பெரிய மேகத்தின் விளிம்பில் நின்று கொண்டு பூமியோடு
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது
மழை.
,
இருட்டுகிற வானத்தைப் பார்த்ததும் வீட்டுக்குள் தரதரவென
இழுத்துச் செல்லப்பட்ட
குழந்தைகளின் கூச்சல்
குட்டிக் குட்டி மேகங்கள்
உரசி இடித்ததுபோல்
தாழ்வாரங்களில் ஒலிக்கிறது.
,
நாணல் புதர்களுக்குள்
ஒளிந்துகொண்டு
குருவிகள் மழை வாசம்
முகரத் தொடங்கின.
,
பட்டாம்பூச்சியொன்று
வெகு நேரம் சோகமாக
ஒரே இடத்தில்
அமர்ந்திருக்கிறது.
,
நீர்க் காகங்கள்
தலையை உயர்த்தி
வானத்திடம் ஏதோ பேசின.
,
மழை
இன்னும்
தீவிரமாக யோசிக்கிறது.
,
ஸ்கூல் வாணாம் மா
செப்புக் கைகள்
குவித்துக் கெஞ்சுகிற
குட்டிம்மாக்களின்
அழுகைக்கு இரங்கி
,
சோவெனப் பெருமழை ஒன்று
வந்துவிடும் போல்தான்
தெரிகிறது.
கயல் எஸ்
வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.
கல்லூஞ்சல் (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன.