பொன்னகரத்திலேயே மிக உயர்ந்த மரமும் பெரிய மரமும் நான்தான் என்ற கர்வமும் தலைக்கனமும் அந்த ஆலமரத்திற்கு எப்போதும் உண்டு. காக்கையே என் பெருமை என்னவென்று உனக்குத் தெரியுமா? எனக் காக்கையிடம் கேட்டு மரம் நக்கலாகச் சிரித்தது காக்கை பாவம் இப்போதுதான் அந்த மரத்தில் புதிதாகக் கூடுகட்டி குடிவந்திருக்கிறது. மரம் அதனைப் பார்த்துச் சிரித்ததும் அதற்கு அவமானமாகப் போய்விட்டது. இந்த நிகழ்வுகளை எல்லாம் நீண்ட நாட்களாக அந்த மரத்திலேயே வாழ்கிற மற்றொரு காக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

வருத்தத்தோடே மரத்திலிருந்து கீழ் இறங்கிச் சோகமாக அமர்ந்திருந்தது காக்கை.

“காக்கை அக்கா ஏன் சோகமா இருக்கே? என்ன ஆச்சி? உடல் சுகமில்லையா?” எனச் சத்தமாகக் கேட்டது. அந்தப் பக்கமாக நடந்து வந்த எறும்பு ஒன்று.

”அந்தக் கதைய ஏன் கேட்கறீங்க? அது பெரும் சோகம். முன்னாடி நாங்க வாழ்ந்திட்டு இருந்த பெரும் மரம் பேய் சூரைக்காற்றில் வேரோடு சாய்ந்து போச்சு நாங்க மட்டும் இல்ல எங்கள போலப் பல குடும்பங்கள் வீடு இழந்து அனாதையாகிட்டோம். எல்லோரும் வாழ இடம் தேடி பல ஊருக்குப் போய் சேர்ந்திட்டோம்.

எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் தங்கி வாழப் பழகிட்டோம். அப்படித்தான் நாங்க இந்த மரத்திற்கு வந்தோம்.”

“காக்கை அக்கா கவலைப்படாதிங்க. இந்த உலகம் மிகப்பெருசு. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் ஒன்னும் இல்ல. அதெல்லாம் நாம உருவாக்கி வச்சுக்கிட்டது”

“எறும்பு அண்ணே நீங்க உருவத்துல சிறியவரா இருந்தாலும் உங்க சிந்தனை ரொம்ப பெருசு” எனச் சொல்லியது காக்கை.

அன்று  பகல் முழுதும் எந்த வேலையும் பார்க்காம சோகத்திலேயே இருந்த காக்கா அக்கா இரவும் முழுதும் தூக்கம் வராம தவிச்சிட்டு இருந்திச்சி… அப்போதான் வானத்தில் அந்த அதிசய ஒளி தோன்றிச்சு. கண்களைக் கூசும் அளவு ஒரு பெரிய வெளிச்சம் வானத்திலிருந்து காற்றில் மிதந்து குறுக்கும் நெடுக்குமாக அசைந்துவிழும் இலையைப்போல மிதந்து மிதந்து கீழிறங்கிக் கொண்டேயிருந்தது.

காக்கைக்கு ஒன்றுமே புரியவில்லை.

’இது என்ன அதிசயம்? இரவிலுமா சூரியன் தோன்றும்? ஒரு வேளை பொழுது விடிந்துவிட்டதா? இது சூரியன் தானா?’ எனச் சிந்தித்துக் கொண்டே வெகுதூரம் பறந்து சென்று சுற்றிப் பார்த்தது. எல்லா இடங்களுமே இருளாகத்தான் இருந்தது. இருள் பக்கத்திலிருந்து பறந்தபடியே தலையைத்திருப்பி வெளிச்சம் தோன்றிய திசையில் பார்த்தது. அருவி போல ஒழுகிய வெளிச்சம் இப்போது ஒரு நட்சத்திரம் போல மாறி காக்கையிருந்த கூடு நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது

“ஐயோ  ஐயோ ஐயோ என் வீடு ” பதறி அதன் கூடு நோக்கிப் பறந்தது.

ஒரே வியப்பு மேலிருந்து இறங்கிய வெளிச்சம் காக்கையின் கூட்டில் இலை வடிவத்தில் வெளிச்சத்தை உமிழும் இலையாக தங்கியிருந்தது. அதன் கூடு முழுதும் நிலாவை இறக்கி வைத்ததுபோல வெளிச்சக் கீற்றுகள்  ஒளி பரப்பிக்கொண்டிருந்து. அதன் கூடே அதற்குப் புதிது போலத் தோன்றியது.

இது என் வீடா? கண்ணைத் துடைத்துத் துடைத்து தூரத்தில் கிளையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்த்தது. வெளிச்சம் அதன் கண்களைக் கூசிற்று. மெதுவாய் கூட்டிற்கு மேலே பறந்தவாறு ’க்காஆஆ காகா….கா க்காஆஆ’ எனச் சத்தம் எழுப்பியவறே வேகமாகப் பறந்தது.

“நல்லவேளை சுடல நான் பயந்தே போய்ட்டேன் இந்த வெளிச்ச இலையால என் வீடு எரிந்து சாம்பலாகிடுமேனு. அப்படியெல்லாம் இல்லை”

கூட்டிற்குள் சென்று தன் மூக்கால் வெளிச்ச இலையை நகர்த்திப் பார்த்தது. ஆலமரத்தின் இலையைப் போலவே தான் இருந்தது. வெளிச்சம் வருவது மட்டும் தான் புதிதாக இருந்தது. அத்தனை மகிழ்ச்சி பறப்பதும் வெளிச்ச இலையை நகர்த்துவதுமாக இருந்த காக்கா இப்போது தூக்கிக்கொண்டும் பறக்க முயற்சித்தது. வெளிச்ச இலையைத் தூக்கிக் கொண்டு பறந்து செல்லும் இடமெல்லாம் வெளிச்சம் வருவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து, ’ஓஓஓஓஓ ஹைஐஐஐயா’ என ஒரே சத்தமிட்டது.

தூங்கிக் கொண்டிருந்த ஆலமரம்

“எவன்டா அது இந்தக் கத்துக் கத்தறது. தூக்கமே போச்சிடா” எனக் கூறிக் கொண்டே சோம்பலும் விழிப்புமாக கண்விழித்துப் பார்த்த போது மரத்திற்கும் அத்தனை வியப்பு. மரம் முழுதும் வெளிச்சமாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தது.

பிறந்ததில் இருந்து இரவென்றாலே அடர் இருளையையே பார்த்து வளர்ந்த மரம் என்பதால் அதற்கும் அச்சமும் வியப்புமாக இருந்தது. ஆனாலும் அந்த மரம் தன் கிளைக் கைகளை இந்த வெளிச்சத்தில் பார்ப்பதற்குப் புதிதாகவும் அழகாகவும் இருந்தது. வெளிச்சத்தில் இலைகள் அசைவது இறகு முளைத்துப் பறப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கியது.

தன் தலைக்கனத்தைவிட்டுக் கீழிறங்கி காக்கையிடம் பேசத் தொடங்கியது.

“அக்கா அக்கா” என மெதுவாக அழைத்தது. இந்த அழைப்பும் காக்கைக்கு விழுந்தது. ஆனாலும் விழாதது போலக் காக்கை வெளிச்ச இலையை மூக்கால் நகர்த்தி நகர்த்தி அணைத்துக் கொண்டிருந்தது.

இப்போது முன்பைவிட வேகமாக மரம் “காக்கை அக்காஆஆஆ” என அழைத்தது.

காக்கை “ம்ம்ம் சொல்லுங்க சகோ!’ என்றது.

“வெளிச்ச இலை ஒளியில் என்னைப் பார்க்கவே அழகாக இருக்கிறது. அடர்ந்த இருளில் என் மீது வெளிச்சம் படும் போது என் இலைகளெல்லாம் அசைவது இறகுகள் முளைத்ததைப் போலவே உணர்கிறேன். மகிழ்கிறேன். இன்னும் என் உச்சிக்கிளைக்கு வெளிச்ச இலையைச் சுமந்து போ” எனக் கேட்டுக் கொண்டது. மரம் சொன்ன இடங்களுக்கெல்லாம் காக்கை வெளிச்ச இலையைச் சுமந்து சென்றது. தன் எல்லா கிளைக்கரங்களையும் மரம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து பேசிற்று.

”காக்கை அக்கா என்னை மன்னிச்சுடுங்க; நீங்க இங்கயே தங்கிக்கங்க; உங்க உறவுக்காரங்களையும் அழைச்சுட்டுவாங்க, வெளிச்ச இலை எப்போதும் என்னோடே இருக்கட்டும். அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்னை விட்டு வெளிச்ச இலை எடுத்துட்டுப் போயிடாதிங்க” எனப் பணிந்த குரலில் கேட்டது.

வெளிச்ச இலையைச் சுற்றி பறவைகளும் வண்டுகளும் எறும்புகளும், தேனீக்களும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு சுற்றித் திரிந்தன. கூடுதல் மகிழ்வோடு தலைகனம் இல்லாமல் மரம் தன் இலைச்சிறகை முன்பைவிட வேகமாய் அசைத்துக் கொண்டிருந்தது.

+++

மகா.இராஜராஜசோழன்

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி. பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம். வட்டம் – சீர்காழி. மாவட்டம் – மயிலாடுதுறை.

இணைய இதழ்களிலும், அச்சிதழ்களிலும் எழுதி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *