” பரிதி அத்த எங்கன்னுக் கேளு… கேள்றா… ஆதினி அத்தக் கிட்டக் கேளு… பரிதி அத்த எங்க? ”. எங்கள் எதிரில் நின்றபடி , அவள் மகன் எவ்வியை ஒய்யாரமாய்த் தன் இடுப்பில் அமர்த்திக் கொண்டு அவனைப் பார்த்துத் தாரகைப் பேசிக் கொண்டிருந்தாள்.

மலைப்பகுதிகளுக்கே உரித்தான உடலை நடுக்கும் குளிர். குளிர்சாதனப்பெட்டியின் நீரைப் பனிக்கட்டியாக்கித் தரும் உறையூட்டிப் பெட்டகத்தினுள் இருந்து கொண்டு மெல்ல மெல்ல உறைந்து கொண்டிருக்கும் ஒரு குவளைத் தண்ணீராகத் தான் என் உடலை உணர முடிகிறது. இன்னும் சூரியன் முழுவதுமாக எட்டிப் பார்த்து விடவில்லை. ஆனால், தான் வீட்டிலிருந்து பயணத்தைப் தொடங்கிவிட்டதை, வானில் மெல்லிய மஞ்சள் பூசி அறிவித்து விட்டிருந்தது. நாங்கள் அஞ்சியது போல எவ்விக்குக் குளிர் ஒவ்வாமல் உடம்புக்கு ஒன்றும் வந்து விடவில்லை. மகிழுந்து மலையேறத் தொடங்கியதிலிருந்தேத் துடிப்பாகத்தான் இருந்து வருகிறான். நல்ல மொத்தமான கம்பளிச் சட்டையைத் தான் அவனுக்குப் போட்டு விட்டிருந்தோம். அந்தக் குட்டி கால்களுக்கேற்ற உறை; தலையையும் , காதுகளையும் மூடியபடி சிதவல் ஒன்றையும் மாட்டி விட்டிருந்தோம். சிதவல் மாட்டியத் தலையோடு பார்ப்பதற்குச் சுரைக்காய் மாதிரி இருக்கிறான்;  கால் முளைத்தச் சுரைக்காய் மாதிரி. தாரகையின் இடுப்பைக் கால்களால் சுற்றிக் கொண்டு, தலையை அவள் முகம் நோக்கி நிமிர்த்தி, அவள் பேச பேச வாயசைவுகளை  ஆராய்ந்து கொண்டிருந்தான்;  மொழி கற்கிறான் போல. அவள் பேசுவது என்னப் புரிகிறதோ இவனுக்கு,  ” அ…  அம்.. ” என அப்போதைக்கப்போ அனத்தியும் கொள்கிறான். காடை முட்டை அளவு கண்கள் இவனுக்கு. ஆனால், கோழி முட்டை ஓடு மாதிரி தூவெள்ளை நிறம். அத்தூவெள்ளை திரவத்தில் நாலாப்புறமும் அலைந்தாடும் கச்சிதமான கரு வட்டங்கள்.  உயிர்கள் எனச் சொல்லப்படும் எல்லாவற்றின் கண்களிலுமே பொதுவாய் ஒளிரும் ஒரு பளபளப்பு அந்தக் கருவட்டங்களிலும் எந்நேரமும் மின்னிக் கொண்டிருந்தது.

            “ ஆதினி அத்தயக் கேளு… ஆதினி அத்தயக் கேளு…  ”   எனத் தாரகை அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தலையை, அவர்களுக்கெதிரில் – என் பக்கத்தில் நின்றிருந்த ஆதினியை நோக்கித் திருப்ப, அவனின் கரு வளையத்துக்குள் ஆதினி இப்போது சிக்கிக் கொண்டாள். அதற்குள்ளாக ஆதினியை,  என்னாலும்  தெளிவாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவு பார்க்க முடிந்தது. இதில் தெரிகிற ஆதினி வேறு மாதிரி இருக்கிறாள். எனக்கு நன்றாகத் தெரிகிறது எவ்வியைப் பார்த்துச் செயற்கையாகத்தான் சிரிக்கிறாள் ஆதினி. அரை மணி நேரத்திற்கு முன்னிருந்த ஆதினி நிச்சயமாக இவளில்லை. இந்தச் செயற்கையானச் சிரிப்பு , செயல்களிலிருந்து விலகி நிற்கும் சிந்தை , எதையோ இழந்து விட்டாற்போன்ற கவலைப் பூசிய முகம் என்பனவாகவெல்லாம் இவளிருப்பது இந்த அரை மணி நேரமாகத் தான். பரிதி; அவள் தான்; இதோ எங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கும் தாரகை எங்கே எங்கே என்று எவ்வியைக் கேட்கச் சொல்லிக் கொண்டிருக்கிறாளே அதேப் பரிதி தான் அந்தப் பழைய ஆதினியை விழுங்கி விட்டவள்.

            நான், ஆதினி , எங்கள் எதிரில் நின்றுகொண்டிருக்கும் தாரகை , பரிதி , இனியா , எயினி எல்லோரும் மூன்றாவது முறையாக இந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா வந்திருக்கிறோம். இனியாவிற்கு பயணிக்கத் தேவையான அளவிற்கு மகிழுந்தைச் செலுத்தத் தெரியும். பரிதி நன்றாகவே ஓட்டுவாள். ஆதினிக்கு வித்தையெல்லாம் கூடக் காட்டத் தெரியும். நேற்று வந்துகொண்டிருக்கும் போது மலைப்பாதைத் தொடங்க சற்று முன்னதாக, வாகனங்களின் வரத்துக் குறைந்திருந்த சமயமாய்ப் பார்த்து, வேண்டுமென்றே வண்டியை இட வலமாக உலுக்கி எங்களுக்கு பயங்காட்டவெல்லாம் செய்தாள். எவ்வியைத் தவிர நாங்கள் எல்லோரும் பயத்தில் அலறி அவளைக் கடிந்து கொண்டோம். எவ்விக்கு அந்தக் குலுங்கல் பிடித்துப்போய் உற்சாகமடைந்துச் சிரித்தான். பிறகு அந்தச் சிரிப்பிற்காக இரண்டு முறை மீண்டும் வண்டியை ஆட்டி விளையாட்டுக் காட்டினாள் ஆதினி.

போன முறை நாங்கள் இந்தச் சுற்றுலா வந்திருந்த போது தாரகைக்குக் கல்யாணம் ஆகியிருந்ததேயொழிய எவ்விப் பிறந்திருக்கவில்லை. அதே மாதிரி பரிதியும் , புவியும் காதலித்துக்கொண்டிருந்தார்களேயொழிய அவர்களுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. புவி ! அவனை இப்போது நினைக்கும்போது கூட ஏக்கமாயிருக்கிறது. ஆனால், அவன் பரிதியை நினைத்தல்லவா ஏங்கியிருக்கிறான். என்ன செய்ய ?

கல்லூரிக்காலங்களில் புவி நாங்கள் இருக்குமிடமெல்லாம் சுற்றி சுற்றி வருவான்; பரிதியைப் பார்ப்பதற்காக. அதையறிந்த நான் வேண்டுமென்றே பரிதியை அவன் பார்வைக்கு மறைத்து இடைநின்று கொள்வேன். நான் என்ன மறைத்து என்ன பயன் ? அவர்கள் தான் காதலித்துத் திருமணமே செய்து கொண்டனரே.  அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கியிருந்த போதிலும் கூட, நான் புவியைக் காதலித்துக் கொண்டுதானிருந்தேன்; ஏன் இப்போது கூட… இது யாருக்கும் தெரியாது. இல்லை. இதோ என் பக்கத்தில் மலையை விழுங்கிவிட்டவள் போல நின்று கொண்டிருக்கிறாளே ஆதினி, இவளுக்கு மட்டும் தெரியும். என்னது என்று மட்டுமல்ல. எங்கள் ஐந்து பேருக்கும் தனித்தனியே நெருக்கமானவள் என்ற முறையில், எங்கள் எல்லோருடைய அந்தரங்கங்களும் இவளுக்குத் தெரியும்.

 இரவு ஏறத்தாழ சொல்லியே விட்டாள் இந்த மூதேவி ஆதினி. நேற்று நேராக நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த இந்த விடுதிக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இருட்டி விட்டது. எவ்வியைத் தூங்க வைத்து விட்டு, திட்டத்தின் படியே இங்கு மூட்டப்பட்ட நெருப்பைச் சுற்றி நாற்காலிகளாகப் போடப்பட்டிருந்த மரத்துண்டுகளில் அமர்ந்து நாங்கள் ஆறு பேரும் பேசத் தொடங்கினோம்.

ஆதினிக்கு எப்போதும் ஒருவர் வேண்டும். அவள் எள்ளி நகையாட;  எங்களில் ஒருத்தியை ஒரு மலர் போல எடுத்துக் கொள்வாள், ஏதாவதொரு நிகழ்வை – பெரும்பாலும் நடந்ததாகவே இருக்கும் அப்படி அவசரத்திற்கு சிக்காவிட்டால் அவளாகவே ஒன்றைப் படைத்து அந்நிகழ்வை நாராக்கி எங்களை அந்நிகழ்வுடன்  கோர்த்துக் கட்டி எப்படியாவது எங்களைச் சிரிக்க அடித்து விடுவாள். தேவைப்பட்டால் அவளையே கோமாளி ஆக்கிக் கொள்ளவும் தயங்க மாட்டாள். சுருக்கச் சொன்னால் எங்கள் குழுவிற்கு அரசியும் ஆதினியே; விகடகவியும் ஆதினியே; 

 நேற்று இரவு எரிபொருள் முச்சூடும் தீர்ந்து திடீரென நின்று விட்ட வண்டி மாதிரி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த எங்கள் வாய்கள் ஓய்ந்து ஒரு அமைதி வரவே, பரிதிக்கு அருகிலமர்ந்திருந்த ஆதினி எதிரிலிருந்த என்னைப் பார்த்து, ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி இப்போது பார் என்பது போல் சமிக்கைக் காட்டிவிட்டு ,

“ ஏன்டி பரிதி புவியையும் கூட்டீட்டு வந்திருக்க மாட்ட அவன் வந்திருந்தா இங்கச் சில பேருக்கு வசதிஆ… ” அவள் வசதிக்கேற்ப இழுத்துக்கொண்டு,  “இருந்திருக்கும்” என முடித்தாள். 

“ பொண்ணுங்க மட்டும் வந்திருக்க உலாவுல பையனுக்கு என்னடி வேல?” இது பரிதி.

“அது தாண்டி நானும் சொல்றன். ஒரேப் பொண்ணுங்களா இருக்கமே ஆம்பளத் தொண இருந்தாச் சிலருக்குத் தெம்பாயிருக்குமேனுதா”,  மீண்டும் ஆதினி.

“அதுக்குத் தான் எவ்வி இருக்கானேடி”,  இது நான்தான்.  “அது என்ன சிலருக்கு மட்டும்” எனப் பரிதி கேட்பதற்குள் அந்தப் பேச்சின் பொருளை மடைமாற்ற எண்ணி ஒரு நகைச்சுவையைப் போட்டேன். அந்தப் பல் முளைத்திராத நகைச்சுவைக்கும் எயினி  சிரித்து விடவே, ஆதினி அவளைப் பிடித்துக் கொண்டாள். இப்படியே ஒருவர் மாற்றி ஒருவரென எல்லோரையும் சீண்டி சிரிக்கவைத்துக் கொண்டு,  நேற்றைய இரவையே உயிர்ப்புடன் வைத்திருந்தவள் என் அருகில் நிற்கும் இந்த ஆதினி தான். பொறுத்துக் கொள்ளவும்; இவளல்ல அரை மணி நேரத்திற்கு முன்புவரை இதே உடலில் இருந்த அந்த ஆதினி.

ஏதோ ஒலிப்பான் சத்தம் கேட்கிறதே. எங்கள் மகிழுந்தல்ல; பரிதி இன்னும் வரக்காணோம். உடலை நெட்டி முறித்தபடி வெளியே வந்த இனியா எங்களைப் பார்த்துக் கேட்டாள், “அவளெங்கடி?” என்று;  பரிதியை. பரிதியைத் தான் எல்லோரும் கேட்கிறார்கள். போகும்போது மூன்று பேராக மகிழுந்தில் போய் விட்டு, இரண்டு பேர் மட்டும் மகிழுந்தில்லாமல் திரும்பி வந்தால் கேட்காமலாயிருப்பார்கள் ?

“வராடி” என்றேன் அவளுக்கும் ரொம்ப நேரமாக எவ்வியைக் கேட்கச் சொல்லிக் கொண்டிருக்கும் தாரகைக்கும் சேர்ந்தாற்போல்.

அரை மணி நேரத்திற்கு முன்னர் இனியா , தாரகை, எயினியை நான் அழைத்தபோது அவர்கள் வர மறுத்துவிடவே, நான் , பரிதி, ஆதினி மூன்று பேர் மட்டும் அருகிலிருந்த தேநீர்க் கடைக்குப் போய் வரலாமென்று மேலே நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்தை எடுத்துக் கொண்டு போயிருந்தோம். இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான வீடுகளுக்கு மேற்புறம் தான் சாலையை ஒட்டியபடி ஊர்தி நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது; அதற்குக் கீழே இடவாகிற்கேற்ப வீடு. இந்தச் சாலையில் எங்களுடையதைப் போல உலா வருவோர்களுக்கென்றிருந்த விடுதி வீடுகள் எல்லாம் இதே அமைப்புத்தான். 

போகும்போது பரிதி வண்டியை ஓட்டினாள். திரும்பும் போது ஆதினி; நாங்கள் தங்கியிருக்கிற இந்த விடுதி வீடு கண்ணுக்கெட்டிய தூரம் வந்தாகிவிட்டது. சாலையில் நாங்கள் வந்து கொண்டிருந்த திசையின் படி இடதுபுறத்தில் ஒரு சிறு மேட்டில் தேவாலயம் ஒன்று இருந்தது. பாதிரியார் ஒருவர் அந்தத் தேவாலயத்திற்கு போவதற்காக இடதுபுறம் சாலையோரம் நடந்து கொண்டிருந்தார். எங்கள் மகிழுந்து அவரை அனுகிய போது, இடதுபக்கச் சக்கரங்கள் இரண்டும் ஒன்றையடுத்து ஒன்றென ஒரு சிறிய பள்ளத்தில் ஏறி இறங்க, ஆதினி மகிழுந்தைச் செலுத்திய வேகத்திற்கு அந்தப் பள்ளத்தில் தேங்கி நின்ற சேற்றுநீர் தெறித்து, அந்தப் பாதிரியார் மேலேயே விழுந்து விட்டது. “ஏய் ” , நானும், பரிதியும் ஒரு சேர ஆதினியைக் கத்தினோம். “ஏன்டீ தொறக்குறீங்க? அவரு ஒதுங்கிப் போகாமப் போனா நா என்னப் பண்றது?”. இவள் கவனியாது குழியில் ஏற்றிவிட்டு ஏற்கனவே ஓரமாய்ப் போய்க்கொண்டிருந்தவரைக் குற்றம் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. ஆத்திரமாக வந்தது இவள் மேல்.

            “நிறுத்துடீ  வண்டிய… , பரிதி கத்தினாள்.

“ஏய் நிறுத்தேன்டீ…”, இவள் மகிழுத்தை நிறுத்தாததால் மீண்டும் கத்தினாள்.  

“நிறுத்துறயா இல்லயா இப்ப?”, பரிதி இம்முறைக் கத்தும்போது இந்த விடுதியே வந்திருந்ததால் ஆதினி மகிழுந்தை நிறுத்தினாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பரிதி உரக்கச் சத்தமெழக் கதவைச் சாத்திவிட்டு, ஆதினி கீழே இறங்கியதும் அவள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, “நீயெல்லாம் சோத்தத்தான் திங்குறியா? இல்ல வேற எதாச்சுமா?” என ஆதினியைப் பார்த்துக் கோபமாகத் திட்டிவிட்டு அந்தப் பாதிரியார் இன்னும் நின்று கொண்டிருக்கும் அவ்விடத்திற்கு மகிழுந்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.

“உன்ன ஒருக் கம்பம்னு நெனச்சி ஒன்னுக்கிருந்துட்டு நாய் அதுப்பாட்டுக்கு போச்சின்னா உனக்கு எப்பிட்றி இருக்கும்?”, எனப் பரிதிக்கு இணையாக இவள் மேல் ஆத்திரத்தீ கனன்று கொண்டிருந்த எனக்குக் கேட்க வேண்டுமிருந்தது. ஆனால்,  ஒன்றுமே சொல்லாமல் இவளுடனேயேக் கீழே வந்து நின்று கொண்டிருக்கிறேன். இத்தனைக் கோழைத்தனமா எனக்குள்? இப்போது கூட தலையைத் திருப்பி இவளிடம் நீ செய்தது தவறென்று சொல்லிவிடலாம்தான். அதற்குத் துணிவு வேண்டுமே… பாம்பைப் பிடிக்கிறத் துணிவு; போருக்குப் போகிற துணிவு; மனதில் பட்டதைச் சொல்லுகின்ற துணிவு; பரிதிக்கு இருப்பது மாதிரித் துணிவு வேண்டும். ஆனால் எனக்குள்… இவள் விரும்பாததைச் சொல்லி விட்டால் காணச்சகிக்காத, கசப்பை விழுங்கிவிட்டப் பிறகான  இந்த முகத்தை என்னிடமும் காட்டுவாளென்ற அச்சம்; குற்றத்தைச் சுட்டி விட்டால் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு, விட்டு விலகி விடுவாளோவென்ற எண்ணம் தரும் பலவீனம்; தேவையில்லாததைச் செய்து எங்களுக்குள் நிலவும் நல்ல நட்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் எப்போதும் வசதியானச் சூழலை விரும்பும் உணர்வு. நல்ல நட்பா ? எது இதுவா? இவள் தரும் இனிப்புகளையெல்லாம் வாங்கித் தின்று கொண்டு, என்னிடம் இவளுக்குத் தருவதற்குக் கொங்சம் காரம் இருக்கையில் அதைத் தரத் துணிவின்றி என் கைகளுக்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்கிற, அடிப்படைச் சுதந்திரம் கூட இல்லாத இதுவா நல்ல நட்பு ?

மேலே மகிழுந்து வந்து நிற்கும் அரவம் கேட்கிறது. எங்கள் மகிழுந்து தான் இது. பரிதி தான். வந்து விட்டாள் போலிருக்கிறது. நாங்கள் குடிப்பதற்காக விலைக்குக் கிடைக்கும் குடிநீரை மகிழுந்தின் பின்னால் வாங்கிப் போட்டு வந்திருந்தோம். அதைப் பயன்படுத்தி அவரைக் கழுவிக் கொள்ள செய்து விட்டு வந்திருக்க வேண்டும். மேலும், ஆதினிக்காகப் பொறுக்க வேண்டுமெனச் சொல்லியும் வந்திருப்பாள் என நினைக்கிறேன்.

கதிரவ உதயத்தை நிழற்படம் பிடிக்க வேண்டி, கிழக்கைப் பார்த்தபடி நாங்கள் கொண்டு வந்திருந்த புகைப்படக்கருவியை நிறுத்தியில் கச்சிதமாகப் பொருத்தி வைத்து விட்டு, அந்த எழிலை நாங்களெல்லோரும் அமர்ந்து பார்த்துச் சுவைக்கும்வண்ணம் நாற்காலிகளை எடுத்து வெளியே போட்டு ஆய்த்தப்படுத்திக் கொண்டிருந்த எயினி, படிகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்தப் பரிதியைப் பார்த்து,

            “சரியா வந்துட்டடீ. வாங்கடீ எல்லோரும் சீக்கிரம். சூரியன் வர ஆரம்பிச்சிடிச்சி… மெது மெதுவா… ” என்றாள்.

பரிதி வந்தாள் – சூரியன் வந்தது. பரிதி வந்தாள் – ஒளி வந்தது. உறைந்து கிடந்த என் தோலுக்கு பரிதி வந்ததால் ஏற்பட்ட சொரணை, என் அறிவுக்கும் வந்ததோ என்னவோ,  “ஏன்டீ மதி ஆதினிக்கு நீ தா நல்லத் தோழிங்கறதுனால, பரிதியப் பாதியிலக் கழட்டி விட்டுட்டு வந்துட்டீங்களேடீ?” என்று தாரகை என்னைப் பார்த்து வேடிக்கையாகக் கேட்டதற்கு, “ஆதினிக்கு நானில்லடீ. பரிதி தா நல்லத் தோழி” என்று உடனேச் சொல்லி விட்டேன்.  

என் பெயர் சு.விஜய். வால்ராசாபாளையம் என்னைப் பெற்று  வளர்த்த ஊர். வால்ராசாபாளையம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் தண்ணீர்பந்தல் பாளையம் ஊராட்சியில் உள்ளது. தற்போது தண்ணீர்பந்தல் பாளையத்தில் வசித்து வருகிறேன். நான் கணினிப் பொறியியல் பட்டதாரி. கோவையில்  ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். புத்தக வாசிப்பின் மீது ஆர்வமுள்ள நான் சமீபத்தில்  ” உடையும் சங்கிலி ” என்ற சிறுகதை ஒன்றை எழுதி இருக்கிறேன். எனது நண்பர் ஆரவ் எனக்கு நடுகல் பக்கத்தை அறிமுகப் படுத்தி என் படைப்பை அனுப்ப ஊக்குவித்ததால் நான் என் படைப்பை நடுகல் இணையதள பக்கத்திற்கு அனுப்ப முன் வந்துள்ளேன். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *