-ஒக்கார வாட்டமான எடம் கெடைக்க மாட்டேங்குத… வாணே, அந்த டீக்கடை கிட்டக்க போயிப் பாப்போம் அப்புடியே டீய குடிச்சிட்டு கொஞ்ச நேரோ ஒக்காந்த் எந்திரிச்சிட்டு போவோம்….

-சரி, வா போவோம்…

கடை வாசலில் சென்று அனைவரும் நின்றனர்…அவர்கள் கைகளில் வைத்திருந்த குப்பை கூட்டும் குச்சியையும், சாக்கடை அள்ளும் கரண்டியையும் அங்கே ஒரு ஓரமாய் வைக்க, கடைக்காரன் முறைத்தான்…. அதை அப்படியே கீழ்வாக்கில் ரோட்டில் படுக்க வைத்து விட்டோம்..

முருகன், `ஏழு டீ குடுங்கண்ணே!’ என்று சொல்லிவிட்டு, பக்கத்திலேயே உப்புத் தண்ணீர் குழாய் இருப்பதை கவனித்தான்…

-ஹே, வாங்க தண்ணி கொழா அங்க இருக்கு அண்ணே டீயப் போடுறதுக்குள்ள கை,கால கழுவிட்டு வந்துறலாம். என அனைவரும் ரோட்டில் போட்டிருந்த குச்சியையும், கரண்டியையும் எடுத்துக்கொண்டு சென்று கழுவினர்.. பின் ஒவ்வொருவராய் கழுவிக் கொண்டு டீ கடைக்குச் சென்றனர்…..

சாக்கடை அள்ளும் கரண்டியும், குப்பை கூட்டும் குச்சியும் இப்போது கழுவப்பட்டு விட்டது… அதை ஓரமாக சாய்த்து வைக்க முற்பட மறுபடியும் அதே முறைப்பு கடைக்காரரிடம்…

-ஏப்பா ஒனக்கு ஒரு தாட்டி சொன்னா புரியாதா?

-இல்லண்ணே கழுவியாச்சின்னு தான் ஓரமா சாச்சு வெய்க்கலாம்னு…

-அட எடுப்பா யாவாரம் நடக்குற எடத்துல இதையெல்லாம் கொண்டு வந்து வெச்சுக்கிட்டு, என்று முகத்தில் அடித்தவாறு கூறினார்… அத்தனைக்கும் டீக்கடையை விட்டு தள்ளித்தான் இருந்தது அந்த செவுரு… அதுமல்லாமல் தட்டி போட்டு செவுற்றை கடையிலிருந்து மறைத்து தான் இருந்தார்…

மறுபடி அதை ரோட்டிலேயே கிடத்தி விட்டோம், நாங்களுமே கடைக்கு வெளியே தான் நின்றிருந்தோம்.. உள்ளே உட்கார இடம் இருந்தும்….

-இந்தா டீய எடுத்துக்க….

ஒருமுறை உபயோகித்து கீழே போடும் கப்புகளில் தான் டீ வந்தது… அங்கே அடுக்கடுக்காய் கண்ணாடி டம்ளர்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தும் இந்த கப்புகள் தான் நாங்கள் குடிக்கும் டீயை எப்போதும் தாங்கி வருகின்றது.. கண்ணாடி டம்ளருக்கும் எங்களுக்கும் என்ன பகையோ என்னமோ? எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்… அது எங்களிடம் வரவே மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை, அதை நாங்கள் பயன்படுத்த தகுதி இல்லை என்று கல்வெட்டுகளோ, செம்பு பட்டயங்களோ, இன்னமும் கண்டுபிடித்திராத, இல்லாத கற்பனை புனை கதையில் இருப்பதைப் போன்று நடத்தப்படுகிறோம்….

டீ வாங்க வாசல் முன்னே சென்றோம். தழும்பு தழும்ப டீ இருந்தது.. வாங்கும் போது கப்பில் இருக்கும் டீ சிந்தி, வாங்கிய எங்கள் கையில் பட்டு சுட்டது… டீ எங்கள் கையில் பட்டுச் சுடுகிறதே என்ற கவலையை விட அவர் கை எங்கள் கையில் பட்டு விடக்கூடாது என்ற கவனம் அவரிடம் இருந்தது… கையை டீ கப்புகளின் ஒருமுனையில் அவர் பிடித்திருந்தார் மறு முனையில் எங்களைப் பிடித்து வாங்கச் சொன்னார்…

-சேரி, சேரி, அப்புடியே ஓரமா உக்காருங்க செத்த நேரோ…

-எது உக்காரய்யா? டீய வாங்கியச்சுல்ல ஒன்னு அப்புடி ஓரமா நில்லு இல்ல எடத்த காலி பண்ணு…

”காலேல இருந்து ஒரே அலச்சலு இப்பத்தே எல்லாத் தெருவயும் சுத்தம் பண்ணோ”…

-ம்ம்… சுத்தம் பண்ணிட்டு இங்கன வந்து அழுக்காக்க எங்கடதே கெடச்சுச்சா போப்பா அங்கிட்டு, என கண்ணாடி டம்ளரை கழுவிக் கொண்டே கூறினார்…

எந்திரிங்கப்பா, என அனைவரும் எழுந்து டீயை கையில் எடுத்துக் கொண்டு சிந்தாமல் அதைத் தெருவின் ஓரத்தில் ஓர் இடத்தில் நின்று குடித்தோம்.

-ணேய், அங்கனக்குள்ள ஒரு எடம் இருக்கு அங்க போயி ஒக்காரலாமா?

-அட ஏன்டா, இந்த தெருவுல இருக்க டீ கடைலயே ஓரமா ஒக்கார விட மாட்றாய்ங்க, இதுல அந்த வீட்டு திண்ணைல போயி ஒக்காரலாங்குற?

-வீட்டு ஓரத்துல தானண்ணே இருக்கு அந்த திண்ண, கால் கடுக்குது ரொம்ப, நிக்கவே முடியல, சத்த அந்த பொம்பளைங்கள பாரு வண்டியத் தள்ளி, நாலு தெருவு கூட்டி பெருக்கி சொணங்கி போயிட்டாங்க… ஒரு அரமணி நேரோ அப்புடி ஒக்காந் தெந்திருச்சா போதும், கொஞ்சோம் ஓடம்பு நல்லாகும் சட்டு புட்டுனு மிச்சம் இருக்க வேலய முடிச்சுரலாம்…

-சரி,கொஞ்சோம் அசருவோம்….

எங்கள் கையில் வைத்திருந்த கரண்டிகளை ரோட்டில் சாய்த்துவிட்டு திண்ணைமேல், அது திண்ணை கூட இல்லை கீழே சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது… அதன் மேலே ஒரு பெரிய மொசைக்கி கல் சிமெண்ட் வைத்து பூசப்பட்டிருந்தது, நாலாபுறமும்… தெருவின் அமைதியில் சாக்கடை ஒடும் சத்தம் துல்லியமாக கேட்டது.. பல தெருவுகளில் இன்றைக்கு தான் அடைப்பு எடுக்கப்பட்டது…. அனைவருமே செவுற்றில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி கண்களை மூடினோம்….

நல்ல தூக்கமாகவே போய்க்கொண்டிருந்தது அந்த கதவு திறக்கப்படாத வரை, அது திறந்து எங்களை எழுப்பி விட்டது.. நாங்கள் கண் முழிக்க வாசற்படியில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து சிரித்தேன் அவனும் சிரித்தான்…. ‘தம்பி தண்ணி கொண்டு வாப்பா குடிக்க’ என்று என் தம்பி மணிகண்டன் சொல்ல “குடு குடு” வென உள்ளே ஓட்டம் எடுத்தான்…

சொம்பு நெறய தண்ணீரை எடுத்து வந்தான்… பின்னாலிருந்து ஒரு சத்தம்?

-டேய், யாருக்கு தண்ணி?

அந்த சத்தம் அந்த சிறுவனை நிறுத்தியது.

கதவைத் திறந்த அந்த சிறுவனின் அம்மா எங்களையும் பார்த்துவிட்டு அவன் கையில் செம்பில் தண்ணீரையும் பார்த்துவிட்டு அந்த சிறுவனை அடித்தார்…

-மோவ், மோவ், ஏம்மா பச்ச புள்ளய போட்டு இப்புடி அடிக்கிற?

-பின்ன,யாரு எவர்னு பாக்காம சொம்பத் தூக்கிட்டு வந்துட்டான், என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகில் அவருடைய முழுக் கையும் பதியுமாறு அடித்தார்.. அதை பார்க்க முடியாமல் நானும் மற்றவர்களும் திரும்பிக் கொண்டோம்….

-போ, போயி அந்த பிளாஸ்டிக் கேன எடுத்துட்டு வா! என்று அவனது அம்மா அதட்டினார்…

அந்த பிளாஸ்டிக் கேனில் சொம்புத் தண்ணீரை ஊற்றி எங்களிடம் கொடுத்தார்… அந்த சிறுவனுக்கு ஒன்றும் புரியாமல் நடந்ததை கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டே இருந்தான்… அனைவருமே

அளவளவாய் தண்ணீர் குடித்தும் ஆறு பேருக்கே தண்ணீர் காலியாகிவிட்டது…

-இன்னும் கொஞ்சோம் தண்ணி வேனுங்க?

காலி கேனை வாங்கிக் கொண்டு ஒரு வாராக மூஞ்சியை சுழித்தார்

“எனக்கு தண்ணி வேண்டாங்க”…

-ஏன் கா?

-இப்பத்தான டீ குடிச்சோம், வேண்டாம்ப் பா.

வாய் நன்றி சொல்லி முடிக்கவில்லை அதற்குள் கதவு “சடார்” என சாத்தப்பட்டது…

-ஏன் கா? தண்ணி வேண்டாண்ட்ட டீ கடைலயே தண்ணி தவிக்கிதுனு சொன்னியே?

-சொன்னேன்தா, நீங்க இன்னும் கொஞ்சோ தண்ணி வேணும்னு கேக்கைல அந்தம்மா மூஞ்சி போன போக்கு இருக்கே, நமக்கு சொம்புல இல்லாம வாட்டர் கேன்ல தந்தத கூட ஏத்துக்குவே நாம பண்ற வேல அப்புடி சாக்கடை அள்ளிட்டு வந்துருக்கோம்.. அவங்க வீட்டு பாத்தரத்த பொலங்க யோசிப்பாங்க சரி, ஆனா அந்த தண்ணிய நமக்கு குடுக்குறதுக்கு கூட என்ன ஒரு மொக சுழிப்பு அந்தம்மாவுக்கு. அப்புடி தண்ணி வாங்கி குடிச்சு தான் என் தாகத்த தீத்துக்கணும்னு இல்லப்பா. கொஞ்சோ நேரம் செண்டு வீட்டுக்கு போயி குடிச்சுக்குறே…

-சரி, பேசுனா பேசிக்கிட்டே இருப்போம் இன்னும் ரெண்டு தெருவு முழுசா கெடக்கு. போனோம்னா வேலய முடிச்சிட்டு சீக்கிரோ வீடு போயி சேரலாம் என்று முருகன் சொல்ல,

-ஆமா வீட்டுச் சேவ போயி கண்ணசந்தாதே நல்லாருக்கும்! என்று சொல்லி கொண்டே உபகரணங்களை கையில் எடுத்தனர்.

-சீக்கிரம் கெளம்பனும் நாலாவது தெருவுல வேல ஒன்னு இருக்கு, என்று மணிகண்டன் சொன்னான்…

-நாலாவது தெருவுல என்ன வேல இருக்கு? நாம பாக்குறது இல்லயே அங்க!

-அதான்ணே, அந்த ஹோட்டல் காரங்க இருக்காங்கல்ல…

-சரி, இப்போ என்ன அதுக்கு ?

-வரச் சொல்லிருக்காங்க அவங்க வீட்டுல ஏதோ விசேஷமாம்… போனா அம்பதோ, நூரோ, கெடைக்கும்…

-வேணா மணி, நான் பல தடவை ஒன்கிட்ட சொல்லிருக்கேன் இந்த வேலையில நாம எறங்கினோம்னா அது அப்ப இருந்த நெலம, இப்போ நீ அவங்க வீட்டுக்கு போயி அவங்க பாத்ரூம சுத்தம் பண்றது சரியா வராதுடா… ஏதோ இப்பத்தே நெலம கொஞ்சம் மாறுது புள்ளைங்க படிச்சு நாலா பக்கமும் வேலைக்கு போறாங்க.. நீ அவங்க வீட்டுக்கு போயி இதப் பண்ணா அவங்களோட அடுத்த தல முறைக்கும் நம்மள இப்புடித்தா நடத்தனும்னு சொல்லி குடுப்பாங்க… நம்ம பிள்ளைகளும் அவங்க பிள்ளைகளும் இந்த இந்த இடத்துல இவங்க தான் இருக்கணும்ங்குற மன நெலமைக்கு போயிருவாங்க.. அதனால மாறுற நெலமைக்கு நாமலும் ஒத்துழைக்கனும் டா புரிஞ்சுக்க…..

-அட போணே, நீ வேற நானே அம்பது ரூவா கெடைக்கிது பிள்ளைக்கு திங்கிறதுக்கு எதாச்சும் வாங்கிட்டு போலாம்னு பாக்குறேன்… நீ வேற எப்போ பாரு அங்க போகாத இங்க போகாதனு சொல்லிட்டு இருக்க……

அவன் வறுமை எதையும் பற்றி யோசிக்க விடமாட்டேன் என்கிறது… வகுத்துக்கு கஞ்சி கெடச்சா போதும்னு நெனைக்கிற பொழப்பு தான தெனைக்கும்.. அதான் வகுத்துச் சத்தம் பெருசா தெரியுது… “இந்த சத்தம் தான் சில பேர இப்படி இருக்க வச்சிருக்கு. பல பேர இப்படி இருக்க வைக்க வழி வகுத்ததும் குடுத்துருக்கு” என்று முருகன் குப்பையை கூட்டிக் கொண்டே இத்தனையயும் மண்டைக்குள் ஓட்டிக் கொண்டிருந்தான்..

மணிகண்டன் வீடு வந்து சேர மதியம் இராண்டாகிவிட்டது… மதியக் கஞ்சியை குடிக்காமல் கூட உறங்கிப் போனான்…

சாயங்காலமானது, ஒரு கை அவனை தட்டி எழுப்பியது… கைகளையும் கால்களையும் நெளித்துக் கொண்டே எழுந்தான்…

-சாமி, ஸ்கூல்ல இருந்து வந்துட்டியா? வா, என்று அவனை கட்டி அணைத்து அருகில் வைத்துக் கொண்டான்… அவனுக்கு வாங்கி வைத்திருந்த சாக்லேட் பிஸ்கட்டை எடுத்து மகனிடம் கொடுத்தான்.. சாப்பிட்டுக் கொண்டே தனது டிபன் பாக்ஸை திறந்து கேக் ஒன்றை அப்பாவிடம் நீட்டினான்…

-யாரு குடுத்தாங்க இத?

-அந்த ஹோட்டல் காரங்க இருக்ககாங்கல்ல அவங்க தான்…

-அப்புடியா, என்று கேட்டுக் கொண்டே கேக்கை ஒரு கடி கடித்து அசை போட்டான்…

-ஸ்கூல் முடிஞ்சி வந்துட்டு இருந்தேனா, அப்போ அவங்க வீட்டு முன்னாடி ஆளுங்களா நின்னுட்டு இருந்தாங்க, என்ன கூப்புட்டு வாட்ச்சு சாக்கடைல விழுந்திருச்சு எடுத்துதான்னு சொன்னாங்க.. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்…

-உங்க அப்பா செய்ற வேல தான், இப்ப தான் இங்க இருந்து போனாரு இத மட்டும் முடிக்காம போயிட்டாரு எடுன்னு சொன்னாங்க… நான் எடுத்தேன்….

அப்பறந்தான் இந்த கேக்க எனக்கு குடுத்தாங்க…

இதை அவன் சொல்லி முடிக்க மணிகண்டன் வாய் அசை போடுவதை நிறுத்திவிட்டது.

“அந்த கேக்கின் வாசம் மூக்கினுள் ஏற முதல் முதலாக சாக்கடையின் நாற்றத்தை அவன் உணர்ந்தான்”

நித்வி

என் பெயர் முத்துபாண்டி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்…”நித்வி” என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதுகிறேன். எனது சிறுகதைகள் இணைய இதழ்களிலும், சிறுகதைப் போட்டிகளிலும் வெளியாகியும் மற்றும் பரிசுகளும் பெற்றிருக்கிறது.

மாயக்கண்ணாடி – தனுஷ்கோடி இராமசாமி நினைவு சிறுகதைப் போட்டியில் (2023) ஆறுதல் பரிசு பெற்ற கதை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *