வட்டத்தின் மீதி பாகத்தைத் தொலைத்துவிட்டேன்.
1.
எறிந்த கல் தண்ணீரில்
மூழ்குவதையே உற்றுப் பார்க்கிறேன்
ஒன்றுமில்லை
எறிந்த கல் மூழ்கும் கணத்தில்
ஏற்படும் சலனங்களும், ஓசையும்
மீண்டும் அதே கணத்தில் கேட்கப் போவதில்லை.
மற்றொரு கல் என்னிடத்தில் இருக்கிறது
இங்கிருந்து செல்லும் முன் இரண்டாவது முறை
இன்னும் சற்று பக்கத்தில் சென்று
வீச வேண்டும்.
அப்போது தண்ணீரில் எழும் சலனங்களையும், ஓசையையும்
மனத்தில் பதிந்து கொள்ளவேண்டும்
எனக்காக என்ன சொல்லப் போகிறதென்பதை.
2.
முழுமையற்ற வட்டத்தின் மீதி பாகத்தைத் தொலைத்துவிட்டேன்
உடைந்த கவராயத்தின் சுழற்றுதலுக்கு காத்திருக்கிறது
எனது சின்னஞ்சிறு பென்சிலின் கூர்முனை உடைபடுகிறது.
முக்கோணத்தின் ஒரு பகுதியின் உச்சியில்
உலகத்தை அமர வைத்திருக்கிறேன்
பாய்ண்ட் ஸீரோ ஸீரோ புள்ளியில்.
ஒரு மில்லியன் மைக்ரான் அளவு
தவறுகள்கூட கண்டுபிடிக்கப்படுகின்றன
தவறுகளுக்கு இடமில்லாத உலகம்
மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலம்.
தற்குறியென கணக்கு வாத்தியார் பிரம்பு
முதுகில் சலீரென முத்தமிடுகிறது.
3.
விளக்கின் ஒளிதூண்டலுக்கு கருவியாக
இருந்த குச்சி வெளியில் வீசப்படுகிறது
இன்னும் சற்று நேரத்தில் அடரிருளின் வருகை
பக்திமனம் கமழ நறுமணப் புகையெழுகிறது.
யாருமற்ற இடத்தில் கூட ஏதோவொன்று நிகழ்கிறது.
எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒளியின் பரவல்.
++

இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.