அந்த ஊரில் ஒரு புகழ்பெற்ற பலசரக்குகடை இருந்தது. அந்த கடையில் கிடைக்காத பண்டங்களே இல்லை. அந்த கடைக்கு புதியதாக ஒரு பூண்டு விற்பனைக்கு வந்தது.

பார்க்க பெருத்தும் பளபளவென்றும் இருந்த மற்ற பூண்டுகளிடையே இந்த பூண்டு சற்று நுனிவறண்டு சுருங்கிப்போய் இருந்தது.

பூண்டுகளை எல்லாம் கடையில் ஒரு பக்கத்தில் ஒரு கோணிச்சாக்கில் குமித்து வைத்திருந்தனர்.

புதிதாக வந்திருந்த பூண்டை பலநாளாக விற்பனையாகமல் இருந்த பூண்டுகள் கேலி பேசி்ன.

பெருத்தும் பளப்பளவென்று இருக்கும் நாங்களே இன்னும் விலைப்போகவில்லை, உன்னையெல்லாம் யார் வாங்குவார்கள்? என்றன.

புதிதாக வந்த பூண்டு அவமானத்தில் இன்னும் வெம்பிப்போனது.

அப்போது ஒரு அழகான பெண் அந்த கடைக்கு வந்தாள். அவளை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லலாம் அவள்தான் அந்த ஊரிலேயே மிக அழகான பெண் என்று. நேர்த்தியான தன் கைகளால் அவள் ஒவ்வொரு பொருட்களாக எடுத்துக்கொண்டிருந்தாள்.

அவள் தன்னை எடுத்துவிட மாட்டாளா என்று ஒவ்வொரு காய்கறியும் துள்ளி குதித்தன.

கீரைகள் காற்றில்ஆடி தங்களுடைய இருப்பை காட்டிக்கொண்டன. பச்சைமிளகாய்கள் மூச்சை அடக்கி தங்கள் பசிய நிறத்தை இன்னும் அடர்த்தியாக்கிக்கொண்டன, தக்காளிகள் தங்கள் கன்னத்தின் செம்மையை மீண்டும் அதிகப்படுத்திக்கொண்டன.

மீ்னும் கோழியும் அவள் தங்களை வாங்கிக்கொண்டு போய் சமைக்க மாட்டாளா? என்று மருகி மருகி மீண்டும் செத்துக்கொண்டிருந்தன.

அந்த யுவதி எல்லாவற்றிலும் ஒரு ஒரு கிலோ வாங்கினாள். பூண்டை அவள் எடுக்கவரும்போது மற்ற பூண்டுகள் முன்னே வந்து புதுப்பூண்டை கடைசியில் தள்ளின. அந்த அழகான பெண்ணின் கை தங்கள் மீது பட்டுவிடாதா என்று ஒவ்வொரு பூண்டும் ஏங்கின. அவற்றின் வறண்ட பொன்னிற தோல்கள் செவ்வண்ணம் கொண்டன.

அந்த பெண் பூண்டு இருக்கும் கோணி சாக்கை நிதானமாக பார்த்தாள்.

அவளின் கண்கள் ஒரு முறை பளிச்சிட்டன. சாக்கில் இருந்த பூண்டுகள் எல்லாம் ஒருமுறை துள்ளின. புதுப்பூண்டிற்கு இந்த பொருந்தாகாதல் மிகப்பெரிய அசௌகரியத்தையும் அசூசையும் தந்தது.

அந்த அழகான பெண் அந்த மொத்த சாக்குப்பை பூண்டையும் விலைக்கொடுத்து வாங்கினாள்.

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இத்தனை பூண்டை வைத்து அந்த பெண் என்ன செய்வாள் என்று காசை எண்ணியப்படி யோசித்துக்கொண்டார்.

அந்த பெண் மிகப்பெரிய பலசாலியாக இருந்தாள். சாக்குப்பையை கைப்பை போல லாவகமாக தூக்கிக்கொண்டு தன் வண்டியில் ஏற்றி தன் வீடு நோக்கி நகர்ந்தாள். பூண்டுகளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தங்களை அவள் அவ்வாறு தூக்கியதையும் அணைத்து வண்டியில் ஏற்றியதையும் சொல்லிசொல்லி பூரித்தன.

அவளுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கொள்வதென பூண்டுகள் முடிவுசெய்தன.

அவள் தங்களை உரிக்கும் போது அவளுக்கு சிரமம் தராமல் தன் ஆடைகளை தாங்களே அவிழ்த்துவிடுவதென்றும், அவள் தங்களை சூப்பில் போட்டால் உடனே குழைந்துவிட வேண்டும், வறுத்தால் உடனே வறுப்பட்டுவிட வேண்டும், ஊறுகாயாக மாற்றினாள் என்றால் உடனே ஊறிவிட வேண்டும் என்றும் அவைகள் திட்டமிட்டன.

இதை பார்த்துக்கொண்டாருந்த புதுப்பூண்டிற்கு இவர்களின் பைத்தியக்காரத்தனம் மீது அலாதியான வெறுப்பு வந்தது.

அந்த பெண்ணின் வீட்டிற்கு மொத்த காய்கறிகளும் வந்து சேர்ந்தன.

அது ஒரு பெரிய பழைய அரண்மணை போலிருந்தது. வெளிப்புறத்தை விட உள்புறம் அழுகி சிதிலமடைந்து இருந்தது.  உள்ளே ஒரு மனிதன் வாழ்வதற்கு தகுதியான ஒரு சுவரோ ஒரு தரையோ ஒரு கூரையோ கூட இருந்திருக்கவில்லை… ஆனால் அவள் அங்குதான் வாழ்கிறாள்.

ஆனால் ஊரிலே அழகியான அந்த பெண் இந்த சிதிலத்திற்கு மத்தியிலா வாழ்கிறாள் என்று காய்கறிகள் அதிர்ந்தன…

சில சோக பெருமூச்சுவிட்டன…

அந்த அழகி அந்த வீட்டினுள் நுழைந்த உடனே காய்கறி பைகளை சமையல்கட்டில் வைத்துவிட்டு சென்றாள் .

அன்று இரவு சூரிய அஸ்மனத்திற்கு பிறகு அந்த யுவதி சமையலறைக்குள் வந்தாள்.

கோழியைக் கழுவி தண்ணீரில் உப்பு மிளகாயோடு கொதிக்க வைத்தாள், பிறகு வெந்த கோழியை உதிர்த்து சோறுடன் சேர்த்து பிசைந்துக்கொண்டாள்.

தினமும் தன் அறைக்கு்செல்லுமுன் கையில் ஏழு பூண்டுகளோடு தன் அறைக்கு சென்றுவிடுவாள். கோணி சாக்கில் இருந்து தினம் தினம் ஏழு பூண்டுகள் குறைந்தவண்ணமே இருந்தன…

மற்ற பூண்டுகள் அந்த அழகிய யுவதி தங்களை உண்ணும் நாளுக்காக தவமாக கிடக்கலாயின.

புதுப்பூண்டிற்கு ஒரு நாள் கடந்தால் அடுத்த நாளுக்கான உற்சாகம் தொற்றிக்கொள்ளும். தன்னை அந்த பெண் உண்ணுவதற்கு பதிலாக தன்னை தூக்கி போட்டுவிட்டால் தான் எங்கேயாவது முளைத்து வாழலாம் என்றுகூட மானசீகமாக வேண்டிக்கொண்டது.

பாதி சாக்கு பூண்டுகள் காலியான பிறகு மற்ற பூண்டுகளுக்கு ஒரு வித அச்சம் வர ஆரம்பித்தது.  தினமும் ஏழு பூண்டு என அந்த பெண் என்ன செய்கிறாள் என்று அவர்களுள் கூடிகூடிப்பேசிக்கொண்டன.

ஒரு பூண்டு சொன்னது, இரவில் பூண்டை பாலில் கலந்து சாப்பிட்டால் கொழுப்பில்லாமல் இளமையாக இருக்கலாம் என்று யாராவது சொல்லியிருப்பார்கள். அதை அந்த பெண் செய்துகொண்டிருப்பாள் என்றது

மற்றொரு பூண்டு சொன்னது, தினமும் கோழி உண்பதால் அவள் குண்டாகிவிடக்கூடாது என்று பூண்டை மென்று உடல் மெலிகிறாள் போல என்றது.

மற்றொரு பூண்டு சொன்னது, பூண்டிற்கு மருத்துவ குணங்கள் மட்டுமல்ல மந்திர குணங்களும் உண்டு. ஒருவேளை தனக்கு கெட்ட சொப்பனங்கள் வரக்கூடாது என்று அவள் தன் தலையணைக்கு கீழே பூண்டை வைத்துவிட்டு உறங்குகிறாள் போலும் என்றது.

ஆனால் எது உண்மை என்பதை அந்த பூண்டுகள் யுவதி நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தெரிந்துக்கொள்ள முடியும் எனவே பூண்டுகள் தங்களுக்குள் விதவிதமான பேச்சுக்களை வளர்த்துக்கொண்டன.

அப்போது ஒரு நாள் புதுப்பூண்டு தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சாக்குப்பையின் கீழே இருந்து ஒரு மெல்லிய குரலில் ஒரு சத்தம் வந்தது. முதலில் புதுப்பூண்டு அந்த சத்தத்தை உதாசீனப்படுத்தியது. பிறகு உன்னிப்பாக கேட்க கேட்க புதுப்பூண்டு எழுந்து பார்க்க சாக்கு பையின் கீழே ஒரு நத்தை உருண்டு வந்தது. அது பூண்டை பார்த்து கீழே வா என்று சைகை காட்ட, புதுப்பூண்டு தயங்கியது. நத்தை புதுப்பூண்டை நோக்கி கைக்கூப்பி கீழே வா, என்று அழைக்க வேறுவழியின்றி புதுப்பூண்டு சாக்குப்பையின் விளிம்பிற்கு வந்து குதிக்க கீழே சாக்குமூட்டைக்கு அருகிலிருக்கும் நத்தை புதுப்பூண்டை ஆராய்ந்தது.

மெல்ல சத்தம் எழுப்பாமல் என்னுடன் வா! என்று நத்தை அழைக்க புதுப்பூண்டு நத்தையுடன் சென்றது.

நத்தை அந்த அழகி யுவதியின் அறைக்கு செல்லும் வழியில் திரும்ப,

புதுப்பூண்டிற்கு பயம் வந்தது.

அந்த யுவதி என்னை அழைத்து வரச்சொன்னாளா ? நானோ புதுப்பூண்டு, இன்னும் வளரவில்லை, என்னைவிட செழிப்பாகவும் வாசனையாகவும் பலர் இருக்கிறார்கள் எங்கள் சாக்கில், என்னை விட்டுவிடேன் என்று புதுப்பூண்டு கதறியது, நத்தை புதுப்பூண்டை நிதானமாக பார்த்துவிட்டு, ச்சே ச்சே என்ற உலரல் இது, அமைதியாக வா நான் உன்னை பாதுகாப்பேன், என்று அழைத்து சென்றது.

அழகியின் அறைக்குள் செல்வதற்கு முன்னர் அந்த நத்தை ஒரு மந்திரம் சொல்ல அந்த நத்தை ஒரு கருப்பு புழுவாக மாறியது, அந்த மந்திரத்தை பூண்டையும் சொல்ல சொல்ல பூண்டு ஒரு பூச்சியாக மாறியது

அறைக்குள் புழுவும் பூச்சியும் செல்ல அந்த அறை விநோதமாகவும் விகாரமாகவும் இருந்தது,

ஒவ்வொரு பூண்டும் கழுத்தில் மந்திர நூல் கட்டப்பட்டு உத்திரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பூச்சி அதிர்ந்து என்ன இது, எதற்கு என் குடும்பத்தை இப்படி கழுவிலேற்றியிருக்கிறாள் என்று கோபமாக கேட்டது பூச்சி

புழு நிதானமாக, ” நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு சமையல் பொருளாகவா அல்லது மருந்தாகவா ? என்று கேட்டது.

பூச்சி முழித்துவிட்டு இரண்டும்தான் என்றது.

புழு பூச்சியிடம், ” முட்டாள் பூண்டுகளே ஒரு காலத்தில் உலகத்தின் கடவுளாக நீங்கள் இருந்தீர்கள். உங்களைதான் இந்த மனிதர்கள் வழிப்பட்டு வந்தார்கள். உங்களுக்கு படையலும் விழாவும் எடுத்தார்கள். அவர்களை கடவுளாகிய நீங்கள் நோய்களில் இருந்து காப்பாற்றினீர்கள், அவர்களின் மலட்டுத்தனத்தை குணமாக்கி நிறைய மக்கட்செல்வத்தை கொடுத்தீர்கள். மனிதர்கள் உங்களை தின்ன கூட மாட்டார்கள். நீங்கள் நெருப்பில் குளிக்கும்போது மக்களின் நோய்கள் தீர்க்கப்பட்டன.

கடவுளாகிய நீங்கள் உங்களுக்கென மிகப்பெரிய கோட்டைகளையும் கோவில்களையும் மனிதர்களை கொண்டு கட்டினீர்கள்.

சாத்தானும் சூனியக்காரிகளும் மனிதர்களை அண்டவிடாமல் இருக்க வாசலில் உங்களை கட்டித்தொங்க விட்டிருப்பார்கள்.

உங்களை கண்டால் மனிதர்கள் மட்டுமல்ல சாத்தானும் அஞ்சியது.

பல ஆயிரக்கணக்கான வருஷத்திற்கு முன்பு ஆடைகளற்ற மனிதன் ஆடை உடுத்த கற்றுக்கொண்டதே உங்கள் தோல்களை பார்த்துதான்.

ஆனால் நீங்கள் இன்று இழிவிலும் இழிவாக மாறிவிட்டீர்கள் என்றது புழு. 

இதை கேட்டு அதிர்ந்த பூச்சி பேச்சிழந்து நின்றது.

புழுவோ, உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூண்டுளை காட்டி, இதுகள் எல்லாம் ஒருகாலத்தில் கடவுள்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா சொல்? என்றது.

பூச்சிக்கு தன் சக பூண்டுகளை கண்டு பரிதாபமாக இருந்தது. காலகாலமாக மனிதர்களின் சுயநலத்திற்காக தாம் அவர்களுக்கு சேவை செய்து வந்ததை நினைத்து அவமானப்பட்டது.

அப்போது அந்த அறைக்கு அந்த யுவதி வந்தாள்.

புழுவும் பூச்சியும் ஒரு போத்தலுக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டன.

அந்த யுவதி விரலை சொடுக்கினாள். அறை முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மெழுதுதிரிகள் பற்றி எரிந்தன. அறை முழுவதும் திடீரென ஒளி வெள்ளம் பாய்ந்தது.

அந்த அழகான யுவதி தன் ஆடையை கழற்றுவது போல தன் உடல் தோலை உரித்தாள். ஒரு ஆடைப்போல அவளது இளைனமயான தோல் உரிந்து விழ ,அதை தூக்கி கொக்கியில் மாட்டினாள். இப்போது அவள் யுவதி இல்லை. கைகால் நரம்புகள் சுருங்கி மூக்கு நீண்டு கண்கள் இடுங்கி பார்க்கவே விகாரமான சூனியக்காரியை போல் தோற்றமளித்தாள்.

புழு பூச்சியிடம், இவள் பெயர் டியாப்லெரா , இவளுக்கு ஐநூறு வயதுக்கும் மேல் ஆகிறது. இவள் இந்த அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்தாள். இவள் மட்டும் இங்கு தனியாக வசிக்கவில்லை. சற்று பொறுத்திருந்து பார் என்று புழு சொல்ல, டியோப்லெரா கையில் கொண்டு வந்த ஏழு பூண்டுகளை லத்தின் மொழியில் பாடியப்படியே ஒவ்வொன்றாக கழுத்தில் நூல்கட்டி தொங்கவிட்டாள்.

அந்த பாடல் வவ்வால்களை ஈர்த்தது போல, ஆயிரக்கணக்கான வவ்வால்கள் அந்த அறைக்குள் புகுந்தன.

அந்த பெண் ஒரு பாத்திரத்தை திறந்தாள் அதில் கோழியும் சோறும் இருந்தது.

வவ்வால்கள் உடனே மனிதஉரு கொண்டன. அனைத்தும் நூற்றாண்டு பழமையான உடல்களைக்கொண்ட பெண்கள் என்பது பார்க்கவே தெரிந்தது.

இத்தனை பாழடைந்த முகங்களை பூச்சி இதுவரை பார்த்ததே இல்லை.

பூச்சி அஞ்சி நிற்க புழு அதற்கு ஆறுதல் கூறியவாறே நின்றிருந்தது.

அப்போது வானத்தில் இரண்டு இடிஇடிக்க வவ்வால் பெண்கள் தங்கள் இறக்கைகளை விரித்தப்படி பறந்துவிட,

அந்த அறையில் புழுவும் பூச்சியும் மட்டுமே இருந்தன.

பூச்சி கேட்டது, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ? நீ யார் ? நீ எப்படி அவர்களை போல மந்திரம் வேறு சொல்லுகிறாய்? என்று.

புழு தன்னுடைய நிஜ உருவத்திற்கு மாறியது

அந்த மெழுகுதிரி வெளிச்சத்தில் புழுவின் கால்கள் ராட்சத கால்களை போல நிழலாடின.

பூச்சி அதிர்ந்து போய் புழுவை பார்க்க சிலந்தியாக மாறிய புழு சொன்னது, ” நானும் ஒரு காலத்தில் கடவுளாக தான் இருந்தேன். இந்த மனிதர்கள் உங்களை போலவே எங்களையும் வணங்கினர், நாங்கள் இவர்களை பாதுகாத்தோம், உணவளித்தோம், நன்றிகெட்டவர்கள் எங்களை ஒருநாள் கொல்ல ஆரம்பித்தனர். அதிலிருந்து மனித சஞ்சாரமே இல்லாத இடங்களில் வலைப்பிண்ணி வாழ ஆரம்பித்தோம்  என்றது.

பூச்சி கேட்டது, இந்த பெண் ஆபத்தானவள், இவளை எவ்வாறு நாம் எதி்ர்க்கொள்வது என்று கேட்டது.

சிலந்தி சிரித்தப்படியே பூச்சியை சுற்றி வலைப்பிண்ணியப்படி சொன்னது.

உனக்கும் எனக்கும் முன்பு இங்கு யார் கடவுளாக இருந்தார்கள் தெரியுமா என்று கேட்டது ?

பூச்சி தெரியாமல் முழிக்க சிலந்தி

” பசி” என்று கூறிவிட்டு வலையை இறுக்கியது.

கஸல்

சேகுவேரா டயானவைக் காதலிப்பதாய்க் கூறினான் என்கிற கவிதை தொகுப்பு நடுகல் வெளியீடாக முன்பாக வெளிவந்துள்ளது. சென்னையில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *