சூன்யம் பிடித்ததுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது வீடு. நடமாட்டம் நின்று படுத்த படுக்கையாகி வருஷக் கணக்கில் கிடந்தாலும் ‘கர்..முர்ரென’ மூச்சு விட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவனும் போனபிறகு தனிமையின் வலைக்குள் சிக்குண்ட வயதான புறாவைப்போல வாட்டமுற்று கிடக்கிறாள் பவுணாம்பாள் .’’ரெண்டு ஆம்பளப் புள்ளங்களப் பெத்தும் இந்த கெதிக்கு ஆளாயிட்டமே’’ உயிர் போகும் வரை பவுணாம்பாள் புருஷனின் கண்கள் இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. வாய் பேச்சும் அற்ற பிறகு கண்களின் சுழற்சியும் சைகையும்தான் அந்த ஜீவனின் வார்த்தைகளாயிருந்தன.
அடுத்தடுத்து இரண்டும் ஆம்பளப் பிள்ளைகளாகப் பிறந்தபோது சந்தோஷமாகத்தான் இருந்தது. இருக்கும் எட்டு ஏக்கர் நிலத்தை ஆளுக்கு நாலாகப் பிரித்துக் கொடுத்துவிடலாம் என்று கணக்குப்போட்டு வைத்தார்கள் புருஷனும் பொண்டாட்டியும். பவுணாம்பாள் போட்டிருந்த பத்துப் பவுன் காரையையும் செயின் பதக்கத்தையும் தலைக்கொன்றாகத் தந்துவிடலாம் என்று சொல்லி வந்தாள்.
அவளுக்கு மட்டும் அடிமனதில் ஒரு கனல் அணையாமல் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டே இருந்தது. ‘’மூணாம்போறா ஒரு பொண்ணு பொறந்துடக்கூடாதா..’’ என்ற ஏக்கம் அவள் நெஞ்சில் நிறைந்து கிடந்தது. பையன்கள் வளர்ந்த பிறகு கூட, அவர்களிடம் ‘’உங்களுக்குன்னு ஒரு தங்கிச்சி பொறக்காம போயிடிச்சே..’’என்று ஆதங்கப்படுவாள்.
‘’பொம்பளப் புள்ளன்னா அது ஒரு மாதிரிதான்‘’ என்பார் பவுணாம்பாளிடம் அவள் புருஷன். கடைசி காலத்தில் ‘வார வழிக்க’ முகம் சுளிக்காமல் செய்ய எந்த மருமகளுக்கு முடிகிறது. சகிப்புத் தன்மையோடு அருகிருந்து கவனித்துக்கொள்ளவும் வாய்க்கு ருசியாக ஆக்கிப்போடவும் ஒரு மகளிருந்தால் நன்றாகத்தானிருக்கும். நடைஉடையோடு இருக்கும்போதே ஆயிரம் குற்றம் குறை சொல்லும் மருமகள்கள் படுக்கையில் விழுந்தபிறகா சீந்தப் போகிறார்கள்.
அப்படித்தான் ஆயிற்று பவுணாம்பாளின் புருஷனுக்கும். பெரியவனுக்கு டவுனில் வாத்தியார் வேலை. வசதியான வீடு. வாழ்க்கை..செக்கச் செவேலென பொண்டாட்டி.முத்து முத்தாய் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள்.சம்பளத்தோடு டூஷனிலும் நல்ல வருமானம். படிக்க வரும் பிள்ளைகள் காய், பூ, பழம் என தங்களிடம் உள்ளதைக் கொண்டு வந்து கொட்டிவிடுவார்கள். பவுணாம்ப்பாளுக்கும் அவள் புருஷனுக்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இதையெல்லாம் பார்க்கும்போது. பிள்ளைகள் ‘’சார் சார்‘’ என மகனை மொய்ப்பதை காணும்போது பெருமை பொங்கும் அவளுக்கு. சகல விதமான வசதிகளிருந்தும் நாலு நாளுக்கு மேல் அம்மா அப்பாவை வைத்து சோறு போட்டு சண்டை சச்சரவில்லமல் அனுப்ப முடிவதில்லை பெரியவனுக்கு. அவன் என்ன செய்வான். வந்தவள் சொன்னபடி ஆடவேண்டியதாகிவிட்டது.
பெரியவன் வீட்டில் தங்கியிருக்கும்போது பவுணாம்பாளின் புருஷன் பட்டபாடு இருக்கிறதே..’டவுன் ஆஸ்பத்திரியில் காட்டி சரிபண்ணிவிடுவான் மகன் என்று நம்பி போயிருந்த அவரை ஏதோ பேருக்கு வைத்தியம் பார்த்து அனுப்பிவிட்டான். வைத்தியம்தான் தர்மத்துக்கு.. போனால் போகிறது.. நல்ல சோறு ஆக்கிப்போட்டு கொஞ்சம் அனுசரணையாக வைத்திருந்து அனுப்ப வேண்டாமா.. மகன் வீட்டின் கழிப்பறையில் மலம் கழிக்கக்கூடவா அப்பாவுக்கு உரிமையில்லாமல் போய்விடும். அவர் கழிப்பறைக்குப் போக எத்தனிக்கும்போதுதான் மருமகள் பேரப்பிள்ளகளில் யாரையாவது உள்ளே அனுப்புவாளாம் அவசரமாக. ’’கிராமத்துல போற மாதிரி ஏரிப்பக்கம் போய் வந்தா என்னா’’ என்பாளாம்..பொட்டில் அறைந்த மாதிரி ஆகிவிடாதா வயதான அந்த மனிதனுக்கு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு நாலாம் நாளே ஓடிவந்துவிட்டார்’’.
‘’சின்னவன் கார் மெக்கானிக். அண்ணங்காரன் படிச்சிட்டு வாத்தியாரா வசதியாக இருக்கும்போது தான் ஏன் செய்யணும் என்ற நினைப்பு அவனுக்கு. அவன் பொண்டாட்டி போட்ட மந்திரம்தான் அது. சின்னவனுக்கு படிப்பு வராமல்போனதால்தான் மெக்கானிக் தொழிலுக்கு அனுப்பி வைத்தது. ஏதோ இரண்டு பேரையும் கரை சேர்த்தாகிவிட்டது. என் பொழப்புதான் நாற பொழப்பாயிடிச்சி.’’
ஆனால் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல அல்லவா மாறிவிட்டர்கள் இந்த இரண்டு கெடாப்பசங்களும் என்பார் பவுணாம்பளின் புருஷன்.
ரேஷன் அரிசிசோறும் வெறும் மிளகாய் புளி ரசமும்தான் அவர்களது உணவாகிப்போனது. அதற்கு காடு காடாக களைவெட்டியைத் தூக்கிக்கொண்டு இந்த தள்ளாத வயதிலும் அலைய வேண்டியதாகிவிட்டது அவளுக்கு. வேகிற வெயிலில் நாயாய் அலைவதில் பெத்த வயிறு பத்தி எரியாதா. சொத்தை மட்டும் பங்கு பிரித்து தராமலிருந்தால் இந்நேரம் நாய் மாதிரி சுற்றி சுற்றி வந்திருப்பார்கள். அதுபோல செய்திட மனமில்லையே அவர்களுக்கு.
அரசாங்கம் தரும் அநாதை பணம்போல மாதம் இருநூறு அனுப்புவான் பெரியவன். பவுணாம்பாளுக்கு காப்பித்தண்ணியும் வெற்றிலைச் ஸருகும் இல்லாவிட்டால் ஒன்றுமே ஓடாது. அவள் புருஷனுக்கோ ஒரு நாளைக்கு இரண்டு பீடியையாவது இழுத்துவிட வேண்டும். கஞ்சி குடிக்கவே காணாது பெரியவன் அனுப்பும் பணம்.. இதில் காப்பியாவது..வெற்றிலையாவது.
‘’வாயார சொல்லியிருப்பானா ஒரு நாளாவது நீங்களும் அப்பாவும் வந்து எங்களோடவே இருங்கம்மா, அப்படின்னு’’. அவள்தான் எவ்வளவு எதிர்பார்ப்பு கொண்டிருந்தாள். ’’பெரியவனோடு போய் இருப்பதுதானே’’ என்று யாராவது கேட்கும்போது அவள் சிரித்துக்கொண்டே இப்படி சொல்லிவிடுவாள். ’’சின்னவனுக்கு பாவம்.. நண்டும் சிண்டுமா மூணு கிடக்குது.. அவன் கார் ஷெட்டுக்குப் போயிட்டா அவ மட்டும் என்ன பண்ணுவா அந்த குளுவானுவள வச்சிக்கிட்டு..புள்ளங்க பெருசானப்புறம் வர்றதா சொல்லியிருக்கோம்’’
‘’பெரியவனும் வாங்க வாங்கன்னு கூட்டிட்டுதான் இருக்கான்.. என்ன பண்றது.. சின்னவனும் ஒரு புள்ளதானே’’ என்பார்கள் புருஷனும் பொண்டாட்டியும்.சின்னவன் வீடு உள்ளூரிலேயே இருந்தாலும் தனியேதான் பொங்கிச்சாப்பிட்டார்கள் பவுணாம்பாளும் அவள் புருஷனும்.
‘’சொன்னா கொற..சோறளிஞ்சாப் பட்டினி என்பார்கள். ஒருவனைப் பற்றியும் வாய்திறந்து ஒரு குறை சொல்லியதில்லை யாரிடமும். எல்லாம் யாருக்காக. பிள்ளைகள் நல்லா இருக்கணுமே என்ற உணர்வில்தானே. அது அவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது. தாவரங்களின் விதைகளிலிருந்து இப்படி விலங்குகள் கூட தோன்றிவிடுமா.’’
புருஷனும் போனபிறகு ஒண்டிக்கட்டையாகத்தான் கிடக்கிறாள். பெரியவன் வீடு கட்டி புது வீட்டுக்கு குடிபோகும்போதுதான் ஒரு வாரம்போல அங்கு தங்கியிருந்தாள். வரும்போது வழக்கம்போல அழுகையோடுதான் திரும்ப முடிந்தது. வெளியில் அழுவதில்லை. எல்லாம் உள்ளுக்குள்தான்.ரோசா பாக்கு ஒரு பொட்டலமும் ஒரு கவுளி வெற்றிலையும் காண்வில்லையாம்.. மாமியார்தான் எடுத்துகொண்டிருப்பாள் என்று யூகித்து சாடைமாடையாகப் பேசிக்கொண்டிருந்தாள் பெரிய மருமகள். நேரிடையாக கேட்டும் விட்டாள். ’’நீங்க பாத்தீங்க்களா’’ பவுணாம்பாள் பதை பதைத்து ‘’இல்லையே’’ என்றாள். சமாதானமாகாத பெரிய மருமகள் அந்த எரிச்சலை எல்லோர்மீதும் கொட்டிகொண்டிருந்தாள். பெரியவன் ஏதோ அதட்டியதற்கு ‘’உங்கம்மாவ ஒன்னுமே சொல்லலியே.. பாக்குப் பொட்டலத்தப் பாத்தீங்கலான்னுதான கேட்டேன்.. இது ஒரு தப்பா..’’ என் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடாள்.. பெரியவன் பவுணாம்பாளை ஒரு முறை முறைத்தான். பொண்டாட்டியை அழ வைத்துவிட்டாளாம் அம்மா.
அன்று திரும்பியவள்தான்.. இனி பெரியவன் வாசல்படியில் தலை வைத்துப்படுப்பதில்லை என்று வைராக்கியம் கொண்டிருந்தாள். உயிரே போனாலும் அவன் முகத்தில் முழிக்கக்கூடாது என்ற ரோஷம் அவள் மனதில் உறுதியாகத்தான் இருந்தது. இத்தனை நாளாய் கட்டுக்கோப்பாக இருந்த மனக்கோட்டை நேற்றுதான் சரிந்து விழுந்தது.
டவுனிலிருந்து வந்திருந்த ஒருவரிடம் நேற்று சொல்லிவிட்டிருந்தார்கள் பெரியவனும் மருமகளும்.’’அம்மா உங்கள வரச்சொல்லி மருமவளும் மவனும் சொன்னாங்க.. கண்டிப்பா நின்னு போவாம ஒடனெ வரணுமாம்’’
பவுணாம்பாளுக்கு தலைகால் புரியவில்லை. ஒரு புத்துணர்ச்சி நாடி நரம்புகளில் வெள்ளம்போல பாய ஆரம்பித்தது. ’’பேரன் பேத்திகூட ஒன்ன பாக்கணும்னு ஆசப்படறாங்களாம்’’ அவளுக்கு நிலை கொள்ளவில்லை. ராத்திரி தூக்கம் தொலைந்தது. கண்கள் எரிய எரிய எப்போது விடியுமென விழித்துக்கிடந்தாள். ’’முதல் வண்டிக்கே டவுனுக்குக் கிளம்பிப்போகணும்’’ புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.
பெரியவன் வீட்டில் தடபுடலான வரவேற்பு.ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. மருமகள்தானா இவள்.. வாழை இலையில் பச்சரிசிச்சோறு.. வாய் நிறைய பேச்சு. பெயிண்ட் வாசனையோடு புது வீடு பொலிவுடன் இருந்தது. அது போலவே மருமகளும்… ’’திடீர்னு தங்களோடு வந்து இருக்க வேண்டும்’’ என்று மகனும் மருமகளும் கேட்டால் தான் என்ன சொல்வது என்ற யோசனை எழுந்தது.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை.
இந்த வயதான அந்திம காலத்தில் பேரப்பிள்ளைகளோடு இருப்பதே சுகம்தான்.. திடுதிப்பென்று கிளம்பிவிட்டதால் துணிமணிகளைக்கூட எடுத்துவரவில்லை. சின்னவனிடமும் சொல்லாமலே வந்துவிட்டாள். சின்ன மருமகளும் எப்போது போவாள் என்பது போலத்தான் இருக்கிறாள். ’’போக வேண்டாம் அத்த’’ என்று மன்றாடும் நிலையில் அவளும் இல்லை.
நேற்று சாயங்காலம் ஒரு தாட்டியான ஆள் ஒரு வண்டி செம்மண் கொண்டுவந்து வீட்டின் முகப்பில் கொட்டினான். பெரியவன் கடப்பாரையைக் கையில் பிடித்துக்கொண்டு அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அடுத்த நாள் எங்கிருந்தோ வாழைக்கன்றுகளை கொண்டுவந்தான் பெரியவன்.
பெரியவனிடம் சொல்லிவிட்டு ஊருக்குப்போய் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து கிளம்பிக்கொண்டிருந்தாள் பவுணாம்பாள்.
‘’நான் ஊருக்குப் போயிட்டு வரட்டுமாய்யா.. வந்து ஒரு வாரம் மேல ஆவுது..சின்னவன்ட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு’’
அவள் முடிப்பதற்குள் பெரியவன் அரிதினும் அரிதாக வாயைத்திறந்தான்.
‘’வாசல்ல கெடக்கிற மண்ண தோட்டத்துல கொட்டணும்.. இந்த வாழக்கன்னுங்கள அதுல நட்டுக்கொடுத்திட்டு போயிடும்மா.. ஆளுவளப்பாத்தா அநியாயக் கூலி கேக்கறானுங்க.. நீயும் இப்ப போயிட்டா அப்பறம் எப்ப வருவியோ’’
பெரியவன் பேச்சு அவள் காதில் நுழையவில்லை. வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த செம்மண்ணின்மீது அவளது பார்வை பதிந்து கிடந்தது.

சுப்பு அருணாச்சலம்.
நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.
ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன.