மரணம் ஒவ்வொருவரின் மீதும் அமர்ந்திருக்கிறது. அது எத்தனை நெருக்கத்தில் அமர்ந்திருக்கிறது என்று தெரிந்து விட்டால்…

அது தெரிந்து விடுகிறது ப்ரூஸ் லீ க்கு.

“Enter the Dragon” படப்பிடிப்பு முடிகின்ற போதே ஒரு முறை மயங்கி விழுகிறார். தலைவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்படுகிறார். அதன் பிறகு அவரின் போக்கில் நிறைய மாற்றங்கள். துரு துரு குறைந்து எப்போதும் எதையோ மறைக்கும் உடல் மொழியில்… தன் மீதிருக்கும் நம்பிக்கை குறைந்த பாவனையில்… தனித்த மௌனத்தில்…. என்று… காப்பீடு கூட யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொள்கிறார். உள்ளுணர்வு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உண்மையில் உடல் எனும் இயந்திரம்… உடல் பற்றிய பலவீனங்களை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. புரிந்த மனதில் ஆழ்ந்த அமைதி. அதனாலோ என்னவோ சீக்கிரமாக அடுத்த படத்தின் வேலையையும் ஆரம்பிக்கிறார். 

“Game of Death”

எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்று மனைவி லிண்டா உள்பட எல்லாருமே கேட்கிறார்கள். ஆட்சேபிக்கிறார்கள். ஆனாலும் வழக்கம் போல ப்ரூஸின் பிடிவாதம்… அதையே தலைப்பாக்குகிறது. நடிப்பு இயக்கம் தயாரிப்பு சண்டை காட்சி இயக்கம் என்று… பம்பரத்தின் தலையில் தான் தன் வாழ்வென்று மீண்டும் மீண்டும் நிரூபிக்க…. அந்த படம் நடந்து கொண்டிருக்கிறது. என்ன உணர்ந்து இந்த தலைப்பை வைத்தாரோ… அந்த உணர்தல் உணர்த்தி சென்றது அவரின் மரணத்தை தான்.

உடன் நடிக்கும் நடிகை…தோழி வீட்டுக்கு சென்று அடுத்த படத்துக்கான வேலையில் அவரோடு பேசிக் கொண்டிருக்கையில்… மயக்கம் வருவது போல இருக்கிறது. ஏதாவது வலி மாத்திரை (அடிக்கடி உட்கொள்வது வழக்கமாக இருக்கிறது) இருக்குமா என்று கேட்டு வாங்கி தண்ணீர் கூட குடிக்காமல் மாத்திரையை மட்டும் விழுங்கி விட்டு… நீங்க பேசிட்டு இருங்க.. நான் சோபால படுத்துகிட்டே கேட்கிறேன் என்று படுக்கிறார். தூங்கும் முக மொழி… சோர்ந்த உடல் மொழி…. போதும் போதும் என்ற ஓட்டத்தின் மிக நீண்ட இளைப்பாறல். தன் காலம் முழுக்க எதையோ தேடி அலைந்து கொண்டே இருந்த ஓர் உன்னத ஆன்மா மெல்ல தன்னையும் மறந்து உறங்க ஆரம்பிக்கிறது.

டாக்டர் கண்ணீர் வழியே பார்த்துக் கொண்டே நிற்கிறார். தூங்குவது போலவே ஆழ்ந்த சரிவு அது. நீண்ட உடலில் நித்திரை போர்த்தியிருக்கிறது.

உயிர் தெறிக்க ஓடி வரும் லிண்டா… “யூ நாட்டி பாய்… ஓய்வெடுக்கறியா.. எடு எடு” என்று சொல்லி கதறுகையில்… ஈடு இணையில்லாத ஓர் உன்னத கலைஞன்… மாபெரும் போராட்ட குணம் படைத்தவன்… எடுத்துக் கொண்ட வேலையில் தன்னையே அதுவாக்கி கொள்ளும் விசை…  Jeet Kune Do என்ற மார்சியல் ஆர்ட்டின் பிதா மகன்… எந்த வகையிலும் சீனன் குறைந்தவன் இல்லை என்று எப்போதும் தன் நாட்டை நேசித்த மாபெரும் தீர்க்கதரிசி… தன் 32 வயதில் மரித்து கிடக்கிறான். உலகமே ஸ்தம்பித்து பார்க்கிறது. ஓர் உருவாக்கம் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

தொடர் உடற்பயிற்சி… எப்போதும் கலை பற்றிய சிந்தனை….. மார்சியல் ஆர்ட்டில்… புதிய புதிய உத்திகளை சேர்த்துக் கொண்டே…… புதிய புதிய புதிர்களை அவிழ்த்துக் கொண்டே இருந்த… இறுகிய அவரின் உடல் இயற்கைக்கு எதிராக மாறி விட்டதோ என்று கூட யோசிக்க தோன்றியது.

இறுதியாக நடந்த ஒரு சண்டையில் கூட அவருக்கு பெரிதாக நாட்டம் இல்லை. கண்டிப்பாக அவருக்கு தெரியும். அவர் இறங்கி அடிக்க ஆரம்பித்தால் எதிரே இருக்கும் எவனாக இருந்தாலும்… அது எமனாக இருந்தாலும்… தகிடு தத்தோம் தான். ஒவ்வொரு முறையும் முழு பலத்தையும் பிரயோகிக்காமல் தான் சண்டையிடுகிறார். அவரை அதிகமாக சீண்டி.. கோபப்படுத்தும் போது தான் அவரின் சிக்னேச்சர் போஸ் -ல் நின்று… தொண்டைக்குள் இருந்து வினோதமாக ஒரு சத்தம் வரும். கண்களில் வெறி ஏற பார்க்கும் பார்வை கத்தி இரண்டில் கூர் கொட்டும்.. அதன் பிறகு எதிரே இருப்பவன் நெஞ்செலும்பு உடைந்து கழுத்து திரும்பி இல்லாமல் போக வேண்டியது தான். சில போது அடி வாங்கி தடுமாறி பிறகு சுதாரித்து.. இப்போ பாரு என்பது போல கூட்டத்தில் பதட்டத்தோடு அமர்ந்திருக்கும் மனைவி லிண்டாவை பார்த்து கண்ணடிப்பார். லிண்டா- க்கு அப்பாடா என்று பெருமூச்சு வரும். இனி பயமில்லை. 

அது அப்படித்தான். அதன் பிறகு எதிராளியை வெச்சு செய்வது எப்படி என்று ஜூரிகள் குறிப்பெடுப்பார்கள்.

ப்ரூஸ் இத்தனை பலத்தை சாதாரணமாக பெற்று விடவில்லை. பள்ளியில் அமெரிக்கன் ஒருவன் செய்த “மஞ்சள் நிறத்து சீனாக்காரன்” என்ற கேலி…. அதன் நீட்சியில்… அதை எதிர்த்து கேட்ட ப்ரூசை …. நாலைந்து பேர் சேர்ந்து முட்டு சந்தில் வைத்து அடித்து துவைத்து எடுக்க… அவர்களை பழி வாங்க சண்டை கற்று கொள்ள முடிவெடுக்கிறார். அதை வீட்டில் சொல்லி…. வீட்டில் ஒப்புக் கொள்ளாமல்…எவ்வளவோ சொல்லி மனதை மாற்ற முயற்சிக்கிறார்கள். ப்ரூஸ் “விடாது கருப்பு” மனம் கொண்ட மனிதன். தொடர் போராட்டம் செய்து…மாமா ஒருவரின் மூலமாக ஒரு குருவிடம் சேர்ந்து சண்டை பயல ஆரம்பித்து… அது ஒரு பெரும் கதை. 

ஒரு மொத்த வாழ்க்கையை இடைவேளையோடே முடித்து கொண்ட வேகம்… என்று காற்றின் விசையை திசை மாற்றும் நுட்பத்தை கண்டெடுத்த சண்டைக்காரன் ப்ரூஸ். சினிமாவில் பிசியாக இருந்த போது தான் ஆரம்ப கட்ட சண்டை கற்று கொடுத்த குருவின் மரணம் நிகழ்கிறது. அது கூட அவரை பெரிதும் பாதிக்கிறது. எத்தனையோ முறை குருவோடு முரண்பாடு வந்தபோதிலும் அவர் மீது கொண்ட பக்தி… மரியாதை ஒருபோதும் ப்ரூஸிடம் குறையவில்லை.

பள்ளியில் நடந்த நடன போட்டியில் வெற்றி பெற்று வரும் ப்ரூஸ் அந்த பள்ளியில் ஐகானாக ஆகிறார். சுற்றிலும் கொண்டாடும் நண்பர்கள் இருந்த போதிலும் பொறாமை கொண்ட வஞ்சம் கொண்ட மனிதர்களும் ப்ரூசை சுற்றி எப்போதும் இருந்து கொண்டே தான் இருந்தார்கள். எப்போதும் ஒரு தலைவனை தனக்குள் ப்ரூஸ் கொண்டிருந்ததை ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைக்கேற்ப அவரே அதை உணரவும் காலம் அனுமதிக்கிறது. 

நடனம் தெரிந்த சண்டைக்காரன். எப்போதும் வேகம். எதிலும் ஒரு மாற்று பார்வை. ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் கொள்ளும் ஈர்ப்பு மற்றும் தீர்க்கம். சண்டை வேகமாய் பழக்கப்படுகிறது. யாரிடம் தோற்று விழுகிறாரோ அவரிடமே அதை கற்றுக் கொண்டு பிறகு அவரையே போட்டு தாக்கும் விடாமுயற்சி கொண்ட வெறித்தனம் இயல்பாகவே இருக்கிறது. தோல்வியை ஒப்புக் கொள்ளவே முடியாத தேகம்… தொடர் பயிற்சியில் நேரம் காலம் இல்லாமல் கலையை நிகழ்த்தி பார்த்துக் கொண்டே இருக்கிறது. எப்போதும் காற்றில் குத்திக் கொண்டே இருக்கும் கைகள்… எதிர் தாக்குதலுக்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றன. நடக்கையில்…. வகுப்பில்…..நண்பர்களோடு இருக்கையில்…. என்று கைகளில்… சண்டை பயிற்சி அசைந்து கொண்டே இருக்கிறது… ஓர் அனிச்சை செயலைப் போல. ஓடுவதற்கு எப்போதுமே தயங்கியதே இல்லை. எங்கும் எப்போதும் ஓட்டம் தான். ஓடி ஓடியே வீடு வரும்…. ஓடி ஓடியே ஊரை சுற்றும்… பின்னாளில்… சினிமா ஸ்டார் ஆன பின் கூட ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனத்தோடு தொலைபேசியில் வாக்குவாதம் முற்ற… அதை என்ன ஏதென்று கேட்பதற்கு இந்தா இப்ப வர்றேன் என்று சொல்லி வாசலில் கார் இருப்பதை கூட மறந்து நகர சாலையில் ஓட ஆரம்பிக்கும் ஒருவனை நாம் வழக்கம் போல பார்க்க முடியாது.

ஹோட்டலில் வேலை…நிலக்கரி சுரங்கத்தில் வேலை.. என்று கிடைத்த வேலையெல்லாம் செய்த நேர்மையான மனிதன். அறத்தோடு கூடிய அன்பை காட்டுவது கூட மிக மெல்லிய புன்னகையில் தான். அதீத உணர்ச்சி வயப்படுதல் ஒருபோதும் கிடையாது. நிறுத்தி நிதானமாக எடுக்கும் முடிவு…அதன் பிறகு ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

தன் கலை மீது கர்வம் கொண்ட மனிதனாகவும் காண முடிகிறது. போட்டியில் தோல்வி என்றால் கற்றுக் கொண்டு… வெற்றி என்றால் கற்றுக் கொடுத்து என்று… சண்டை நடக்கையிலேயே அதை பயிற்சியாக்கி அதை அப்போதே கற்றுக் கொள்ளும் வேகம் நம் கற்பனைக்கும் எட்டாதது. கொஞ்சம் அவரச குடுக்கனும் கூட. புதிய ஸ்டைலை தெரிய நேர்ந்தால் அதை உடனே கற்று கொள்ள வேண்டும்.

“இது முடித்து தான் இது… அது முடித்து அது….” என்று குரு என்ன சொன்னாலும்… அன்றிரவே அதை வீட்டில் பயிற்சி செய்து… முட்டி மோதி… அடித்து பிடித்து காலையில் அதை செய்து காட்டி கைதட்டல் வாங்கி விட வேண்டும்.

எல்லா மாணவர்களும் வகுப்பு முடித்து கிளம்பி விட்டாலும்… வெளியே இருக்கும் மரத்தில் கையை குத்தி அதனோடு சண்டையிட்டு கொண்டிருக்கும் ப்ரூஸ் ஆரம்ப கால கட்டத்தில் அரை கிறுக்கன் போல என்று தான் பலராலும் முணு முணுக்கப்பட்டார். பையன் வீணா போயிடுவான் என்று வீட்டில் எல்லாரும் பதறினார்கள். எல்லாம் தாண்டி எல்லைகள் தாண்டி… தன் கலையை வளர்க்க போகிறேன் என்று அமெரிக்காவுக்கு செல்கிறார். முதல் நாளே ஒரு டாக்சி டிரைவரால் ஏமாற்றப்பட்டு… பிறகு அந்த டிரைவர் காலம் முழுக்க நண்பனாக இருப்பது கால முரண். யாரெல்லாம் அவருடன் தோற்று அவரை அசந்து பார்த்தார்களோ அவர்கள் எல்லாரும் இறுதி வரை அவரோடே கூட இருந்தார்கள். ஒரு ஜப்பான் போட்டியாளன் கூட இறுதி வரை அவர் நடத்தி வந்த தற்காப்பு கலை பள்ளியிலும்…. சினிமாவுக்கு சென்ற பின் அந்த வேலைகளிலும்… குடும்ப நண்பனாகவும்… ஆலோசகனாகவும் இருந்தான். ப்ரூசை சுற்றி எப்போதும் நல்ல நண்பர்கள் வட்டம் இருந்தது. அவர் சொல்வதை மறுப்பு சொல்லாமல் பின்பற்ற… செயலாற்ற அந்த கூட்டம் எப்போதுமே தயங்கியது இல்லை. மேலும் எடுத்த காரியத்தில் யார் உடன் இருந்தாலும் இல்லை என்றாலும்… பிடிவாதமாக அதை நோக்கி நகர்வது தான் ப்ரூஸின் பலம்.

ப்ரூஸ்க்கு பள்ளி காலத்திலேயே ஒரு காதலி இருந்தாள். அவள் ஒரு கட்டத்தில் ஆங்கில மோகத்தில் மெல்ல ஒதுங்கி கொள்கிறாள். அவள் பழக்க வழக்கம் பிடிக்காமல் அவளை விட்டு பிரிந்து…  பிறகு அமெரிக்காவில் ஹோட்டலில் வேலை செய்கையில் அங்கே பணிபுரியும் ஒருத்திக்கு ப்ரூஸ் மேல் கொள்ளை காதல். ஆனால் அவளை தோழியாகவே கடந்து விடுகிறார். அவளோடு இருந்த எந்த சூழலிலும்… தான் கொண்ட ஒழுக்கத்தை… அறத்தை அவர் கைவிடவே இல்லை. 

பிறகு ஒரு கட்டத்துக்கு பின் தான் லிண்டா என்ட்ரி.

எந்த அமெரிக்காவுக்கு தன்னை நிரூபிக்க எண்ணினாரோ அந்த அமெரிக்காவை சார்ந்த லிண்டா தான் வாழ்க்கை துணைவி ஆகிறாள். இது காதல் முரண்.

லிண்டா எல்லாமுமாக இருக்கிறாள். அவளின்றி ப்ரூஸ் அசைத்த அணுக்களுக்கு உயிர் இருந்திருக்காது. இரண்டு பிள்ளைகள் அடுத்தடுத்து. வளமான வாழ்வு. கலையை கற்று கொடுத்துக் கொண்டிருக்கும் ஊரறிந்த வீரன். ப்ரூசை வீழ்த்துவது முடியாத காரியம். எங்கிருந்தெல்லாமோ வந்தார்கள். மோதினார்கள். வீழ்ந்தார்கள். இறுதி பன்ஞ்சை உபயோகிக்கும் முன் நடுவரிடம் கேட்டு.. முடிவை சொல்லுங்கள்.. இல்லையெனில் அந்த குத்தையும் கொடுத்து விட்டு… அவன் இல்லாமல் போக வேண்டாமே என்று இரக்கம் காட்டுவார். புரிந்து கொண்ட நடுவர் ப்ரூஸ்- ன் கையை உயர்த்தி வெற்றியை உறுதிப்படுத்துவார். வீழ்ந்து கிடப்பவனின் உறவுகளுக்கு அப்போது தான் உயிர் வரும். இப்படி… நாடறிந்த வீரன் சினிமாவுக்கு போகிறார். அவரின் திறமையை வெகு நுட்பமாக தயாரிப்பு நிறுவனங்கள் காசாக்குகின்றன. படம் சக்கை போடு போடுகிறது. ஊரறிந்த தற்காப்பு கலைஞன் உலகம் அறிந்த கிரேட் கலைஞனாக மாறுகிறான். ஆசியாவின் முதல் ஹீரோ.

அமெரிக்காவில் தான் ஹீரோக்கள் பிறக்க வேண்டுமா என்ன.. சீனாவிலும் பிறக்கலாம். அந்த சிக்னேச்சர் போஸ் நினைவிலாடுகிறது.

ப்ரூஸ் லீ யின் சிறப்பு ஃபிஸ்ட் பஞ்ச். கை முட்டியை நெஞ்சருகே வைத்து… முழு உடல் பலத்தையும் அதற்கு கொண்டு வந்து இருந்த வாக்கிலேயே விசுக் என்று நெஞ்சில் ஈட்டியை போல பாயும் அந்த வேகம் தான் இவன் வேற மாதிரி என்று ஆக்கியது. பொதுவாகவே ப்ரூஸ் வேகம் நிறைந்த மனிதன். மூளை நினைத்து முடிப்பதற்குள் பன்ச் நாலைந்து விழுந்து எழுந்திருக்கும். தடுப்பதையே அடிப்பதாக்கிய நுட்பத்தில் உடல் முழுக்க கண்கள் கொண்ட கணிதன். ஜூடோ கராத்தே… பாக்சிங் என்று எல்லாம் கலந்த கலவையாக ப்ரூஸின் ஆர்ட் இருந்தது. அது ஒன்றிலிருந்து இன்னொன்றை இன்னொன்றிலிருந்தும் இன்னொன்றை என்று அது அவரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஊரெங்கும் அவருக்கு மாணவர்கள் இருந்தார்கள். அவரை ஆராதிக்கும் ரசிகர் கூட்டம் இருந்தது. அவரை கொண்டாடும் கும்பல் இருந்தது. மொத்தத்தில் தன்னை தானே செதுக்கி ஒரு நாயகன் உருவான கதை தான் ப்ரூஸ் எனும் பதம் வரலாற்றில் தன்னை பதிந்து கொண்டது.

சீனன் என்றாலே மதிப்பு குறைவாக பார்க்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தாங்கள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்கு… தன் உடலையே ஆயுதமாக்கினார் ப்ரூஸ். எதைக் கொண்டு பள்ளியில் அமெரிக்கன் தன்னை இழிவு படுத்தினானோ அதைக் கொண்டே அவனை வீழ்த்திக் காட்ட ப்ரூஸ் எடுத்த முடிவு தான் உடல் வழியே பலப்பட்டு அதன் மூலம் தன்னை நிரூபிக்க எண்ணியது. இந்த உலகத்துக்கு சொல்ல என்னிடம் செய்தி இருக்கிறது. அதற்கான மீடியம் தான் இந்த தற்காப்பு கலை என்பதில் ப்ரூஸ் உறுதியாக இருந்ததை நம்மால் உணர முடிகிறது. எப்படி பார்த்தாலும் ப்ரூஸ் சாராசரி மனிதன் இல்லவே இல்லை. நூற்றாண்டுகளில் நிகழும் கால நிகழ்வு ப்ரூஸ் வந்ததும் சென்றதும்.

திரையில் லீட் ரோலில் ஐந்தே படம். அதுவும் ஐந்தாவது படம் பாதியிலேயே அவரின் மரணம். ஆனாலும் பூமி உள்ள காலம் வரை…. இரு கைகளையும் காற்றில் நிறுத்தி கண்களில் எதிராளியை அளவெடுத்து மெல்ல கழுத்தை ஆட்டி ஆட்டி சண்டைக்கு பொருந்துவது போல தன்னை சமநிலை செய்து கொண்டு வேகமாய் படு வேகமாய் ஒரு தாக்குதலை நிகழ்த்தும்… ப்ரூஸ்-ன் அந்த பிரமாண்ட வடிவம் இருக்கும். ஹாங் காங்கில் சிலையாய் கம்பீரம் காட்டும் ப்ரூஸ்… ஒரு குறியீடு. கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கைகள் அவை. அந்த கண்களில் எப்போதும் தீவிர ஒளி. அந்த தேகத்தில் எப்போதும் பயிற்சி. ஒரு ரப்பரை போல விரிந்து வலிமை ஏறிய புஜங்கள்… தோள்கள். தேக்கு முதுகில்… எப்போதும் சிறகுகள். ப்ரூஸ் எனும் சூறாவளி வந்து போன கால கட்டம் இந்த நூற்றாண்டின் மிக ஆர்வமான சக்கர சுழற்சி.

முறைப்படிதான் மோத வேண்டும் என்று என்ன விதி இருக்கிறதோ அந்த விதியைத் தான் பின்பற்றுவார். போட்டி முடிந்த மறுகணம் எதிராளியிடம் கை குலுக்கி சிநேகம் காட்டுவார். வஞ்சம் ஒருபோதும் இல்லை. வம்பிழுத்தால்… வருவதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் வம்பிழுத்தவர். மற்றபடி மன்னிக்கும் குணம் கொண்ட மரியாதை விரும்பி.

நிஞ்சாக் சுழற்றுவதில் கிங். வருவதற்குள் போய் விடும் வேகமே பலம். லெஜண்ட் ப்ரூஸ்- ன் மரணம்… ஒரு பெரும் நாயகனை முறியடிக்க பார்த்தது. ஆனால் நாயகர்கள் இறந்த பிறகு இன்னும் வேகம் எடுத்து மனிதர்களை சென்றடைகிறார்கள். அதற்கு ஆல் டைம் உதாரணம்… நாட்டி பாய் ப்ரூஸ் லீ. அதிகமான உடற்பயிற்சி…… அதன் மூலம் எழுந்த அதீத உடல் வெப்பம்… உடல் பலத்துக்காக உட்கொண்ட ஒரு வகை தாவரம் என்று பல தரப்பட்ட காரணங்கள்… சொல்லப்பட்டாலும்.. ப்ரூஸ் லீ மரணத்தில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. 13 % வீக்கம் ப்ரூஸின் மூளையில் இருந்ததாக அவரின் உடற்கூறு பரிசோதனையில் தெரிய வருகிறது. எப்படியோ ஒரு மாமனிதனின் மரணத்தை நிகழ்த்திவிட்டு காலம் கண் கொட்ட பார்த்ததை இப்போது நினைத்தாலும் பதறுகிறது.

ப்ரூஸின் வாழ்வே ஒரு பரிசோதனை என்பதோடு மீண்டும் மீண்டும் தலை தாழ்த்தி வணங்குகிறேன்…  ஒளியாகி விட்ட வேகத்தின் பிள்ளைக்கு சாவேது…? மாறாக சரித்திரம் தான்…!

++

கவிஜி

மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி  கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *