பெருமாளைத் தரிசிக்க நேரம் வந்துவிட்டது. காயத்ரி வெங்கடேசன் கொரியரில் வாங்கிய சஷ்டியப்தபூர்த்தி கவரை மிக ஆர்வமாகப் பிரித்தாள். பணக்கார இடம் என்று பெரிய கவர் சொல்லியது. வெள்ளைக் கவரே வித்தியாசமாக இருந்தது. பாரம்பரியமும் விடவில்லை. நாலு மூலைகளிலும் உண்மையிலேயே சிரத்தையாக  மஞ்சள் பூசி மங்களகரமாக இருந்தது. உள்ளே கொஞ்சம் மஞ்சள் தடவிய அட்சதையும் இருந்தது. பத்திரிக்கைத் தவிர போனிலும் தம்பதி இருவரும் அழைத்திருந்தார்கள். போனிலேயே ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டாள்.

இது நெருங்கிய சொந்தம் ஒன்றின் சஷ்டியப்தபூர்த்தி விசேஷம். விட்டுக் கொடுக்க முடியாத சொந்தம். விட்டுக் கொடுக்க முடிந்த சொந்தம் என்றாலும் ஸ்வாமி அவராகவே அழைக்கிறார் என்று போயே ஆகவேண்டும். ஸ்ரீஅனந்தசயன அனந்தபத்மனாப ஸ்வாமியை விட்டுக் கொடுக்க முடியாது.

மனம் பக்தியில் சற்று நெகிழ்ந்தது. இப்போதுதான் நேரம் கூடி வந்திருக்கிறது. கடைசியாக அவரை தரிசித்தது நான்கு வருடம்  வருடம் முன்பு. சாமி தரிசனத்திற்கு செல்ல ஏதேதோ தடைகள் அவ்வப்போது வந்துப் போகமுடியாமல் போய்விட்டது. காயத்ரிக்கு இதில் மிகுந்த மனத் தாங்கல் உண்டு. இன்று நாலு வருட மன பாரம் இறங்கிவிட்டது.

தெரிந்த விலாசம்தான். பென்சிலில் இப்படி ஒரு கோடு நேராக  அப்படி ஒரு கோடு எல் வடிவில் இழுத்து விலாசம் குறிப்பிட்டு விடலாம். வீட்டிலிருந்து நேரான மெயின் ரோடு. பிறகு அதிலிருந்து  சடாரென்று வலதுப் பக்கம் திரும்பும். அந்த மண்டபம் இருப்பது முட்டு சந்தில்.

முட்டு சந்து என்றாலும் பெரிய மண்டபம். மற்றும் அடையாரில் பிரபலமான கல்யாண மண்டபம். பக்கத்திலேயே அனந்தசயனம் அனந்தபத்மனாப ஸ்வாமி கோவில் இருக்கிறது. இப்படி அமைந்தது காயத்ரிக்கு ஆசீர்வாதம் மாதிரி உணர்ந்தாலும் கூடவே ’பார்க்க வர சொகுசா பக்கத்லேயே இருக்கனம் போல’ அசரீரி நமுட்டுக் குரல் கேட்கத்தான் செய்தது.

பத்திரிக்கையை ஒரு முறைப் பக்திப் பொங்கப் பார்த்தாள்.

வாசல் சந்தன தெளிப்பில் ஆரம்பித்துத் தேங்கா பை வாங்கலில் முடியும் சம்பிரதாய விசேஷம். எல்லா விசேஷமும் இப்படித்தான். சந்தனம் தடவுதல்,கல்கண்டு கலந்த சர்க்கரையை வாயில் போட்டுக் கொள்ளுதல்,உள்ளே விசாரிப்பு,தெரிந்த முகம் தேடிப் பார்த்து உட்கார்தல், சில பேரை தவிர்த்தல்,மொபைல் பார்த்தல், அரட்டை,போரடித்து சுற்றிமுற்றி வேடிக்கைப் பார்த்தல்,ஜுஸ் குடித்தல்,க்யூவில் நின்று ஆசிர்வாதம்,ஓதி விடுதல்,போட்டோ,

சாப்பாடு,தாம்பூலப்பை பெற்றுக் கொள்ளுதல் என்று ரோபோ மாதிரி இயங்க வேண்டும். என்ன ரோபோ கொடுக்கும் கொய்ங் கொய்ங் சத்தம்தான் கிடையாது. 

இன்று அந்த ரொட்டீன் நடுவில் மாற்றம் இருக்கும். அனந்தசயனம் அனந்தபத்மனாபன் தரிசனம். ஓலாவில் ஜன்னல் ஓரத்தில் ஓடும் காட்சிகளின் பின்னே தொலைதூரத்தில் அனந்தசயனம் அனந்தபத்மனாபன் படுத்த வாக்கில் வந்துக் கொண்டே இருந்தார். கார் எங்கு திரும்பினாலும் அவரும் படுத்தவாக்கிலே கலையாமல் திரும்பினார். பின்னணியில் பரந்த நீல வானம் கடல் போல பரந்து ஏகாந்தமாக இருந்தது. பாற்கடல். புல்லரித்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு மெலிதாக புன்னகைப் புரிந்துக் கொண்டாள். சஷ்டியப்தபூர்த்தி பத்திரிக்கையை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டாள்.

மண்டப வாசலில் டிராபிக் ஜாம் என்பதால் ஓலா பக்கத்தில் இருந்தக் கோவில் வாசலில் காயத்ரியை இறக்கி விட்டுக் கிளம்பியது. தனக்கு வாய்த்தப் பாக்கியமாகப் பக்தியில் நெகிழ்ந்துக் கோவில் உள்ளேப் பார்த்துக் கைக்கூப்பி மானசீகமாக நமஸ்கரித்தாள். மண்டப ஹாலில் உள் ஒடுங்கி வெளி வந்த மங்களகரமான நாதஸ்வர இசையும் நெகிழ வைத்தது. ‘ஜன்னல் ஓரமா கூடவே படுத்துண்டு வந்தது இதுக்குத்தானா? நேரா இங்க எறங்க வச்சுட்டே’ கன்னங்களில் மெலிசாக ஒத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

கோவில் திறக்கும் மூடும் நேரங்களைக் கேட்டுக் கொண்டாள். மண்டபத்திற்குள் நுழைந்தாள். முகூர்த்தத்திற்கு நேரம் இருந்தது. கூட்டம் அம்மியது. பழுத்த செக்கசெவேல் சுமங்கலிகளும் அவர் புருஷர்களும் மண்டபத்தில் நிறைந்து சஷ்டியப்தப்பூர்த்தி களை  நிரம்பி வழிந்தது.


ரோபோ இயக்கத்தில் ஜுஸ் ஸ்டேஜில் அதைக் குடித்துவிட்டுக் கோவில் தரிசனத்திற்கு வந்துவிடலாம். இது மாதிரி விசேஷ பாதியில் சொந்த வேலைப் பார்க்கும் செய்கை காயத்ரிக்கு உறுத்தத்தான் செய்தது. சொந்த வேலையா இது தரிசனம் ஆச்சே! சஷ்டியப்த பூர்த்தி கர்த்தாவின் ஆயுளுக்கும் வேண்டிக் கொண்டால் போச்சு. அறுபதிற்குப் பிறகு சதாபிஷேகமும் இவருக்கு  அமோகமாக நடக்க வேண்டும். விசேஷத்தில் கவனம் இல்லாமல் மொபைல் நோண்டுவது அல்லது வெட்டியாக பேசிக் கொண்டிருப்பதை விட இது எவ்வளவு மேல் என்று  சமாதானம் செய்துக் கொண்டாள். ஜூஸ் குடித்துவிட்டு கிளம்பினாள்.

கோவிலில் கூட்டம் இல்லை. கருவறை எதிரே நின்று  ‘ஸ்வாமி அனந்தசயனா ஸ்ரீஅனந்த பத்மனாபா’  தியானித்துத் திவ்யமாக தரிசித்தாள் காயத்ரி. ஆனால் காரில்  ஜன்னல் ஓரம் படுத்தவாக்கில் நீண்டு கூடவே வந்த சுவாமி கொடுத்த உள்ளார்ந்த ஆன்மிக தொனி ஒரு மாற்று குறைவுதான் நேரில். பிரகாரத்தில் மற்ற சிறு மூர்த்திகளையும் தரிசித்தாள்.  பிரதட்சிணம் வரும் போது கல்யாண மண்டபத்தின்  சஷ்டியப்தபூர்த்தியின் நாதஸ்வர மேள இசை சன்னமாக கேட்டுக் கொண்டே இருந்தது. வெளியே வந்தாள்.

வாசலில் ‘மேடம் ஹாப்பி பொங்கல்… பிச்சா(ச) காசு கொடு மேடம். நல்லா இருப்பே’. குருத்தான விரல்களில் காயத்ரியின் கையைத் தொட்டது. பிச்சையில் ஹாப்பி பொங்கல் விஷ்ஷா? வித்தியாசமான  தமிழ் உச்சரிப்பில் பெண் குரல். எந்தக் காலத்திலோ அடிக்கடி இந்தக் குரலைக் கேட்டு மனதில் பல காலம் படிந்தக் குரல். மறக்க முடியாது குரல். ஆனால் கொஞ்சம் மாற்றத்தோடு ஒலிக்கிறது.

ஆச்சர்யப்பட்டுத் திரும்பிப் பார்த்தாள் காயத்ரி. காலகாலமாக மனதில் படிந்தக் குரலை உருவத்தோடு தொடர்புப்படுத்திப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி. இளம் குறத்திப் பெண் பிச்சைக் கேட்டு நின்றிருந்தாள். இடுப்பில் அழுக்கு வடிந்த கருப்பான குட்டிக் குழந்தை. மூக்கு ஒழுகிக்கொண்டு அதுவும் அம்மாவுடன் கை நீட்டியது. ஆண்டாண்டு காலமாக பார்த்து மனதில் கல் வெட்டு போல படிந்த அதே குறத்திப் பிம்பம். இவர்களைக் கடைசியாக பார்த்து 20-25 வருஷம் ஆகி இருக்கும். கருப்பு நிறம். சிடுக்கான பரட்டைத் தலை மூடி. கழுத்தில் மூக்கில் குறத்திகளின் அடையாளமான ஊசிமணி பாசி மணிகள். துப்பாக்கியுடன் உடனுறைக் குறவன் இல்லை. முக்கியமான பாரம்பரிய மஞ்சள் நிற டால்டா டப்பா இல்லை. அதில் வரையப்பட்டிருக்கும் பனை மரமும் அச்சாக ஞாபகம் வந்தது. கூடவே கடைசியாக ’சாமியோவ்’ ஞாபகம் வந்தது. சிரித்துக் கொண்டாள்.

இவர்கள் தொடர்பு உள்ள இன்னொரு விஷயம் இருக்கிறதே? யோசித்தாள். நினைவில் வர இல்லை. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்து விட்டுவிட்டாள். வர வேண்டிய வேளையில் வரும்  முணுமுணுத்துக் கொண்டாள்.

இவர்கள் இன்னும் இதே ரீதியில் இருக்கிறார்களா என்கிற அதிர்ச்சி அவளுக்கு. அரசு இவர்களை மேம்படுத்திவிட்டதாகச் செய்திகளில் படித்திருக்கிறாள். இவர்களின் உடை,முகம், குடியிருப்பு, தோற்றம், படிப்பு, குழந்தைகள் எல்லாம் மாறி இருந்ததை செய்தித்தாளில் பார்த்திருக்கிறாள்.

குறத்திக்குப் பிச்சைப் போட கையில் காசில்லை. கைப்பையைப் மண்டபத்தில் கற்பகம் மாமியிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தாள். துளசி மாலைக்கு மட்டும் பணம் எடுத்து வந்திருந்தாள். ஜிபே இன்னும் பிச்சைக்காரர்களிடம்தான் இல்லை. ஜிபே பிச்சைக்காரர் ஸ்டேட்டஸை கெடுத்துவிடும். நினைப்பை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

பின்னாலேயே குறத்தி ’மேடம். மேடம்’ என்று தொடர்ந்து வர  சட்டை செய்யாமல் விடுவிடுவென நடந்து மண்டபத்தில் நுழைந்தாள். ‘தாயி’ கூட மேடமாக மாறி இருக்கிறது. இடுப்பில் இருக்கும் குழந்தை மென்மையாக சிணுங்குவதுக் கேட்டது நெருடுலாக இருந்தது. மண்டபத்தை விட்டு கிளம்பும் போது ஏதாவது பிச்சைப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இதை அவளிடம் சொல்லி இருக்கலாம் என்று வருத்தப்பட்டாள். அரைமணி இந்த நெருடல் இருந்து மறைந்தது.

பகவானைத் தரிசித்த நிறைந்த மனதோடு சஷ்டியப்தபூர்த்தி கோலாகலத்தில் ஐயக்கியமானாள்.

வைபவம் முடிந்து மாடிக்கு வந்தாள். அது பெரிய டைனிங் ஹால். ஐந்நூறு பேருக்கும் மேலாக ஒரே சமயத்தில் சாப்பிடலாம். நல்ல பசி. பசியும் இன்று விசேஷமாக அமைந்தது. கடமைக்காகச் சாப்பாட்டுவிட்டு எழுந்தாள் காயத்ரி. என்றுமில்லாத விசேஷ பசிக்கு சாப்பாடு சரியில்லை. ஏனோதானோ வைபவ கடாஷ்ம் இல்லாமல் சமைத்திருந்தார்கள். தன் இலையில்  பரிமாறப்பட்ட சில  அயிட்டங்கள் தொடாமல் அப்படியே இருந்தது. இது தவிர பிடிக்காமல் இலையில் ஓரத்தில் குவித்து வைத்துவிட்டு தயிர் சாதமும் மோர் மிளகாயும் சாப்பிட்டிருந்தாள். பணத்தை வாரியிறைத்த வைபவத்தில் இப்படி அசட்டுத்தனமான சமையலா? பக்கத்தில் சாப்பிட்ட யாரோ மாமியின் இலையிலும் மீதம் இருந்தது. மாமி ரசம் சாதத்தோடு எழுந்துப் போய்விட்டாள்.

கையை எல் ஷேப்பில் வைத்தபடி செல் போனை அக்குளில் இடுக்கியபடி பிரம்மாண்ட டைனிங் டேபிள்களில் வரிசையாக  இருந்த எச்சில் இலைகளைப் பார்த்தாள். திருப்தியாக இருந்தது. குற்ற உணர்ச்சி குறைந்திருந்தது. பாதி வடை,முக்கால் லட்டு,கசங்கிய பாயச குப்பி,ஒரத்தில் குவிக்கப்பட்ட ரசம் குழம்பு கூட்டு கலவையில் சாப்பிட்ட சாத மிச்சம். எல்லாம் எச்சில் அவதாரத்தில் திட்டுத்திட்டாக. யாரும் ரசித்துச் சாப்பிட்டதாக தெரியவில்லை. எச்சில் இலை! ஆஹா ஞாபகம் வந்துவிட்டது. குறத்தி சமேதராக எச்சில் இலை. என்றைக்கும் இல்லாமல் எழுந்து நின்று டைனிங் டேபிள் வரிசையைப் பார்க்க வைத்தது எச்சில் இலை ஞாபகம் வரத்தான் போல. சிரித்துக் கொண்டாள்.
 

அந்நாளைய மண்டப வாசல்களில் விழும் எச்சில் இலை மிச்சங்களைக்  கூட்டத்தோடு சாப்பிடுவார்கள் குறவன் குரூப்பை சேர்ந்தவர்கள். நாயும் இவர்களுடன் கூடவே சாப்பிடும். சாப்பிடாவிட்டால் டால்டா டப்பாவில் போட்டு பேக் செய்துக் கொள்வார்கள். சில சமயம் அதிலிருந்துக் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவார்கள். என்ன ஜன்மங்களோ? உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

மண்டப பெயர்களும் ஊர்களும் வாசலில் விழுந்த இலைகளும் கூடவே குறவன் குறத்திகளும் ஞாபத்தில் வந்து அருவருப்பாக இருந்தது. இரண்டு மூன்றுக் கல்யாணங்களில் இதை முகூர்த்த விசேஷம் மாதிரி வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.

ஏண்டா ஞாபகம் வந்தது என்று ஆகிவிட்டது காயத்ரிக்கு. எல்லாம் எச்சில் இலைகள்.

சாப்பாடு முடிந்து உடனே எழுந்து கை அலம்பிவிட்டு காரியம் ஆச்சா என்று வந்திருக்க வேண்டும். எச்சில் இலைகளை ஏன் பார்த்தேன். குறத்தித் தொடர்பாக ஒரு விஷயம் ஞாபகம் வருவதற்கா இந்த எச்சில் இலைத் தூண்டல். மீண்டும் இதே நினைவு. எவ்வளவோ விசேஷங்களில் குறத்தி இல்லாமல் கடந்து வந்திருக்கிறேனே. அப்போது ஏன் வீட்டு எச்சில் இலை சாப்பாடு ஞாபகம் வரவில்லை.
அதுவும் எச்சில் இலைதானே? குறத்தியின் எச்சில் இலை என்றால் இளக்காரம் விட்டின் எச்சில் இலை பதிவிரதா தர்மமா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாப்பிடும் எச்சில் இலை உசித்திதானே வீட்டு எச்சிலை விட. குறத்தி மூலமாக தன் வீட்டு எச்சில் இலை வெளியே வந்து விழுந்தது. மனது கசந்து வழிந்தது. ஞாபகம் வராமலேயே போய் இருக்கலாமே?

சாப்பாடு ஹாலை விட்டு படியில் இறங்கினாள். உம்மென்று உயிரே இல்லாமல் ஒரு புன்னகையை உதிர்த்தப்படி தாம்பூலப் பையை வாங்கிக் கொண்டாள். ஓலாவில் பிரயாணிக்க ஆரம்பித்தாள்.

சொந்த வீட்டிலேயே எச்சில் இலை சாப்பாட்டை எவ்வளவு காலம் பார்த்திருக்கிறாள். கொள்ளுப்பாட்டி,பாட்டி,பெரம்பூர் மூத்த அத்தை,மாயவரம் பெரியம்மா,பெரியம்மா மாமியார் எல்லாம் தங்கள் ஆத்துக்காரர்கள் மிச்சம் வைத்த எச்சில் இலையில் சாப்பிட்டு பதிவிரதா தர்மத்தை அனுசரித்தார்கள். பூவும் பொட்டுமாக சுமங்கலியாக போய் சேரவேண்டும். ஆத்துக்காரர்கள் சாப்பிட்டு எழும் வரை பசியோடு எச்சில் இலைக்குக் காத்திருந்தார்கள். பதிகளும் தங்கள் பத்தினிக்காக எச்சில் அயிட்டங்கள் விட்டுப் போவார்கள். தாங்களும் எச்சில் இலை தர்மத்தில் புண்யம் பெற வேண்டாமா?

குறவன் குறத்திகளுக்கு இருக்கும் ருசி இவர்களுக்கு இருந்திருக்குமா? அது பதிவிரதா தர்ம ருசி. எச்சில் இலைச் சாப்பாட்டை எதிரே குழந்தையாக காயத்ரி சம்மணம் போட்டு ஒன்றும் புரியாமல் சிரித்தப்படி பார்த்திருக்கிறாள். தனக்குப் பிடித்ததா பிடிக்கவில்லையா என்று அப்போதைய பிராயத்தில் தெரியவில்லை. மற்ற விஷயங்கள் மாதிரி ’இத நீயும் கத்துக்கனம் கோந்தே’ என்று அட்வைஸ் செய்யவில்லை. இன்றுதான் அந்த விஷயம் காயத்ரிக்கு உறைத்து அவர்களை வியந்தாள். இதில் இருக்கும் செய்தியை உணர்ந்தாள். நல்ல வேளை அவர்களுக்குப் பிறகு அம்மா உள்பட யாரும் இதை தொடரவில்லை. அம்மாவும் செய்தியை உணர்ந்திருப்பாள்.

எச்சில் இலையில் சாப்பிட்டு பதிவிரதா தர்மத்தை கடைபிடித்தவர்கள் யாருமே தீர்க்க சுமங்கலிகளாக போய் சேரவில்லை.

டைனிங் டேபிளில் ஆரம்பித்து ஓலாவில் வீடு சேரும்வரை எச்சில் இலைதான் காயத்ரியை ஆக்ரமித்திருந்தது. ஸ்ரீஅனந்தசயன அனந்தபத்மநாப ஸ்வாமியை சுத்தமாக மறந்தே போய் இருந்தாள்.

00

கே.ரவிஷங்கர்


இவர் சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தில் பல வருடம் வேலை பார்த்து  விருப்ப ஓய்வு பெற்றவர். 90களில் தினமலர் வாரமலர், கணையாழி,தினமணி கதிர்,கல்கி,சாவி,புதிய பார்வை,கலைமகள் போன்ற அச்சு ஊடகப் பத்திரிக்கைகளில் இருபதுக்கும் மேற்பட்ட  சிறுகதைகள் எழுதி உள்ளார். அடுத்து தான் மிகவும் சிலாகித்தச்  சிறப்பான இணைய இதழ் சிறு கதைகளைப் பற்றி சில வரிகளுடன்  தன் முகநூல் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும். கவிதைகளும் அடக்கம். பொழுதுபோக்காக செய்கிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட கதைகள் பகிர்வில் உண்டு.

ஓடிடியில் பார்த்தச் சிறப்பான சில படங்களைப் பற்றிய பதிவுகள் முகநூல் பக்கதில் எழுதுவதுண்டு. எல்லா மொழி சினிமாக்களும் இதில் அடக்கம். பொழுதுப் போக்காக இணையத்தில் வட மொழிப்பெயர் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *