இப்புதினம் இலங்கையின் கிராமப்புறத்திலிருந்து துவங்குகிறது. காதலின் பொருட்டு குழந்தைப் பெறுபவள் அதனை கிணற்று மேட்டில் விட்டுவிட்டு அதனுள் விழுந்து மாய்கிறாள். குழந்தை தாயின் உடன்பிறந்த மூன்று சகோதரிகளில் திருமணமாகாதவளிடம் வளரத் துவங்குகிறாள். குழந்தையான வளப்புண்ணியின் மீது சித்தியானவள் நிகழ்த்தும் வன்முறையே இப்புதினத்தின் மையக்கரு எனலாம்.
உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குழந்தை கையாளப் பழகும்போது மனம் சார்ந்த வன்முறைகளை பாதகத்தி தொடங்குகிறாள். உதாரணமாக, ‘அந்த வதை முகாமில் தாயைத்தின்னி தான் செய்த வேலைகளில் மிகக் கொடூரமான சில வேலைகளைக் குறித்து வைத்திருந்தாள். அதில் தூமச்சீலை புழிஞ்சு காயப்போடுவதுதான் முதலாவதாக இருந்தது. அந்த வேலையை செய்ய மறந்த நாட்களில், கண்கட்டி விளையாட்டைப் போன்று மூக்கில் படும்படி தலையில் கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் என்கிற விசேடமான புதிய சட்டமும் அமுலுக்கு வந்தது. சில நாட்கள் அதை அனுபவித்துமிருக்கிறாள்’.(‘பக்.55,)
அங்குள்ள அவள் மூன்று கிளையுடைய பனிச்சம் பழ மரத்துடன் நட்பு பாராட்டுகிறாள். பசியின் வாதையை அச்சிறு வயதியலேயே உணர்ந்தவளாகிறாள். காயவைத்துள்ள தானியங்களைப் பாதுகாக்கச் சொல்லும்போது பறவைகளைவிடுத்து பாதகத்தியைக் கண்காணிக்கிறாள்; அவள் பார்க்கும் வேளையில் அவற்றை விரட்டுவதனைப்போல் சப்தமிட்டு நடிப்பவள் அச்சிறு உயிர்களின் பசியினை உணர்ந்தவளாக காட்சிப்படுகிறாள். ஆபத்துக் காலங்களில் தன் அகத்தில் புறப்பட்டு அலையடிக்கும் கிணற்றையும் ஏதேனும் ஆபத்தென்றால் நாயின் குரைப்பொலியையும் கேட்கும் தன்மையுடையவளாகிறாள்.
இப்புதினத்தில் ரங்குப் பெட்டி, கவித்துவச் சொற்கள், வதைமுகாம் என்னும் சொல்லாடல்கள் தவிர்க்கயியலாத இடத்தினைப் பெறுகின்றன.
ஆதரவற்ற குழந்தையின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும்; அதிலிருந்து வெளியேறி விடுதியை அடைதலும்; அதிலிருந்து வெளியேறி சமூகத்தில் உலவலும்; ஒட்டுமொத்தமாக இப்பரந்த உலகே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்னும் புரிதலுக்கு வருதலும் – நூலகம் மூலம் உலகம் அறிந்து புலப் பெயர்வுக்கான காரணமாக சுரண்டலைப் பற்றிப் பேசுவதாகவும் நீளும் கதையில் ஓர் உடலுக்குள் வாழும் மூன்று உயிர்களென தாயைத்தின்னி, தில்லை மற்றும் லிலித் ஆகியோரின் மனவோட்டங்கள் பேசப்படுகின்றன.

தனது சித்திக்கு ‘பாதகத்தி’ எனப் பெயர் சூட்டி ரங்குப் பெட்டியில் எழுதி வைப்பதோடு தான் அனுபவிக்கும் எல்லாவற்றையும் எழுதி எழுதி சேகரித்துக் கடக்கிறாள்; இளம் வயது முதல் நிக்கரையே அணியாதவள் நகர்ப்பகுதியின் விடுதியில் சேர்கிறாள்; முகப் பவுடருக்கு சாக்பீஸ் தூளைப் பயன்படுத்தி ஆசிரியர் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்புகிறாள். அங்குள்ள குழந்தைகளின் உடைகளை / பாத்திரங்களை / அறைகளை சுத்தம் செய்வதன் மூலம் பென்சிலை கூலியாகப் பெறுகிறாள். விடுதிக்கு தன்னை ஒருவரேனும் காண வரமாட்டார்களாயென ஏங்கி ஏங்கி மாய்ந்து மரங்களைத் / தாவரங்களைத் தம் நண்பர்களாக்கி கொள்பவள் காலப்போக்கில் ‘பள்ளிகளும் விடுதிகளும் இச்சமூகம் தான் எதிர்ப்பார்க்கும் அடிமைகளை உருவாக்கும் நிறுவனங்களில் முதன்மையானவையாக உள்ளன‘ என்னும் முடிவிற்கு வருகிறாள்.
குகை ஓவியங்களைக் கண்டு வருபவள் தான் ருதுவானதே தெரியாமல் கசியும் உதிரம் கொண்டு, சுற்றுலாவின்போது பாறையில் கண்ட சித்திரங்களைப்போன்றே கழிவறையின் சுவரில் கோடுகளைத் தீட்டுகிறாள். அதன் பொருட்டு விடுதிப் பொறுப்பாளர் ‘எதனை பயன்படுத்தி இவற்றை வரைந்தாய்’ எனத் தண்டிக்கும்போது சற்றேத் திரும்பி தன் விரலால் உதரம் தொட்டுக் காட்டும் காட்சி வாசிக்கும் நம்மையும் நடுங்கிப்போகச் செய்கிறது.
கதிர் / பனம்பழம் பொறுக்கும் காட்சிகளும்; காக்காவின் கத்தலின் போது ‘சனியன், சனியன் இந்தத் தேவாங்கு வரத்தான் நீ கத்திக் காட்டினயா?’ பக்.49 என ‘அவளது பெரியம்மாள்’ குறைப்பட்டுக் கொள்வதும்; அவளது தாயின் கதையைப் பகிரும் வெத்திலைக்கிழவியும்; காதலனான ஒத்தக்கொட்டையுடன் பாதகத்தியின் உறவும்; முற்போக்கு / பெண்ணிய கருத்துகளைப் பேசி அவளது மனதை நெருங்கும் கவி திண்டான் பாஞ்சான் வன்புனர்விற்கு நிகராக அவளை கையாண்டு அவமானப்படுத்துவதும்; பின்னூசியுடனான அவளது நெருக்கமும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
குண்டு வெடிப்பிலிருந்து தப்புபவள் ‘சூனியக்காரிகள் என்னும் பெயரில் உலகில் அதிக பெண்களைக் கிணற்றில் தள்ளி கொன்றழித்த’ சுவிஸ் நாட்டில் குடியேறுகிறாள். இவ்வாறாக கிணறு அவள் வாழ்க்கை முழுக்க தொடர்ந்தபடியே உள்ளது.
ஆதம்காக்கா / இந்திய அமைதிப்படையின் பாலியல் அத்துமீறல்கள்; Human Zoo-வாக செயல்பட்ட ஐரோப்பிய கண்டம் ஏனைய நாடுகளின் மீது செலுத்திய காலனி ஆதிக்கம்; ஆண் பெண் பேதமின்றி ‘பெண்ணியவாதம்’ பேசும் போலிகள்; பெண்ணுடலை பலியெடுக்கும் ஒன்றாக எண்ணும் ஏனையோரின் மனப்போக்கு; மத இனங்களின் இடையேயான புரிதலின்மை என விரிந்து ‘சமூக விடுதலையைவிட தனிமனித விடுதலையின் முக்கியத்துவத்தை’ எடுத்துரைக்கும் இப்புதினம் யூமா வாசுகியின் ‘இரத்த உறவு’ நாவலைப்போல் குழந்தைகளின் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை குறித்து காத்திரமாகப் பேசுகிறது.
குழந்தைகள் சார்ந்து வெளிவந்துள்ள ஆக்கங்களில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள இந்நாவல், ‘இலக்கியப் போலிகள்; காலனியம்; உறவுகளின் புனிதம்’ ஆகியவற்றை கேள்விக்கு உட்படுத்துகிறது.
தன் கதையை மரத்திடம் சொன்னதால் அது பட்டுப்போனது என நம்புகிறவள் அதை எழுத்தின்வழி பகிர நினைத்து அதனால் வாசிப்பவர்க்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமோ என அச்சம்கொள்கிறாள்.
மேலும், சிலவற்றைப் பேச வேண்டியுள்ளது.
01. இந்நாவலின் முதல் வரி ‘தேன் துளி ஓன்று நிலத்தில் விழுந்து சிதறுகிறது’ என்பதாகும். உள்ளபடிச் சொன்னால் ‘விழுந்ததும் நீர்த்துளி / மோர்த்துளி சிதறும்; தேன்துளி ஒருபோதும் சிதறாது. அது வழிந்தோடும் அல்லது பரவும்’.
ஒரு நாவலை வாசிக்கத் துவங்கும்போது அதன் முதல் வரி நம்மை ஈர்க்காவிட்டாலும் குறைந்தபட்சம் வெளியேற்றாமல் இருக்க வேண்டும். இவ்வரி ஒரு மணி நேரத்தை எடுத்துக்கொண்டதுடன் அந்த ஒட்டுமொத்த நாளிலும் மீள அதை தொடாதவாறு பார்த்துக்கொண்டது.
02. ஒரே வரியில் / அடுத்தடுத்த வரிகளில் தேவைக்கதிகமாக இரு முறை வரும் ஒரே சொற்கள் கொண்ட வாக்கியங்களையும்; அதனைப் போன்றே ஒரே பொருளைத்தரும் வெவ்வேறு சொற்கள் கொண்ட வாக்கியங்களையும் வாசிக்கும் போது சற்று அயற்சியாக உள்ளது. சில உதாரணங்கள்.
அ. அவளுடைய வாழ்வின் பெரும் துயரங்கள் வரும் போதெல்லாம் ‘நாய்கள் மட்டுமே குரைக்கப்போகிறது’ என்று அவளுக்குத் தெரியாது. அது அவளையும் கடந்து , அவளின் தலைமுறைக்கும் துயரங்கள் நிகழும் தருணமெல்லாம் ‘நாய்கள் மட்டுமே குரைக்கப்போகிறது’ என்பதும் அவளுக்குத் தெரியாது. பக்.17
ஆ. அவன் ‘இந்தக்’ கிரமத்தைச் சேர்ந்தவனல்ல. பக்.18 – வரி.10
அவன் ‘அந்தக்’ கிரமத்தைச் சேர்ந்தவனல்ல. பக்.18 – வரி.20
இ. தெருக்களெங்கும் ‘மீன்வாடை’ வீசியது. ஒவ்வொரு வீட்டிலும் ‘மீன் கழிவுகளின் வாசம்’. காற்றில்கூட அந்த ‘வாடை’ இழைந்தோடிக்கொண்டிருந்தது. பக்.32
ஈ. விடிந்ததும் கிழவிகள் கூடியிருக்கும் மரத்தடிக்குச் சென்று, ‘வெத்திலபாக்கு’ வட்டாவை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவளும் கொழுந்தாண்டு ஒன்றைக் கிள்ளி தனது வாய்க்குள் போட்டுக்கொண்டாள். முன்பு சில நேரங்களில் ‘வெத்திலாக்கு’ போட்டிருக்கிறாள். பக்.23
உ. … அதன்கீழ் ‘எழுதிவைத்திருந்த’ ஒரு வாசகம் முக்கியமாகப்படுகிறது.
‘ஒரு மனிதனுக்கு வாழ்வதற்கு இருக்கும் உரிமையைப்போல், வாழ்ந்தது போதும் என முடிவெடுத்து மரணிப்பதற்கான உரிமையும் உண்டு’ என ‘எழுதிவைத்திருந்தாள்’. பக்.63.
03. ‘நிக்கர்’ என்னும் பகுதியில் ஊர்த்தலைவர், ‘தனது காமம்சார் செயல்பாடுகளை அறிந்துகொண்ட தாயைத்தின்னி என்றேனும் ஒருநாள் அதை ஊராரிடம் வெளிப்படுத்துவாள்’ என்கிற எண்ணத்தில் தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நகரில் வசிக்கும் அவளின் தந்தைவழி உறவுகளிடம் நேரில் சென்று தொடர்ச்சியாகப் பேசுகிறார். அதன்மூலம் அவள் விடுதியை அடைகிறாள்.
இதில், ‘சின்னசிவன்’ என்னும் முதல் பகுதியில் அவளுடைய தந்தை ‘இந்த நாட்டிலுள்ள வேறெந்த கிராமத்திலிருந்தும் வந்தவனல்ல. வேறொரு நாட்டிலிருந்து வந்தவன். இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து வந்தவன்’(பக்.18) என்று இருக்கிறது. அத்துடன் தாயைத்தின்னியின் தந்தையான சிற்ப அழகனின் உறவுகள் இலங்கையின் நகர்ப் பகுதியில் வசிப்பதாக எங்கும் சொல்லப்படவில்லை.
04. தாயைத்தின்னியின் தாயானவள் ‘ஊராரால் ஒதுக்கிவைக்கப்பட்டு வாழ்க்கை முழுக்க ஒரே அறையில் வசிக்கப்போவதாகவும் தன் வயிற்றுப் பிழைப்புக்காக பக்கத்து வீடுகளிலும் கோயிலிலும் வேலைகளை மேற்கொள்வதாக உள்ளது. பக்.37
இங்கு, ’தாயானவள் குழந்தைப் பிறந்த ஓரிரு மாதங்களில்/ ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்கிறாள்’ என்பதுடன் ‘ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்ணிற்கு ஊரார் வீட்டிலும் கோவிலிலும் வேலை பார்த்திட சம்மதிப்பரா’ என்னும் வினா எழுவதை தவிர்க்க இயலவில்லை.
குறிப்பாக இந்நாவலிலுள்ள ‘சின்ன சிவன்’ பகுதியில் வரக்கூடிய மிகமிக முக்கியமான செய்திகள் பின்னர் வரக்கூடிய பக்கங்களில் அங்காங்கே ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்லப்படுகின்றன. போதுமானதாகவும் உள்ளன. அத்துடன் மேற்சொன்ன பெரும்பான்மையான குறைகளும் அப்பகுதியிலேயே காணப்படுகின்றன. ‘பாதகத்தி’ என்னும் இரண்டாம் பகுதியிலிருந்து தொடங்கி முடிக்கப்பட்ட நாவல் வேறொருவரின் தூண்டலாலோ / இதிலிருந்து சொல்வது போதாதோ என்னும் ஆசிரியரின் ஐயத்தினாலோ பின்னர் எழுதி சேர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
ஆகவே, முதல் பகுதியான ‘சின்ன சிவனை’ நீக்கிவிட்டு ஏனையவற்றை ஓரிரு முறை செம்மை செய்து வெளியிடும்போது ‘தமிழில் வெளிவந்து உலக அளவில் கவனம் பெறும் நாவல்களின் வரிசை என்று ஒன்றுயிருப்பின், அதில் தவிர்க்க இயலாத இடத்தில் இருக்கும்’ என்பதில் சிறிதும் ஐயமில்லை.
000

சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.