அறிவே ஆயுதமென்க…
இன்னலுக்குள் தனைத் தொலைத்து
எள்ளி நகையாடும்
கூட்டத்தின் போக்கிற்குள் மையமென நிற்காமல்
பிணக்குகள் பெரிதாகி
பிளவுக்குள் தள்ளுகின்ற
இணக்கமற்ற இறுமாப்பில்
இறுகிக் கொள்ளாமல்
மனதின் தைரியமென
மாண்புகள் சுமந்தபடி
துணிவும் தன்மானமும்
துணைநிற்கும் என்றாய்ந்தே
மகிழ்வோடு முளைத்திடவே
அறிவின் வழிக்கு ஒப்படை உன்னை.
தேடிவரும் வாய்ப்புகளை
சிரமேற்று மகிழ்தல் போலே
திசைக்கொன்றாய் தடுமாற்றத்தைப் பரிசளிக்க பறந்துவரலாம் தோல்வியின் முகாரிகளும் முகவரிகளும்.
துவண்டலும் துக்கமுமென
உனக்குள் ஒளிந்து கொண்டால்
வேதனையும் விரக்தியும்
வலை பின்னி சுருக்கிடுதல் நீளுமென்றால்
வெளிச்சத்தின் பாதைக்குள்
வீறுகொண்டு நுழைவதெப்படி?
சினத்தின் பின்னேயும்
சிந்தை தொலைய வைக்கும் தேடலின் பின்னேயும்
இழந்திடும் பொழுதுகளில்
உள்ளொளிப் பயணத்தில்
உனை நடத்தி
ஒப்பிலா கதிரவனாய்
விரிந்திடும் அறிவின்
விளைச்சலை நாடிடு.
ஒரு சொல் கேளீர்
1.
உதிர்ந்த ஒற்றைச் சிறகைப் பற்றிக் கொண்டு வானத்தைத் தேடுகிறேன். வனமே கிடைத்தது.
2
பறவைகளின் எல்லா குரல்களுக்குள்ளும் புதைந்து கிடக்கிறது
மொழியற்ற சொற்களின்
அகராதி.
3
அழியும் நதித் தடங்களுக்குள்
தேடினால் கிடைப்பது
ஆதி மனிதன் கால்தடங்கள்.
4
மனிதன்,மனிதத்தை மறக்கும் தருணத்தில் பற்று எல்லை மீறி வெறியாக மாறி விளையாடி விடுகிறது.
5
உண்டியல் நிரப்பி உன்னிடம் வேண்டுவோர் மனதில் மக்கள் ஏழ்மையை விரட்ட வழியருள்வாய் இறைவா.
6.
வாசிப்போரையும் யோசிக்க வைத்து வாழ்வை நேசிக்க வைக்கும் எழுத்தே மனித வளத்தை மேம்படுத்தும்.
7
வாத்தியமும் சரி
வாழ்க்கையும் சரி
சுரங்களை எவ்விதம் மீட்டுகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது அவரவர் மனமும் மதிப்பும்.
8
பெருங்கூச்சலும் பேரோசையும் நிறைந்த வனத்திற்குள் பேரமைதி கொள்ளும் பறவைகளும் வாழ்கையில் தரணியில் நடைபோட
நமக்கென்ன தடை? .
9
வீழ்ந்துவிட்டதாய் வேடிக்கை பார்த்த விழிகளைத் தாண்டி எழுந்து நிற்க ஊன்றுகோல் நீட்டியவனை ஊனமெனப் பட்டியலிடுகிறது உலகம்.
10
ஆதிக்க மனப்பான்மையில் அடிமைத்தனத்தில்
வேலை நடத்தினால்
அழுத்தப்பட்ட பலூனைப் போல
வெடித்து வீணாவதே நடக்கும்.
11
புகழ்ச்சியோ இகழ்ச்சியோ
உட்கார்ந்து விடாதீர்கள்
உங்களுக்கான சிகரம்
ஏறிவாவென அழைக்கிறது
உம்மை.
12
இக்கட்டுகளின் தளைகளிலிருந்து
விடுவித்துக் கொண்டு
வானத்தை அளக்க
சிறகு விரிக்கும்
குஞ்சின் மனத்தில்
சுமைகளை ஏற்றி விடுவதில்லை
தாய்ப்பறவை.
13
குவித்து வைப்பது விருப்பத்தின் செல்வங்களும் சொத்துக்களும். கொண்டு போவதென்னவோ வெறுப்பின் உயிரற்ற கூடுதானே.
14.
பயன்படுத்தும் பாதையில் பயணித்தல் அனுபவங்களைத் தருவதில்லை. நாம் அமைக்கும் புதிய பாதை கற்றுத் தருவதே வாழ்வின் வெற்றிச் சரித்திரங்கள்.
15
வேர்களுக்குள் உறைந்து கிடக்கும் நீர் உறிஞ்சும் மனத்தை மலர்களின் வழியும் கனிகளின் வழியும் வெளிப்படுத்தும் மரத்தின் நன்றியை வெட்டுபவர்கள் உணரட்டும்.
16
விழுந்து எழுந்தவனிடம் ஏன் விழுந்தாய் என வினவாதீர்கள். எப்படி எழுந்தாய் என விசாரியுங்கள்.வெற்றியின் ரகசியம் அதிலும் இருக்கலாம்.
17
கேட்பதில் இருக்கும் சுவை அனுபவிக்கையில் மேலும் அதிகரித்தால் உங்களின் இலக்கு நோக்கிய பயணம் சரியெனப் புலப்படும்.
18
கிளையை நம்பி கூடுகள் உயிர் பெறுவதில்லை. இறக்கைகளில் விரிகிறது பறவைகளின் வானம்.
19
எதிரியின் கூட்டுக்குள் குண்டெறியுமுன்
இறுதியாக அனுப்பிப் பார்ப்போம்
மழலைகளை உயிர்ப்பிக்க
மலர்ச்செண்டு.
20
எனக்கிருக்கும் கனவு
எல்லோருக்கும் பலிக்கட்டும்
கடைசிப் பறவையின்
ஒற்றைச் சிறகை
காப்பாற்றுவதென.
21
ஏழ்மையை விரட்டாமல்
எல்லா இழப்பீடுகளும்
வழங்கப்படுகின்றன
ஏழையின் பெயரில் .
22
கூடு சிதையுமென்று
காற்று சும்மாயிருந்தால்
கிளைக்குப் பெருமையில்லை.
மரத்திற்கும் உயிரில்லை.
23
ஒற்றைக் கனவுக்குள்
ஒளிந்து கிடக்கலாம்
ஓராயிரம் முயற்சிகளும்
ஒரு சில வாய்ப்புகளும்.
24
உதடுகள் பேசுவது
வார்த்தைகள் அல்ல
அவரவர் எதிர்காலம்
என நினைத்தால்
நல்லவையே நடக்கும்.
25
ஒன்றின் ஒரு பொழுதை
நன்றின் நற்பொழுதாக்கினால்
இன்றின் சிறப்பெனவே
என்றும் இனிதாகும் எதிர்காலம்.
26
பார்த்துப் பழகிய நாயிடம் கிடைக்கும் எதிர்பாரா நன்றியை பழகிப் பார்க்கும் மனிதரிடம் எதிர்பார்க்கும் மனதை மாற்றிக்கொள்வது எளிதல்ல.
27
வானத்தை நீள அகலத்தில் அளக்கும் நமக்கு இறக்கைக்குள் அளந்து காட்டுகிறது பறவையின் தேடல்.
28
கருணையின் ஈரம் காய்ந்துவிடும் தருணத்தில் எல்லோரிடமிருந்தும் எட்டிப் பார்க்கலாம் சாத்தானின் முகம்.
29
ஒரே பாதையில் பயணிக்கும் வாழ்வின் போக்கை சலிப்புடன் அணுகாதீர்கள். சட்டென மாறும் ஒற்றை நொடித் திருப்பம், அறியாத மலரின் மணத்தைப் போல இனந்தெரியாத மழலையின் புன்னகையை போல வாழ்விற்கு அர்த்தம் தந்துவிடும் தருணத்தை விதைக்கலாம்.
30
ராசி பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் சகுனம் இடையூறென மாறிவிடக்கூடாதென்ற நம்பிக்கையிலும் மரணத்தை வென்றுவிடத் துடிக்கும் மனதிற்குள் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பேராசைப் பிசாசு வாழ்வை அறிமுகம் செய்து வாழச் சொல்கிறது.

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.