுக்கு இழுக்கிறது. மனிதனுக்கும் நாய்க்குமான சண்டை காலத்துக்கும் இருக்கும். அன்பே சங்கிலியாகி அரவணைப்புக்கு பதிலாக அதிகாரத்தை கழுத்தில் வளைக்கும் ஆணவத்தை அந்த நாய் எதிர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எமன் போல நிற்பவனை எலிக்குஞ்சு எப்படி பார்க்கும். அப்படித்தான் அதன் பரிதாப பார்வை.

“ஏன் பாண்டி… அத தூக்கிட்டு தான் போகலாம்ல…?”

சொன்னவரை மூடிட்டு போ என்பதாக பாண்டி பார்த்த பார்வைக்கு அவர் இழுத்துக் கொண்டிருந்த பீடியை கண்கள் மருண்டு கடைசி இழுப்பாக இழுத்து நன்றி சொல்லி நகர வேண்டியதாகி விட்டது.

அத்தனை பெரிய கைகளின் பலம் மேற்கு நோக்கி இழுக்க… அத்தனை சிறிய கழுத்து எப்படி ஈடு கொடுக்க முடியும்… கிழக்கு நோக்கி விடிய. முடியாத மூச்சு வாங்கலுக்கு சற்று விட்டு கொடுத்து தர தரவென கால்களை சுடு தரையில் சரித்து… அதே நேரம் ஈனக்குரலில் இடி விழுந்தாற் போல அடித் தொண்டையில் க்கி க்கி என கத்தியபடியே அந்த நாய் நகர்ந்த காட்சி… காணும் கண்களை திகைக்கச் செய்தது. திணறச் செய்தது.

சரி போயே தொலையலாம் என்று நினைத்து நாலைந்து அடி அந்த கருணையற்ற கனத்த தூண்களின் பின்னால் வைத்தாலும்… சட்டென என்ன நினைத்ததோ நின்று உடலை தரையோடு பின்னோக்கி இழுத்து கழுத்தை முன்னங்கால்களின் மேல் அழுத்தி அமர்ந்து விட்டது. அது வரை நீருக்குள் இருக்கும் இலகுவோடு நகர்ந்த… முத்துப்பாண்டிக்கு திக்கென வந்த கோபத்தில் திரும்பி பார்த்து ஒரு கத்து கத்தி இன்னும் வேகத்தோடு இழுக்கத் தொடங்கினான். கழுத்தை அதற்கு மேல் நெகிழ்த்த முடியாது. போக போக இறுக்கிக் கொண்டே போகும் சங்கிலிக்குள்… கழுத்தின் அளவை குறைத்துக் கொண்டே போவது அதற்கு மேல் இயலாது. மூச்சு முட்டுகிறது. மூட்டு முடங்குகிறது. திறந்த வாயில் அந்த றோஸ் நிற குட்டி நாக்கு வெளியே வந்து வந்து உள்ளே போவது… ஐயோ பாவமென காற்றும் கதறுகிறது.  

அது இருக்கற சைஸ்க்கு அதை தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டே போய் விடலாம். இருப்பதிலேயே குட்டி புசுபுசு பொமரேனியன் அவன். அவனைப் போயி மாட்டை இழுப்பது போல இழுத்து போகிறான். கிறுக்குப் பய. இவனுக்கு போயி இந்த நாயை வித்துருக்காங்க பாரு. சுருளியின் முன்னாள் வீட்டை திட்டி போனவர் இன்னும் கொஞ்சம் நின்று என்ன ஏதென்று விசாரித்திருக்கலாம். நாய் தானே என்ற மானுட சல்லித்தனத்தின் கடைசி நினைப்பு அவரை… அவர் பாட்டுக்கு நடக்க செய்து விட்டிருக்கலாம்.

மீண்டும் இழுபறி சண்டை. அவன் சங்கிலியில் பலத்தை பிரயோகிக்க… சுருளி நினைப்பின் பலத்தை கழுத்தில் கவிழ்த்த.. ஒரு கட்டத்தில் அதன் கால்கள் பலமிழந்து விட்டன. உடல் கூட துவண்டு விட்டது. நடக்காமலே இழுபட துவங்கி விட்டது. புரியாத முட்டாள் முத்துப்பாண்டி… இழுத்துக் கொண்டே சென்றான். இழு படுவது சுருளிக்கு உணரவில்லை. பொம்மையை போல தரையோடு தரையாக நகர்ந்தது வெற்றுடல். வீட்டு பக்கம் போகையில் தான் புகைக்க நின்றான். திரும்பி பார்த்தவனுக்கு அந்த நேர திகைப்பு.

தூக்கி… “ஏய்.. டாமி… டாமி….” – பெயரை மாத்தி விட்டான்- குலுக்கினான்.

மூச்சற்ற தலை தொங்கிய சுருளி.. அவன் கையில் பாவத்தின் சம்பளமாக தூங்கி கொண்டிருந்தது. அவன் ஆட்டி ஆட்டி எழுப்பினான். திக்கென நினைவு வந்த பெருங்காற்றின் வளைவு போல ராஆ… ஆஹ் என அடிவயிற்றில் இருந்து எக்கி மூச்சு எடுத்தது. ஏந்தியிருக்கும் அவன் கைகள் அனிச்சையாக அதிர்ந்தன. எடுத்தது மூச்சில்லை. கழுத்திருகிய வாந்தி. ரத்தம் ரத்தமாக கக்கியது. அதன் வெள்ளை நிற கழுத்தெல்லாம் சிவப்பு படிந்து… யாருக்கு சேர வேண்டிய பாவம் இது.

“சனியன எட்டுநூறு ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து வீணா போச்சு….” புலம்பியவன் முகத்தில் பிசாசு தாண்டவம். சுழித்துக் கொண்ட நெற்றியில் மனிதத் தன்மையற்ற பாவனை. புதைக்க கூட இல்லை. தூக்கி ஓடும் ஓடையில் வீசி விட்டு சந்திரிகா பீடியை டவுசருக்குள் இருந்து எடுத்து பற்ற வைத்து இழுக்கத் தொடங்கினான். அவன் காப்பிக்கொட்டை கண்களில் சுருளியின் கடைசி கதறல் உக்காந்து உக்காந்து நகர்ந்திருக்க வேண்டும். அவன் ஓடையையே வெறித்து நின்றான்.

கொடூர காட்சியை துப்பறியும் படம் பார்ப்பது போல பார்த்த சிறுவர்கள்… அவன் திரும்பி முறைக்க ஓடியே விட்டார்கள்.

நானும் மலைச்சாமியும் 

***********************************

நானும் மலைச்சாமியும் அமைதியாக அமர்ந்திருந்தோம். அவன் பேச்சில் இன்னும் அனலடித்த மூச்சை உணர முடிந்தது. நான் தூரத்தில் தெரிந்த அந்த மொட்டை பாறையை பார்த்தபடியே நிலை குத்தியிருந்தேன்.

சிறுத்தை பிடித்து போனதாக தானே எனக்கு சொன்னார்கள். இது இத்தனை கொடூரமாகவா நடந்திருக்க வேண்டும். கண்கள் சிமிட்டுவதை மறந்திருந்தேன். சுருளி என் மடியில் புரண்டு கழுத்தில் புகுந்து கொள்ள முயற்சித்து வாலை ஆட்டி ஆட்டி உடலை நெளித்து நெளித்து… வளைந்து உருளும் வாகுவை என் மீது நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதன் வாசத்தில் புசுபுசு கேசம் என் கன்னத்தில்… கழுத்தில்… புறுபுறு செய்ததை அதற்கு மேல் தாங்க முடியவில்லை. காற்றை நகர்த்தினேன். மூச்சில் பதற்றம்.

உனக்கு கூட தெரியுமேடா.. கிறுக்கன் மாதிரி ஒருத்தன் இருப்பானே… முத்துப்பாண்டி. அவனுக்கு தான் வித்தாங்க. நான் உனக்கு தெரியும்னு நினைச்சிட்டிருந்தேன்.

எனக்கு சூனியத்தின் வாலை பிடிக்க சுற்றிக் கொண்டே இருந்தது. பிடி படவேயில்லை.

அட இன்னும் தெரிலயா. பீடி குடிச்சிட்டே இருப்பானே. மேனேஜர் வீட்டு பொட்லரு. அந்தா… தெரியுதுல மொட்டை பாறை. அதை ஒட்டியிருக்கற அந்த ஒத்தை வீடு. இன்னுமா நினைப்பு வரல.

முகமும் உடலும் மாறி மாறி சித்து வேலை காட்டுகிறது. யோசிக்க யோசிக்க சுருளியின் கடைசி குரல் என் காதருகே… எங்க போன மயிலுன்னு கரகரன்னு கேக்கறது கேக்குது. செயல்படாத உடல் வாங்கினேன் அப்போது. திகைத்து பார்த்த போது அந்த வீடு ஓடு வேய்ந்த ஒரு கல்லறை போல தெரிந்தது. பக்கத்தில் பெரும்பாறை பெரும் சுமையாக இருந்தது.

ஒரு வாட்டி கூட க்ளப்ல வெச்சு உங்க மாமா கூட சண்டை போட்டானே. 

சுருளியைக் குளிக்க வைப்பது சனிக்கிழமை மல்யுத்தம் மாதிரி தான். இத்துனூண்டு இருந்துகிட்டு என்னென்ன விளையாட்டு காட்டும். ஓடிப்போயி கட்டிலுக்கடியில….  கொய்யா மரத்து புதர்க்குள்ள… பக்கத்து வீட்டு குசினிக்குள்ளன்னு ஒளிஞ்சுக்கிட்டு… அது பண்ற சேட்டை இருக்கே… குழந்தை மாதிரி தான். கொஞ்சிகிட்டே தான் திரிவேன். நானும் தண்ணிக்குள்ள இறங்கி காட்டணும். அப்போ தான் டபக் டபக்குனு முழிச்சிகிட்டு மெல்ல மெல்லிசா இருக்கற முன்னங்கால்களை தண்ணிக்குள்ள வைக்கும். தண்ணி சில்லுனு தான் இருக்கும். மிரண்டு உருண்டு… தண்ணிக்குள்ள போய்ட்டா அப்புறம்… பொம்மை மாதிரி மிதக்கும். புஸு புஸுன்னு பூத்து தொங்கற முடிய வெச்சுகிட்டு தான் இத்தனை ஸீன். தண்ணில நனைஞ்சதும் எல்லாம் மடங்கி… பிறந்த கை குழந்தை அளவுக்கு தான் கனம் இருக்கும். முடியெல்லாம் நீரில் ஒட்டி உடல் நடுங்க வெலவெலத்து பார்க்கையில்… லொள்ளா பண்ற… இப்ப எப்படியிருக்கு இருக்கு என்று கிண்டல் பண்ணி… ஓட்டுவேன்.

“டேய் மயிலு… சீக்கிரம் தூக்கிட்டு போடா…” என்பது போலவே கையில் இருந்தாலும் காற்றைப் பிராண்டும். கிடு கிடுவென நடுங்கும். டர்கி டவலோடு சேர்த்து அணைக்கையில் நம் சூடு அதற்குள் ஊடு பாவுவதை கண்களில் ஒளி காட்டி உணர்த்துவான்.   

வேற என்ன சொன்னா உனக்கு ஞாபகத்துக்கு வரும்…. ம்ம்ம்… ..அட பெரியாத்துக்கு கட்டி குடுத்துருக்கே.

கரையில் ஏற்றி நிற்க வைத்து துவட்டி விட துவட்டி விட புத்துணர்ச்சியோடு உடம்பை சும்மா சும்மா டப டபவென ஆட்டுவான். கிடு கிடுவென காற்றை நெளிக்கும் கவிதைக் குரல் அது. உடம்போடு ஒட்டியிருந்த முடியெல்லாம் புசுபுசுன்னு வெயிலுக்கு வெளிய வரும். மறுபடியும் பொம்மை மாதிரி ஆகி ஆளே வெள்ளை வெளேர்னு டக்கரா மாறி… தலை சீவி பவுடர் அடிச்சு… ம்ம்ம்… ஆள் ஜம்முனு காதை நிமிட்டி நிமிட்டி ஆட்டிகிட்டு போலாம் நான் ரெடி என்பானே.. கண்ணே பட்ரும். இத்தனை வெள்ளையும் கொஞ்ச நேரத்துக்கு தான். சாயந்திரம் மஞ்சள் கலர்ல வந்து நிப்ப ஏண்டா சுருளி. சுருளிக்கு எல்லாமே புரியும். வெட்கத்தோடு கூமாச்சி மூஞ்சை அப்டி இப்டி ஆட்டி… அடிக்கிற காற்றுக்கு கேசம் பறக்க வெள்ளை குள்ளையன் வெற்றிடத்தில் ஓவியமாகி அமர்ந்திருப்பான். நான் குளித்து முடியும் வரை வேடிக்கை தான். அப்படி இப்படி ஓட முயற்சிப்பான். ஒரு நிமிடம் ஓரிடத்தில் அமர முடியாது. குதிக்க தாவ எப்போதும் உள்ளே ஒரு குரங்கை சுமந்து கொண்டிருப்பான். சுருளி. ஒரே சத்தம். எத்தனித்த ஆசையை அப்படியே விட்டு விட்டு இங்க தான் இருக்கேன்… எங்கயும் போகல என்பது போல பார்ப்பான். உலக மகா நடிப்பான்.

காதோரம் வந்து வந்து போகும் பட்டாம்பூச்சியை கவ்வுவது போல செய்யும் பாவனை நம்மை பயமுறுத்தும். ஆனால் ஒரு நாளும் பட்டாம்பூச்சியை கவ்வியதே இல்லை. எல்லாமே வெற்று பாவனைதான். விளையாட்டு. வீதி புள்ளைங்களோடும் நட்பு தான். வீதி பூனைகளோடும் நட்பு தான். இப்பிடிப்பட்ட தேவ தூதனைத்தான் அந்த பாவி கழுத்தை இறுக்கியே கொன்னுருக்கான். நினைத்தாலே மூளை வெடிக்கிறது. முதுகு வேர்க்கிறது.

இந்த…. ஒரு அக்கா தீ புடிச்சு செத்து போச்சே. அதாண்டா அந்தாளு பொண்டாட்டி. உனக்கு கூட நல்ல பழக்கமே. நல்லா பேசும். உன் ஆட்டத்துக்கு ஒரு வாட்டி இருபது ரூபாய மேடைல ஏறி நீ ஆட ஆடவே சட்டைல குத்துச்சே.

எந்தக்கா….? யோசித்தேன். சுருளி மனதுக்குள் அமைதியாய் என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா இப்பிடி மறந்துட்ட… சாந்த ரேக்காடா. ஸ்டவ் வெடிச்சு செத்து போச்சே.

செத்து போச்சா. திக்கென சுருளி காற்றில் மறைந்தான். சாந்த ரேகா காற்றில் தெரிந்தது. நெற்றி வலிக்க யோசனை. கண்களின் கடைசி லேயரில் இருக்கும் உருவம் பிம்பத்துக்கு வர தடுமாறுகிறது. எனக்கு தெரியும். தெரிந்த மாதிரி தான் இருக்கிறது. நியாபகம் வருகிறது. ஆமா சாந்த ரேகாக்கா எனக்கு தெரியும் தான். ஆனா… அது செத்து போச்சா. அதுவும் ஸ்டவ் வெடிச்சு. இதயத்தில் என்னவோ சுளீர் உணர்ந்தேன்.

ஆமாடா.. உனக்கு தெரியாதா…ஸ்டவ் வெடிச்சு… டவுன் ஆஸ்பத்திரில ரெண்டு நாள் இருந்துச்சு. அப்புறம் தான் செத்துச்சு.

எப்போ. ஒரே குழப்பம் எனக்கு. அவனிடம் சொன்னாலும்… எனக்கு இன்னமும் அந்தக்கா முகம் முழுவதுமாக பிடிபடவில்லை. எப்படா என்றேன்.

அது செத்து பத்து பதினைஞ்சு வருஷம் இருக்கும். நீ தான் ஊர் பக்கமே வர்றது இல்ல. வந்தாலும்… காலைல வந்துட்டு சாயந்திரம் ஓடியர்ற.

பத்து பதினைஞ்சு வருஷம்னா… அப்போ நாம ஸ்கூல் படிச்சிட்டு இருந்தோம். இப்பிடி அந்தக்கா செத்ததே தெரியாம இருந்துருக்கே. உள்ளே இனம் புரியாத துக்கம். எப்போ என்று மீண்டும் அனிச்சையாய் கேட்டேன்.

அது… நீ கூட முக்காபுலா பாட்டுக்கு ஆடினீல்ல. அந்த லீவு டைம்ல தான்.

எனக்கு சட்டென ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. காட்சியின் குரல் சுருளியாக காற்றில் நெளிந்து வளைந்து நிற்க நேரம் எடுத்தது. மனதின் தூரம் அபாயகரமானது. மிக ஆழத்தில் எட்டி பார்க்க பயமாகவும் இருந்தது. ஆர்வமாகவும் இருந்தது. சாந்த ரேகாக்காவின் முகம் இப்போது நினைவுக்கு வந்து விட்டது.

சாந்த ரேகா

******************

மனவெளியில் நின்று கொண்டே நகரும் சித்திரம் அது. எத்தனையோ வருடங்களுக்கு முன் நிகழ்ந்த காட்சி. பச்சை வயல் அச்சம் போல நொடி நேர பதியம். அதை மறந்த இயல்பு இருந்த போதிலும்… நினைத்ததும் வந்து நிற்கும் பேருந்தின் நடுவே நின்ற சாந்த ரேகாக்காவின் சித்திரம். 

லீவு முடிஞ்சு பொள்ளாச்சி எக்ஸ்ல நானும் தாத்தாவும் ஊருக்கு போயிட்டுருக்கோம். ஒரு நாள் முந்தியே கிளம்பிட்டோம். அதனால அவ்வளவா கூட்டம் இல்ல. எங்க ஸ்டாப்பில இருந்து நாலைஞ்சு ஸ்டாப் தள்ளி பேறாத்து பஸ் ஸ்டாப்பு. பெரிய ஆறு.

பஸ் நின்றது. சால்வையை சுற்றிக் கொண்டு ஏறிய பெண் யாரென்று பார்த்தால்…  சாந்த ரேகாக்கா. எங்க ஊர் தான். ரெண்டு ஸ்டாப் தள்ளி கட்டி குடுத்துருக்கு. சின்ன வயசுல இருந்தே பழக்கம் தான்.

என்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டே…” என்ன மயிலு ஊருக்கு கிளம்பிட்டியா….?” என்றது. குரலில் வழக்கத்துக்கு மாறான நிதானம். கம்பியை கெட்டியாக பிடித்தபடி பஸ் அசைவுக்கு தகுந்தாற் போல மெல்ல நிதானமாக ஆடி ஆடி நடந்து நடுவுக்கு வந்தது.

“ஆமாக்கா..” என்றேன். ஜன்னலோரத்தில் இருந்த நான் அந்தக்காவின் பக்கம் பார்த்தபடியே கழுத்தசைவில் விடாத புன்னகையை படர விட்டேன். உண்மையில் என் முகம் சோகத்தில் வழிந்து கொண்டிருந்தது. பொதுவாகவே லீவு முடிஞ்சு ஊருக்கு போறது எனக்கு குதிரைக் கொம்பு. அழாத குறை தான். அழுதாலும் குறை தான். அந்த அளவு சோகம் சுமக்க செல்வேன். அதுவும் சுருளியை விட்டு போவது இன்னும் கடினம்.

“மயிலு… அக்கா காச மறந்திட்டு வந்துட்டேன்… டவுனுக்கு டிக்கெட் எடுறா.. அடுத்த முறை வரும்போது தரேன்…” என்றது.

“அய்யயோ இதுக்கு எதுக்கு முகம் வாடி கேக்குது..” என்று யோசித்தபடியே மெல்ல புன்னகைத்துக் கொண்டே எடுக்கறேன்க்கா என்பது போன்ற உடல்மொழியோடு உடனே வயிற்றை எக்கி சற்று உடலை வளைத்து பேண்ட் பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து டிக்கெட் வாங்கி நீட்டினேன்.

“நீயே… வை மயிலு. நல்லா படிக்கணும்….” என்று சொல்லி மெல்ல புன்னகைத்தது. அப்போது தான் புரிந்தது. அந்தக்காவுக்கு உடம்பு சரியில்லை போல.

“என்னாச்சுக்கா.. ஒரு மாதிரி இருக்கீங்க.. உக்காருங்க.. இடம் தான் இருக்கே” என்று என் கண்கள் காலி சீட்டுகளை காட்டி கொடுக்க.. “இல்ல.. கால் வலி. உக்காந்தா அதிமாகும்…” என்று நின்றபடியே வந்தது. மொத்த பேருந்தில் அமர்ந்திருந்த பத்து பேரைத் தவிர அந்தக்கா மட்டும் தான் நின்று கொண்டு வந்தது.

நான் இத்தனை சீட் இருந்தும் பின் டயர்க்கு மேல் இருக்கும் சீட்டில் அமர்ந்து விட்டேன். வளைவு கிரீச்சிட்டு திரும்பும் போதெல்லாம் டயர் கருகற வாசம் வேற. காற்றில் திரும்பும் போது வாசம் போய் விடுகிறது. நான் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாலும்.. கூட்டமில்லாத பேருந்தின் வளைவு நெளிவுக்கெல்லாம் சமாளித்து அந்த அக்கா நின்றது என்னவோ ஆழமாய் பதிய போகும் மிக நெருக்கமான ஓவியம் போல இருந்தது. அவ்வப்போது மெல்ல வலப்பக்கம் திரும்பி என்னை பார்த்து புன்னகை செய்து கொண்டே வந்தது. கருணை மிகு கண்கள். என்னை விட ரெண்டு மூணு வருஷம் தான் பெருசா இருக்கும். சுருட்டை முடி அழகா இருக்கும். இன்னைக்கு பார்க்க முடியல. சால்வை போட்டு மூடி இருக்கு. நானும் மெல்ல சிரித்து சிரித்து தெரிந்தவர்கள் என்பதை காட்டிக் கொண்டே வந்தேன்.

ஒற்றை ஆளாக நின்று கொண்டு வரும் அந்தக்காவை பார்க்க பாவமாக இருந்தாலும்.. சற்று நேரத்தில் என் கவனம் ஜன்னல் வழியே பறக்க தொடங்கி விட்டது. என் சோகம் எனக்கு. இனி அரைப் பரீட்சை லீவுக்கு தான் வர முடியும். அது வரை ஒரு விடுதிக்கு செல்லும் சிறைக்கைதி வாழ்க்கை. நினைத்தாலே… சோகம் பீறிட்டது. இந்த டயர் வாசம் வேற. எழுந்து வேற பக்கம் போயிறலாமா என்று யோசிக்கும் போதே டவுன் வந்து விட கூட்டம் அதிகமாகி விட்டது. அந்தக்கா எப்போது எப்படி இறங்கி சென்றது என்றே தெரியவில்லை. அதன் பிறகு நான் சாந்த ரேகாக்காவை மறந்தே போனேன்.

சொல்லி முடித்த போது மலைச்சாமியின் முகம் காற்றில் நெளிந்து வளைந்து கொண்டிருந்தது.

அப்ப அந்த கருகுன வாசம்… டயர் வாசம் இல்லை. எரிய எரிய எப்படியோ தப்பிச்சு சால்வையை போத்திகிட்டு அதுவாவே டவுன் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கு. எத்தனை தைரியம். நினைக்கும் போதே மூக்கருகே அதே வாசம். குமட்டிக் கொண்டு வந்தது. இத்தனை வருடங்களுக்கு பிறகு எனக்கு அந்த பேருந்தின் சத்தம் படபடவென கேட்டது. குழியில் விட்டு எழும் நடுக்கம் கால்களில் உணர்ந்தேன். மலைச்சாமி வெறித்தே அமர்ந்திருந்தான். அவன் கண்களில் இரு பாறையை அதிர்ந்தேன்.

*

பிராந்தி குடித்தபடி ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தான் முத்துப்பாண்டி. ஒரு பிசாசைப் போல தெரிந்தவனை பார்க்க பார்க்க பயமாக கூட இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டிய ஒத்தை வீடு. அவன் அப்பா இங்கிலிஷ் மேனேஜர்க்கு பட்லர். இவன் இந்திய மேனேஜர்க்கு பட்லர். ஆக… தனி வீடு. தனி மரியாதை. யாரையும் மதிக்காத கனமான கனவான். சுருளியைக் கொன்றவனை கொன்று போடலாமா என்றேன்.

திகைத்து பார்த்த நண்பனுக்கு ரெண்டவுன்ஸ் எச்சில் தேவைப்பட்டது அழுந்த விழுங்க.

முத்து பாண்டியின் வீட்டுக்கு சற்று அருகே இருந்த மொட்டை பாறையின் சரிவில் பேய் பிடித்தவன் போல அமர்ந்திருந்தேன். என்னை பிடித்தவன் போல மலைச்சாமி அமர்ந்திருந்தான்.

கொலை பண்றது அவ்ளோ ஈஸியா நண்பா.. விளையாடாத.

விளையாடல. கொலை பண்றது ஈஸி தான்.

மாட்டிக்கிட்டா.

உலகத்துல ஒரு நாளைக்கு எவ்ளோ கொலை நடக்குது தெரியுமா. பண்றவன்லாம் மாட்டிக்காவா செய்யறான்.

மாட்டிக்கறவன்லாம் கொலை செய்ய தெரியாதவன். செய்ய தெரிஞ்சவன் எப்பவும் மாட்டிக்க மாட்டான். இப்ப அவன் குடிச்சு தான் இருக்கான். கைல துணியை சுத்திக்கலாம். தலையணையை வெச்சு நாப்பது செக்கண்ட் அழுத்தினா மயங்கிடுவான். அவன் வேட்டியவே தூக்காக்கி மெல்ல தூக்கி தொங்க விட்ரலாம். தனிமை… வயசாகிடுச்சு. குடி வேற. தற்கொலை பண்ணிகிட்டான்.அவ்வளவு தான். நாம மாட்டிக்க மாட்டோம். நம்மள ஒருத்தன் கூட இங்க பாக்கல. சாட்சியே இல்ல. அதுவுமில்லாம அவனுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை. ஊருக்கு தெரிஞ்ச எந்த பகையும் இல்ல. ஒரு குட்டி நாய்க்காக பதினைஞ்சு வருஷம் கழிச்சு பழி வாங்கி இருக்காங்கனு யாரும் நினைக்க கூட மாட்டாங்க. என்ன சொல்ற.

டேய் விளையாடாத… வேணும்னா உள்ள புகுந்த அடிச்சு போட்டுட்டு போய்டலாம்.. கொலையெல்லாம் ரிஸ்க்.

அமைதியாக ஊஞ்சல் ஆடும் கொலைகாரனை பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் க்ரீச் கிரீச் என்று அவன் முன் பின்னாக போய் போய் வந்து கொண்டிருந்த காட்சி எதையோ எனக்கு சொல்ல முனைவதாகவே பட்டது. தனித்த வீட்டில் ஒரு டிராகுலாவாக அவன் அமர்ந்திருக்கிறான். பாறையொட்டிய வீடு.. உலகத்தில் இருந்தே தனித்து வெளியில் தொங்கி கொண்டிருப்பது போல எண்ணங்கள் எனக்குள். அவன் கோரைப்பல் முளைத்த சாத்தானாக தெரிகிறான்.

பெருமூச்சு விட்டேன். கண்களை சிமிட்ட முடியவில்லை.

என்னடா அமைதியாகிட்ட.

ஒரு குட்டி நாயை கொன்னு ஓடைல வீசிட்டு நிம்மதியா இருக்கான்னா… அந்த சாந்த ரேகாக்காவையும் இவன் தான் கொன்னுருப்பான். கேஸ் வெடிச்சது விபத்தெல்லாம் கிடையாது. அது இவன் திட்டம் போட்டு செஞ்ச கொலையா தான் இருக்கும்.

தீர்க்கமாக சொன்னேன். என்னவோ அப்படித்தான் சொல்ல தோன்றியது.

திகைத்து பார்த்தவன் என்னையே பார்த்தான். வெறிக்க பார்த்த நான் ஊஞ்சலில் சரிந்திருக்கும் கொலைகார பாவியையே பார்த்தேன். அருகே ஓடும் ஓடையில் இருந்து தோகை விரிய எழுந்து பறந்து என்னருகே வர பார்த்துக் கொண்டிருக்கிறது சுருளி. இடையே ஊஞ்சலில் இருக்கும் அந்த பூதத்தை பார்த்து விட… பயத்தில் மீண்டும் நீருக்குள் தலையை இழுத்து கொண்டது. என் கண்களில் வெறுமை. கழுத்தில் துக்கம். ஒன்றும் செய்ய இயலாத இயலாமை. சரிந்து அமர்ந்தேன்.

என் திட்டத்தை நண்பன் ஒப்புக் கொள்ளவில்லை. ஊருக்கு பஸ் ஏற்றி விட்டான்.

ஆறு மாதங்களுக்கு பிறகு ஊருக்கு வந்திருக்கிறேன்.

விஷயம் தெரியுமா… முத்துப்பாண்டியனை… செந்நாய் கடிச்சு கொதறி எடுத்திருச்சு. செஞ்ச பாவத்துக்கு கடி பட்டே செத்தான்… சாத்தான்.

எனக்கு ஆச்சரியமில்லை. ஆசுவாசம் தான். ஆழ்ந்த அமைதியும்.

நண்பன் பேசிக் கொண்டே இருந்தான்.

“செந்நாயை பழக்கப் படுத்துவது எப்படி”

தலைப்பிட்ட… கறியின் வாசம் பிடித்து வீடு சூழும் செந்நாய்கள் கொண்ட அட்டைப்படம் போட்ட புத்தகம் அவன் அலமாரியில் இருந்தது. நான் பார்த்தும் பார்க்காத மாதிரி….” எப்படியோ செத்தான். அது… அது போதும்” என்று சொல்லி விடை பெற்றேன். எனக்கு கையைக் காட்டி விடக் கூடாது என்று மறைத்த அவன் இடது கையில் SR என்று பச்சை குத்தியிருந்ததை நான் போன முறையே பார்த்து விட்டேன். மேலும்… உடல் எரிந்து சால்வை போர்த்தி மறைத்த சாந்த ரேகா ஆஸ்பத்திரிக்கு பஸ்ஸில் சென்ற காட்சியை சொல்லும் போதே கண்கள் சிவந்து சந்திரமுகனாக மாறிய நண்பன் மலைச்சாமியை ஒரு கணம் நான் உணர்ந்தேன்.

++

கவிஜி

மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி  கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *