உலகம் இருண்டு கிடக்கிற இரவுகளில், நிலா தனது வட்ட வடிவம், வெண்ணிறம், இதமான ஒளி ஆகியவற்றால் வானில் அழகுற ஒளிர்கிறது. அது அழகாக இருப்பது மட்டுமல்ல; தான் வாழ்ந்துகொண்டிருக்கிற வானத்துக்கும் தனது ஒளியால் அழகூட்டுகிறது. அது மட்டுமா; நாம் வாழ்கிற இந்த பூமியையும் நிலா எவ்வளவு அழகானதாக மாற்றிவிடுகிறது! பகல் பொழுதில் அழகற்றதாகவும், அசிங்கமாகவும் காட்சியளிக்கிற இடங்கள் கூட நிலவொளியில் அழகானதாக மாறிவிடுவது, ஒரு மாயாஜாலம் போலத் தோன்றும்.

     ரசனை உள்ள எல்லோருமே நிலாக் காலங்களில், அதன் பால் போன்ற வெண்மை, கண்களை உறுத்தாத பிரகாசம், குளுமையான மென்னொளி ஆகியவற்றை ரசிப்பார்கள். பௌர்ணமி மற்றும் அதை ஒட்டிய நாட்களில், மக்கள் தமது வீட்டு வாசலில் அமர்ந்து, நிலவொளியை ரசித்தபடி அரட்டையடிப்பது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, நிலாச் சோறு உண்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது முந்தைய காலங்களில் வழக்கமாக இருந்தது.

     கவிஞர்களும் காதலர்களும் நிலவை அதிகமாக விரும்புவார்கள். காரணம், அது அவர்களின் ரசனை மற்றும் காதல் உணர்ச்சியைக் கூட்டுவதால்தான்.

     ஆனால், நிலா இப்போது இருப்பது போல முன்பு அழகானதாக இல்லை. ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு நிலவின் முகம் ஒரே இரவில் இது போல் மாறியது. அதற்கு முன்பு நிலவின் முகம் கருத்ததாகவும், மூட்டமானதாகவுமே இருந்தது. அதனால் யாருமே அதை விரும்பவில்லை. அதனால் நிலா எப்போதும் வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.

     நிலவின் முகத்தைப் பார்க்கக் கூடியவையாக இருந்த நட்சத்திரங்கள் மற்றும் பூக்களிடம் இது பற்றி ஒரு நாள் நிலா குறைபட்டுக்கொண்டது.

     “நான் நிலவாக இருப்பதற்கு விரும்பவில்லை. நட்சத்திரமாகவும் மலராகவும் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு நட்சத்திரமாக இருந்தால், மிகச் சிறிதாக இருந்தாலும் கூட, மனிதர்கள் என் மீது கவனம் கொள்வார்கள். ஆனால், நான் நிலவாகப் பிறந்து விட்டேன். அதனால் ஒருவரும் என்னை விரும்புவது இல்லை. நான் ஒரு மலராக இருந்திருந்தால், பட்டாம்பூச்சிகளும், தேன் சிட்டுகளும், தேனுண்ணி வண்டுகளும் என்னை உயிருக்குயிராக விரும்பியிருக்கும். தோட்டத்தில் என்னைக் காண அழகிய மானிடப் பெண்களும் வருவார்கள். அவர்கள் என்னைத் தனது கூந்தலில் சூடிக்கொண்டு, அழகுக்கு அழகு சேர்ப்பார்கள். அழகிய பெண்களின் தலை மீது ஏறியிருக்கிற பெருமையும், எனது அழகு மற்றும் நறுமணத்துக்காக அவர்களால் பாராட்டப்படுகிற மகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்திருக்கும். அல்லது ஒருவேளை நான் காட்டுப் பூவாக வனத்தில் மலர்ந்திருந்தாலும், மனிதர் யாரும் என்னைப் பார்த்திராவிட்டாலும் கூட, நிச்சயமாக கானப் பறவைகள் என்னருகே வந்து இனிமையான பாடல்களை எனக்காகப் பாடும். ஆனால் நான் அழகற்ற நிலவாகப் பிறந்து விட்டேன். ஒருவரும் என்னை விரும்புவதோ மதிப்பதோ இல்லை…”

     அப்போது நட்சத்திரங்கள், “நாங்கள் உனக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. நாங்கள் உன்னிலிருந்து ஒளியாண்டு தொலைவுகளுக்கு அப்பால் இருக்கிறோம். எங்களுடைய இடத்தை விட்டு எங்களால் இடம் பெயர முடியாது. நாங்கள் எங்களின் கடமையைச் செய்துகொண்டிருக்கிறோம். கருமையான இரவுகளில் எங்களுடைய சிற்றொளியால் மினுங்கி, வானத்தை மேலும் அழகுபடுத்துகிறோம். எங்களால் அதை மட்டுமே செய்ய இயலும்” என்று சொல்லிவிட்டு வருத்தமான நிலவைப் பார்த்து இனிமையாகப் புன்முறுவல் செய்தன.

     புன்னகை மாறாப் பூக்கள் நிலவை ஆதுரமாகப் பார்த்துவிட்டு, “உனக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்கும் தெரியவில்லை. உலகின் மிக அழகான குமரியால் பராமரிக்கப்படும் அழகிய தோட்டத்தில் நாங்கள் நலமாக இருக்கிறோம். அவளது பெயர் ஸே நியோ. நாங்கள் அவளை மிகவும் நேசிக்கிறோம். அவளும் எங்களை மிகவும் நேசிக்கிறாள். அவள் மிகவும் ஆதரவானவள். எவர் ஒருவர் பிரச்சனையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவாள். நாங்கள் அவளிடம் உன்னைப் பற்றி சொல்கிறோம்” என ஆறுதல் கூறின.

     அப்போதும் நிலா சோகத்தோடேயே இருந்தது.

     ஒரு நாள் மாலை அது அந்த அழகான குமரி ஸே நியோவைக் காணச் சென்றது. அது அவளைக் கண்டதுமே அவளிடம் காதல் வயப்பட்டது.

     “உனது முகம் மிகவும் அழகாக இருக்கிறது. உனது அசைவுகள் இதமானதாகவும் அருளார்ந்ததாகவும் உள்ளன. நீ என்னிடம் வந்தால், உன் மூலமாக எனது முகமும் அழகாகிவிடும். எனவே நீ என்னிடம் வர வேண்டும் என விரும்புகிறேன். நீ என்னுடன் வந்து விடு. நாம் இருவரும் ஒன்றாக, பொருத்தமானவர்களாக இணைந்திருப்போம். இந்த பூமியில் உள்ள மிக மோசமான மனிதர்கள் அனைவரும் உன்னை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நீ எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று எனக்கு சொல்.”

     “நான் எப்போதுமே மகிழ்ச்சியோடும், கனிவோடும் உள்ள மனிதர்களுடன் வாழ்ந்து வருகிறேன். அதுதான் நான் நல்லவளாகவும் அழகானவளாகவும் இருக்க காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”

     ஒவ்வொரு நாள் இரவிலும் நிலா அவளைக் காணச் சென்றது. அது அவளது ஜன்னலைத் தட்டியதும் அவள் வருவாள். அவள் எவ்வளவு மென்மையானவளாகவும், அழகாகவும் இருக்கிறாள் என்பதை நிலா பார்க்கும்தோறும் அதன் காதல் அதிகரிக்கும். அவள் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டுமென்ற ஆசையும் மிகும்.

      அவளுக்கு நிலவின் மீது முதலில் இரக்கம் மட்டுமே இருந்தது. தொடர்ந்து பழகப் பழக, அவளும் காதல் கொண்டுவிட்டாள்.

      ஒரு நாள் ஸே நியோ தனது தாயாரிடம் சொன்னாள், “நான் நிலவுடன் சென்று அதனுடன் வாழ விரும்புகிறேன். நீ என்னை போக அனுமதிப்பாயா?”

     அவளது தாய் அப்போது ஏதோ யோசனையில் இருந்ததால் மகள் கேட்டது அவள் காதில் விழவில்லை. எனவே, அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அதைக் கண்ட ஸே நியோ, தனது தாய்க்கு அதில் விருப்பமில்லாததால்தான் சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறாள் என எண்ணிக்கொண்டாள்.

     பிறகு அவள் தனது தோழிகளிடம் தான் நிலவின் மணப் பெண்ணாக செல்லவிருப்பதாகத் தெரிவித்தாள். 

     ஒரு சில நாட்களில் அவ்வாறே அவள் சென்றுவிட்டாள். அன்றைய இரவில்தான் நிலா முதல் முறையாக பால் போன்ற ஒளியுடன் அழகாக ஒளிர்ந்தது.

     ஸே நியோவின் தாயார் அவளைத் தேடிப் பார்த்து எங்கும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவள் நிலவின் மணப்பெண்ணாக சென்றுவிட்ட தகவலை அவளது தோழி ஒருத்தி தெரிவித்த பிறகே தாய்க்கு முழு விபரமும் தெரிந்தது. மகள் இப்படிச் செய்துவிட்டாளே என்ற வருத்தம், அவள் இப்போது எப்படி இருக்கிறாளோ என்ற கவலை ஆகியவற்றோடு, என்றேனும் அவள் தன்னைக் காண வருவாள் என ஒவ்வொரு நாளும் தாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

     வருடங்களுக்குப் பிறகு வருடங்கள் கழிந்தன. ஸே நியோ பூமிக்குத் திரும்பவேயில்லை. “அவள் நிலவிலேயே தங்கிவிட்டாள். இனிமேல் ஒருபோதும் திரும்ப மாட்டாள்” என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

     ஒரு காலத்தில் உலகின் மிக அழகான பெண்ணாக இருந்த ஸே நியோவால்தான் நிலவின் முகம் இப்போதும் அழகாக இருக்கிறது. அது தனது மணப்பெண்ணை இந்த பூமியிலிருந்து எடுத்துக்கொண்டதால்தான் நன்றிக் கடனாக தனது இதமான ஒளியை வழங்கியபடி, இந்த பூமியை இன்னமும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

(சீன சிறுவர் கதை)

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். இந்த ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *