” அற்ப சந்தோஷம் “.
+++
உதயத்திற்கும்
அஸ்தமனத்திற்கும்
இடைப்பட்ட பயணம் தான்
பிரமிப்பில் ஆழ்த்துகிறது
ஒரு முகம் முத்தமிடும்
ஒரு முகம் முரண்படும்
ஒரு முகம் புன்னகைக்கும்
ஒரு முகம் ரௌத்திரம் காட்டும்
ஒன்றைத் தழுவுவதும்
ஒன்றைக் கை கழுவுவதும்
ஒன்றை சுமப்பதும்
ஒன்றை விலகுவதும்
வருவதும் போவதுமாய்
வரிசைக் கட்டும்
பல சந்திப்புகள்
ரயில் சிநேகமாய்…
இடையில் வந்தவை
இடையில் விலகிவிடும்
வரும் போதும்
தனிமை தான்
போகும் போதும்
தனிமை தான்
வந்து விட்டால்
போகவேண்டும் என்பது
பகலுக்கு பின் இரவு போல
தீர்க்கமானது
” நான் போகவே மாட்டேன்” எனும்
உடல் மொழி காட்டி
தன்னையே
ஏய்த்துக் கொள்ளும்
மனித மனங்களை
என்னவென்பது
போகட்டும்
மரணத்தின் நாழிகை
அறியாத வரை
இந்த அற்ப சந்தோசங்கள்
அழகானவை
***
“நிழல்கள்”
+++
இமைகள் திறந்த
நாள் முதலாய்
அதிசயிக்க வைக்கின்றன
புதிது புதிதாகக் கனவுகள்
சிலவற்றிற்கு
தொட்டில் கட்டுகிறேன்
சிலவற்றிற்கு
கட்டில் போடுகிறேன்
சிலவற்றை
பத்திரப் படுத்துகிறேன்
சிலவற்றை
பரணில் வீசுகிறேன்
சிலவற்றை
சிறிது சிறிதாக சேமிக்கிறேன்
சிலவற்றை
அவசரமாக கலைத்துப் போடுகிறேன்
சிலவற்றை
தலையில் சுமக்கிறேன்
சிலவற்றை
காலடியில் மிதிக்கிறேன்
கட்டியணித்தாலும்
காயப்படுத்தினாலும்
கண்டு கொள்வதில்லை
கனவுகள்
நான் தூங்கும் போது
இமைகளுக்குள்
விழித்திருக்கின்றன
நான் விழித்திருக்கும் போது
மனத்திரையில்
தூங்குகின்றன
நிழல்களின்
அன்புத் தொல்லையில்
அனுதினமும்
ஆடத்தான் செய்கிறேன்
நிஜமாகிய நான் .
ஐ.தர்மசிங்
நாகர்கோவில் சொந்த ஊர். ’இலையளவு நிழல்’ என்னும் கவிதைத்தொகுதி முன்பாக வந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.