சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டிருந்தது. வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல், அல்லாடியது மனது. ஏதோ ஒரு கோபம். பல நினைவுகளையெல்லாம் ஒன்று திரட்டி, அவை ஏளனமாகச் சிரிக்கும் போதெல்லாம் அறைக்குள்ளிருக்கும் டேபிள், முகம் பார்க்கும் கண்ணாடி, டம்ளர், தலகாணி, போர்வையென்று கையில் கிடைக்கும் பொருட்களெல்லாம் தூக்கி எறியப்படும். அதில் ஒருசில மதுபாட்டில்களும் அடங்கும். முன்பைவிடவும் இப்போதெல்லாம் பாட்டில்கள் அதிகமாகச் சிதறுகின்றன. அதொருவகையில் ஆறுதல் கொடுத்தாலும், போதாமையாகவே ஆட்டிப்படைக்கிறது.

சத்தம் போட்டு ஓ……… வென்று கத்த வேண்டும். அலற வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. தன்னுடைய இருக்கைகளையும் மூர்க்கத்தனமாக இறுக்கிக் கொண்டான். விரல்கள் சுடக்கு விட்டுக்கொண்டன. நடுராத்திரியில் ஏன் இவன் வெறிப் பிடித்தவனாகக் கத்துகிறான். பக்கத்து அறையிலிருந்து ஆட்கள் வந்தால் என்ன செய்வது – சொல்வது. தன் நடவடிக்கையின் மீது யாருக்காவது சந்தேகம் வந்துவிடுமோ? என்கிற பயம், உள்ளூர பூதமாகவே வளர்ந்து, விரவிக்கிடக்கிறது.

பேய் பிடித்ததுபோல், கட்டிலில்மேல் எழுந்து நின்றான். பின் சமணம் போட்டு உட்கார்கிறான். கால்நீட்டி மல்லாக்கப் படுத்துக்கொள்கிறான். திரும்பவும் எழுந்து உட்கார்கிறான். நிற்கிறான். ஏதோ சைகை செய்து, தனக்குத்தானே பேசிக்கொள்கிறான். சன்னலுக்கருகில் வந்து வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துத் திகைக்கிறான். சிரிக்கிறான். அதொரு அற்புதமான இயற்கைச்சூழல் மிகுந்த மலைப்பகுதி. கிராமப்புறக் குடியிருப்பு என்றாலும், இருட்டு – சுடுகாட்டுத்தனமான அமைதி – இரவு நேரங்களில் மட்டும் அதற்கு அடிமையாகிப் போகிறான்.

ஆங்காங்கே, தெருவில் நடபட்டிருக்கும் சிற்சில போஸ்ட் விளக்குகள் மட்டும் மஞ்சள் நிறவெளிச்சத்தை வெளிக்காட்டிக் கொண்டாலும், அதெல்லாம் அவனின் மூளையில், பிணத்தையெரிக்கும் போது மேலெழும்பும் கருஞ்சிவப்பு மஞ்சள் நிற தீ ஜீவாலையாகத்தான் பீடித்திருந்தது. அப்பீடித்தலின் காட்சிக்குள் மூழ்கிப் போனதால், உடல் முழுவதும் வியர்த்தொழுகியது. கண்கள், முகமென்று வடிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு, மீண்டும் – மீண்டும் அதேக் காட்சியை அழுந்தப் பார்த்தான்.

வெளிச்சத்தில் தெரிந்த மரங்கள், தற்சமயம் பெண்களாக மாறிக் கொண்டார்கள். அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவனும் சிரிக்கிறான். சிரித்துக்கொண்டே அழவும் – பின் சிரிப்பும். இதே நிகழ்வுதான் மாறிமாறி நகர்கிறது, சிலமணி நேரமாக.

அதிலிடம்பெறும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. வெவ்வேறு வயது வித்தியாசத்தில், வெவ்வேறு முக அடையாளத்தில், தோல், நிறம், சிரிப்பு, கோபம், முகபாவனைகளைக் காட்டும் விதம், தோற்றம் என்று வகைப்படுத்தித் தோன்றினாலும், அவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் எந்தொரு உறவுபந்தமோ, தொடர்போ இல்லை. ஆனால், அப்பெண்களெல்லாம் அவனுக்கு ஒருவகையில் தெரிந்த, பழகிய முகங்களாகவே, உணர்வுகளுக்குள் ஊடுருவியிருந்தார்கள்.

அதில், முதலில் நிற்பவளின் பெயர் செரின். அவளைப் பற்றி நிறையவே சொல்லியாக வேண்டும். அவள் வசித்த ஊரில் பிரச்சனை இருந்திருக்கிறது போலும். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே குடிவந்து விட்டார்கள். அவன் வீட்டிற்கு நேரெதிர் வீடுதான். அவளை முதன் முதலில் சந்தித்தது, அந்த மெடிக்கல் ஸாப்பில் தான். ஏதோ வாய்க்குள் நுழையாத பெயர்கொண்ட மாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்தாள். பார்த்தவுடன் ஒரு மெல்லிய மென்புறுவல். அவ்வளவுதான். நகர்ந்து விட்டாள்.

அதன் பின்பு ஒருவாரம் கண்ணில் படவில்லை. திடீரென்று ஒருநாள் அவளே நேரடியாக வந்து பேசினாள்.

“ஒரு வாரமா என்ன தேடுனீங்களோ?”

“இல்லையே. அப்டிலாம் ஒன்னுமில்லையே. யாரு சொன்னது?”

“யாருமில்ல. ஆனா உங்க மொகத்தப்பாத்தா உண்மைய முழுங்குன மாறிலாயிருக்கு”

இப்படிக் கேட்டவளிடத்தில், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், அவளின் முகத்தை நேராகப் பார்க்காமல் தவிர்த்திருந்தான்.

“திரும்பிட்டா என்ன அர்த்தம்?” என்று சொல்லிக்கொண்டே நெருக்கத்தில் வந்திருந்தாள். அவன் மௌனமாக நின்றிருந்தான். அந்த மௌனத்திற்கு விடை எங்கு ஒளிந்து கொண்டிருக்கும். அதைத் தேடிப் பிடிப்பதற்குள், வலது கையை இறுக்கிப் பிடித்திருந்தாள். உடல் சிலுப்பிக் கொண்டது. மென்மையான குளிர்ந்த உள்ளங் கைகள், அவனின் ரோமங்களை விளையாடிப் பார்க்க அழைப்பு விடுப்பதுபோல் அரவனைத் திருந்தது.

“இதுதான் உங்களுக்கு ஃபஸ்ட் டைமா?”

அந்தச் சிலுப்பிலிருந்து இன்னும் விடுபடாதவனாகவே, அக்குளிரோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பேசாமல் நடுரோட்டில் ஒரு மூலையில், மரத்துக்கடியில் நின்றுபேசுவது சரியிருக்காதென்று, விறுவிறுவென அவளின் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள்.

அய்ந்தாயிரம் கொடுக்கும் அளவிற்கு நடுத்தரமான வீடுதான். தைரியமாக அழைத்து வரும்போதே வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்தது உண்மையாகவே பட்டிருந்தது. உள்ளே வந்ததும், மேல் போட்டிருந்த ஷாலை, கழட்டி எறிந்துவிட்டாள். ‘இந்த சேர்ல உட்காரு. நான் இப்பம் வந்துற்றன்னு’ சொல்லிவிட்டு நேராக பெட்ரூமிற்கு சென்றாள். முதல் முறை என்பதால், ஓர் அச்சம் கலந்த பதற்றம் உள்ளூர ஊறிக்கொண்டே முட்டி மொனங்கியது.

“நீ இப்பம் எங்க போற” என்று கேட்டதற்கு,

“ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாரன். நீ வேன்னா டீவி போட்டுப் பாத்துட்டு இரு”

என்று சொன்னவளுக்கு, கதவு பூட்ட வேண்டுமென்ற நியாபகம் வரவில்லை. அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கதவை ‘டமால்’ என்று சத்தத்துடன் அழுந்த தள்ளிவிட்டு சென்றாள்.

     ‘எதுக்கிப்படி தேவையில்லாம கதவே ஓங்கி அடைக்கனும்’. திரும்பிப் பார்த்தவனுக்கு, அச்சிறிய இடைவெளியில் எல்லையில்லா ஓர் ஆனந்த கிளுகிளுப்பு உடலில் தொற்றிக்கொண்டது. ஓர் இளம் பெண்ணை அரைநிர்வாணமாக பார்த்தது அதுவே முதல்முறை. கண்ணாடியின் முன் தன்னழகை இரசித்துக் கொண்டாள். நீளமான கருநிறக் கூந்தலை களைத்துக் கோதிவிட்டு, ஒவ்வொன்றாக தன் ஆடைகளைக் கலைந்தாள்.

     ஜீவா தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தனக்கு முன்னாலிருக்கும் கண்ணாடியின் வழியாக பார்த்துத் தெரிந்துகொண்டாள். இதுபோதும் என்றவளுக்கு தன் மேனியை பலவாறு நெளித்து, கோவில்களில் வடித்திருக்கும் சிற்பங்களின் இணக்க நெளிவுகளையெல்லாம், தன் மேனிக்குள் கொண்டு வந்திருந்தாள். அதொருவிதமான நிர்வாண நடனமாகவே காட்சிப்படுத்தியிருந்தது. ஒரேயடியாக, நேராசென்று லேசாகத் திறந்திருந்த கதவை முழுமையாகத் திறந்து அந்நடனத்தில் தானும் பங்கெடுத்து களைப்படைய வேண்டும். அவளை இறுக்கியனைத்து, அகல விரிந்த முதுகினை நுனி நாவால் வருடி, காதுமடல், கழுத்துப் பகுதியை வெடுக்கென்று ஆப்பிளைக் கடித்து சுவைப்பதுபோல் சுவைக்க வேண்டும். ஒடுங்கிய இடைமடிப்பு மட்டுமில்லாது, மேல் ஏறியிருந்த பிட்டமும் வெகுவாக நிலை குழைய வைத்தது.

ஆனால், அவனால் ஒரு அடி கூட முன் எடுத்து வைக்கமுடியவில்லை. பதற்றம் கலந்த ஒருவித பயம், நிலைத்தடுமாற வைத்தது. அது ஏன் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவள் கழட்டிப் போட்ட ஷாலை மடியில் வைத்து அமுக்கிக் கொண்டான். சிறிது நேரத்தில் ஈரமாகிப் போனது மட்டுமல்லாமல், என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மறுநாள் காலையில் ஓர் ஆர்வத்தோடு வாசலைப் பார்த்தே, கண்கள் தவம் கிடந்தது. ஒரு பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றால், எதுத்த வீட்டின் வாசல் அழகாய் தென்படும். காலை மற்றும் மாலையில்தான் தலைக் காட்டுவாள். அவளின் மாடிவீட்டிலும் தோட்டம் போட்டிருந்தார்கள். அது ஏற்கனவே முன்னிருந்தவர்களால் ஏற்படுத்தப் பட்டிருந்தது. செடிக்குத் தண்ணீர் ஊற்றி, கொஞ்சநேரம் அக்காலைப் பொழுதை, இதமானக் காற்றோடு அனுபவிக்க இசைவாள். அப்போது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே, சைடு கண்ணால் பார்த்தும் பார்க்காததுபோல் பார்த்துவிட்டு நகர்வாள். அவனுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி. மனதில் கதாநாயகனாகவே உருவகித்துக் கொள்வான். அவளும் ஓரக்கண்ணால் பட்டும், படாமலும் சிரிக்கும் விதமென்று, ஓர் ஆழமான எண்ணவோட்டத்தையே, பெரும் ஆழமரமாக உரம்போட்டு வளர்க்கத் தொடங்கினான். அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்கிற நினைப்பு தெளிவாகத் தெரிந்துகொண்டாலும், நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. வெளியேயும் வந்திருக்கக்கூடாது.

கதவினைத் திறந்துகொண்டு, வசந்த காலத்தில் தன் மூர்க்கத் தணங்களை யெல்லாம் வெளிக்காட்டிப் பயம், பதற்றத்தைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு சந்தேக மனநிலை வந்திருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில்தான் சந்தித்திருக்கிறோம். பார்வைகள் ஏராளம். பேச்சுவார்த்தைக்கூட அந்தளவிற்கு நீளாத காலம். அப்படியிருக்கையில், எடுத்தவுடனே இந்த நடவடிக்கைக்கெல்லாம் உடன்படுவது, சற்று கலக்கத்தையே கொடுத்தது எனலாம். தொடக்கத்தில் அவளைப் பார்த்தவுடன், திருமணம் செய்துகொண்டு, நிம்மதியான வாழ்க்கையினை வாழ வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டியிருந்தான். அந்தத் தீட்டலே அவனை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது. தடுத்து நிறுத்துதலுக்குப் பின்னாக பல நெறிமுறைக் காரண வழியினைக் கடைபிடித்திருந்தான். நான் இப்படித்தான் இருக்க வேண்டும். எனக்காக ஒருவள் இவ்வுலகில் காத்துக்கொண்டிருப்பாள். அவளின் மனதை நான் காயப்படுத்துவது, ஏற்றுக்கொள்ளமுடியாத வடுவாக, அமானுஷ்ய கதையாகவே மனதில் படிமமாகிப் போய்விடும். அப்படிமம் என் வாழ்நாளை நிம்மதியில்லாமல் அலைக்கழிக்கும். மனபாரமாக சுரண்டிக் கொண்டேயிருக்கும்.

இரண்டு வாரத்திற்குள்ளே இதெல்லாம் நடந்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் பார்த்தப் பார்வைக்கும், நடந்து கொண்ட விதம், எல்லாமே மாயக் கனவாகவே, தினமும் இரவுகளில் எட்டிப் பார்த்துச் செல்லும். நல்லவேளை, தப்புத்தண்டாவிற்கு இடம் கொடுக்க வில்லை. எனக்காக, என் வாழ்க்கையில் பகிர இருப்பவளுக்கு நேர்மையாக, அவ்வீட்டிலிருந்து வெளியேறியது மகிழ்ச்சியென்று ஒருபுறம் நினைத்தாலும், நீண்ட இடைவெளிக்குப்பின், செடிகளைக்காண வந்திருந்தாள்.

ஏனோ பூக்களெல்லாம் வாடிப்போய் கிடந்தன. தலை நிமிரவே இல்லை. தினமும் சூரியனைப் பார்த்து, இதமாக உடல் ரோமங்களை முத்தமிடும் தென்றலை உள்வாங்கி யோகாசனமெல்லாம் செய்வாள். இன்று அக்காட்சி விடுமுறையாக மாறிப்போனது. வேகவேகமாக எல்லாவற்றிற்கும் ஊற்றி விட்டு, படிகளில் இறங்கும்போது, நான் மாடியில் இருப்பேனென்று முழுமையாக தன் முகத்தைத் திருப்பிக் காட்டினாள். ‘குற்றயுணர்ச்சியோடு கலந்த கோப அனலும் பயங்கரமாகக் காட்சிக் கொடுத்தன. அந்தப் பார்வையை மனதிற்குள் உள்வாங்க முடியாமல், சீரணிக்க முடியாமல் தலை குனிந்து தவித்துப்போனான்.

பெரும் குற்றமொன்றை செய்துவிட்டதாக மனம் இப்போது பதைபதைத்து என்ன பயன். ‘என்னைத் தவறாக நினைத்திருப்பாளோ? இல்லை. அப்படி யொன்றும் நினைத்திருக்கமாட்டாள். ஒருவேளை நினைத்திருக்கலாம். மாறி மாறி தோன்றக்கூடிய சிந்தனைகளையெல்லாம், அவனைத் தனியாக நின்று பேசிக்கொள்ளும் செயலைத் செய்யத் தூண்டியது. குழப்பம் முழுமையாக அவனை ஆகரமித்திருந்தது.

இந்நேரத்தில் சுகுமாரும் உடனில்லை. அவனிடம் சொல்லியாவது, இதற்கு விடையை எதிர்பார்த்திருக்கலாம். அவனெங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. வேறொரு ஊருக்கு செல்லப்போகிறேன். இந்தக் கல்லூரி அப்பாவிற்குச் செட்டாகவில்லை. சொந்த ஊருக்கே செல்லவிருப்பதாகவும், அங்கிருக்கும் கல்லூரியொன்றில் அப்பாவுக்கு வேலைக்கிடைத்திருப்பதாகவும் போனில் முன்பு சொல்லியிருந்தான். அந்நம்பரைத் தொடர்புகொண்டால் எந்தப் பதிலும் இல்லை. வீண்னென்றாகிப்போனது.

*        

     அடுத்த நாள் அதிகாலையிலேயே பெரிய வண்டியொன்று தெருவில் சத்தம்போட்டு சென்றதைக் காதுகள் உணர்ந்துகொண்டாலும், எழும்பாமலேயே கிடந்தவன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான். தூக்கம் வரவில்லை. அவளை எப்போது பார்க்கிறேனோ அப்போது, மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். ‘ஐயம் வெரி சாரி. எனக்கு இதுதான் முதல் தடவ. அதான்’ என்று சொல்லிவிடலாம். ஆனால், அதற்கவள் ‘சரி ஓகே. ஆனா எனக்கு மட்டும் இது பழக்கமோ?’ என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டாள்? என்ன பதில் சொல்வது. குழப்பமே முகத்தின் முன் வந்து நின்றது. என்ன ஆனாலும் சரி. ஒரு காகித்தில் சுருக்கமாக எழுதி, மாடிக்கு வரும் போது, அதை உருண்டையாக உருட்டி அவள்மேல் எறிந்துவிடலாம். படித்துவிட்டு பதிலென்ன வருகிறது என்று பார்க்கலாம். நினைத்துக்கொண்டே தூங்கிப்போனான்.

     வீட்டில் அம்மாவின் சத்தம் பலமாகக் கேட்டுக்கொண்டது. தினமும் அப்பாதான் பால் வாங்கி வருவார். அவருக்கு தலைவலி போலும். அவனை எழுப்பி விரட்டிவிட்டாள். வெளியே வந்து பால் வாங்கிக் கொடுத்துவிட்டு, மாடிக்கு வேகமாக சென்று காத்துக்கொண்டிருந்தான். கவனச் சிதறலில் பூட்டுபோட்ட வாசலைக் கவனிக்கவில்லை.

     ஆறு, ஏழு, எட்டென்று ஒன்பதைத் தாண்டியதும் ஜீவா கீழே வராமலிருப்பதை உணர்ந்தவள் மேலே வந்திருந்தாள்.

     “டைம் என்னாவுது. ஒர்க்கவுட் பண்ணதெல்லாம் போதும்” என்று கீழ் வைத்திருந்த டம்ளரை எடுத்தாள். கொண்டுவந்த டம்ளரில் பால் அப்படியே இருந்தது.

     “என்னாச்சி இன்னைக்கு ஒனக்கு. ஒரு மாதிரியாயிருக்க. பால் அப்படியே யிருக்கு. குடிக்கல. வெயிலடிக்குறதுகூட தெரியாம நிக்கிற. கிழே வா”

     சத்தம் போட்டிறங்கும் போது, வேறொன்றையும் சொல்லியிருந்தாள்.

     “எதுத்த வீட்டுல இருக்குறவங்க காலி பண்ணிட்டாங்க. மேலயிருக்குற செடில நமக்கு தேவப்படுறமாறி உள்ளத எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. சீக்கிரமா வா. அங்க போவனும்”

     “என்னமா சொல்ற காலிப் பண்ணிட்டாங்களா?”

     “ஆமா. அதுல ஒனக்கென்ன வேதன. ஓவரா ரியாக்ஸன் கொடுக்குற”

     ‘வா சிக்கிரம்’ என்றவள் நகர்ந்தாள். அவனால் நகரமுடியாமல், அங்கேயே நின்று, அம்மாடியையே பார்த்தான். செடிகளில் பூத்திருந்த பூக்களெல்லாம் ஏதோ ஒன்றை இழந்ததுபோல், பெரும் ஏக்கத்துடன் களையிழந்து போயிருந்தன.

     அவனுக்கு என்ன செய்வதென்றே புரியாமல், பைக்குள் எழுதி வைத்திருந்த காகிதத்தை எப்படியாவது அவளிடம் கொடுத்துவிட வேண்டும். அதுவே என் வாழ்நாளில் செய்யும் பெரிய அனுக்கிரகையாக வலியோடு நினைத்துக் கொண்டான். படிக்கட்டுகளில் வேகமாக இறங்கியவன்,

     “யம்மா… யம்மா… அவங்க எங்க போயிருக்காங்கன்னு ஒன்கிட்ட எதாவது சொன்னாங்களா?”

     “அதெல்லாம் ஒனக்கெதுக்கு. தேவயில்லாத விசயம்”

     ‘எனக்கு அது எவ்ளோ தேவையான விசயம் தெரியுமாம்மா’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டான்.

*   

     கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அசந்து, தூங்கிப் போனான். நேரம் கழித்துதான் திறந்து வெளியே வந்தான்.

     “என்னசாரிது. எவ்ளோ நேரம். ஒன்பதாவப்போவுது. முன்னமே ரெண்டு வாட்டி வந்து தட்டுன. அசதியா சார்”

என்று அறைக்காவலன் சொல்லிவிட்டு உள்ளே பார்த்தான். ஒருசில பொருட்கள் உடைந்து, சிதறிக் கிடந்தன. அவன் ஆச்சர்யப் படுவதற்கு முன்பே, ‘இதெ யார்ட்டையும் சொல்லாத. வச்சிக்கோ’ என்று பணத்தை எடுத்து கையில் அழுத்திவிட்டு சொன்னதும், அதையவன் கவனமாக துப்புரவு செய்யத் தயாரானான்.

இந்த இடம் அவனுக்குப் புதிது. முதலில் இவ்விடத்தைப் பற்றி முழுமையாக தெரிந்த நபர் ஒருவரைச் சந்திக்க வேண்டும். முடிந்தால் அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, சுற்றிப்பார்க்க வேண்டும். ஜாபரின் ஆலோசனைதான், இங்கு வந்து நிறுத்தியது. தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பிறரோடு பேசுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தன்னைப் பிசியாக வைத்திருப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். முதலில் அந்தக் காகிதத்தைத் தூக்கி எறிந்துவிடுங்கள். என்று பல விசயங்களைப் போட்டுடைத்தார். இருப்பினும், இதிலிருந்து மீள முடியாமலே சுருண்டு கிடந்தான். மதுவைத் தொடக்கூடாது. அது திரும்பத் திரும்ப பழைய நினைவுகளையே, கறுப்புப் பூதமாகக் காட்டி உடலையும், மனதையும் இம்சை செய்யும் என்றார்.

வாழ்நாளில், யாரும் – யாருக்காகவும் இருக்கப்போவதில்லை. காத்திருப்பு என்பது பசியைப் போன்றதுதான். தீர்ந்தப் பின் எல்லாம் முடிந்துவிடும். அவள் உங்களை இன்றளவும் நினைத்துக்கொண்டிருப்பாள் என்று எண்ணுவதே பெரும் தவறு. உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளுகிறீர்கள். உங்களுக்கான வாழ்க்கை, கட்டாயம் அகப்படும். நிறையவே சொற்களால் வழங்கியிருந்தார். ஒரு நிமிடம் இச்சொற்கள் ஆசுவாசம் படுத்திக்கொண்டாலும், மாலை ஆறுமணிக்குமேல் அவையெல்லாம் பயனளிக்காமல் வற்றிவிடும். எவ்வளவு தடுத்தாலும், ஏதோவொன்று அவனை மதுவிற்கு அடிமைப்பட்டுக் கிடக்க வைக்கிறது.

உள்ளே வந்து கட்டிலில் பேச்சுமூச்செல்லாமல் உட்கார்ந்தான்.

“என்ன சார் தலைவலியா.. வெளில எங்கையும் கௌம்பலையா?”

“போகனும். இந்த மலைப்பகுதிய சுத்திப்பாக்கனும். நல்ல கைடாயிருந்தா சொல்லு” என்றதும்,

தனக்கு ஒருவரைத் தெரியும். அவருக்கு இந்த ஊரே அத்துப்புடி. மலைக்குமேல, ஒரு அஞ்சுகிலோமீட்டர் மேல போனா, அறிவியொன்னு வரும். குளிப்பதற்கும் இதமாயிருக்கும். தண்ணியும் குறைவாதான் வருது. அவரோட போன் நம்பர் கீழப்போய் வாங்கிட்டு வாரன். அவன் கிளம்பிவிட்டான்.

அங்கு செல்வதற்கு தன்னைத் தயார் செய்துகொண்டு, ரிசப்சனுக்கு வந்திறங்கினான். அறைக்காவலன் ஜீவாவைப் பார்த்ததும், நேராக வந்து பேசினான்.

“சார் நல்லவேளையா அவரே இங்க நிக்காரு. வேல விசயமா வந்துருக்காரு. நான் அவர்கிட்ட பேசிட்டன்”

என்று அவர் நிற்கும் இடத்தைக் காட்டினான்.

வெளியில், மரங்கள் சூழ்ந்த இடத்தில், காரின் அருகில் யாரோடையோ போனில் பேசிக்கொண்டிருந்தார். பேசிமுடிக்கும்வரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அருகிலேயே ஒதுங்கி நின்றவனுக்கு, அவர் திரும்பியதும் இனம்புரியாத அன்புகலந்த பேரதிர்ச்சி. பால்யகால நண்பன். ‘நண்பா… நண்பா…’ பார்வையிலேயே நட்பினேக்கங்கள் கண்களில் கரையத் தொடங்கின. இருவரும் தங்களின் அன்பை அரவனைப்போடு பரிமாறி, சகஜமானார்கள்.

“இவ்ளோ நாள் நீ எங்கயிருந்த. உன்னோட நம்பருக்கு எவ்ளவோ ட்ரைப்பண்ண. ஒன்னும் முடியல. நல்லாயிருக்கியா?. உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோசம்டா. நீ இங்கிருப்பன்னு எதிர்பார்க்கவேயில்ல”

“பின்ன நான் மட்டும்… நீ நல்லாயிருக்கியா?. தனியாவா வந்துருக்க. அப்பா, அம்மாலாம் எங்க. அவங்க எப்டியிருக்காங்க?”

“நானா… ஏதோ போவுதுடா…. இருக்க…. பெரிய துயரம்டா. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு சாலை விபத்துல, அவங்கள தொலைச்சது…. இப்பவும் அதை நெனைச்சாலே மனசாரலடா”

அவனிடமிருந்து வந்த சொற்களும், கண்களிலிருந்து வடிந்த கண்ணீருக்கும் ஆறுதலாக, தோளினையும், முதுகையும் தடவிவிட்டுக் கொண்டான். தற்போது ஒரு கம்பெனியில் வேலைப்பார்ப்பதாகவும், கூறியிருந்தான். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற ஊர்களுக்கு சுற்றிவந்தால்தான் மனசு லேசாக இருக்கிறது. ‘உனக்கு கல்யாணமாயிட்டான்னு’ சுகுமாரைப் பார்த்து கேட்டான்.

     “இம்… ஆயிட்டுடா… அஞ்சு வருசமாயிட்டு… ஒரு பொண்ணிருக்கா”

     “நல்லதுடா”

     “டேய் பேசமா நீ கல்யாணம் பண்ணிக்கோடா. ஒன்னோட மொகமே தொங்கிப்போய் கெடக்கு. என்னோட ஒயிஃப்க்கு தெரிங்சவங்க மூலியமா பொண்ணிருக்கிறதா சொன்னாங்க. அவங்களும் மாப்ள தேடுறாங்களாம். மதத்தப்பத்தி கவலையில்லையாம். என்ன சொல்ற”

     அமைதியாக எதையோ மனசில் போட்டு அலசினான்.

     “என்னடா அமைதியாயிருக்க?”

     “அதொரு பெரிய கதெடா”

     “பெரிய கதையா. என்ன அது?”

     “கார்லயேறு. போய்கிட்டே பேசலாம்” என்றான்.

தங்கும் விடுதியிலிருந்து சுற்றிவளைத்து, கார் வேகமாக, மலையின் மேல் செல்லும் சாலையில் ஏறியது. அடர்ந்த இருபுற மரங்களுக்கு நடுவே, அமைதியான சூழல். தான் இவ்வளவுகாலம் மனதில் அரித்துக்கொண்டிருக்கிற பூதத்தை வெளியில் நடமாடவிட்டான். இதைக் கேட்டவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அவனைப் பார்த்தான். இவன் மேல் இரக்கப்படவா இல்லை கோபப்படவா, ஒருநிமிடம் குழம்பிக் கொண்டான்.

“டேய் அது சின்ன வயசுல பதினொன்னாவது படிக்கும் போது நடந்த விசயத்த இன்னுமாடா நெனச்சிட்டு கெடக்க. தூக்கித்தூற எறிய வேண்டியதான. ஏன் ஒனக்கு அதுக்கப்புறம் யாருமே லயன்ல வர்லையா?”

“நிர்மலான்னு ஒருத்தி வந்தா. காலேஜ் படிக்கும் போது. அதுக்கப்புறம் ஸ்கூல்ல வேலப்பாக்கும் போது நீலவேணின்னு”

“பின்னென்ன”

“அதில்லடா. நிர்மலா ஆரம்பத்துல நல்லா பேசினா. வெளிலக்கூட கூப்டா. எங்கையாச்சும் போலாம். வாரியான்னு… ஆனா என்னாலதான் முடியல”

“முடியலன்னா என்ன. புரியல”

“எனக்கு, அவெ கிட்டவரும் போதெல்லாம், உள்ளங்கைப் படும் போதெல்லாம், பனங்கெழங்க மஞ்சப்பொடிப்போட்டு அவிச்சா ஒரு மனம் வருமே. அந்த மாறி வருதுடா”

“மெண்டல் மாறி ஏன்டா பேசுற. வந்தா வந்துட்டுப்போட்டும். அதுக்கென்ன”

“இல்ல… அந்த வாசன அவளோடது”

‘மெண்டல்… மெண்டல்…. மெண்டல்…’ என்று அவனின் தலையில்  லேசாக ஒருதட்டு தட்டிவிட்டுக்கொண்டான். ஆரம்பத்துல, ‘எனக்கின்னு ஒருத்தி வருவா… அவளுக்கு நான் துரோகம் செய்யாம இருக்கனும். அப்படின்னு பேசுனவ, இப்போம் மாத்தி இப்படி பேசுதான்…. இப்படியே விட்டா இவன் லூசாகிருவான்னு, ஒரு நல்ல டாக்டரா பாத்து காமிக்க வேண்டியதான்னு, மனதில் முடிவு செய்திருந்தான். அது வரையிலும் தன்னுடைய வீட்டில் தங்க வைக்கலாமென்று வண்டியை வீட்டிற்குத் திருப்பியிருந்தான்.

“என்னடா திருப்பிட்ட. மேல அருவிக்குப் போலையா?”

“இல்லடா.. நாளைக்குப் போலாம். இப்பம் வீட்டுக்குப் போவும். நீ ரொம்ப வீக்காயிருக்க. சாப்புட்டு லெஸ்ட் எடு”

ஒருவழியாக வீட்டிற்கு வந்திருந்தார்கள். அம்மலைப் பிரதேசத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வீடு. வரும் வழியிலேயே ஓயாது, நச்சரித்தே வந்தான்.

“அவளுக்கின்னும் கல்யாணம் ஆயிருக்கக்கூடாது”

“அதெல்லாம் ஒன்னும் ஆயிருக்காது. கடவுள் இருக்கான்”

பின்பாட்டு பாடியே சமாளித்து வருவதற்குள் போதும் போதுமென்றானது. வீடு அமைதியாகக் காணப்பட்டது. அம்மா குழந்தையை முற்றத்தில் வைத்து வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தாள். சுகுமார் அவளைத் தேடினான். ஒருவேளை பின்பக்கம் இருப்பாளென்று, வந்தவனை அம்மாவிடம் அறிமுகப் படுத்திவிட்டு, ஹாலில் உட்கார வைக்கலாமென்றால், இவனையும் காணவில்லை. வாசலைத் தாண்டி தெருவிற்கு வந்தால், நாயைப்போல் நுகர்ந்து கொண்டே இருந்தான்.

“டேய் உள்ளவராம இங்க என்னடா பண்ணிட்டு இருக்க. என்னத்த மோந்து பாக்குற”

“இல்லடா. அந்த வாட வருதுடா?”

“எந்த வாட?”

“பனங்கெழங்கு வாட”

“இவனொருத்தன். நேரங்கெட்ட நேரத்துல. உள்ள வந்து உக்காரு”

அவன் ஹாலில் கிடத்தப்பட்டிருக்கும் சோபாவில் அமர்ந்தான். சுற்றிப் பார்த்தான். சுவரெல்லாம் போட்டோயில்லாமல், புதுபெயிண்ட் பொழிவுடன் சிரித்தது. ‘வீட்ட புதுசா மாத்துராங்கபோல’ நினைத்தவன், சில நிமிடத்தில் மற்றொரு அறையிலிருந்து ஒரு பெண்மணி முகமறைக்கும் அளவிற்கு துணிமணிகளை அள்ளிக்கொண்டு, ஹாலில் இருக்கும் மற்றொரு நீளமான பெரியசோபாவில் போட்டுவிட்டுச் சென்றவள், சற்று நின்று திரும்பிப் பார்த்தாள்.

சுவரின் மேல் உலவவிட்ட கண்கள், தன்னை யாரோ உற்று நோக்குகிறார்கள் எனத் தெரிந்ததும், பார்வை அவ்விடம் நோக்கி நகர்ந்தது. அந்நகர்தல் இந்த உலகையே இரண்டாகப் பிளந்து, நிலையற்ற பரிச்சியத்தைப் பரிசாக வாரி வழங்கியது. ‘கடவுள் இல்லை… இல்லவே இல்லை…’ அந்த முகம். இது அதே முகம் தான். அதே வாசனை தான்.

“நீ செரின் தான?”

அவள் பட்டென்று ஓடிமறைந்து ‘சுகுமாமா… சுகுமாமா….’ ன்னு கணைத்தாள். பின்பக்கம் தேடிச்சென்றவன், ஏன் இப்படித் தொண்டை வலிக்க கத்துகிறாள். ‘என்னவளுக்கு என்னானதோ’….. பதற்றத்தோடு ஹாலின் வழியாக உள் வந்து, அவளிருக்கும் இடத்தை அடைந்தான்.

சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்து பார்த்தார்கள். அங்கு யாருமில்லை.

000

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சொந்த ஊர். இயற்பெயர் மு.கவியரசன். (20,ஜீலை,1991) விவசாயக் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம். தூய சவேரியார் கல்லூரியில், (பாளையங்கோட்டை) சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் முனைவர் பட்டம். இவரின் முதல் நாவலான “பரிதவிப்பு” 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் தேர்வு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. “காட்சிகள் சொன்ன காரணங்கள்” குறும்புதினம், சுப்பு லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் (மதுரை)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *