நெற்குப்பை என்ற அழகான சிறிய கிராமத்தில் ஆறாவது படிக்கும் பப்பிமாவும் அவளின் அப்பா அம்மாவும் தம்பியும் இருந்தார்கள்.

அவளுடைய வீட்டின் பக்கத்திலேயே, புன்னகை பூக்கும் பூந்தோட்டம் ஒன்று இருக்கும். அந்த பூந்தோட்டத்தில் மனதை கொள்ளை கொள்ளும் பூக்களும் அதில் தேனெடுக்க வரும் மனதை கவரும் வண்ணத்துப் பூச்சிகளும் இருந்தன.

பப்பிமாவுக்கு வண்ணத்துப்பூச்சி என்றாலே அவ்வளவு பிரியம். அவற்றின் குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்து இவளும் சந்தோசப் படுவாள்.

பள்ளி விட்டு வந்ததும் அங்குதான் அவள் எப்போதுமே விளையாடுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த இடமாக அது மாறியிருந்தது.

செழிப்பான காலத்தில் வரும் வண்ணத்துப்பூச்சிகள் வறட்சியான காலத்தில் என்ன பண்ணும் என்று வருத்தப் பட்டவள் அதற்காக ஒரு ஏற்பாடு செய்தாள். அவளின் அப்பாவிடம் சொல்லி வலைக் கூண்டு அமைத்து அதில், தேன், பூக்கள், இலைகளை எல்லாம் வைத்து அதற்குள் அந்த வண்ணத்துப்பூச்சி குடும்பத்தை வாழ வைத்தால் நல்லா தான இருக்கும் என்று பப்பிமாவும் அவளின் தம்பியும் சேர்ந்து ஐடியா பண்ணி கூண்டெல்லாம் செய்து முடித்தனர்.

அதில் விட வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்க வலையோடு போனால் அங்கு ஒன்னையுமே காணும்.

அவர்கள் காத்திருந்து ஒன்னே ஒன்னு மட்டும் பிடித்து கூண்டிற்குள் போட்டார்கள்.

அது சாப்பாடே சாப்பிடாம இருந்தது. பறப்பதுமில்லை.

கூண்டின் மூலையிலேயே அடைந்து கிடந்தது. எப்ப வந்து பப்பிமா பார்த்தாலும் அது சோகமாகவே இருந்தது.

ஒரு நாள் அழுகை சத்தம் அதிகமாக கேட்டது பப்பிமாவுக்கு. யார் அழுகிறான்னு பார்க்க தேடி போனாள்.

கூண்டினருகில் தான் சத்தம் கேட்டது.

“ஏன் அழுகிறாய்? நாங்கதான் உனக்கு தேவையான எல்லாத்தையும் கொடுத்து சுகமாக இருக்க மெத்தை அமைத்து இருக்கோமே நீ ஏன் சாப்பிட்டாமல் அடம் பிடித்து அழுகிறாய்” என்று கேட்டாள்.

அது பேசவே இல்லை.

திரும்பவும் அவள் கேட்டாள். “அதுதான் உனக்கு பிடித்ததெல்லாம் நான் தருகிறேனே பின்ன ஏன் வருத்தப்படுகிறாய்.”

அதற்கு வண்ணத்துப்பூச்சி சொன்னது. “எனக்கு பிடித்த எல்லாம் வைத்திருக்கிறாய் சரிதான் ஆனால் எனக்கு பிடித்தவைகளை நானே தேடிப்போய் எடுக்கவும் தேடவும் சாப்பிடவும் இருக்கும் மகிழ்ச்சியை யாரும் தர முடியாது.”

“எனக்கு உழைக்காமல் சாப்பிடுவதில் இஷ்டமில்லை, நான் இப்படி இருந்தால் சோம்பேறி ஆகி விடுவேன் அதுதான் என்னை விட்டு விட கெஞ்சுகிறேன்.”

“இப்ப நான் தம்பியெல்லாம் உழைக்கிறதில்லையே எங்க அப்பா அம்மாதான சம்பாதிக்கிறாங்க அது மாதிரி நீ சின்னவள்தானே இப்படியே இருந்து விடேன்” என்றாள் பப்பிமா.

“இல்லை தேட முயற்சிக்க முடிந்தவர்கள் தேட வேண்டும். உழைக்க முடிந்தவர்கள் உழைக்க வேண்டும் என்றுதான் எங்கம்மா எனக்கு சொல்லிருக்காங்க”

“உழைப்பில்தான் சுகம் இருக்கு”

“பாரு பப்பிமா சின்னதா இருக்கிற எறும்பு கூட உழைத்தால்தான் மண்ணு நல்லா இருக்கும் அதுதான் விவசாயத்துக்கு நல்லது அதுபோல நாங்க தேனெடுக்க உழைச்சாதான் காய்கள், கனிகள், விதைகள் என நிறைய பெருகும்”

“ஆமாப்பா எனக்கும் உழைக்கத்தான் பிடிக்கும், எங்க அப்பா அம்மாவுக்கு என்னால் ஆன உதவிய செய்யுறேன் அது போல் நீயும் இருக்க நினைக்கிற சரிதான்” என்றாள் பப்பிமா.

“ஆமா பப்பிமா இந்த உலகத்தில் எனைப்போன்று இருக்கிற 84 லட்சம் உயிர் வகைகளும் உழைத்தால்தான். இந்த பிரபஞ்சமே இயங்கும்”.

“எனக்கு என்னுடைய பழைய மகிழ்ச்சி வேண்டும். என்னை நான் இருந்த இடத்திலேயே கொண்டு போய் விட்டு விடேன்” என்று கெஞ்சியது வண்ணத்துப்பூச்சி

பப்பிமாவும் அதன் மேல் இரக்கப்பட்டு கூண்டை திறந்து விட்டாள்.

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறந்தது.

அதன் வண்ணத்திலும் மகிழ்ச்சியிலும் வெயில் பட்டு ஒரு வானவில் தெரிந்தது.

 Told by daughter and written by me

துவாரகா சாமிநாதன்

கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *