தீவாந்தரம் – நாவல் ஒரு பார்வை

“தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது. மக்கள் இச்சம்பவத்திறகு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இச்சம்பவத்தை ஒட்டி அண்டனூர் சுரா எழுதிய ஒரு சிறுகதை ‘ நிறுத்தக்குறி’. நீதிபதி கலெக்டரை விசாரிப்பதாகவே கதை நகர்கிறது. மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் நீதிபதி கேட்கிறார். கலெக்டர் கண்விழி பிதுங்க தடுமாறுகிறார். கதையின் முன்பகுதியில் தூத்துக்குடியில் 2018இல் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடே நினைவிற்கு வரும். ஆனால் கதை வ. உ. சி. நடத்திய கோரல் பஞ்சாலை தொழிலாளர் போராட்டத்தை வைத்து எழுதியதாக நீதிபதியின் கூற்றாக தெரியவரும். இதுவொரு திருப்பம் எனில் கலெக்டர் விஞ்ச் துறையின் நிர்வாகத் திறனைப் பாராட்டி பிரிட்டிஷ் மகாராணி மேலும் இரண்டு ஆண்டுகள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அளித்த தீர்ப்பு மற்றொரு திருப்பம். இன்றைய நிலையும் இவ்வாறே உள்ளது. இக்கதை ‘அமைதி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் குறி இதழில் 2018இல் வெளியானது.  அப்போது எழுதப்பட்ட கருத்து “சிறுகதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை வைத்து எழுதப்பட்டுள்ளது. கதையை வாசிக்கும் போது தற்போதைய துப்பாக்கிச் சூடே மனத்திரையில் ஓடுகிறது. ஆனால் முடிவு வ. உ. சி. நடத்திய போராட்டத்தில் முடிகிறது. தற்போதைய சூட்டுக்கு சரியான சூடு வைத்துள்ளார்.  பாராட்டுகள்.”. (முகநூல் பதிவு நாள் 08.11.2018). எழுத்தாளர் அண்டனூர் சுரா மக்களின் மனசாட்சியாக நீதிபதி என்னும் பாத்திரத்தின் மூலம் எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் அரசுக்கு எதிரான கணைகள். குத்தீட்டிகள் ” என்பது எழுத்தாளர் அண்டனூர் சுராவின் ‘ எண்வலிச் சாலை’ யிலுள்ள ‘ நிறுத்தக் குறி ‘ க்கு எழுதிய விமர்சனம். இச்சிறுகதையின் நீட்சியே ‘ தீவாந்தரம்’ என்னும் இந்நாவல்  என்று தோன்றுகிறது. காரணம் தூத்துக்குடி சம்பவம் குறித்த நீதிமன்ற விசாரணை.  ஆட்சியாளர்கள் எப்போதும் ஒரேமாதிரிதான் என எண்ணச் செய்துள்ளார்.

வரலாற்று நிகழ்வுகளை வைத்து ஒரு வரலாற்று புனைவாக்குவதில் வரலாறு படைத்தவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா. ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் வ. உ. சிதம்பரம். அவருடன் துணை நின்றவர் சுப்பிரமணிய சிவா மற்றும் சிலர்.  வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மற்றும்  பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக திருநெல்வேலியில் நடந்த  கூட்டத்தில் பேசியதால் அரசு  தேசத்துரோக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வ. உ. சி., சிவா கைதுக்குப் பின் நடந்த கலவரங்களை அடக்குவதற்காக ஒரு துய்யாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதன் தொடர்பாக  வழக்கு, விசாரணை, தீர்ப்பு, சிறை. இவை நடை பெற்றது 1908.  ஒரு நூற்றாண்டுக்குப் பின்னும் இந்திய வரலாற்றில் வ. உ. சி. பேசப்படுகிறார். போற்றப்படுகிறார். வ. உ. சி. வரலாற்றை அடிப்படையாக வைத்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தனது பார்வையுடன்  ஒரு வரலாற்று புனைவாக்கித் தந்துள்ளார் அண்டனூர் சுரா. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வ. உ. சி. யை பேசச் செய்துள்ளார். அவ்வாறான நாவலாக்கியுள்ளார்.

திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் 1908 ஜீலை திங்கள் 7 ஆம் நாள் சுப்பிரமணிய சிவா ஐயர், உலகநாதன் பிள்ளை ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புடன் நாவலைத் தொடங்கியுள்ளார். இருவரில் சிவாவே விசாரணை கைதி எண். 1 ஆக உள்ளார். தீர்ப்பில் இருவர் மீதும்  கடும் குற்றச்சாட்டுகள். வ. உ. சி. க்கு இரண்டு தீவாந்தர தண்டனைகள் வழங்கி ஒன்றன் பின் ஒன்றாக நாற்பது வருடங்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் சிவாவிற்கு பத்து ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும் என்கிறது தீர்ப்பு. முதல் அத்தியாயத்திலேயே வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். நினைவுக்கூரச் செய்துள்ளார்.

திருநெல்வேலி சிறப்பு நீதி மன்ற தீர்ப்புடன் தொடங்கிய நாவல் மெட்ராஸ் ஹைகோர்ட் வழங்கிய மேல் முறையீடு தீர்ப்புடன் நாவல் நிறைவடைகிறது. நெஞ்சம் நிறைவடையவில்லை. தீர்ப்பில் வ. உ. சி. க்கு ஜாமீன் மறுக்கப் பட்டதுடன் ஆறு ஆண்டுக் காலம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது. இந்த இரண்டு தீர்ப்புகளுக்கும் இடையிலேயே  நாவல் புனையப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது. நாவலில் பெரும்பகுதி நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறுவதாகவே உள்ளது. நீதி மன்ற காட்சிகளில் விசாரணையிலும் குறுக்கு விசாரணையிலும் தன் எழுத்தாற்றலை நிரூபித்துள்ளார். வாசகர்களையும் நீதிமன்றத்தில் பார்வையாளராக அமரச் செய்துள்ளார். அதிசயிக்கச் செய்துள்ளார்.

தீர்ப்பை நிறைவேற்றுவதில் அரசு காட்டும் தீவிரமும் தண்டனை காலத்தில் வ. உ. சி. படும் துயரமும் மிக முக்கியமான பதிவுகள்.  தீர்ப்பின் பின்னணியிலும் தண்டனை நிறைவேற்றத்திலும் சாதியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆசிரியர் நாவலினூடாக அறியமுடிகிறது. சாதி எக்காலத்திலும் பின்னணியில் இருந்து அதன் கடமையைத் தவறாமல் செய்துகொண்டுதான் உள்ளது என்கிறார்.  தீர்ப்பையும் குற்றம் சொல்கிறார். விசாரணை முறையும் தப்பு என்கிறார்.

“பிரிட்டிஷார் குற்ற வழக்குகளைப் பிரிட்டிஷாரே விசாரிக்க வேண்டும்  என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது. பிரிட்டிஷார் மதத்தால் உயர்ந்தவர்கள். இந்தியர்கள் ஜாதியால் தாழ்ந்தவர்கள். உயர்ந்தோரின் வழக்குகளைத் தாழ்ந்தவர்கள் விசாரிக்க உரிமையில்லை  என்பதாக பிரிட்டிஷார்கள் தனக்குத் தானே எழுதப்படா சட்டம் வகுத்துக்கொண்டிருந்தார்கள் ”  என்று ஆசிரியர் எழதியதன் மூலம் தெளிவாகிறது.

நாவலை நகர்த்திச் செல்ல, கொண்டு செல்ல சகஜதானந்தா, ராமையா என்னும் இரண்டு பாத்திரங்களின் மூலமான உரையாடல்கள் உதவுகின்றன. இவர்களின் உரையாடல்கள் மூலமே வ. உ. சி. கால திருநெல்வலியைக் காணமுடிகிறது. அக்காலத்திய சம்பவங்கள் பலவற்றை அறிய முடிகின்றன. குறிப்பாக ஆஷ் துரை மீதான துப்பாக்கிச் சூடு.

வ. உ. சி. என்றால் சுதந்திரத்திற்கு  போராடியவர் என்று  சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியாரும் நினைவிற்கு வருவர்.  பாரதியார் இல்லாமல் வ. உ. சி. வரலாறை எழுத முடியாது. இந்நாவலில் பாரதியாரும் வருகிறார். பாரதியார் ஒரு பத்திரிகையாளர் என்பதைக் காட்டியதுடன் சுதேசிமித்திரன் பத்திரிகையிருந்து வெளியேறியதைக் கூறியுள்ளார்.  அதற்குக் காரணம் மிதவாதமும் தீவிரவாதமும் ஆகும். பாரதியார் தீவிரவாதியான பாலகங்காதர திலக்கின் சீடராவார்.

தீவாந்தரம் என்னும் நாவல் வ. உ. சிதம்பரம் அவர்களின் வாழ்க்கையையோ சுப்பிரமணிய சிவா அவர்களின் வாழ்க்கையையோ முழுமையாக கூறவில்லை. மிக முக்கியமாக தண்டனைக் காலத்தைப் பற்றியே பேசுகிறது என்பதை ‘ தீவாந்தரம் ‘ என்னும் சொல்லே புரியச் செய்கிறது. தீவாந்தரம் என்னும் நாவலை ஏன் எழுதினார், எதற்கு எழுதினார் என்னும் விவரம் அறிய ஆசிரியரின் முன்னுரை எதுவுமில்லை. ஆனால் நாவல் ஏன் எழுதினார், எதற்கு எழுதினார் என்பது நாவலை முழுமையாக வாசித்த பின் உணராமல் இருக்க முடியாது. இதில் வரலாறு மட்டுமில்லை. புனைவும் உள்ளது. வரலாற்றுப் புனைவில் தனியொரு இடத்தைப்பிடித்து வருகிறார் எழுத்தாளர் அண்டனூர் சுரா. எப்போதும் அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரான ஓர் நிலைப்பாட்டில் அண்டனூர் சுரா இருக்கிறார் என்பதையே மீண்டுமொருமுறை கூறுகிறது ‘ தீவாந்தரம்’.   அண்டனூர் சுராவிற்கு முன்பும் வரலாற்று புனைவுகள் பல எழுதப்பட்டுள்ளன. ஆயினும் தீவாந்தரம் தனித்து நிற்கிறது. முன்னிற்கிறது. அண்டனூர் சுராவின் படைப்புகளிலும் தீவாந்தரம் முன்னணியில் உள்ளது.

எழுத்தாளர் அண்டனூர் சுரா ‘ தீவாந்தரம் ‘ என்னும் இந்நாவலை எழுத எடுத்துக் கொண்ட தீவிர முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அதாவது நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட வ. உ. சி. தொடர்பானவ மட்டுமல்லாமல் அக்கால கட்டத்திய தகவல்களைத் திரட்டி சமகால அரசியலுடன் சாதிய அரசியலையும் இணைத்து சாமர்த்தியமாக எழுதியுள்ளார். ஒரு படைப்பாளியாகவும் ஒரு தேடல் மிக்க மெனக்கெடலராகவும் ஒரு முற்போக்குவாதியாகவும் அண்டனூர் சுராவை தீவாந்தரம் நாவல் அறியச் செய்கிறது. அடையாளப்படுத்துகிறது. வ. உ சி. தொடர்பான இத்தொகுப்பை தியாகச் செம்மல் வ. உ. சிதம்பரனார்  மற்றும் அவருக்குப் பக்கத் துணையாக நின்ற தியாகிகளுக்கு ‘ சமர்ப்பணம் செய்து வ. உ. சி. மீதான தன் மதிப்பையும் மரியாதையையும் தெரிவித்துள்ளார். ” ‘தீவாந்தரம்” எனும் இந்த நாவல் அப்படியான தியாகச் செம்மலின் வாழ்க்கையை நம் கண் முன்னே காட்சிப்படுத்தும்

நாவலாக மிளிர்கிறது. அவரின் சர்வபரி தியாகத்தைப் பற்றி நிறைய நூல்கள் பேசினாலும் நாவலைப் போல அக்கால நிகழ்வுகளோடும் அருமையான கிளைக்கதைகளோடும் நம் கண் முன் காண்பது நாவலின் சிறப்பாகும் ” என்று அணிந்துரையில் எம். எம். தீன் குறிப்பிட்டிருப்பது உண்மை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். வ. உ. சி. பேசப்படும் வரை அண்டனூர் சுராவும் பேசப்படுவார். வாழ்த்துகள்.

வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னைதீவாந்தரம் – நாவல் – அண்டனூர் சுரா.

பொன்.குமார்

சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலமாக தமிழில் புத்தக விமர்சகராக பெயர்பெற்றவர். கவிதை உலகில் நடைபயின்றவர் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *