” உன்னதம்”
உனக்காக அடைபடும் சன்னல்
செங்கல் அளவு தடை
நினைவில் கொள்
வாசலில் கதவு இருக்கிறது
உன்னிடமிருந்து
பறிக்கப்படும் எழுதுகோல்
படிக்கல் அளவு தடை
நினைவில் கொள்
அறப்போர் இருக்கிறது
உன்னிடமிருந்து
மறைக்கப்படும் உயர்கல்வி
கருங்கல் அளவு தடை
நினைவில் கொள்
நீதிமன்றம் இருக்கிறது
உன்னிடமிருந்து
பிரிக்கப்படும் வேலைவாய்ப்பு
பாறை அளவு தடை
நினைவில் கொள்
வேலை உனது பிறப்புரிமை
வலைகளை
கவனமாக கடந்து போ
சிறகை விரி
பெருமலையை கடக்கும்
உன்னதம்
உன்னுள் உறைந்து கிடப்பதை
கண்டு கொள்வாய்.
***
“பேசும் மௌனம்”
இரு மௌனங்களின்
சந்திப்பில்
இரு மனங்கள்
இணைந்து கொள்வதும்
ஒரு மௌனத்தின்
வெளிப்படுதலில்
ஒரு உறவு
கை விடுவதும்
ஒரு மௌனத்தின்
அரங்கேற்றத்தில்
ஒரு சமரசம்
கை கூடுவதும்
ஒரு மௌனத்தின்
எழும்புதலில்
ஒரு குற்றம்
ஊர்ஜிதமாவதும்
ஒரு மௌனத்தின்
காத்திருப்பில்
ஒரு ஆயுள்
முடிவுக்கு வருவதும்
ஒரு மௌனத்தின்
மெல்லிய பார்வையில்
ஒரு கலவரம்
எட்டிப் பார்ப்பதும்
ஒரு மௌனத்தின்
ஊசலாட்டத்தில்
ஒரு நெருப்புப்பொறி
பற்றிக் கொள்வதும்
ஒரு மௌனத்தின்
இமையசைவில்
ஒரு பெருமழை
நனைத்து விடுவதும்
அப்பப்பா…
அமைதிப் படுத்தும்
சப்தங்களை விட
வீரியமானது
பேசும் மௌனம்.
ஐ.தர்மசிங்
நாகர்கோவில் சொந்த ஊர். ’இலையளவு நிழல்’ என்னும் கவிதைத்தொகுதி முன்பாக வந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.