நாம் எப்போது நம் மனதுக்குள் கட்டமைத்து வைத்திருக்கும் ஒருவருடைய பிம்பம் உடையுமாறு எழுதப்படும் கட்டுரைகளையோ, கதைகளையோ, புத்தகங்களையோ அவ்வளவு எளிதில் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது, மாட்டோம். இதெல்லாம் அபத்தம் இவன் வேலையில்லாமல் எழுதி வைத்திருக்கிறான் என்று சொல்வோம். அப்படியில்லை என்றால் எழுதியவன் என்ன சாதி, என்ன மதம் எனப் பார்த்து இவன் வேண்டுமென்றே எழுதியிருக்கிறான், இது வரலாறைத் திரிக்கும் வேலை, இவனுகளுக்கு எப்போதும் இதுதான் வேலை எனச் சொல்லி நம் மனதை நாம் சமாதானம் பண்ணிக் கொள்வோம். அதில் இருப்பது உண்மையா, இல்லை பொய்யாகத் திரிக்கப்பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்கவே மாட்டோம், அது நமக்குத் தேவையில்லை என்பதாய்தான் அதைக் கடக்க நினைப்போம்.
சில நாட்களுக்கு முன் வட இந்திய மன்னர்களுக்கு நாம் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் மதிப்பை தென் இந்திய மன்னர்களுக்கு நாம் கொடுக்கவில்லை என்பதை ஒருவர் விரிவான கட்டுரையாக எழுதி இருந்ததை வாசிக்க நேர்ந்தது. அது அவ்வளவும் உண்மையே என்றாலும் நாம் முகலாய மன்னர்களுக்கு கொடுக்கும் இடத்தை நம் சேர, சோழ, பாண்டியர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்பது உண்மையே. இதிலும் சோழர்களைத் தெரிந்த அளவுக்கு நமக்கு பாண்டிய, சேர மன்னர்களைத் தெரியாது என்பதும் உண்மையே. அதேபோல் ஜான்சிராணிக்கு கொடுக்கும் பெரும் மதிப்பு, மரியாதைகளில் பாதி கூட வேலு நாச்சியாருக்குக் கொடுக்க மாட்டோம். வரலாறைத் திரித்து எழுதி, இதுதான் வரலாறு எனக் காட்டியிருப்பவற்றை, இப்போதும் காட்டிக் கொண்டிருப்பவற்றை நாம் உண்மைதான் எனத் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம், கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இன்று பல உண்மையான வரலாறுகளை மறைத்துப் போலியான வரலாறுகளை நம்மை நம்ப வைத்துவிட்டார்கள், நாமும் உண்மை வரலாறை மறந்து போலிகளை உண்மை எனக் கொண்டாடத்தான் செய்கிறோம்.
எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்த போது இதை வாசிப்போமா வேண்டாமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஏனென்றால் நாம் மிகப்பெரிய பிம்பமாக வைத்திருக்கும், ‘யாரைக் கேட்டாய் கிஸ்தி..?’ என சிவாஜி மீசை முறுக்கி, கட்டப்பொம்மன் இப்படித்தான் இருந்திருப்பார் என்ற பிம்பத்தை நமக்குள் உயரமாய் நிறுத்தி வைத்திருக்கும் போது அவரைப் பற்றி இப்படியும் எழுதியிருந்தார்களா..? இதெல்லாம் உண்மையா..? என்ற யோசனை எனக்குள் பலமாக இருந்தது. நான் கூட ‘வரி கொடுக்கா மறவன்’ எனக் கண்ணதாசனைப் பற்றி நான்கு பக்கத்துக்கு அகல் மின்னிதழில் கட்டுரை எழுதியிருக்கிறேன். வெள்ளையனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவன் என்பதை பள்ளியில் வரலாறு பாடத்தில் வாசித்து, அட இவனல்லவா மன்னன் என மகிழ்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட கண்ணதாசனை, நாம் படித்து அறிந்து கொண்டவற்றிற்கு மாறாக இப்படியல்ல… இப்படித்தான் வாழ்ந்தார் எனத் தரவுகளுடன் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றால், அதுவும் நம்ம ஊருக்கார எழுத்தாளர் எழுதியிருக்கிறார் என்றால், என்னதான் இருக்கு என வாசிக்க ஆரம்பித்து ஒரே நாளில் வாசித்து முடித்தேன்.
கண்ணதாசன் தன் சுயசரிதை என எழுதிய வனவாசத்தில் பல பேரைப் பற்றிக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார். அதை அபத்தம், குடிகாரனின் எழுத்து என்றெல்லாம் சொன்னவர்கள், சொல்பவர்கள்தானே நாம். அதில் ஒரு தினப் பத்திரிக்கையில் ம.பொ.சி. அவர்கள் எழுதிய கட்டுரையில் ‘பண்டைக்கால தமிழர்களின் திருமணங்களில் தாலி கட்டும் பழக்கம் இருந்தது’ என்றும், ‘அது தொன்று தொட்டு வரும் மரபு’ என்றும், ‘தாலி எதற்கு என்று கேட்கும் சீர்திருத்தவாதிகள் தமிழே படிக்காத மூடர்கள்’ என்றும் எழுதியதற்கு கண்ணதாசன் அவர்கள், பண்டைக் காலத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லை என்பதனை நிரூபிக்க எத்தனை புத்தகங்கள், எத்தனை தேடல்கள் செய்து ஒரு சிறப்பான கட்டுரை எழுதியிருப்பார் தெரியுமா..?. ஒன்று தவறென ஒருவர் சொல்லும் போது, அதுவும் ம.பொ.சி. போன்ற தமிழறிஞர்கள் சொல்லும்போது தமிழ்ச் சமூகம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் என்றாலும் இது அபத்தம், இதில் தவறுள்ளது என மனதுக்குள் தோன்றியதும் நீ யாராக வேண்டுமானாலும் இரு, உன் கட்டுரையில் சொல்லியிருப்பது தவறு என்பதை நிரூபிப்பேன் எனக் கண்ணதாசனின் தேடலை, அது தவறு என நிரூபித்தததை வனவாசம் வாசித்தவர்கள் அறிவார்கள்.
அதேபோல்தான் இதிலும் கட்டபொம்மன் கொள்ளக்காரன் என்பதை நிரூபிக்க, ஏதோ பத்தோடு பதினொன்றாக எழுதிச் செல்லாமல் நிறைய ஆய்வுகள், வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்தவை, அவர்களின் கடிதங்கள், திருநெல்வேலி பகுதி மக்களின் நாட்டுப்புற பாடல்கள், பல பெரியவர்கள் சொன்னவை எனப் பலவற்றை ஆதாரமாக வைத்துத்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஏதோ கேட்டவற்றை வைத்து தானே தனக்குத் தோன்றியது போல் சமைத்து இதுதான் வரலாற்றுச் சாம்பார் எனக் கொடுக்கப்படவில்லை. இதற்கான அழுத்தமான காரணங்களை ஆராய்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. இதை வாசித்து முடிக்கும் போது முடிவு உங்கள் கையில் எனச் சொல்லியிருப்பதையும் காணலாம்.
இருபத்தியோராண்டுகளுக்கு முன்னர் அண்ணல் காந்தியடிகளின் ஆணை வழி ‘வெள்ளையனே வெளியேறு’ என விடுதலை வேட்கையுடன் மக்கள் வீறு கொண்டெழுந்த ஆகஸ்ட் புரட்சியின் போது மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நான் சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘வெள்ளயனே வெளியேறு’ என்று சினிமாக் கொட்டகையில் ஆவேசத்தோடு பேசிக் கொண்டிருந்தேன் என்று ஆரம்பித்து, அதன்பின் காவல்துறையின் கைது நடவடிக்கைக்குப் பயந்து அன்றிரவே குற்றாலத்தில் இருந்த குடும்ப நண்பரான முதியவரின் வீட்டுக்குப் போக, அங்கு தங்கியிருந்த நாட்களில் அங்கிருந்த புத்தகங்களில் கட்டப்பொம்மனுக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்து, நமது கட்டப்பொம்மனை இப்படித் தவறாக எழுதியிருக்கிறார்களே எனக் கோபம் கொண்டு அந்தப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட, அந்தப் பெரியவரோ ‘உளக்கொதிப்பில் நீ உன் அறிவை இழந்துவிட்டாய். என் புத்தகத்தை நீ எப்படிக் கிழிக்கலாம்..?’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்து ‘அந்த மாற்றுக் கருத்தை நாம் அமைதியுடன் ஆராய வேண்டும்’, ‘எதையும் விருப்பு வெறுப்பின்றி எழுதப் பழகு. இது கொள்ளத்தக்கது, இது தள்ளத்தக்கது என பகுத்துணர்ந்து, அதை அச்சமின்றி எடுத்துச் சொல்லிக் கொண்டேயிரு’ எனச் சொன்னதாய், தன்னை முன் வைத்து இந்தப் புத்தகத்தின் ஆரம்பக்கங்களை ஆரம்பிக்கிறார் நிரப்பியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்வாணன்.
1942-ஆம் ஆண்டு முதல் கட்டப்பொம்மனைப் பற்றி வாசிக்க ஆரம்பிக்கும் தமிழ்வாணனிடம் ‘கட்டப்பொம்மன் கொள்ளைக்காரன், தமிழர்களுக்கு தனிப்பெரும் தீங்கிழைத்தவன்’ என ஒரு நண்பர் சொல்ல, அதற்கென்ன ஆதாரமிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலாய் ‘திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம்’ என்னும் நூல் இருக்கிறது அதை படித்துப்பாருங்கள், அதில் கட்டப்பொம்மன் பற்றி மறைக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றதுடன், இந்தநூலை ஒரு வெள்ளையன் எழுதவில்லை, குருகுகதாசப்பிள்ளை என்னும் தமிழர்தான் எழுதியிருக்கிறார் என்று சொல்ல, அது எங்கே கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு போய் நின்றபோது, இப்போது அந்த நூல் எங்களிடம் இல்லை, திரு.வி.க.விடம் போய் கேளுங்கள். அவரிடம் நாங்கள் எல்லாப் பிரதியையும் கொடுத்துவிட்டோம்’ என்ற பதில் வருகிறது.
தமிழ்வாணனுக்கும் திரு.வி.க.வுக்கும் தந்தை மகன் போன்றதொரு உறவு என்பதால் கட்டப்பொம்மனைப் பற்றி வாசித்ததையெல்லாம் அவரிடம் சொல்ல, அவரோ கட்டப்பொம்மனைப் பழிக்கும் சரித்திரத்தை நான் கொஞ்சம் படித்திருந்தாலும் எனது தமிழ் ஆராய்ச்சி காரணமாக என்னால் அதில் கவனம் செலுத்த இயலவில்லை. நீ உடன்பாடாக உள்ளவை, இல்லாதவை என இரண்டையும் வாசி. கட்டப்பொம்மன் பற்றி வந்தவைகளை விடுத்து வராதவைகளை எடுத்து மக்கள் முன்வை. அவர்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் அவர்கள் விருப்பப்படி எடுத்துக் கொள்ளட்டும்’ என்று சொல்கிறார். உடனே ‘திருநெல்வேலி சீமைச் சரித்திரம்’ நூலைப் படிக்கத் தரவேண்டும் எனக் கேட்க, அவர் நாராயணசாமியிடம் கேட்டு வாங்கிக் கொள் எனச் சொல்ல, அதை நாராயணசாமியால் தேடி எடுத்துக் கொடுக்க இயலாமல் போகிறது.
ஏ.கே செட்டியார் மற்றும் ஏ.கே. கோபாலன் மூலமாக எஸ் வையாபுரிப் பிள்ளை என்பவரைச் சந்திக்கிறார். அவரிடம் சொன்னதும் ‘நான் ஆராய்ந்து பார்க்காமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது’ என்று சொல்லி தமிழ்வாணனின் ஆய்வை வாங்கிக் கொள்கிறார். அதன் பிறகு அவர் திருவனந்தபுரம் போயிவிட, இறுதிவரை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அதன்பின் அடையாறைச் சேர்ந்த பேராசியரிடரிம் தனது ஆய்வைப் பற்றிச் சொல்ல ‘கட்டபொம்மன் தெலுங்கன்தான், ஆராய்ச்சி அவன் கொள்ளைகாரன் என்று சொல்லுகிறது. அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் சொல்ல இந்த நேரத்தில் யாருக்கு துணிவிருக்கு. கட்டபொம்மனை வீரபாண்டியன் ஆக்கியபிறகு அவனைக் கொள்ளைக்காரன் என்று சொல்வது தேவையற்றது. பல ஆண்டுகள் பாடுபட்டு நிலை நிறுத்திய ஒரு வீரனின் புகழை ஏன் பாழ்படுத்த வேண்டும்’ என்று சொல்ல இது வேலைக்காகாது என அங்கிருந்து வந்துவிட்டாலும் தனது ஆராய்ச்சியை இன்னும் தீவிரப்படுத்துகிறார் தமிழ்வாணன்.

ம.பொ.சியோடு நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட போது, அவர் கட்டபொம்மன் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக பேச இயலாமல் போகிறது. அந்த நேரத்தில்தான் சிவாஜியின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைக்கு வருகிறது. அது முழுக்க முழுக்க தவறான சரித்திரம், மக்களிடம் போய் சேர ஆரம்பிக்கும் போது கல்கண்டு இதழுக்கு வரும் வாசகர் கடிதங்களில் கட்டபொம்மன் குறித்த கேள்விகள் வர, தமிழ்வாணன் தனது ஆராய்ச்சியில் கண்டவற்றை வைத்துப் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். நாடே நல்லவன் என்று சொல்லும் ஒருவனை தான் மட்டுமே தவறானவன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த வேளையில், கட்டபொம்மனுக்கு விரோதமாக ஒருவர் எழுத, ‘இந்த நேரத்தில் கட்டபொம்மனைக் கொள்ளைக்காரன் என்று எவனாவது சொன்னால் அவனைக் குத்திக் கிழித்து விடுவார்கள் மக்கள்’ என்று ம.பொ.சி. கோபமாய் சொல்லியிருக்கிறார். உடனே ‘எதையும் பகுத்தாய்ந்து பார்க்கும் திறன் கொண்டவர்கள் நம் மக்கள் என்பதை ம.பொ.சிக்கு காட்டுவோம்’ எனக் கண்ணதாசன் குறித்த தேடலில் தீவிரமாய் இறங்குகிறார் தமிழ்வாணன்.
இதன்பிறகு இந்த நூலில், பாண்டி நாடு ஐம்பத்திரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு ‘கூற்றங்கள்’ எனப் பெயரிடுதலில் ஆரம்பித்து, விசுவநாத நாயக்கனை எதிர்த்து வீமணன், செகவீரபாண்டியன் உள்ளிட்ட ஐந்து பாண்டியர்கள் – பஞ்ச பாண்டவர்கள் – படையெடுத்து வந்தார்கள். இவர்களுக்குத் துணை நின்ற மறவர்களை எல்லாம் ஒன்று கூட்டி, வீர வசனம் பேசி அவர்களைத் தன் பக்கம் திருப்பி, தான் மறவர்களின் தலைவனாய் அரியநாதன் மாறி நின்றபோதுதான் பாளையங்கள் தோன்றின என்பதை விளக்கி, அப்படி உருவான மறவர் தமிழ் பாளையங்கள் 16 பற்றியும், அவை எப்படி விசுவநாத நாயக்கனால் 51 பாளையங்களாக – பெரும்பாலும் கம்பளத்துப் பாளையங்களாக – மாற்றப்பட்டன என்பதையும், அதில் பாஞ்சாலங்குறிச்சியே இல்லை என்பதையும் விபரமாக விளக்கி எழுதியிருக்கிறார். மேலும் கெட்டிப்பொம்முவின் 47வது பரம்பரை, 600 ஆண்டுகால ஆட்சி என்று கதை கட்டி எழுதப்பட்ட வரலாறுகளை கேலியும் செய்திருக்கிறார்.
இளம்பஞ்ச வழுதிப் பாண்டியன் வீரமரணம் எய்தி வீழ்ந்த இடம், காட்டிக் கொடுத்த கட்ட பிரமையாவுக்கு – கட்டபொம்மன் பரம்பரையைத் தொடங்கி வைத்தவர் – கிடைத்தது என்பதை மிக விரிவாக எழுதி, அப்படிப் பெறப்பட்டு, உருவாகப்பட்ட பாஞ்சாலங்குறிச்சியின் பாளையத்தின் பாளையக்காரன் அந்தஸ்த்தை, 1709-ஆம் ஆண்டில் கட்டபிரமையா என்ற கெட்டி பொம்முநாயக்கன் பெற்றதையும், அந்தப் பரம்பரையின் ஆட்சி அந்த நூற்றாண்டியின் இறுதியிலேயே முடிவுக்கு வந்து விட்டது என்பதையும், தெலுங்குப் பாளைய மக்கள் கும்பிட்ட ஜக்கம்மாவுக்கு பாளையங்கோட்டையில் ஒரு கோவில் கட்டி, அதற்குத் தன்னைத்தானே தலைமைப் பூசாரியாக கட்டபிரமையா ஆக்கிக் கொண்டதையும், அந்த ஜக்கம்மாவே அந்தப் பரம்பரையைத் தூக்கி விட்டதையும், அவர்களின் கொள்ளை செயலையும், கொடுங்குணங்களையும் அதுதான் மறைத்து நின்றது என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார்.
இதன் பின் திருநெல்வேலிக்கு வரும் முதல் ஆங்கிலேயன் இன்னிஸ் துரையில் – திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (பக்.45) – ஆரம்பித்து, ஆங்கிலேயர்களின் முதலாம் படையெடுப்பு கட்டபொம்மன் காலத்தில்தான் நிகழ்ந்தது எனவும், அவனே வெள்ளையருக்கு எதிராய் முதல் குரல் கொடுத்தான் எனவும் ம.பொ.சி. திரித்து எழுதியதை தனது ஆய்வின் மூலமாக உடைத்து, பொல்லாப் பாண்டியன் காலத்தில் முதல் படையெடுப்பு நிகழ்ந்ததையும், வெள்ளையனுக்கு எதிராய் வரி கொடுக்க முடியாது என முதல் குரல் கொடுத்தவன் புலித்தேவன் என்பதையும் விரிவாக, தக்க ஆதாரங்களுடன் நம் முன் வைக்கிறார். இந்த வரலாறை விரிக்கும் போது பல ஆங்கிலேய அதிகாரிகள், கலெக்டர்கள் என அவர்களுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையில் நிகழ்ந்தவற்றை ஆதாரத்துடன் விளக்குகிறார்.
கட்டபொம்மன் கொள்ளை அடித்ததையும், மற்ற பாளையக்காரர்களிடம் வரி வாங்கி, அதை வெள்ளைக்காரனிடம் கொடுக்காமல் ஏய்த்ததையும், சேத்தூர் பாளையக்காரரை அவரின் மகனுக்காக படுகொலை செய்ததையும், வரி பாக்கியை வசூலிக்க எவ்வளவோ பிரயாசைப்பட்ட ஜாக்சன் துரைக்கு தண்ணி காட்டியதையும், 1798 – ஜனவரி 30-ம் தேதி கட்டபொம்மன் நிகழ்த்திய ஆழ்வார் திருநகரி திருவிழா கொள்ளையையும், அதன் பின் அவனுக்கு ஏற்பட்ட இறங்குமுகத்தையும் தான் தேடித்தேடி வாசித்த நூல்களை வைத்தும், வெள்ளையர்கள் எழுதி வைத்த குறிப்புகள், கடிதங்கள் மூலமாகவும் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்.
புலித்தேவனின் வாசுதேவநல்லூர் போர் தமிழக மக்கள் உண்மையிலேயே பெருமைப்படக்கூடிய ஒரு வீர காவியமாகும் அதைப்பற்றி விரிவாக எழுத இந்நூல் போதாது எனச் சொல்லி, கும்பினி கவர்னருக்கு கர்னல் காம்பெல் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைப் பகிர்ந்திருக்கிறார். அதில் காம்பெல் மறவர்களின் வீரத்தை, ‘நாகரீகம் குறைந்தவர்கள் என்று நம்மால் கருதப்படுகிற தமிழ் மறவர்களின் வீரம், நம் ஐரோப்பியர்களின் வீரத்துக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல!’ என வியந்து எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் எழும்பூர் பதிவேடு அலுவலகத்தில் இப்போதும் இருப்பாதாய்ச் சொல்லியிருக்கிறார். இந்தப் போரில் புலித்தேவனும் அவருக்குத் துணை நின்றவர்களும் வீரமரணம் அடைகிறார்கள்.
இதன் பின் கட்டபொம்மன் பரம்பரை எப்படி வளர்ந்தது..? மக்களுக்கு என்ன செய்தார்கள்…? கட்டபொம்மன் எப்படி தன்னை வளர்த்துக் கொண்டார்..? அவருக்கு எப்போது போதாத காலம் ஏற்பட்டது..? எதனால்… யாரால்… அது ஏற்பட்டது என்பதை எல்லாம் மிக விரிவாகச் சொல்லிக் கொண்டே போகிறார். இவ்வளவு தேடுதலும், இத்தனை ஆராய்ச்சி ஒரு மனிதன் செய்ய முடியுமா..? என்ற ஆச்சர்யம் நமக்கு எழுந்தாலும் வாசிக்க வாசிக்க கட்டபொம்மன் குறித்த நமது வீரக்கோட்டை நொறுக்கிக் கொண்டே போகிறது. இறுதிவரை நமக்கு அத்தனை ஆச்சர்யமான செய்திகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தமிழ்வாணன்.
3-2-1798 முதல் கடிதம், 28-4-1798 – இரண்டாம் கடிதம், 23-5-1798 – மூன்றாவது கடிதம் என வரி பாக்கி விசயமாகத் தன்னை வந்து சந்திக்கும்படி கலெக்டரிடம் இருந்து கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அவற்றுக்கு எல்லாம் செவிசாய்க்காமல் இருந்து பிரச்சினை வருமெனத் தெரிந்த பின்னரே கலெக்டரைச் சந்திக்கி முயல, அவரோ உடனே பார்க்காமல் அலைய விடுகிறார். குற்றாலம், சொக்கம்பட்டி, சேத்தூர் – சிவகிரி, சிரிவில்லிபுத்தூர், பவா, பள்ளிமடை, கமுதி எனக் கலெக்டர் பயணிக்கும் இடமெல்லாம் கட்டபொம்மனும் பின் தொடர்ந்து சென்றாலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. முடிவாக செப்டெம்பர் -9 அன்றுதான் சந்திப்பு நடக்கிறது. அதன் பின் நடக்கும் நிகழ்வுகள், ஊமைத்துரை திருமணம், தானாபதி சுப்பிரமணியபிள்ளை மகன் வெள்ளைச்சாமி திருமணம், நெல் வாங்குவது போல் சென்று கொள்ளையிடுதல், இராமநாதபுரத்தில் கலெக்டரைச் சந்திக்கச் செல்லும் போது நடக்கும் சண்டை, கலெக்டர் மாற்றம், கட்டபொம்மனின் ஓட்டம், சிவகங்கைச்சீமை திருக்களம்பூருக்கு மேற்கே காட்டுக்குள் பதுங்கி இருந்தல், புதுக்கோட்டை மன்னர் தொண்டைமானுக்கு நெருக்கமான சர்தார் முத்து வைரவ அம்பலக்காரர் காட்டுக்குள் இருப்பவர்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தல், 1799 – அக் 16, தனது 39வது வயதில் திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் புளியமரம் ஒன்றில் கட்டபொம்மன் தூக்கிலிடப்படுதல் வரை இந்த நூல் ஆதாரங்களை வைத்தே எழுதப்பட்டுள்ளது.
கட்டபொம்மனின் சகோதர்கள் குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைசிங்கம் பற்றியும் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததாய் சொல்லப்படும் எட்டப்பன் வகையறாவின் ஆரம்பம், அவர்களுக்கும் கட்டபொம்மன் வகையறாவுக்கும் தொடர்ந்து வந்த பகை பற்றியும் சொல்லியிருக்கிறார். மேலும் தெலுங்கரான கட்டப்பொம்மன் பரம்பரையினர் தங்கள் பெயரில் எப்படி வீரபாண்டியன் எனச் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.
கட்டபொம்மனுக்கு பெரும் ஆதரவாய், வரலாற்றையே மாற்றி எழுதிய ம.பொ.சி மீது தமிழ்வாணனுக்குப் பெரும் கோபம் இருந்தது என்பதை கட்டபொம்மனைப் பற்றி ஆரம்பத்தில் சொல்ல ஆரம்பிக்கும் போதே ம.பொ.சி. கட்டபொம்மன் என்று சொல்லும் போதே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் ம.பொ.சியின் கருத்துப்படி கட்டபொம்மன் 1780-ம் ஆண்டுதான் பிறந்து 39 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால் 1818-ம் ஆண்டு மறைந்த ஆண்டாக இருக்க வேண்டும், ஆனால் 1799-ம் ஆண்டு மறைந்தான் என்று சொல்லப்படுவதையும் வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வுக்கு விட்டுவிடுவோம் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஒருவன் வெள்ளையனை எதிர்த்தான் அல்லது அவர்களால் வீழ்ச்சியுற்றான் என்பதால் அவனுக்கு நாம் விடுதலை வீரன் எனப் பட்டம் சூட்ட முற்பட்டால், விருப்பு வெறுப்பற்ற சரித்திர ஆராய்ச்சி என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும், வீரமாய் எதிர்த்து தன் இரத்தத்தையும் மாற்றானின் ரத்தத்தையும் இந்த மண்ணில் ஓட விட்ட வீரனையும், தான் செய்த தீவினைகளால் தூக்குக்கயிறுக்கு உயிர் நீத்தவனையும் பற்றி நாம் தகுந்த ஆதாரங்களுடன் பார்த்தோம். இவ்விருவரில் யார் உண்மையான விடுதலை வீரன், யார் கொள்ளைக்காரன் என்பதை பகுத்தாய்ந்து மக்களே தீர்ப்புச் சொல்லட்டும் என இந்நூலை முடித்திருக்கிறார் என்றாலும் இதை வாசித்து முடிக்கும் போது நமக்குள் கட்டபொம்மன் பிம்பம் சரிந்து புலித்தேவன் உயர்ந்து நிற்பதைக் காணலாம்.
தமிழ்வாணன் தனது ஆய்வின்படி கட்டபொம்மன் பரம்பரை ஆட்சி செய்த காலங்களைச் சொல்லியிருக்கிறார், இதில் கட்டபொம்மனை ம.பொ.சி. கட்டபொம்மன் எனச் சொல்லி இருப்பதைக் காணலாம். இந்த நூலில் கட்டபொம்மனை ஒரு இடத்தில் கூட மரியாதையாக எழுதவே இல்லை, ஆரம்பத்தில் எனது கட்டபொம்மன் என மனதுள் தூக்கி வைத்திருந்தவர் தனது தேடலின் மூலம் அவரின் மறுபக்கத்தைக் கண்டதனால் புத்தகம் முழுவதுமே ‘ன்’ விகுதியில்தான் எழுதியிருக்கிறார்.
1. கட்ட பிரமையா – குல முதல்வன்.
2. கட்ட பிரமையா என்ற முதலாம் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் – கொள்ளுப்பாட்டான் (1709 – 1736)
3. பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் – பாட்டன் (1736 – 1760)
4. இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் – தந்தை (1760 – 1790)
5. வீரபாண்டிய கட்டபொம்மன் – ம.பொ.சி. கட்டபொம்மன் (1760 – 1799)
கட்டபொம்மன் மீது நமக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கலாம், கட்டபொம்மன் என்றதும் சிவாஜியின் முகம் மனதுக்குள் மலர்ந்து வெள்ளையனை எதிர்த்துக் கர்ஜிக்கலாம் என்றாலும் ஆதாரங்களுடன் சொல்லும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். இதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் நம் விருப்பமே.
இப்படி எழுதுவதற்கும், இதை வெளியிடுவதற்கும் உண்மையிலேயே தைரியம் வேண்டும். இப்போதெல்லாம் உண்மையைச் சொல்லும் சினிமாவைக் கூட வரவிட மாட்டேன் என்கிறார்கள் நம் அரசியல்வாதிகள், இதுபோன்ற புத்தகத்துக்கு சத்தியமாக வாய்ப்பே இல்லை. புகழ் பாடும் புத்தகங்களுக்கு மட்டுமே இன்று மாலைகள் விழும். துப்பறியும் நாவல்கள் எழுதிய தமிழ்வாணனைத்தான் வாசித்திருக்கிறேன். இப்படி ஒரு ஆராய்ச்சி நூலை அவர் எழுதியிருக்கிறார் என்பது கூட எனக்கு வியப்புத்தான். இந்தப் புத்தகம் வெளியானபோது சர்ச்சைகள் கண்டிப்பாக இருந்திருக்கும்.
இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டிருந்தது என இணையத்தில் சொல்லப்பட்டுள்ளது, இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நூல் 1965-ல் வெளிவந்துள்ளது. அதன் பின் 2010, 2014 ஆண்டுகளில் மணிமேகலை பிரசுரத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த நூல் மீது தடை இருந்திருந்தால் அது நீக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது இது குறித்து விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் அறிந்து கொள்ளலாம்.
கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!
தமிழ்வாணன்
விலை ரூ. 100
பக்கங்கள் : iv + 220 = 224
மணிமேகலை பிரசுரம்

பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.