01.

எண்களுக்குக்

கத்திகளின் கூர்மை

எண்களுக்குத்

தோட்டாக்களின் வேகம்

எண்களுக்கு

கழுத்தை இறுக்கும் வலு

எண்கள் ஒவ்வொன்றும்

மண்டை உடைக்கும் கல்

எண்கள் ஒவ்வொன்றும்

தடுமாற்றி வீழ்த்தும் குழி

எண்கள் ஒவ்வொன்றும்

ஆட்காட்டி

எண்களுக்கு

ஒரு போதும் இல்லை இரக்கம்

எண்களால் விளைகின்றன

எண்ணமுடியா தீமைகள்

எண்களின் உலையில்

எத்தனை எத்தனை ஆசைகள்

தேம்பிக் கருகுகின்றன?

எண்கள் கண்டறியப்பட்டது

சுரண்டித் தின்னவே

எண்களை நம்பத் தொடங்கியதே

முதல் ஏமாற்றம்

எண்கள் தீராப் பசியோடு

திகட்டா வெறியோடு

காத்திருக்கின்றன

எண்களைத் தேடி ஓடி

எண்களைச் சேமித்து

எண்களைப் பதுக்கி

எண்களுக்கு நம்மை

ஒப்புக்கொடுத்தபின்

எப்படிச் செத்தால் நமக்கென்ன?

2.

மூங்கிற் கூடை நிறைய

வைக்கோல் பரப்பி

பீங்கான் பொம்மைகள் நிறைத்து

விற்று வருகிற தேவரம்மாவிடம்

நன்றி உரைக்கும் தும்பிக்கை

அசைவை ஏந்தி நிற்கிற

யானை பொம்மைகளிரண்டை

நைந்து கிழியப்போகும்

பொலிவிழந்த ரூபாய்த்தாள்களை

மறைத்துத் தந்து வாங்கி

வேகமாக நகர்ந்தவனை

நோக்கி

ஏங் கண்ணு! ஏங் கண்ணு! என்று விளித்து

நிற்கச் சொல்லி

“அந்த ஆனையில ஒன்னுக்கு

கொம்பு ஒடஞ்சு ஒட்டவச்சது கண்ணு

அதக் குடு மாத்தி வேற தாரேன்னு”

சொன்ன நொடியில் மனதின்

சகல சல்லித்தனங்களும்

நொறுங்கி வீழ்வது

காணாயோ புண்ணெஞ்சே..?

000

த.விஜயராஜ்

சோழன் மாளிகை கும்பகோணத்தில் பிறந்தவரான இவர் நீலகிரியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2011-ல் ‘தேவதைகளின் மூதாய்’ என்கிற இவரது கவிதைத்தொகுப்பை அகரம் வெளியிட்டுள்லது. 2021-ல் ‘யானைகளைக் கண்டிராத ஃபிளமிங்கோக்கள்’ சூழலியல் கவிதை நூலை வாசகசாலை வெளியிட்டுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *