திண்ணையில் அமர்ந்து பேசுவது இருக்கட்டும். அதில் அமர்ந்திருப்பதே அலாதி தான். திண்ணைகளற்ற வீடுகளை இன்று காம்பவுண்ட்கள் சூழ்ந்து விட்டன. முன்பொரு காலத்தில் திண்ணை பேச்சென்றே ஒரு வடிவம் இருந்தது. இன்று வீடியோவில் யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் வெறித்துப் பார்த்துக் பார்த்துக் கொண்டிருப்பது போல் இல்லை. அது ஒவ்வொருவரும் பேசி ஒவ்வொருவரும் காது கொடுத்து கேட்ட காலம்.

பள்ளி காலங்களில்… விடுமுறைக்கு ஊருக்கு சென்றால்… திண்ணை தான் நம்மை முதலில் வரவேற்கும். திண்ணையில் அமர்ந்து தண்ணீர் குடித்து.. தேநீர் குடித்து… பிறகு தான் வீட்டுக்குள் சென்று உடை மாற்றுவோம். காலை மாலை மதியம் இரவு என்று ஒவ்வொரு நாளும் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளும் திண்ணையை ஏனோ நினைத்துக் கொண்டது இன்றைய டெர்ரஸ் மனது.

வெளியே வெயில் எத்தனை இருப்பினும்… திண்ணையின் குளுமையை உடல் முழுக்க உணரும். பகலில்… திண்ணையில் தான் விளையாட்டு. இரவில் அதே திண்ணையில் தான் தூக்கம். திண்ணையில்.. மாமா… சித்தப்பா… மச்சான்கள்… நான்….. துரை… சதீஸ்…  பக்கத்து வீட்டு அண்ணன்கள்…. எதிர் வீட்டு பங்காளிகள்…என்று எல்லாரும் வரிசையாய் படுத்துக் கொள்ள.. மாமாவும் சித்தப்பாவும் ஊர் கதைகள்… பக்கத்தூர் கதைகள்.. பேய் கதைகள்.. என்று எல்லா நாயங்களும் பேசுவார்கள். வெளியே காற்று சிலு சிலுக்கும். பெட்ஷீட்டை இழுத்து இழுத்து போர்த்திக் கொண்டு அந்த கதைகளை கேட்பதே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். திண்ணையில் இடம் பத்தாத ஈஸ்வரன் மச்சான்… கணேஷ் மச்சான்… சாமிதாஸ் அண்ணன்… தாத்தா… சுப்பிரமணி மாமா…என்று வெளியே ஆங்காங்கே கயிற்று கட்டிலில் படுத்திருப்போரும் உண்டு. ஆங்காங்கே முணுமுணுப்பு சத்தம் மெல்ல இரவு மேயும் சிறு வெளிச்சமென நகர்ந்தபடியே இருக்கும்.

கதைகளுக்கா பஞ்சம். காதுகளுக்கே இந்த பிரபஞ்சம் என்பது போல. கேட்க கேட்க குஷி ஏறும்.

கோடை நிலாவுக்கு வெளிச்சம் அதிகம். படுக்கையை 9 மணிக்கு போட்டு விட்டாலும்… பேச்சு 11 வரையெல்லாம் நீளும். பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க… சிறுவர்கள் நாங்களும் கிசுகிசுத்துக் கொண்டிருப்போம். போர்வையை விலக்கி தலையை சற்று தூக்கி பார்த்தால்.. திண்ணை தாண்டிய வீதியில் சாம்பல் பூத்த இரவு பளீர் என கண் சிமிட்டி சிரிக்கும்.

இனம் புரியாத சந்தோசத்தோடு… மனம் புரியாத தைரியமும் கூட இருக்கும். கேட்பது பேய் கதைகளாக இருந்தாலும்… காதில் கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருப்பேன். பேசிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவரின் ம்ம் குறைந்து மெல்ல தூங்கி விட…. நான் மட்டும் கதையின் இறுதி பாகம் வரை ம் கொட்டிக் கொண்டிருப்பேன். அந்த பேய் அப்புறம் வரவே இல்லையா மாமா என்று கேட்கையில் மாமாவுக்கும் தூக்கம் வந்திருக்கும்.

அடர்ந்த காட்டுக்குள்ளிருக்கும் “பாப்பா வல”சில் பேருந்து நின்று விட… ஏன் பேருந்து நின்றது என்று தெரியாமல்… அந்த இரவில் ஓட்டுநர் உள்பட எல்லாரும் திகைக்க… ஒருவன் மட்டும் ஜன்னல் வழியே இறங்கி… இருளுக்குள் சென்றிருக்கிறான். அதன் பிறகு அந்த பேருந்து என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை. எங்கு போனது… உள்ளிருந்தோருக்கு என்ன ஆனது ஒன்றும் தெரியவில்லை போன்ற கதைகள் திண்ணையில் தூங்கும் இரவுகளை புரட்டி போடும்.

மே மாதம் முழுக்க பேய் மாதம் தான் எனக்கு.

பிறகு இரவில் ஒண்ணுக்கு செல்ல தோன்றும்.. ஆனால்.. முன் சொன்ன பேய் கதைகள்.. காற்றில் உருவம் ஏற்றி எதிரே நிற்கும்.. அய்யயோ என்று கண்களை தலையணைக்குள் அழுத்திக் கொண்டு ஆனாலும்.. முட்டிக் கொண்டு வரும் போது மெல்ல சதீஷை எழுப்புவேன்.

சிறுவர்கள் விழித்துக் கொண்டதை அறிந்த பெரியவர்களும்… தொண்டையை செருமி…. முழிச்சிட்டு தான் இருக்கோம்…. பயப்படாம போயிட்டு வாங்க என்பது போல திரும்பி திரும்பி படுப்பார்கள். மெல்ல… வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கும் வேப்ப மரத்துக்கு சற்று தள்ளி… போய் விட்டு ஓடி வந்து படுத்துக் கொண்டது எல்லாம் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே இருக்கும் திண்ணை தந்த தைரியம். உறவுகளோடு சேர்ந்து… ஒரு கூட்டமாக இருக்கையில்… இருக்கும் சந்தோஷமும் தைரியமும் திண்ணை தந்த பரிசுகள் என்றே நம்புகிறேன்.

அதே போல காலையில் எழும் போதும் அப்படித்தான். அதிகாலை ஐந்து…. ஐந்தரைக்கெல்லாம் மாமா எழுந்து அமர்ந்து கொண்டிருப்பார். தூக்க கலக்க குரலில் கரகரப்பு கூடி இருக்க… காற்றில் ஈரப்பதமும் கூடி இருக்கும். இருள் விலகி காலை அரும்பும் நேரம் பேச்சு சத்தம் கேட்டு மெல்ல கண் விழிக்கும் போதும்… நேற்றைய சந்தோசம் அப்படியே இருக்கும். யாராவது… எங்கோ விட்டதில் இருந்து ஆரம்பித்திருப்பார்கள். அதற்குள் அத்தை தேனீர் தயாரித்து பெட்ஷீட்டை போர்த்தியபடியே அமர்ந்திருக்கும் மாமாவுக்கும் சித்தப்பாவுக்கும்  தர… மெல்ல மெல்ல ஒவ்வொருவராக எழுவோருக்கும் டீ  கிடைக்க ஆரம்பிக்கும்.

சுவற்றுக்கு முதுகு கொடுத்து.. மீண்டும் வரிசையாய் சிறுவர்கள் நாங்கள் சிந்தனையற்று சிரித்துக் கொண்டே அமர்ந்திருப்போம். எல்லாமே எங்கோ படிந்து விட்ட ஓவியம் போல மனதுக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிறது. காலை சிற்றுண்டியாகட்டும்… பகலில் வரும் ஐஸ்காரனிடம் வாங்கும் ஐஸ் ஆகட்டும்.. நுங்கு.. கடலை மிட்டாய்… இளநீர் பிறகு மதிய உணவு கூட அதே திண்ணையில் தான். வெளியே சென்று விட்டு ஊருக்குள் யார் வந்தாலும்… அந்த திண்ணையில் சற்று நேரம் அமர்ந்து ஆசுவாசம் பெற்று.. அதுவும் ஊரில் இருந்து வந்திருக்கும் எங்களிடம் நலம் விசாரித்து.. பிறகு தான் செல்வார்கள். எலுமிச்சை ஜூஸ் போடுவதற்கு அதே திண்ணையில் தான் ஒவ்வொரு எலுமிச்சையாக கீழே வைத்து உள்ளங்கையால் நான் உருட்டி கொடுப்பேன்.

திண்ணை தூண்களை பிடித்தபடி திண்ணைக்கு வெளியே கால்கள் தொங்க அமர்ந்தபடி காலாட்டிக் கொண்டே இருப்பது எனக்கு அத்தனை பிடிக்கும். வீதியை வேடிக்கை பார்ப்பது போல சித்தாந்தம் வேறொன்று உண்டோ… அதுவும் திண்ணையில் அமர்ந்து தீர்க்கத்தை உணர்ந்த பால்யத்தை நினைத்து பார்க்க திண்ணையை போல் ஒரு சித்திரம் தான் வேறுண்டோ. மாலை நேரங்களில் பெரியவர்கள் கூடி பேசிக்கொண்டிருப்பார்கள். அவரவர் கண்டதை பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஊரின் நம்பிக்கை திண்ணையில் குழுமி தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கும். பழங்கதைகளின் வழியே மனம் நிறையும் வழி அறிந்த பொது மேடை அது.

கிராமங்களில் பல வீடுகளில் திண்ணை இருக்கும். அது ஓர் அடையாளம். தெரிந்தவர் தெரியாதவர் என்று யாரும் அதில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். வழி போக்கர்கள் ஆசுவாசத்துக்கு அமர்ந்து தண்ணீர் வாங்கி குடித்து விட்டு… அவர்கள் ஊர் நிலவரங்களை போகிற போக்கில் சொல்லி போவார்கள். திண்ணை மானுட சம நிலைக்கு மேடை என்றால் மிகை இல்லை. திண்ணை கதைகளின் கூடாரம். உறவுகளின் பிணைப்பு சங்கிலி. நினைக்க நினைக்க… திண்ணை வாசம் இதயத்தில் கசிவதை உணர்கிறேன். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். இருந்திருந்தால்… அது எல்லாம் தான் வாழ்ந்து கொண்டிருப்பதன் அர்த்தத்தை கொண்டிருக்கிறது என்று நம்புவோம்.

 கவிஜி

மின்னிதழ்களிலும், இணையதளங்களிலும், முன்னணி பத்திரிக்கைகளிலும் எழுதியவரான கவிஜி  கோவையைச் சேர்ந்தவர். ’எதிர்காற்று’ நாவலும், கவிதை மற்ரும் சிறுகதை தொகுப்புகளும் முன்பாக வெளியிட்டிருக்கிறார். ’தட்டு நிலாக்கள்’ கட்டுரைத்தொகுதி சமீபத்தில் வந்துள்ளது. Kaviji Times என்ற பெயரில் ஒரு யூ டியூப் சேனலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர். இவரது ஸ்லோகம், ‘எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்’.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *