கீழே விழுந்தவுடன் இளவரசியின் கை கால்கள் உதற ஆரம்பித்தன.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு வாயிலிருந்து நுரை தள்ளியது. அந்த நேரத்தில் ஏதாவது இரும்பை கொடுக்க வேண்டும் என்று தேடும் போது பக்கத்தில் இருந்த நிஞ்சாவை எடுத்து அதிலிருந்து சங்கிலியை இளவரசியின் கைகளை விரித்துப் பிடிக்க வைத்தார்கள்.
மாஸ்டர் துரிதமாக செயல்பட்டார். எல்லோரையும் இளவரசியின் கை கால்களை அழுத்திப் பிடிக்கச் சொன்னார்.
முதலில் விலகி நின்று பயத்தில் இருந்த அனைவரும் இளவரசிக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மாஸ்டர் சொன்னபடி இளவரசியின் அருகில் வந்து கைகால்களைப் பிடித்துக் கொண்டார்கள்.
சற்று நேரத்தில் கை கால்களின் உதறல் நின்றுவிட்டது. சிறிது நேரம் மயக்கத்தில் இருந்த இளவரசி பிறகு கண்விழித்தாள். தனக்கு என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவளை அறைக்கு அழைத்து சென்று சிறிது நேரம் தூங்கி எழுந்து விட்டு வருமாறு கூறிவிட்டு அனைவரும் சென்று விட்டார்கள்.
மேரியை மட்டும் அவளோடு அவளுக்கு துணையாக இருக்குமாறு மாஸ்டர் சொல்லிவிட்டு அவரும் கிளம்பி விட்டார். அப்போது இளவரசி தனக்குத் தூக்கம் வரவில்லை என்று கூறி எழுந்து உட்கார்ந்து மேரியோடு பேச ஆரம்பித்தாள். தனக்கு என்ன நடந்தது என்று மேரியிடம் கேட்டாள். நடந்ததை கூறினாள் மேரி. இளவரசி அழ ஆரம்பித்தாள். இதுவரை தனக்கு அப்படி வந்ததில்லை என்றும் எப்படி திடீரென்று இப்படி வந்தது என்றும் கூறி அழ ஆரம்பித்தாள்.
மேரி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டும் முதுகை தட்டிக் கொடுத்தும் ஆறுதல் கூறினாள். “பயப்படாதே உன்ன இது ஒன்னும் செஞ்சுடாது. தைரியமாக இரு” என்று கூறினாள் மேரி. அந்த வார்த்தைகள் அந்த நேரத்தில் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது இளவரசிக்கு.
“எனக்கு இப்பவே என்ற அம்மாவப் பார்க்கணும் போல இருக்கு. அம்மாவக் கட்டிக்கணும் போல இருக்கு. அப்பாவப் பாக்கணும் போல இருக்கு. அக்காவப் பார்க்கணும் போல இருக்கு. நான் செத்துப் போயிருவேனா? அவங்கள எல்லாம் பாக்காமயே நான் செத்துப் போயிருவனா?” என்று அழுது கொண்டே கேட்டாள் இளவரசி.
“அட இதுக்கெல்லாம் போய் யாராவது செத்துப் போவாங்களா? நாங்க முதல்ல இருந்த ஊரில எங்க ஒருத்தர் இருந்தாரு.பெரியப்பாவுக்கு இப்படித்தான் அடிக்கடி வரும். அவருக்கு வாரத்துல நாலு நாள் வரும். அவருக்கு சின்ன வயசுல இருந்தே இருக்குதாமா. ஆனா அவர் உசுரோட தான இருக்கிறாரு. அவர் செத்துப் போகலையே. இத்தனைக்கும் அவர் வேலைக்கு வெளியில் போயிட்டு வருவாரு. அவர் நிறைய நேரம் பஸ்ல போகும்போது கூட உழுந்திருக்கிறாராம். அதனாலேயே அவரு வண்டி கூட ஓட்றதே இல்லை. சைக்கிளும் கூட ஓட்றது இல்லை. அவரு இன்னும் உசுரோட தான் இருக்கிறாரு. நீ எல்லாம் செத்து போக மாட்ட பயப்படாதே” என்று ஆறுதல் கூறினாள் மேரி.
“ஆனா எனக்கு ரொம்ப அவமானமா இருக்குது. நானெப்புடி மத்தவங்க மூஞ்சில நீ முழிக்கறது”. என்று கூறி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“எனக்குப் புரியவே இல்ல. நீ மத்தவங்க மூஞ்சில முழிக்கிறதுக்கு ஏன் பயப்படுற. நீ ஏதாவது தப்பு பண்ணியா? நீ ஏதாவது திருடினியா? ஏதாவது பொய் சொன்னியா? உன் உடம்புல ஒரு சின்ன வியாதி அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? என்ன பாரு. நான் உன்னைய ஏதாச்சி தப்பா நெனைச்சனா அப்படித்தான் மத்தவங்களும்”
“இல்ல இனிமேல் அவங்க என்ன பரிதாபமாப் பாப்பாங்களே. அந்தப் பரிதாபப் பார்வை எனக்குப் புடிக்காது. இப்பவுமே அதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றாள் இளவரசி.
“அதெல்லாம் ஒன்னும் நடக்காது. நீ பாவமா மூஞ்சிய வச்சுட்டா தான் அப்படி பாப்பாங்க. நீ தைரியமா இருந்தா அட அப்படி நடந்து கூட எவ்வளவு தைரியமா இருக்கா பாரு அப்படின்னு தான் உன்ன நினைப்பாங்க. நீ கொஞ்ச நேரம் படு. நான் போயி தண்ணி வாங்கிட்டு வரேன் தண்ணி குடிச்சிட்டு, உடம்புல சோப்புப் போட்டு கழுவும் போது மனசுக்கும் போட்டு கழுவிட்டு வந்துரு. அங்க நடந்தது எல்லாம் மறந்திரு. ஜம்முன்னு ஒரு குளியல் போட்டுட்டு வா. சண்டைக்குப் போகப் போறோம் சரியா? ஜெயிக்கப் போறோம் விட்ற கூடாது! இன்னைக்கு தான் பைனல் நடக்க போகுது. கட்டாவுல உனக்கும் எனக்கும் தான் பைனல் வரப் போகுது.
நீ இப்படியே இருந்தினா தோத்துத்தாம் போவ. பாத்துடலாமா? மோதிப் பாத்துடலாமா? வரியா நீயா நானானு பாக்கலாமா என் கூட மோத நீ ரெடியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் மேரி.
அவளும் சமாதானம் அடைந்து அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
காலை 10 மணிக்கு அரங்கம் நிறைந்து காணப்பட்டது. காணும் இடங்கள் எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கருப்பும் வெள்ளையுமான சீருடையோடு ஆங்காங்கு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். நிகழ்வு தொடங்குவதாக மைக்கில் அறிவிப்பு செய்தார்கள். எல்லோரும் போட்டி நடக்கும் களத்திற்கு வந்தார்கள். கால் இறுதிப் போட்டியில் எதிராளியின் முன் நின்றாள் இளவரசி. ஏனோ காலையில் நடந்த சம்பவம் அவளுடைய மனதுக்குள் ஏதோ செய்து கொண்டே இருந்தது. எதிரில் இருந்த சிறுமியோடு சண்டையிட்டு ஜெயித்துவிட்டாள் இளவரசி.
அனைவரும் கொண்டாடினார்கள். மாஸ்டர் இளவரசி தனியே அழைத்துச் சென்று “பாத்தயா பயந்துக்கிட்டே இருந்தியே உன்கிட்ட இருகற திறமை யாருகிட்டயும் கெடையாது. உன்கிட்ட இருக்கற மனோபலம் யாருகிட்டயும் கெடையாது. இந்தத் தடவ யாரு என்ன சொன்னாலும் செஞ்சாலும் நீ உன்னோட வெற்றியிலேயே குறியாக இருக்கனும்” என்று கூறினார் அந்த நேரத்தில் இளவரசிக்கு ஒரு மிகப்பெரும் மனோதைரியத்தை இந்த வார்த்தைகள் கொடுத்தன.
மதிய உணவிற்குப் பிறகு இறுதிப் போட்டி என்று அறிவித்திருந்தார்கள். கட்டா போட்டியில் மேரியும் இளவரசியும் இறுதிப் போட்டிக்கு தகுதியாய் இருந்தார்கள்.
மதிய உணவு சாப்பிட்டு முடித்து ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மேரியும் இளவரசியும் பாத்ரூம் செல்வதற்காக எழுந்து சென்றார்கள். அங்கே இவளுடைய வயது சிறுமிகள் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.”அதோ அந்தக் கருப்பு டிரஸ் போட்டுட்டு ரெட்ட ஜடை போட்டு ரிப்பன் வைத்து பின்னி இருக்குல்ல, அந்தப் புள்ள காலையில வலிப்பு வந்து கீழ விழுந்தத நம்ம கூட இருக்கிற சுரேஷ் அண்ணன் பார்த்ததா சொல்லுச்சு. அந்தப் புள்ள தான் உன் கூட பைனல்ல வரப்போகுது. அது வலிப்பு வந்த புள்ள அதனால நீ அதை ஜெயிச்சிடலாம். கவலைப்படாதே!” என்று இளவரசியைக் காட்டி பேசிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
அதைக் கேட்டவுடன் இளவரசிக்கு கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அடக்கிக் கொண்டு அப்படியே திரும்பி வேகமாக ஓடி வந்தாள். ஓடி வந்து மாஸ்டரின் கைகளை பற்றிக் கொண்டவுடன் அனைவரும் அவளைச் சுற்றி நின்று கொண்டார்கள். நடந்ததை கூறினாள் இளவரசி. முட்டிக்கொண்டு வெளியே வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள். இளவரசிக்கு எப்போதுமே யார் முன்னாலும் எதற்காகவும் அழுவது பிடிக்காது. தன்னை அழுமூஞ்சி என்று கூறினால் அதை அவள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
“இதுதான், இந்த நேரம் தான் நீ சரியா இருக்க வேண்டிய நேரம். எப்பவுமே உடல் பலம் அப்படிங்கறது மன வலிமையைப் பொருத்தது. ஒருத்தர் எவ்வளவு தான் உடல் பலமாக இருந்தாலும் அவருடைய மன வலிமையை உடைத்து விட்டால் ஒருபோதும் உடல் வலிமையும் வைத்து வெற்றி பெற முடியாது. உன்னிடம் இருக்கும் உடல் வலிமையை விட உன்னிடம் இருக்கும் மனவலிமை ரொம்ப முக்கியம். அதை உடைச்சுட்டா நீ பயந்துக்குவ. அதனால அப்படிச் சொல்லி இருக்காங்க. தைரியமா இரு உங்கிட்ட இருக்கிற மன வலிமை யார்கிட்டயும் கிடையாது. உன்னால ஜெயிக்க முடியும்” என்று கூறினார் மாஸ்டர்.
எல்லோரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
மதிய உணவிற்கு பிறகு போட்டி ஆரம்பமானது. கட்டா போட்டியில் மேரியைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று இளவரசி முதலிடம் பெற்றாள். மேரிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
சண்டைப் போட்டி ஆரம்பமானது. இளவரசியை எதிர்த்து நின்ற சிறுமி கராத்தேவைச் சேர்ந்தவள். இருவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கிக் கொண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். எதிரில் நின்ற பெண்ணின் சிரிப்பு இளவரசிக்கு ஏளனச் சிரிப்பாகத் தோன்றியது. ஆனாலும் நான் ஜெயிக்கப் போகிறேன் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தாள் இளவரசி.
போட்டி ஆரம்பமானது. இருவரும் மாறிமாறி அடித்துக் கொண்டார்கள். இருவருக்கும் புள்ளிகள் கிடைத்தன. இருவரும் 12 புள்ளிகளில் இருந்தார்கள். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. இன்னும் 30 நொடிகள் என்று நடுவர் கூறினார். எங்கிருந்துதான் அந்த சக்தி இளவரசிக்கு கிடைத்ததோ தெரியவில்லை. நன்றாக ஒரு குதி குதித்து காற்றில் பறந்து பேக்ரவுண்டில் எதிரில் இருந்த சிறுமியின் தலையில் அவளுடைய கால்கள் பட அடித்து விட்டு ஒரு சூழற்று சுழற்றி விட்டு நின்றாள். நேரம் முடியும் தருவாயில் 2 புள்ளிகள் அதிகம் பெற்று இளவரசி முதலிடத்தைப் பெற்றாள். மாஸ்டர் உட்பட அவளுடைய தோழமைகள் அவளுடைய பெயரைச் சொல்லி கத்தியவுடன் அவளுக்கு அவளுடைய கையை உயர்த்தும்போது சாதித்து விட்ட பெருமிதம் கண்களில் ஒளிர்ந்தது இளவரசிக்கு.
போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழா முடிந்தது. பரிசுகளைப் பெற்றுக்கொண்டு பேருந்து நிலையம் வந்தார்கள். ஈரோட்டில் இருந்து அவர்களுடைய ஊருக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும்.
இப்படிப் பேருந்தில் இவ்வளவு தூரம் மேரியோ இளவரசியோ பயணம் செய்தது கிடையாது. அவர்களோடு வந்த யாருமே பயணம் செய்தது கிடையாது. இந்தப் பயணம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாஸ்டர் அவர்களுக்குச் சாப்பிட இரவு உணவு மற்றும் குடிப்பதற்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்தார். அனைவரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.
தன்னால் எல்லாம் முடியும் நான் ஒரு சாகசக்காரி என்ற மனநிலையில் இருந்தாள் இளவரசி.
இவர்களுடைய இருக்கைக்குப் பின்னிருக்கையில் 40 வயது மதிக்கத்தக்க இருவர் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
மேரியும் இளவரசியும் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் 25 மதிக்கத்தக்க வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். பின் சீட்டில் இருந்தவர்கள் அவர்களுடைய கால்களை நீட்டி முன்சீட்டில் இருந்த அந்தப் பெண்மணிக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பெண்மணி இவனுக்கு எல்லாம் அக்கா தங்கச்சி இல்ல போல இருக்கு என்று கூறி காலைத் தூக்கி மேலே வைத்துக் கொண்டார். இளவரசிக்கும் மேரிக்கும் முதலில் இது புரியவில்லை. பிறகு இருக்கையின் இடைவெளியில் கையை விட்டு அந்தப் பெண்ணின் இடுப்பைத் தொட ஆரம்பித்தார்கள். “இவனுங்கள கேக்குறதுக்கு ஆள் இல்லை” என்று தனக்குள்ளே முழுகி கொண்டபோதுதான் இளவரசியும் மேரியும் கவனித்தார்கள்.
இளவரசிக்கும் மேரிக்கும் கோபம் வந்தது. “மாஸ்டர் கிட்ட சொல்லலாமா?” என்று கேட்டாள் மேரி. “ஆமா சொல்லணும்” என்று கூறிவிட்டு அவர்களுக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த ஜோசப்பை அழைத்து மாஸ்டரை ’இங்கு வரச்சொல்’ என்று கூறினாள் இளவரசி. இவர்கள் இருக்கைக்கு நான்கு இருக்கை தள்ளித் தான் மாஸ்டர் அமர்ந்திருந்தார். அடிக்கடி இவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். இளவரசி ஜோசப்பிடம் ஏதோ பேசுவதை கவனித்த மாஸ்டர் அங்கிருந்து வந்தார். “என்ன மேரி என்ன ஆச்சு? இளவரசி என்ன ஆச்சு?” என்று கேட்டார். மாஸ்டர் பக்கத்தில் வந்ததும் இளவரசியும் மேரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அந்த இரண்டு மனிதர்களையும் மாத்தி மாத்தி குத்த ஆரம்பித்தார்கள். மாஸ்டருக்கு எதுவும் புரியவில்லை. “மேரி என்ன ஆச்சு? இளவரசி என்னாச்சு? நிறுத்துங்க” என்றார்.
அதன் பிறகு தான் நடந்ததை கூறினார்கள். பஸ்ஸிலிருந்து அனைவரும் பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுமாறு கூறினார்கள். சிலர் வந்து அடிக்கவும் செய்தார்கள்.
பஸ் திரும்பியது
போலீஸ் ஸ்டேஷனில் அவர்களை ஒப்படைத்துவிட்டு பஸ் மீண்டும் அவர்களுடைய ஊரை நோக்கிக் கிளம்பியது. பஸ்ஸில் இருந்து அனைவரும் மேரியையும் இளவரசியையும் பாராட்டினார்கள். அந்தப் பெண்மணி இவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டு “சின்ன பிள்ளைங்க நீங்க உங்களுக்கு இருந்த தைரியம் கூட எனக்கு வரலையே. எனக்கே வெக்கமா இருக்கு” என்றார். “இனிமேல் இப்படி நடந்தா அடிங்க அக்கா. உங்களால முடியும். உங்ககிட்ட பலம் இருக்கு. இவ்வளவு பேரு சப்போர்ட் பண்ணுவாங்க. தப்பு பண்ணவங்க அவங்க தானே? நீங்கள் இல்லைல. நீங்க எதுக்கு சும்மா போறீங்க. இதெல்லாம் எங்க மாஸ்டர் சொல்லிக் கொடுத்திருக்காரு. தப்பு உங்க மேல இல்லைனா நீங்க தைரியமா எதிர்த்து நிக்கலாம் அது யாரா இருந்தாலும் அப்படின்னு சொல்லி இருக்காரு. நீங்க பேசாம எங்கள மாதிரி குங்ஃபூ க்ளாஸ்ல சேர்ந்துருங்க சரியா!’’ என்று சொன்னவுடன் “இந்த வயசுல கூட சேரலாமா?” என்று கேட்டார். “அக்கா இதுக்கு வயசுல முக்கியம் இல்ல 80 வயது 90 வயசுல கூட சேரலாம். இதனால உடல் வலிமை மட்டும் இல்ல மன வலிமையும் வரும்” என்று சொல்லிட்டு மேரியும் இளவரசியும் மாஸ்டரைப் பார்த்தார்கள். மாஸ்டர் மெதுவாக புன்னகை செய்தார்.
-வளரும்

சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.