மேற்கு தொடர்ச்சி மலையின் கற்கண்டு துண்டு பெரியநாயக்கன் பாளையம் வரை நீண்டு விட்டதை தினம் தினம் பார்த்து வியக்கிறேன். கோவையில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் குருடிமலை (குரு ரிஷி மலை / குறடு மலை / LAMPTON PEAK / சிரஞ்சீவி மலை ) கோவைக்கு கொடை. (கவுசிகா நதி உருவான இடம் இது தான்)

1,600 அடி உயரம். ஆனாலும் மனமுண்டோருக்கு… உடலில் திடம் உண்டோருக்கு எட்டி பிடித்து விடும் தூரம் தான்.

தூரத்தில் இலையாக அசையும் மலை… அருகினில் பாறையாக இறுகி நிற்பதைக் காண காண கண்டு கொண்டே இருக்கலாம். பாலமலை… மேல்முடி என்று தொடரும் தொடர்ச்சி குருடி மலையில் முடிந்து விடுகிறது. ஊரின் முடிச்சை அங்கிருந்து பிரிக்கலாம் போன்ற உயரத்தில்… வீரனின் முதுகு போல வேங்கையின் அங்கம் போல வீற்றிருக்கும் மலையின் அடி வயிற்றில் குடி கொண்டிருக்கிறது பொன்னூத்தம்மன் கோவில். அடிக்கடி செல்லும் இடம் என்றாலும் ஒவ்வொரு முறையும் மலைப்பாதை ஒற்றையடியில் காணாமலே போகும் உடல். நம்முள் யாரோ நடக்கிறார்கள் என்றே தோன்றும் உயிர்.

கோவை – துடியலூர் தாண்டி வடமதுரை தொட்டு உள்ளே சென்றால் பன்னிமடை. அங்கிருந்து இன்னும் இரண்டு கிலோ மீட்டர்கள் தொடர் தோட்டங்களின் நடுவே தோகை விரிந்திருக்கும் சாலையில் மனம் போன போக்கில் வீசும் காற்றோடு பயணிக்க… வரப்பாளையம் வா வா என்றழைக்கும். நமக்கு இன்னும் பக்கமாய் கனி வாய் – கணுவாய்- வழியாக இருக்கிறது. அதிலும் இரண்டு வழி. ஒன்று கணுவாய் -ல் இருந்து பன்னிமடை சென்றும் போகலாம். நாம் ஊருக்குள் சென்று தோட்டங்களின் வழியே சோமையனூர் -ல் இருந்து பன்னிமடை வரும் பாதையில் இணைந்து.. பன்னிமடைக்கும் வீரபாண்டிக்கும் இடையே இருக்கும் ராமநாதபுரம் அடைந்து… மீண்டும் குறுக்கு வழியில் ஊருக்குள் நுழைந்தால்… அது கொண்டு சேர்க்கும் இடம் அதே வரப்பாளையம். வரப்பாளையமா அது. வரம் பாளையம். பின்ன… குருடி மலை அடிவாரத்தில் இருப்பது வரம் தானே. தினம் தினம் மலை முகத்தில் தான் விழிக்க வேண்டும். தூங்க வேண்டும் என்பது பேறு இல்லையா. வரப்பாளையத்தில் வாழ வேண்டிய நான் இடையர் பாளையத்தில் வாழ்வது மலை அளவு பிழை. 

வரப்பாளையத்தில் இருந்தே மலை தொடங்கி விடுகிறது. செம்மண் சாலையில் இரு பக்கமும் செடிகளும் புதர்களும் பொட்டலாய் துளிர்த்து கிடக்க… இளங்காற்று வீசும் இடம் இது. அனல் காற்று அலசும் இடமும் இது. மேகத்தை பொறுத்த யோகம் அது. ஆங்காங்கே புத்தர்களாய் மரங்கள். புதர்களாய் முள் செடிகள். அடிக்கணுவில்  மண்டிக்கிடக்கும் காடுகளின் வரவேற்பறை…. நம்மை காட்டுக்கு தயார் படுத்தும். அங்கிருந்து காணும் மலைக்காட்சி மலைக்கும் காட்சி. போட்டோவுக்கு விழும் பெரும்பாலும் கிளிக்குகள் இவ்விட புதையல்களே. காக்கைகளின் விளையாட்டு வெற்றிடத்தில் விசிறி வீசும்.

எல்லா பாதங்களும் ரோமை நோக்கியே என்பது போல கோவையின் அத்தனை வழிகளுமே இந்த மலையை நோக்கி தான் என்பது என் தீவிரம். வண்டியில் வேகம் குறைத்து காணும் பார்வையில் தேகம் விரிய நகர்வோம். அருகே செல்ல செல்ல மலை பெரிதாகி கொண்டு போவது தானே நியதி. சில நேரம் இந்த மலை குட்டியாகிக் கொண்டு போகும். ஏமாற்றுவதில் மலை வல்லோன். கண்கட்டு வித்தையைக் காண காணவே செய்து விடும் கால மிச்சம். ஒப்புக்கொடுத்த பிறகு ஒப்புக்கு சப்பான் இல்லை நாம். உருண்டாலும் உன் பாறையாகவே உருளுவோம் என சூளுரைக்கும் மலை நாடன்.

ஏற்றம் தான் சாலையில். ஆனால் ஏறுவதே தெரியாது. உண்மையில் கணுவாயில் இருந்தே மேடு தொடங்கி விடுவதை கொஞ்சம் உற்று கவனித்தால் உணர்ந்து கொள்ள முடியும். பூமியின் மேட்டில் மெட்டு போடும் பாதங்கள் பாக்கியங்கள். வார நாட்களில் பெரும்பாலும் கூட்டம் இருக்காது. கூட்டம் இல்லாதது ஒரு வகையில் தனிமை விரும்பிக்கு தங்கம் கிடைத்தாற் போல தான். ஆனாலும் துணைக்கு ஆளோடு போய் வருவது நல்லது. இரவில் யானை வந்து போன சாட்சி… லத்தியால் பகலில் காட்டிக் கொடுக்கப்படும். ஆனாலும் பகலில் அவ்வழியே யானைகள் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை.

அடிவாரத்தில் ஒரு கோயில் இருக்கிறது. சில சாமிகள் படுத்திருக்கிறார்கள். வண்டிகளுக்கு பாஸ் போடுகிறார்கள். தண்ணீர் விற்கிறார்கள். வெள்ளரி அர்னாசி மாங்காய் விற்கிறார்கள். மலை ஏறி இறங்குகிறவர்களின் தாகமும் பசியும் தான் அந்த கூடை பெண்களுக்கான பிழைப்பு. அங்கிருந்து மேல் நோக்கி நடக்க தொடங்கினால்… நாலைந்து எட்டிலேயே மூச்சு வாங்க ஆரம்பித்து விடும். இதுவரை வளைந்து நெளிந்த பாதையாக மெல்ல மெல்ல மேலேறிய ஏற்றம்.. இப்போது சட்டென மேலே ஏறுகிறோம் என்றே ஏறும். படபடவென மேல்நோக்கிய ஒற்றையடி மண் பாதை… சில இடங்களில் சமமாக இருக்கும். பல இடங்களில் குண்டும் குழியுமாக சரி சமமற்று இருக்கும். அப்படி இருப்பதுதான் மலைப் பாதைக்கு அழகு. பார்த்து பார்த்து கால் வைத்து முன்னோக்கி சரிந்தபடியே உடல் மேலேறும். உள்ளம் மேலே மேலே ஏறும். மலை ஏறுகையில் பேசாமல் இருப்பது நல்லது. சக்தி வீணாகாது. அதே நேரம் காட்டின் மௌனமும் கலையாது.

அங்கிருந்து கண்களுக்கு தெளிவாக புலப்படும் மலையின் முகடு. போர் கொண்ட முதுகில் கீறல் போல பாறையின் சிரிப்பு தெரியும். இறங்கி ஏறும் முகடின் வனப்பு காண இன்னும் ஜோடி கண்களை தேடும் நெற்றி. அவ்விடத்தில் கால் நீட்டி அமர தான் ஆயுள் ஆசை நமக்கு. தொடர்ச்சியின் சற்று முன்னே… தலை நிமிர்த்தி நிற்கும் தனித்த பாறை… அது தான் இத்தொடர்ச்சியின் தவம் என்கிறேன். சிங்க முகம் போல தங்க நிறத்தை சூரிய மாலை சூட்டுவதையும் கண்டிருக்கிறேன். தூரத்தில் இருந்து பார்க்கையில் காதில் சொருகி வைத்த ஒரு பென்சில் போல தெரியும் அது… கிட்டத்தில் பூத தலையைக் கொண்டிருக்கும். தொட்டால் கவிழ்ந்து விடுவது போலவே தெரியும் அதன் வடிவம்… பார்வை தொடர்ச்சிக்கு பயமூட்டும். பாறைக் கனவின் மண்டை பெருத்த மூச்சிரைப்பு அது. பாறை வனத்தின் மகுடம் அது.

ஒரு முறை மாலை 4 மணிக்கு சென்று போது… யாருமே இல்லை. கீழே இருக்கும் காட்டிலா அதிகாரி சீக்கிரம் திரும்பிட கட்டளை இட்டிருக்கிறார். நாங்கள் திக் திக்கென சென்றோம். நண்பர் சாமி கும்பிட்டார். வேகமாய் திரும்பி விட்டோம். ஆனால் நாலைந்து மயில்களைக் கண்டோம். அதுவே சிறுத்தையைப் பார்ப்பது போல தான் இருந்தது. அதன் அகவல் இன்னும் பயங்கரமாக இருந்தது. பதட்டம் வரும் அளவுக்கு பறவைகளின் காச் மூச் சத்தங்கள். மரங்களின் கழுத்தசையும் யுத்தங்கள். இரு பக்கமும் இறங்கி ஏறும் காடுகளின் வனப்புக்கு வார்த்தை இல்லை. வாவ் தான்.

யாருமில்லாமல் இருக்கும் இடம் பயங்களின் கூடாரம். மனிதர்கள் அற்ற இடத்தில் தெய்வமும் மிரட்டும் என்பதை புரிந்த போது இனி சாயந்திரம் வர கூடாதுப்பா என்று நினைத்து கொண்டோம்.

15 நிமிட நடை. பாதி வியர்த்திருக்க.. மீதிக்கு பொன்னூத்தம்மன் கோயிலை நெருங்கி இருப்போம். மண் பாதையில் இருந்து படிக்கட்டில் கால் வைத்து விட்டால்… கோயில் பக்கத்தில் என்று அர்த்தம். மேலே கோயில் இருக்கிறது என்ற நினைப்பு தான் காட்டுக்குள் நடப்பதற்கான தைரியம். தரையோடு தரையாக இருக்கும் சிமெண்ட் படிக்கட்டில் ஆசுவாசம் நீண்டிருக்க… பெரிய பெரிய சதுரத்தில் பாதங்கள் பதிந்து எழுவது திருப்தி. மஞ்சள் வண்ண படிக்கட்டுகளில் காட்டின் சந்தம் சேர்ந்திருக்கும். படி ஏறும் போதே கொடி நாட்டும் மனது. மஞ்சள் வண்ணத்தில் மனம் நிறைய நிறைய அருள்மிகு பொன்னூத்தம்மன் திருக்கோயில் – வரப்பாளையும் பெயர் பலகை வியர்வை வார்த்து வரவேற்கும். அங்கு நின்று ஒரு போட்டோ. ஆங்காங்கே போட்டோ எடுத்துக் கொண்டே தான் சென்றிருப்போம். நம்மோடு நாமே இல்லா விட்டாலும் நாமாக இருப்பது போட்டோ தானே. புகைப்பட விரும்பிகளின் புனிதங்கள் இப்படி தான் கிளிக்கிக் கொண்டே இருக்கும்.

மேலே… அரச மரத்தின் அடியில் பிள்ளையார் ஜம்மென அமர்ந்திருப்பார். அங்கே நின்று கழுத்தை இடது வலது என திருப்பினால்… எதிரே இருக்கும் மருத மலையின் பின் பக்கம் பிக்சல் கிளியராக தெரியும். மலையின் நெஞ்சாங்கூட்டில் இருக்கும் அனுவாவி சுப்பிரமணி கோயில் அச்சடித்தது போல தெரியும். கோவையை சுற்றிய ஊர்கள்… குட்டி குட்டியாய் முட்டையிட்டு மனித குலமாக தெரியும். எகிறி நிற்கும் முன்னாள் செங்கல் சூளைகளின் எரிகுழல்கள் பார்க்க தூண் தூணாய் தூள் கிளப்பும். படியேறி நின்று பெருமூச்சு விட்டு… பரந்து விரிந்த வானம் பார்த்து.. பிறகு மீண்டும் உட்பக்கமாக கோயில் அலுவலக கட்டடத்தின் முகப்பு மற்றும் பக்கவாட்டு வராண்டாவில் நடந்தால்.. பின் பக்கம் படி இறங்கும். அங்கு போட்டிருக்கும் டைல்ஸ் திண்ணையில் அமர்ந்தாலே அத்தனை குளிர்ச்சி. அது சித்திர ஆசுவாசம். அப்படியே மலை தலையனை காதலன் போல வெறிக்க பார்க்கையில்… உள்ளாரா முளைக்கும் சிறகுக்கு நூறு வண்ணங்கள். முதல் படியில் நின்று அண்ணார்ந்து பார்த்தால்.. முத்தமிடும் தூரத்தில் தான் குருடி மலை முகப்பு. நண்பர்கள் அப்படியே  கீழிறங்கி… படி முடியும் இடத்தில் எதிர் பார்த்திருக்கும் சாமியைக் கும்பிடுவார்கள். நான் தலைக்கு மேலே தவமென நிற்கும் மலையைக் கும்பிடுவேன். துடைத்து விட்டது போல பளிச்சென… பார்க்கும் இடமெல்லாம் மலையாகி இருக்கும். மலை பார்ப்பது… இருக்கட்டும். மாலையும் பார்ப்பது இருக்கிறதே… அதற்கு மனக்கண்கள் திறந்திருக்க வேண்டும். உடல் திறந்து அப்படியே அமர்ந்து விடுவேன். உறக்கம் தொலைத்து யார் இவன் என மலை ஆராயும்.

நண்பர்கள் மறுபடியும் இடது பக்கம் நகர்வார்கள். நகர்ந்து தங்க நிற பாறையை நெருங்கி குனிந்து சிறு குகை வழியே குனிந்து கும்பிடுவார்கள். உள்ளே பொன்னூத்தம்மன் காட்டையும் காத்து… இந்த மலையையும் காத்து இதோ கும்பிடும் மனிதனையும் காக்க அருள் கொடுப்பாள். அமாவாசை பௌர்ணமி போன்ற உகந்த நாட்களில் அன்னதானம் வழங்குகிறார்கள். சரியாக மதியம் மேலிருந்தால்… முதலில் வயிறு நிறையும். பிறகு மனது நிறையும். சோறு தான் சாமி. சாமி தான் மலையும்.

உள்ளே போகிறவர்கள் போலாம். வெளியே நின்று கும்பிடுகிறவர்கள் கும்பிடலாம். நான் ஒரு முறை உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். குனிந்தபடியே… கிட்டத்தட்ட இரண்டாக மடித்துக் கொண்டால் தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றும் நிற்க முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அது தான் அதன் சிறப்பும் கூட. பாறை இடுக்கில் பூத்த பவளம் போல அம்மனின் காட்சி. பார்க்க பரவசம் எழும். புது மனம் பெறுவதை உடல் உணரும். உள்ளிருந்து கொட்டும் ஊத்தின் ஈரத்தை உணர முடியும். எப்போதும் வற்றாமல் கொட்டிக்கொண்டே இருக்கும் ஊத்தின் அடியே குடிகொண்ட அம்மன். ஆதலால் பொன்னூத்தம்மன். தீர்த்தமாக வெளியே கொட்டும் அந்த ஊத்தின் நீரை கையில் ஏந்துவதில் இருக்கும் சிலிர்ப்பு ஜீவனுடையது. தெளிந்த நீரின் பேரழகில் காட்டின் புனிதம் காண்போம். மயில் அகவல் அவ்வப்போது கேட்கும். பறவை பட்சிகளின் சப்தங்கள்… பார மனதை இலகுவாக்கும். மலைக் காற்றின் விரல்கள் கழுத்து நீவும். காடு மலை காணும் கண்கள் கனிவாகி துளிர்க்கும். உடல் கூட இலகுவாகும். உள்ளத்தில் ஒளி கூடும். ஏன் மலை ஏறுதல் மனிதனின் வழக்கம் என்றால்.. மானுட மகத்துவம் அது. கூடி கூடி கசடு சேர்ந்த உள்ளத்தை வழித்து போடும் வழியை மலையேறும் பாதங்கள் கொண்டிருக்கின்றன.

சாமி இருக்கும் இடத்தின் இடப்பக்கம் ஒட்டிய சிறு பாறையில் கவனமாக ஏறினோம். ஏறி அமர்ந்து கொண்டோம். பூமியின் மேல் இருப்பது போல இசைக்கும் இதயம். அதற்கு மேல் செல்ல அனுமதி இல்லை. அங்கிருந்து கழுத்து வலிக்க திரும்பி பார்த்தாலே தலை மேல் அமர்ந்திருக்கும் மலையின் கனத்தை உணரலாம். அந்த மலை உச்சி சென்று விட தான் ஒவ்வொரு முறையும் தோன்றும். வழி கிடைக்கும் நாளில் உச்சியில் அமர்ந்து காலாட்டும் புகைப்படம் உங்களுக்கு பரிசு.

வெயில் சூடும் அந்த மலைக்காடும்… செடி கொடிகள் நிறைந்த மரங்களினூடாக காட்டை வளர்ப்பவன் வரைந்து கொண்டிருக்கும் ஓவியம் போல் தோன்றும். ஓவியத்துள் நின்று வரைகிறவனை பார்ப்பது எத்தனை அதிசயம். அத்தனை ஆத்மார்த்தம் அங்கு கண்டிருக்கிறேன்.

மூச்சு விடுவது தெரியாமல் மெல்ல இறங்குதல் தான் சரி. மூழ்கி முத்தெடுத்தவன் போல தான் விரிந்து வளர்ந்து மலை எடுத்து வந்து கொண்டிருப்பேன். எத்தனை முறை திரும்பி பார்ப்பேன் என்று தெரியாது. அத்தனை முறையும் தலை தடவும் மலைக்கு நான் என்றால் ரகசிய பிரியம். கோவை வாசிகளுக்கு… மிக அருகே இருக்கும் அற்புதமான ஸ்ட்ரெஸ் பஸ்டர் பிளேஸ். சாமி கும்பிடுகிறவர்களுக்கு ஆசீர்வாதம். காடு கும்பிடுகிறவர்களுக்கு ஆஹாவரம். அடிக்கடி போய் விடுகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு ஒரு மலை நாடன் நான்.

00

 கவிஜி

மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி  கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *