1.

இரத்தக் காயத்தோடு

திசைகளைத் தொலைத்து

நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம்

எப்படி புரியவைப்பேன்

நானும் உயிர் பயத்தில் திரிபவன்தானென்று…

2.

வனத்தை ஆக்கிரமிப்பதற்கு

முன்னதாகவே

பணக் கட்டுகளின் வாசனைக்கு வசமாவதை

பழக்கப்படுத்திவிட்டோம்

திருமண மண்டபங்கள் தோறும்

தும்பிக்கையோடு அசையும்

யானைகளை…

3.

கரன்சிகளின்

மதிப்பறியாத கோவில் யானையின் முன்

வரிசையில் நிற்கும்

அத்தனை பேரும்

ரூபாய் தாள்களால் அபிஷேகம் செய்கின்றனர்

மீதமிருக்கும்

காட்டினை ஆக்கிரமிப்பதற்கான

ஆசிர்வாதத்திற்கு…..

4.

பல தடவை எடுத்துரைத்தும்

அழகுச் செடிகள்தானென்று

பிடிவாதத்தோடு

முற்செடிகளை வளர்ப்பவர்களிடம் பேச

என்ன இருக்கிறது

ஆமாமென்று ஆமோதிப்பதைத் தவிர…

5.

ஒரு மரத்தை

சுவற்றில் வரைவது

பெரும் குற்றமென்று!

இப்போதுவரை -யாரும்

ஒப்புக் கொள்ளவில்லை

அசலென நம்பி

ஏமாந்த பறவைகளைத் தவிர…

00

கோவை ஆனந்தன்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1981 ஏப்ரல் 22 ல் பிறந்துள்ளார்,ஆரம்பகால கல்வியை அவரது கிராமத்திலும்,  கிணத்துக்கடவு அரசுப்பள்ளியிலும் பயின்றார், பிறகு கோவையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் துறையில் தொழிற்கல்வி முடித்துள்ளார்.தற்போது தனியார் நிறுவனத்தில் பணியிலுள்ளார்.

நடுகல்,புக்டே, கதவு,கவிச்சூரியன், பொற்றாமரை,அகரமுதல, தாய்த்தமிழ்,சுவாசம், நுட்பம், பதாகை, வாசகசாலை, வானவில், வான்மதி உட்பட இன்னும் பல மின்னிதழ்களிலும்  இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *