எட்டு ஜில்லாவுக்கே இளவரசி – 6

கேள்விகளால் தொடர்ந்து சின்ன முத்துவை குழந்தைகள் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். மாதம் மூன்று நாட்கள் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்ற குழந்தைகளிடம் இருந்து வந்த அந்த கேள்வி அவருக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. குழந்தைகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று.

அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

“வீட்டில முட்டை அடை வச்சிருப்பாங்க பாத்திருக்கீங்களா?”

“பார்த்திருக்கோம் மில்ட்ரிப்பா.. பாருங்க அம்மாயி அந்த மூலைல ஒரு கூடையில மணல் போட்டு முட்டைய வெச்சி இருக்குது. கோழி தினமும் அதுல எப்பவுமே உட்கார்ந்திருக்கும். எப்பயாவது சாப்பிடுவதற்கு மட்டும் வெளியே வந்துட்டுப் போவும்” என்று கூறி ஆசாரத்தின் வடக்கு மூலையில் கையைக் காண்பித்தாள் இளவரசி.

“எத்தனை முட்டை இருக்கும்?”

“பன்னன்டு மொட்டுங்க”

கோழிங்க தொடர்ந்து பத்து முட்டை போடும். அப்புறம் அது கொஞ்சம் பொரிச்சு வெளிய வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ கழிச்சு மறுபடியும் 10 முட்டை 15 முட்டை போடும். இதுதான் அவங்களோட அடுத்த தலைமுறையை கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறை.

மனிதர்களுக்கு அப்படி கிடையாது. அந்தக் கோழி முட்டை இருக்கு இல்லையா அது மாதிரி தான் பெண்களோட வயித்துக்குள்ள மாசம் ஒரு முட்டை வரும்”

“என்னது மாசம் ஒரு முட்டை வருமா? அப்போ மாசம் ஒரு குழந்தையா?”

“அப்படி இல்ல அந்த முட்டை வளர்ந்து பத்து மாசம் ஆனாத்தா குழந்தை வெளியில வரும். அது குழந்தையா வளராமல் முட்டையாவே வெளியில் வந்துச்சுன்னா அதுதான் மாதவிடாய்”

“எனக்கு ஒண்ணுமே புரியலையே மிலிட்டரி பா?”

”நம்மெல்லாம் பொறக்கறதுக்கு அந்த மூணு நாள்ல வெளியில வர முட்ட தான் காரணம். அந்த முட்டை வெளியில வராமல் உள்ளேயே இருந்து வளந்தா குழந்தையா மாறும். இப்போதைக்கு இதுவரைக்கும் தெரிஞ்சுக்கோங்க. அப்புறம் உங்க பாட புத்தகத்தில் இது பத்தி வரும் அப்போ தெளிவா தெரிஞ்சுக்கோங்க”

“சரிங்க மிலிட்டரி பா. ஆனா ஏன் அது மூணு நாளும் வெளியில உட்கார வைக்கிறாங்க?”

“அந்த முட்டை உடைந்து வெளியில வரும். அது ரத்தமா தான் வெளில வரும். அந்த மூணு நாளும் வெளியில வந்துகிட்டே இருக்கும். அப்போ அந்த மூணு நாளும் ரொம்ப சுத்தமா இருக்கனும்”

“சரி அந்த நேரத்துல அவங்க நம்மளை தொட தொடக்கூடாதா? அவங்களே நம்ம தொடக்கூடாதா அவங்க வீட்ல எந்த பொருளையும் தொடக்கூடாதா?”

“அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் அப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்து வச்சிருக்காங்க. அந்த மூணு நாளும் நல்லா ரெஸ்ட் எடுக்கணும் அப்படிங்கறதுக்காக கொண்டு வந்ததுதான். ஆனால் அதையே இவங்க தப்பா தீட்டு அப்படிங்கற மாதிரி வச்சுட்டாங்க. தொடக்கூடாது அப்படிங்கற மாதிரி வச்சுட்டாங்க. அதெல்லாம் கிடையாது அப்படி எல்லாம் இருக்கணும் அப்படிங்கறது கிடையாது” என்று சின்னமுத்து கூறிக் கொண்டிருக்கும் பொழுதே வேக வேகமாக சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார் வள்ளியாத்தாள்.

“புள்ளைகளுக்கு நல்ல விஷயமா சொல்லிக் குடு. கொழந்தை பொறக்கறது எப்புடி? அந்த மூணு நாள் இப்படி இருக்கணும்னு அப்படி இருக்கணும்னு, தீட்டு இல்லைன்னு என்ன பழக்கம் சொல்லிக் கொடுக்கிறே நீ? நானும் பாத்துகிட்டே இருக்குறே. பின்ன தீட்டு இல்லாம என்னவாமா? எப்படி வூட்டுக்குள்ள வுடறது. புள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் குடு. இப்படி தப்புத் தப்பா சொல்லி கொடுக்காதே. இனிமேலு இங்க வர்ற மாதிரி இருந்தா நல்லதா சொல்லிக் கொடுக்கோணும். இல்லன்னா ஊட்டு பக்கமே வரக்கூடாது. சொல்லிப்புட்டேன்” என்று சத்தம் போட்டுவிட்டு மீண்டும் சமையலறைக்கு உள்ளே சென்று விட்டார்.

சின்ன முத்துவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையில் வள்ளியாத்தாள் இல்லை என்பது அவருக்குத் தெரியும். காலம் காலமாக அவர்களுக்கு பதிய வைக்கப்பட்டதை அவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியாது என்பது சின்னமுத்துவுக்குத் தெரியும். வளரும் அடுத்த தலைமுறையையாவது இதிலிருந்து மாற்ற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். குழந்தைகளிடம் சற்று நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அவர் சென்ற பிறகும் இந்த உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருந்தார்கள். ஏராளமான சந்தேகங்கள் வந்து கொண்டே இருந்தது.

யாரிடம் கேட்டாலும் இது பெரியவங்க சமாச்சாரம் நீங்க இத பத்தி கேட்க கூடாது என்று கூறிவிட்டார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை யானதால் எல்லோரும் மண்டபம் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளுடைய உயரத்தை விட சற்றே உயரம் குறைவாக இருந்த சின்ன சைக்கிள் ஒன்றை உருட்டிக்கொண்டு வந்து அவர்கள் முன்பு நிறுத்தினாள் மேரி.

அந்த சைக்கிள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. சிவப்பு வண்ணத்தில் சின்ன சைக்கிள் சீட் சின்னதான கைப்பிடி சின்ன பெல் சின்ன சக்கரம் என்று பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. “நதியா சைக்கிள். நதியா சைக்கிள்” என்று எல்லோரும் சத்தமிட்டுக் குதித்தார்கள்.

நம்ம போனவாரம் ரேடியோ ரூம்ல டிவில பாத்த படத்துல நதியா இந்த சைக்கிளைத் தான ஓட்டிட்டு வருவாங்க. ஏய் எப்படிப்பா உனக்கு கிடைச்சுது?” என்று கண்கள் விரிய ஆச்சரியத்தோடு சைக்கிளை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டே கேட்டாள் இளவரசி.

“உனக்குத்தான் ஓட்டத் தெரியாதே. அப்புறம் எதுக்கு சைக்கிள்?” என்று கேட்டான் சங்கர்.

“ஓ அப்போ உனக்கு மட்டும் ஓட்ட தெரியுமா? நான் ஓட்டி பழகிக்குவேன்” என்றாள் மேரி.

“ஏய் எனக்கு ஒரு தடவை குடுக்குறியாப்பா நான் உருட்டிப் பார்த்துட்டு தரேன்”

”போ எலவரசி. நீ கேட்டினா அப்புறம் சங்கர் கேப்பான், அருண் கேப்பான். அன்னக்கொடி கேட்பா. எல்லாருமே கேப்பாங்க. நான் யாருக்குமே தரமாட்டேன். என் சைக்கிளை யாருமே தொடக்கூடாது. எங்க அப்பா எனக்கு நான் மொதமார்க்கு வாங்குனதுக்காக வாங்கி கொடுத்தாங்க” என்று யாரையும் சைக்கிளை தொடாமல் பார்த்துக் கொண்டாள் மேரி.

”நானும் தான் எங்க அப்பாகிட்ட கேட்டிருக்கிறேன். எனக்கும்தான் எங்க அப்பா வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. பாரு நானும் இன்னும் கொஞ்ச நாள்ல சைக்கிள் வாங்கயாறப் போறே” என்று கூறிக் கொண்டே அங்கிருந்து தன் வீட்டை நோக்கி கண்களில் வழிந்த கண்ணீரோடு ஓடினாள் இளவரசி.

நடந்தது எல்லாம் அப்பாவிடம் கூறினாள் இளவரசி.

“நீயும் மொதமார்க்கு வாங்கு. நான் உனக்கு சைக்கிள் வாங்கித் தறேன்” என்றார் அப்பா.

அப்பா அப்படி சொன்னதுக்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் இளவரசியால் ஒருபோதும் முதல் மார்க் எடுக்க முடியாது என்று அப்பாவுக்குத் தெரியும். அது இளவரசிக்கும் தெரியும்.

“அப்பா அப்படியெல்லாம் இல்லப்பா. மொத மார்க் எடுத்தா தான் வாங்கி கொடுக்கணும் அப்படிங்கறது எல்லாம் இல்ல. நான் நிறைய வேலை செய்றேன்ல. வீட்டுல எத்தனை வேலை செய்றேன். அதுக்காக வாங்கி குடுங்கப்பா”

“அதெல்லாம் இல்ல நீ மொத மார்க்கு வாங்கு. அதுக்கு முன்னாடி சைக்கிளை ஓட்டிப் பழகு”

ஓட்டி பழகுறதுக்கு தாங்கப்பா இது பெரிய சைக்கிளா இருக்குது. அதுவும் இல்லாம குறுக்கால கம்பி இருக்குது. அதுக்கு மேல தூக்கி போட்டு ஓட்டுறதுக்கு எனக்கு கால் எட்டாது. கொரங்கு படல் தான்பா ஓட்ட முடியும். இப்பதான் டக் அடிச்சு பழகி இருக்கிறேன். ஓட்டி பழகிருவேன் பா. அதுக்குள்ள நீங்க வாங்கி குடுங்கப்பா. வாங்கி குடுங்கப்பா” என்று அழ ஆரம்பித்தாள் இளவரசி.

“சரி சரி வாங்கிக்கலாம் முதல்ல சைக்கிள் ஓட்டி பழகு” என்று கூறிவிட்டு அவருடைய சைக்கிள் எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு கிளம்பினார்.

அப்பா செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் இளவரசி.

அப்போது அங்கு வந்த இளவரசியின் தாத்தா நடந்ததை எல்லாம் கேட்டறிந்து “எளவரசி கண்ணு நீ அப்பா சைக்கிள்ல ஓட்டிப் பழகு. அப்புறம் இந்த தாத்தா உனக்கு சைக்கிள் வாங்கித் தறேன். சரியா?”

“நெஜமாலுமா தாத்தா? சைக்கிள் வாங்கித் தருவிங்களா?”

“நெசமாலுந்தே. நீ ஓட்டிப் பழகு” என்று தாத்தா கூறிய நாள் முதல் தினமும் மாலை நேரம் பள்ளி விட்டு வந்தவுடன் சைக்கிளை எடுத்து ஓட்டிப் பழக ஆரம்பித்தாள்.

அவள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட ஆறு ஏழு குழந்தைகள் அவளோடு சேர்ந்து சைக்கிள் ஓட்டிப் பழக ஆரம்பித்தார்கள். மேரியுடைய சைக்கிள் சின்ன சைக்கிளாக இருந்த போதும் கூட மேரியை விட மற்றவர்களை விட இளவரசி மிகவும் விரைவாகவே சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாள். மிகுந்த மகிழ்ச்சியோடு குரங்குப் படலை ஒட்டி கற்றுக் கொண்டவுடன், தன் தாத்தாவிடம் சென்று ஓட்டிக் காண்பித்தாள். “கொரங்கு படல் பத்தாது. கம்பிக்கு மேல தூக்கி போட்டு பார்ல ஓட்டிப் பழகு”

“எனக்கு கால் எட்ட மாட்டேங்குது தாத்தா”

“அதெல்லாம் முடியும் ஓட்டு” என்று தாத்தா கூற அதிலும் முயற்சி செய்து ஒரே வாரத்தில் பார்லையும் ஓட்டிப் பழகி விட்டாள்.

அடுத்த வாரம் கண்டிப்பாக சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று தாத்தா கூறியதை கேட்டு கனவில் மிதந்து கொண்டு இருந்தாள் இளவரசி. ஒவ்வொரு முறை மேரியின் சைக்கிளை பார்க்கும் பொழுதும் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த சைக்கிள் ஒரு பட்டாம்பூச்சி போல் அவளுக்குத் தோன்றும். பட்டாம்பூச்சி மேல அமர்ந்து பறந்து செல்வதை போல் இருக்கும். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு சிவப்பு நிற பட்டாம் பூச்சியின் மீது தான் அமர்ந்து சென்று பறந்து கொண்டிருப்பதைப் போல் கனவு காண்பாள்.

மற்றவர்கள் கொரங்கு படலே ஓட்டி பழகாத நிலையில் இளவரசி வேகமாக ஓட்டி பழகியதை பார்த்து அந்த தெருவில் இருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“ஆம்பள பசங்க கூட ஓட்டி பழகுல பாரு. இளவரசி விவரமான புள்ள மட்டும் இல்ல நல்லா சுறுசுறுப்பு சூட்டுகையான புள்ள” என்று இளவரசியைப் புகழ ஆரம்பித்தார்கள்.

பெரும் ஆசையோடும் கனவோடும் அந்த ஞாயிற்றுக்கிழமையே எதிர்பார்த்து காத்திருந்தாள் இளவரசி. அந்த நாளும் வந்தது இன்று சைக்கிள் வரும் என்று ஆசையோடு கூறிவிட்டு தாத்தா இளவரசியின் அப்பாவோடு சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து பேருந்து நிலையத்திற்குக் கிளம்பினார். சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று சொன்ன நாளிலிருந்து தாத்தாவோடே சுற்றித்திரிந்தாள். தாத்தா எது சொன்னாலும் உடனே செய்து முடித்தாள். தாத்தாவிற்கு மட்டுமல்ல. அம்மா எந்த வேலையைச் சொன்னாலும் செய்தாள். அப்பா எந்த வேலையைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சில வேலைகளை ஓடி ஓடிச் செய்து கொண்டிருந்தாள்.

எங்கு சென்றாலும் இதே பேச்சு. பள்ளிக்கூடத்திலும் தெருவில் விளையாடும் நண்பர்களோடும் தனக்கு சைக்கிள் வரப்போகிறது. சிவப்பு சைக்கிள் வரப்போகிறது. நதியா சைக்கிள் வரப்போகிறது என்று தம்பட்டம் அடிக்காத குறை தான்.

சைக்கிள் கடை பெருந்துறையில் இருப்பதால் இருவரும் பஸ்ஸில் சென்று சைக்கிளை எடுத்து வருவதாக கூறிச் சென்றார்கள்.

மாலை 5 மணி ஆனது இன்னும் வரவில்லை. தடமாகத் தடம் பார்த்துக் கொண்டிருந்தாள் இளவரசி. மதிய சாப்பாடு சாப்பிட இளவரசியின் அம்மா அழைத்த போது  சாப்பிடச் செல்லாமல் திண்ணையில் அமர்ந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள். நண்பர்கள் விளையாட அழைத்தபோதும் கூட  விளையாடச் செல்லவில்லை. ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு சைக்கிளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

தூரத்திலிருந்து அப்பாவும் தாத்தாவும் வருவது தெரிந்தது…

-வளரும்.

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *