பாரிஸ் டவருக்கு போகலாமா ?

பல ஆண்டுகள் கழிந்திருந்தன. மீண்டும் பேருந்தில் செல்கிறேன். பேருந்து என்பதை விட பஸ் என்ற பிரயோகமே மனதிற்கு பிடித்திருக்கிறது. ‘பஸ்ஸு’ என்ற அறிமுகம்தான் முதன்முதலில் எங்களுக்கு ஏற்பட்டது. அதன் பின் பேருந்து என்று பாட நேரத்தில் எழுதினாலும் பஸ் என்றே சொல்ல விரும்புகிறேன். பஸ்ஸில் வரும் அந்த ஸ்ஸூ சத்தம் நாக்கை ஏதோ செய்கிறது. 

இங்கு ‘பஸ்ஸு’கள் பலவிதமானவை. நீல வண்ணத்தில் நீண்டதாகவும் குட்டியாகவும் இருப்பது தொழிற்சாலை ‘பஸ்ஸு’ . மஞ்சள் வண்ணத்தில் நீண்டதாகவும் குட்டியாகவும் இருப்பது பள்ளி மணவர்களின் ‘பஸ்ஸு’. வெளி தோற்றமே ஆடம்பரமாக இருப்பது எக்ஸ்பிரஸ் ‘பஸ்ஸு’. பார்ப்பதற்கு சுமாராகவும் பயணிக்கவும் சுமாராகவும் இருந்தால் அது குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டும் போய் வரக்கூடிய லோக்கல் ‘பஸ்ஸு’.

முன் கண்ணாடியில் குல தெய்வங்களின் பெயர்களோ தாம் கும்பிடுகின்ற கடவுள்களின் படங்களோ ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டிருந்தாலனது ஏதோ பக்திமானின் ‘பஸ்ஸென்று பொருளல்ல. அதே சமயம், உயிருக்கு உத்திரவாதம் உண்டென்றும் சொல்வதற்கில்லை. அது தமிழரின் ‘பஸ்ஸு’. இந்து யார் தமிழன் யார் என்றெல்லாம் அங்கு சென்று கேள்வி கேட்டு பட்டிமன்றமெல்லாம் நடத்தக்கூடாது. அப்பறம் நாம் டயருக்கு இரையாகவும் வாய்ப்புள்ளது.

ஜன்னல்கள் திறந்தமரும் நாற்காலிகள், கொடுத்து வைத்தவர்களுக்கும் இதற்கு முன் வாந்தி  எடுத்து வைத்தவர்களுக்கும் உடனே கிடைத்துவிடும். மற்றவர்களெல்லாம் பாவப்பட்டவர்கள் அவர்களின் வாழ்நாளில் ஒரு முறை கூட ஜன்னல் நாற்காலிகள் கிடைத்ததேயில்லை. ஜன்னலோரத்தில் அமர்ந்துக் கொண்டு ஜன்னலை திறக்காமலேயே வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கும் மயிர் கலையாதவர்களை, ‘மயிருங்க’ என்றே நாம் சபிக்கலாம். அவர்களுக்கு விளங்காதவரை நமக்கு  ஆபத்தில்லை.

ஜன்னல் நாற்காலிகளின் சண்டைகளுக்கு தீர்வாக வந்தது குளிர்சாதன வசதி கொண்ட பஸ்ஸுகள். முதன் முதலில் குளிர்சாதன பஸ்ஸுகளில் போனவர்களின் வாந்தி நாற்றம் பல நாட்களில் இருந்ததாக சில பாவப்பட்ட பஸ்க்காரர்கள் சொன்னார்கள். நம்மவர்களிடம் என்ன பிரச்சனைன்னா ஒருத்தன் ஏதோ காரணத்தோட வாந்தி எடுப்பான் இன்னொருத்தன் இவனை பார்த்தே வாந்தி எடுப்பான். குளிர்சாதன பஸ்ஸுகள் நவீன சிறை போலவே பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் அமைந்தது. ஜன்னல் காற்று உள்ளே வராதா என்கிற ஏக்கத்திலேயே அவர்களுக்கு மூச்சடைக்கும்.

அது திறந்த ஜன்னல் அல்ல, திறக்காத கண்ணாடியென்று மறந்த பாட்டிகள் ,பேச்சு சுவாரஸ்யத்தில் கண்ணாடியில் வெற்றிலை எச்சிலை துப்பிய கதைகள் சில உண்டு. பஸ்க்காரர்கள் வெற்றிலை வாய்களை பரிசோதித்தே டிக்கட்டுக்ளை கொஞ்ச நாள் கொடுத்து வந்தார்கள். குளிர்சாதன பஸ்க்காரார்களுக்கு பணப்பிரச்சனை ஏற்பட்டிருக்க வேண்டும். டிரைவரை மட்டும் வைத்துக்கொண்டு டிக்கட் கிழித்தவரின் சீட்டை கிழித்துவிட்டார்கள். ஒரே நாளில் பணக்காரர்களாகி டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் குட்டி பணம் புடுங்கி மிஷினை வைத்துவிட்டார்கள்.

அது பணத்தை முழுங்கி டிக்கட்டுகளை கக்கியது. முதலில் சங்கடமாகத்தான் இருந்தது. கக்கிய டிக்கட்டை வாங்க மறுத்தவர்களுக்கு, அது வெறும் டிக்கட்தான் என்று டிரைவர்தான் ஒரு வாரமாக ’டெமோ’ காட்டினார். இருந்தாலும் டிக்கட்டுகளை முகராமல் யாருமில்லை. ‘குட்டி குரா’ பவுடர்தான் டிக்கட்டுகளை காப்பாற்றியது. வாசனையான டிக்கட்டு என்று டிக்கட்டுகளை சிலர் புத்தகங்களுக்கு நடுவிலும் வைத்ததும் உண்டு. கொஞ்ச நாள் குட்டி போடாத மயில் இறகுகளைவிட குட்டி குரா வாசனை புத்தக நடுக்களில் நிரம்பின.

இன்று, பஸ்ஸில் ஆட்கள் அவ்வளவாக இல்லை. தைரியமாக இரண்டு பேர் அமரக்கூடிய நாற்காலியில் மிகுந்த தாராளமாக அமர்ந்துக் கொண்டேன். ஜன்னல் ஓரம். தனியாய் இருக்கையில், வேறென்ன வேண்டும். சில தொல்லைகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடும் என்பதை அப்போதுதான் கண்டுகொண்டேன். காலியான இருக்கைகள் அத்தனையிருக்க என் பக்கம் வந்து நின்றார் ஒருவர். அதிர்ச்சியுடன் பார்க்க, நகருங்க தம்பி என்று, நகர்வதற்குள் உட்கார ஆயுத்தமானார்.

ஆள் வாட்டசாட்டமாக இருப்பதாலும் இன்று சனிக்கிழமை என்பதாலும் நான் வம்பு செய்யவில்லை. சனிப்பிணம் தனிப்பிணமாகாதுன்னு சொல்லுவாங்க, அவர் கூட நானோ அல்லது என் கூட அவரோ பிணமாகிடுவோமோன்ற பயம் வந்துப்போனது.

“என்ன தம்பி இவ்வளவு இடமிருக்கு இங்க வந்து உட்காரறேன்னு தானே யோசிக்கறிங்க..”

“இல்லைங்க அப்படியெல்லாம் யோசிக்கலைங்க..”

“ஓ.. அதை யோசிக்கலைன்னா வேற என்ன யோசிக்கிறிங்க.. தம்பி “

“இல்லங்க ஒன்னுமில்ல..ஒன்னும் யோசிக்கலை…”

“என்ன தம்பி நீங்க .. இந்த வயசுதான் நீங்க யோசிக்க வேண்டிய வயசு.. இப்ப யோசிக்கலைன்னா எப்ப யோசிக்கப்போறிங்க..”

சம்பந்தமில்லாத அந்த பேச்சு, கடுப்பைக் கொடுத்தது. கோவம் கொண்டு கைகடிகாரத்தில் மணி பார்ப்பதுபோல இன்று உண்மையில் சனிக்கிழமைதானா என ஒரு முறை பார்த்துக்கொண்டேன். சனிக்கிழமைதான். என்னமோ நடக்கவிருப்பதாக என் மனம் சொல்லிக்கொண்டே வியர்வையை வரவைத்தது. எப்படி சமாளிப்பது என யோசிக்க நேரமில்லை. எப்படி தப்பிப்பது என்றே யோசனை சென்றது.

“என்ன தம்பி இப்படி யோசிக்கறிங்க… இது நீங்க யோசிக்கவேண்டிய வயது தம்பி. இப்ப யோசிக்கலைன்னா எப்ப யோசிக்க போறிங்க? வாழ்க்கைல நடக்கற ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு தம்பி. நீங்கள் இந்த பஸ்ஸுல வரிங்கன்னா ஒரு காரணம் இருக்கு, நானும் இதே பஸ்ஸுல வரேன்னாலும் ஒரு காரணம் இருக்கு. இப்படி ஏகப்பட்ட காரணங்கள் ஏவப்பட்டதுதான் வாழ்க்கை. இதையெல்லாம் யோசிக்கனும் தம்பி , யோசிக்கனும். அப்பால் வாழ்க்கையை பத்திய புரிதல் கிடைக்கும். நானெல்லாம் உங்க வயதிலேயே யோசிச்சிருந்தா எங்கயோ போய்ருப்பேன் தம்பி. கொஞ்சம் லேட்டா யோசிச்சிட்டேன். உங்களை பார்த்தா பாவமா இருக்கு. நானும் இப்படித்தான் இருந்தேன். அதுல பாருங்க. இந்த நேரம் காலம் எல்லாம் யெவனுக்கும் நிக்கறதில்லை… அது பாட்டுக்கு போய்க்கிட்டேதான் இருக்கும்.. அதான் தம்பி இப்பவே யோசிச்சிக்கோங்க.. அப்பறம் யோசிக்க நேரமும் இருக்காது நேரத்துக்கு ஏத்த யோசனையும் இருக்காது…. “

என்னால் மேற்கொண்டு அவரின் பேச்சைக் கேட்க முடியவில்லை. எப்படியும் முடித்திடுவார் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது போல பேச்சின் தலைப்பை மாற்றினார்.

“ஆமா தம்பி நீங்க மலேசியாவைவிட்டு வேற எங்கயும் போனது உண்டா…”

பதிலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதவாராக,

“பாரிஸ் டவர் தெரியுமா தம்பி பாரிஸ் டவரு… அதான் தம்பி கம்பிகளை வச்சி ஒயரமா கட்டிருப்பாங்களே அதுதான் பாரிஸ் டவரு .. அங்க போய்ருக்கிங்களா…??”  

பேச்சில் இருந்து அவருக்கும் பாரிஸில் இருக்கும் ஈபில் டவருக்கும் எந்த தொடர்புமில்லை என்ற தெரிந்தது. சட்டென்று அவரின் பிழையை சுட்டிக்காட்டி அவரை அவமானப்படுத்தியிருக்கலாம். அவரும் பேச்சை நிறுத்தியிருப்பார். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. அவரின் பேச்சில் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது.

“அந்த டவருக்கு போகனும்னு ரொம்ப நாளா ஆசை. இந்த ஆசை இருக்கே அதுபத்தி யார் யாரோ என்னென்னமோ சொல்லிருக்காங்க .. ஆனா பாருங்க இந்த ஆசை இருக்கே.. அத்தனை பேருக்கும் அத்தனை விதமா தெரியும். ஒருத்தனுக்கு இருக்கற ஆசை.. இன்னொருத்தருக்கு அல்பமா தெரியும். ஒருத்தனுக்கு அல்பமா தெரியறது இன்னொருத்தனுக்கு அற்புதமா தெரியும். அது தெரியாம ஒருத்தர் ஆசையை துறக்க ஆசைப்பட்டாருன்னு இன்னும் சிலர் ஆசையை வளர்க்க பாடுபடறாங்க… என்னத்த சொல்றது.. இதையெல்லாம் யோசிக்கனும் தம்பி யோசிக்கனும்…”

“அந்த பாரிஸ் டவரு பத்தி பேசினிங்களே இன்னும் முடிக்கல…”

என் ஆர்வத்தை என்னால் அடக்க முடியவில்லை. அவரின் பேச்சில் இருந்த இனம் புரியாத சுவாரஷ்யம் பாரிஸ் டவரில் என்ன கதை இருக்கிறது என சீக்கிரம் தெரிந்துக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும். அதற்குள் பாரிஸ் டவர் குறித்து தெரிந்தேயாக வேண்டும்.

“இருங்க தம்பி இப்படி அவசரப்பட்டா எப்படி… இந்த வயசுல எவ்வளவு வேணும்னாலும் யோசிக்கலாம் ஆனா அவசரப்படக்கூடாது அப்பறம் யோசிக்கிறதுக்கு நேரம் இருக்காது…”

அவரின் கைபேசி ஒலித்தது. கைபேசியை எடுத்தவர். பொறுமை ப்ளீஸ் பாணியில் கண்ணை சுருக்கி தலையை ஆட்டினார் .

“ஹல்லோ சொல்லு கண்ணா.. வந்துகிட்டுதான் இருக்கேன். ஓ… ஆமாவா… அதுக்குள்ளயா… இப்போ எப்படி.. ஓ.. ஓ… சரி சரி வந்து கூட்டிக்க சொல்றாயா… இறங்கிட்டு கூப்பிடவா..”

கைபேசியை வைத்தவர்,

“தம்பி சாரி தம்பி.. அவசரமா இறங்கனும்.. இன்னொரு நாள் பார்த்தா பேசலாம்.”

பஸ்ஸை நிறுத்த மணியை அடித்தவர். ஆழமாக என்னமோ யோசிக்க ஆரம்பித்தார். இறங்க வேண்டிய இடத்தை பேருந்து நெருங்கிக்கொண்டிருந்தது.

“தம்பி இந்தாங்க இது என்னோட போன் நம்பர், மீண்டும் உங்களை பார்த்து பேசனும்..இதுவரைக்கு யாரும் என் பேச்சை இப்படி ஆர்வமா கேட்டதில்ல..”

“கண்டிப்பாக சார்.. மீண்டும் உங்களை சந்திச்சு பாரிஸ் டவர் பத்தி கேட்கனும்”

“தம்பி அது பாரிஸ் டவர் இல்ல.. பாரிஸ்ல இருக்கற ஈபில் டவர். பேசுவோம் தம்பி பேசுவோம். ஆனா நான் இறங்கினதும் நீங்க அடுத்த ரெண்டு ஸ்டாப்புக்குள்ள இறங்கிடுங்க… “

“புரியல சார்”

“அது ஒன்னுமில்ல தம்பி. இந்த பஸ்ஸூல பாம் வச்சிருக்கேன். ஒன்னா சாகனும்னுதான் வந்தேன் ஆனா பாருங்க பிளான்ல சின்ன மாற்றம் இன்னிக்கு நான் சாகல. இன்னொரு இடத்துக்கு போகனுமாம். எப்படியும் அடுத்த பிளானுக்கு வேலை செய்ய ஒரு மாசமாச்சும் ஆகும். அதுவரைக்கும் நீங்க எப்ப வேணும்னாலும் என்னைய கூப்பிடுங்க.. ஈபில் டவரு வெடிக்கிறதுக்குள்ள அந்த கதையை சொல்லிடறேன்.”

பஸ் நின்றது. சிரித்துக் கொண்டே இறங்கத்தொடங்கினார். பஸ் படியிலிருந்து இறங்கும் நேரம் என்னை பார்த்து அவர் சிரித்தார். அது சிரிப்பாக இருக்கவில்லை. பயமூட்டியாக இருந்தது. என்ன சொன்னார், என்னவெல்லாம் சொன்னார், யார் இவர், யாராக இருக்கும் என்று என்னை நானே குழப்பிக்கொண்டேன். ஒருமுறை பஸ்ஸை சுற்றிலும் பார்த்தேன்.

யாரும் இருக்கவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. பஸ் ஓட்டுனரிடம் ஏதும் கேட்கலாம் என எழுந்தேன். அமர்ந்துவிட்டேன். பஸ்ஸில் என்னை தவிர யாருமில்லை. ஒற்றை மனிதனாய் நான் மட்டும் இருக்கிறேன். பஸ் இப்போது வேகமாக செல்லத் தொடங்கியது. அவர் சொன்ன முதல் நிறுத்தம் கடந்தது. அடுத்து இருப்பது ஒரே ஒரு நிறுத்தம்தான். அங்கும் இறங்கவில்லையெனில் அவர் சொன்னது போல பாம் வெடித்துவிடலாம். எல்லாமே தகுந்த திட்டமிடலின் கீழாகதான் நடக்கின்றதா?

நான் யாருக்கான வலையிலேயோ வசமாக மாட்டிக்கொண்டேன். அவர் கொடுத்த கைபேசி எண்ணுக்கு கூப்பிட தோன்றியது. கூப்பிட்டேன். கைபேசி சத்தம் என் நாற்காலி கீழ் இருந்து கேட்கிறது. இப்போது ஆழமாக யோசிக்கிறேன் என் நிறைவேறாத ஆசைகளை……

000

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னால் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். முழு நேர எழுத்தாளரான இவர் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை என்னும் இணைய புத்த அங்காடியையும்  வெள்ளைரோஜா பதிப்பகம் என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *