- குலச்சாமிகள்
ஊர் சனங்கள்
கும்பிடும் குலச்சாமிகளின்
பெயரை….
தாத்தா
அப்பா
நானென்று அனைவருமே
வைத்திருக்கிறோம்…
மெத்தை
வீட்டிலுள்ளவர்களோ-தங்கள்
பிள்ளைகளுக்கு
பணக்காரக் கடவுள்களின்
பெயர்களைச் சூட்டி
தெய்வமாகவே
கொண்டாடுகிறார்கள்…
எல்லோருக்கும் பொதுவான
குலச்சாமியின் பெயரை வைத்த
எங்களை ஏனோ
சக ஜீவனாகக்கூட
நினைக்காமல்
வீட்டுக்கு வெளியிலேயே
நிற்க வைத்த பொழுதுதான்
யோசனை வருகிறது
எங்களின் பிள்ளைகளுக்கும்
எங்களுக்கும் அதே
கடவுள்களின் பெயரைச்
சூட்டலாமென்று…
–
2. நாத்திகம்
சடங்கு சம்பிரதாயங்களை
முற்றிலும் தவிர்த்திடும்
முற்போக்குத் தோழனின்
வீட்டுக்குள் கணத்த
இதயத்தோடு நுழைகிறேன்…
ஊதுபத்தி வாசம் நிறைந்த
அறையில் சிதறிய
பூக்களின் நடுவே கண்ணாடிப்பேழைக்குள்
தோழனின் அப்பா
நிரந்தர உறக்கத்தில்….
அருகிலேயே கண்ணீர்த்துளிகளின்
விசும்பல்களோடு
வெளியேறிய மனம்
இத்தனை நாட்களாய்
தவிர்த்த சடங்குகளையும்
சம்பிரதாயங்களையும்
தவிர்க்காமல் செய்கிறது
ஆன்மீகத்தில் பழுத்து உதிர்ந்த
அப்பாவின்
கடைசி ஊர்வலத்தில்….
–
- ஆசிரியை
பல முறை கண்டித்தும்
எதையும் பொருட்படுத்தாது
கண்ணாமூச்சி விளையாடாத போதும்
அடிக்கடி காணாமல் போய்
ஒளிந்து கொள்ளும் பொம்மைகளை
கையில் பிரம்போடு பயமுறுத்துகிறாள்
எதையும் காதில் வாங்காமல்
ஆரவாரம் செய்யும்
சிறு பிள்ளைகள் போலில்லாமல்
அமைதியாகவேயிருக்கும் அவைகளிடம்
சைலண்ட் ப்ளீஸ் என்ற
வார்த்தையை உச்சரித்து
கொஞ்ச நேரம் ஆசிரியையாகுகிறாள்
பள்ளிச்சீருடை கலையாத
சிறுமி.
4.குறை
மருத்துவ அறிக்கையில்
கால்சியம் குறைபாடு
முருங்கை மரத்தில் மேய்கிறது
கம்பளிப்பூச்சிகள்
–
5.தேர்தல் யானை
தேர்தல் சமயங்களில்
ஓட்டுக்கேட்டு
வீட்டுச் சுவர்களில்
நிற்கும் யானைகள்
பண்டிகைக்கு பூசும்
சுண்ணாம்பு கரைசலால்
காடு நோக்கி ஓடி
பிளிரும் சத்தத்தோடு
பெரும் காதுகளை அசைத்து
கண்ணில் -தென் படுவதையெல்லாம்
தும்பிக்கையால்
துவம்சம் செய்து
மீண்டும் ஊருக்குள் நுழைகிறது
தேர்தலுக்குப் பின்
அரங்கேறிய ஊழலால்
எதுவுமேயில்லாமல் போன
ஊருக்குள்…
–
6.குளம்
நிரம்பித் ததும்பும்
ஊர்க்குளத்தில்
கல்லெறிந்தவன்
பாழாக்கியவன்
தூர் வாரியவனென
யாருடைய முகப் பாகுபாடுமின்றி
எல்லோருக்குமே தாகம் தணிக்கிறது
யார் பெயரும் எழுதாத
மழையால்….
++
கோவை ஆனந்தன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1981 ஏப்ரல் 22 ல் பிறந்துள்ளார்,ஆரம்பகால கல்வியை அவரது கிராமத்திலும், கிணத்துக்கடவு அரசுப்பள்ளியிலும் பயின்றார், பிறகு கோவையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் துறையில் தொழிற்கல்வி முடித்துள்ளார்.தற்போது தனியார் நிறுவனத்தில் பணியிலுள்ளார்.
ஆரம்பத்தில் வெகு சாதாரணமாக எழுத ஆரம்பித்தவர், 2003 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதைக்காக, கலாம் அவர்கள் அனுப்பிய பதில் கடிதம் பெரும் ஊக்கமாக அமைந்தததினால் பல்வேறு சிற்றிதழ்கள் மற்றும் அச்சுஇதழ்களில் (இளையவேர்கள், குடும்பநாவல் உட்பட) எழுதியவர், 2005 ஆம் ஆண்டில் பாக்யா வார இதழில் தொடர்ந்து ஓராண்டு காலம் பல்வேறு சிறுகதைகள் எழுதியுள்ளார்.
குமுதம், பாக்யா,மகாகவி,இனிய உதயம், கனவு, கொலுசு, கவிதை உறவு, புன்னகை,காற்றுவெளி,தமிழ்நெஞ்சம், ஹைக்கூ திண்ணை,தூண்டில் (ஹைக்கூ மாநாட்டு சிறப்பு மலர் 2024)தன்னம்பிக்கை, போன்ற அச்சு இதழ்களிலும்,
நடுகல்,புக்டே, கதவு,கவிச்சூரியன், பொற்றாமரை,அகரமுதல, தாய்த்தமிழ்,சுவாசம், நுட்பம், பதாகை, வாசகசாலை, வானவில், வான்மதி உட்பட இன்னும் பல மின்னிதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன,
சில கவிதைகளும், சிறுகதைகளும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.