பலூன் பாப்பா
பலூன் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதை வாங்கி ஊதி, கால்பந்து போன்ற உருண்டையான அதன் வடிவத்தைப் பார்ப்பதிலே உங்களுக்கு ஆசைதானே? எத்தனை வகையான பலூன்கள்! அவற்றிலே எத்தனை எத்தனை! கலர். ஒன்று சிவப்பாக இருக்கும். இன்னொன்று, மஞ்சளாக இருக்கும். குங்குமம் போலவும், பச்சையாகவும் இப்படி எத்தனையோ நிறத்திலே பலூன் உண்டு.
வடிவங்கள்கூட வெவ்வேறு வகையாக இருக்கும். ஊதினால் ஒன்று புடலங்காய் போல இருக்கும். பாம்பு போல ஒன்று. சுரைக்காயைப்போல ஒன்று. பூசணிக் காயைப்போல ஒன்று
நான் இப்போது கதை சொல்லுவது பூசணிக்காயைப் போல இருக்கும் பலூனைப் பற்றித்தான். முதலில் அது சின்னதாக இருக்கும். வாயில் வைத்து ஊதினால் பூசணிக்காயைப்போலப் பெரிதாக வரும்.
நடராஜன் என்று ஒரு பையன் இருந்தான். அவனுக்குப் பூசணிக்காய்ப் பலூன் என்றால் ரொம்பப் பிரியம். அதை வாங்கி மூச்சுப் பிடித்து ஊதுவான். அது கொஞ்சங்கொஞ்சமாகப் பெரிதாகி வரும். முதலில் டென்னிஸ் பந்துபோல் ஆகும். அதற்குமேலே ஊதினால் கால்பந்துபோலப் பெரிதாகும். இப்படி அது உப்பிப் பெரிதாக ஆகிறதைப் பார்த்துப் பார்த்து நடராஜனுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அதை ஒரு நூலால் காற்றுப் போகாமல் கட்டிவிட்டு மேலே தூக்கி வீசுவான். அது காற்றிலே அங்கும் இங்கும் அவன் கைக்குச் சிக்காமல் ஓடும். நடராஜன் சிரித்துக்கொண்டே அதைப் பிடிப்பான். சில சமயம் காலால் மெதுவாக உதைப்பான். அது உருண்டு ஓடும். இப்படி அவன் விளையாடுவான்.
நடராஜனுக்கு மாமா ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் பட்டணத்திற்கு வந்தார். வந்தபோது, ‘மாமா, மாமா, பூசணிக்காய்ப் பலூன் வேணும் – கடற்கரைக்குப் போய் வாங்கி வரலாம்” என்று அவன் கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டான்.
மாமா அப்படியே பச்சை நிறத்தில் ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தார். அதோடு அவருக்குச் சித்திரம் போடவும் தெரியும். சின்னப் பாப்பா சிரிப்பதைப் போலவும், சர்க்கஸ் கோமாளி வாயைப்போலவும் அவர் மையால் அந்த பலூனில் போட்டுக் கொடுத்தார்.
நடராஜனுக்கு ஒரே குதூகலம். அவன் அந்தப் பாப்பாவுக்குப் ‘பலூன் பாப்பா’ என்று பேர் வைத்தான்.
பலூன் பாப்பாவைக் கொஞ்சம் ஊதுவான். அது வாயைத் திறந்து சிரிப்பதுபோலத் தோன்றும். இன்னும் கொஞ்சம் காற்றை உள்ளே ஊதுவான்.
நடராஜன் கால்பந்து அளவுக்குப் பலூனை ஊதினான். பலூன் பாப்பா சிரித்தது. அப்பொழுது நடராஜன்,
“பலூன் பாப்பா பலூன் பாப்பா கோபங்கொள்ளாதே,
பந்தைக் காட்டிலும் பெரிதாய் ஊதேன். வெடித்துப் போகாதே”
என்று பாடிக்கொண்டே ஆடினான். அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
+++
தண்டி மூக்கன்
மணி என்று ஒரு பையன் இருந்தான். அவன் சிறு வயதிலிருந்தே எப்பொழுது பார்த்தாலும் மூக்கை விரலால் நோண்டிக்கொண்டே இருப்பான். “அப்படிச் செய்யாதே – மூக்கில் புண் உண்டாகிவிடும்! அதோடு மூக்கும் பெரிதாகிவிடும்” என்று அவன் தாயார் பல தடவை சொல்லிப் பார்த்தாள். ஆனால், அவன் அந்தப் பழக்கத்தை விடவே இல்லை.
அதனால் அவனுடைய மூக்கு கத்தரிக்காயைப்போலத் தண்டியாக ஆகிவிட்டது. அதைக் கண்ட மற்ற சிறுவர்கள் அவனைத் தண்டி மூக்கன் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பிறகு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. மணி என்ற பெயர் மறைந்துபோயிற்று.
தண்டி மூக்கன் செய்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். அவனுடைய அம்மா, “பசுவுக்கு அகத்திக் கீரை போடு” என்று ஒரு நாள் அவனிடம் சொன்னாள்.
உடனே அவன் அகத்திக்கீரையைப் பறித்து வந்து, ஒரு சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்தான்.
“அடுப்பில் என்ன செய்கிறாய் ?” என்று அம்மா கேட்டாள்.
”அம்மா, அகத்திக்கீரையை வேகவைத்துத்தானே நாம் தின்கிறோம். அதனால் பசுவுக்கும் கீரையைக் கடைந்து போட அடுப்பில் வைத்திருக்கிறேன்” என்று தண்டி மூக்கன் பதில் சொன்னான்.
அதைக் கேட்டு அவன் தாயார் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
ஒரு நாள் தண்டி மூக்கன் பெரிய நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துவிட்டு ‘ஹோ’வென்று அழத் தொடங்கிவிட்டான். தாயார் வந்து, ஏன் அழுகிறாய் என்று கேட்கவே, “அம்மா, இங்கே என் முன்னால் பார். என்னைப் போலவே ஒருவன் இருக்கிறான். அவன் வந்து உன்னை மிட்டாய் கேட்டால், நீ அவனை நான் தான் என்று நினைத்துக்கொண்டு கொடுத்துவிடுவாய். பிறகு எனக்கு இல்லாமல் போய்விடும்” என்று சொல்லி விட்டுத் தேம்பித் தேம்பி அழுதான். அவனுக்கு ஆறுதல் கூறுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
வீட்டிலே பரண்மேலே ஒரு பெரிய அரிசி மூட்டை வைத்திருந்தார்கள். அவன் அதைப் பார்த்துவிட்டு மற்றொரு நாள் அழத் தொடங்கினான். ஏன் அழுகிறாய்? என்று கேட்டபோது, “நான் அந்தப் பக்கமாகப் போகும்போது அது என்மேல் விழுந்து என்னைக் கொன்றுவிடுமே” என்று கதறினான். அந்த மூட்டையைக் கீழே எடுத்து வைக்கும்வரை அவன் அழுகையை நிறுத்தவில்லை.
.இப்படி, அவன் ஒன்றும் அறியாதவனாக இருக்கிறானே என்று எண்ணி எண்ணி அவன் தாய் வருந்தினாள். அந்த வருத்தத்தாலேயே மனம் நொந்து இறந்துவிட்டாள். இறப்பதற்கு முன்னால், “மகனே, உனக்குத் தகப்பனும் இல்லை, நானும் உன்னை விட்டுப் பிரியப் போகிறேன். ஆகையால், நீ யாரையாவது அடைந்து உன் அறிவைப் பெருக்கிக்கொள். அப்பொழுதுதான் நீ வாழ்க்கையிலே முன்னேற முடியும்,” என்று சொல்லிவிட்டு இறந்தாள்.
தாய் இறந்ததும் அவனுக்குத் திடீரென்று மனத்திலே இடி விழுந்ததுபோலத் தோன்றியது. அவன் புரண்டு புரண்டு அழுதான். பிறகு அறிவு தேடவேண்டும் என்ற உறுதியோடு புறப்பட்டான்.
தண்டி மூக்கு தனக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்து அவன், ‘வேலை வேணும், தண்டி மூக்கு வேண் டாம்” என்று சொல்லிக்கொண்டே அலைந்தான்.
ஓர் ஊருக்குப் போனபோது அங்கிருந்த பெரியவர் ஒருவர் அவனைப் பார்த்து இரக்கங்கொண்டு, அவனிடம் பல கேள்விகள் கேட்டார். தண்டி மூக்கன் அவனுடைய வாழ்க்கையை அவரிடம் சொல்லிவிட்டு அழுதான். அவனுக்குப் பசி பொறுக்க முடியவில்லை. அதை அறிந்த அந்தப் பெரியவர் அவனுக்கு உணவு தந்தார். பசி தணிந்தவுடனே அவனுக்குப் புதிய உற்சாகம் வந்து விட்டது.
“தண்டிமூக்கு வேண்டாம் சாப்பாடு வேண்டுமே
மூக்கு வேண்டாம் மூளை வேண்டுமே”
என்று பாடிக்கொண்டே ஆடத் தொடங்கினான்.
அவனுக்கு நல்ல வேடிக்கை செய்யும் திறமை இருப்பதை உணர்ந்து, அவனை ஒரு சர்க்கஸில் கோமாளியாகச் சேர்த்துவிட்டார் அந்தப் பெரியவர். கொஞ்ச நாளில் அவன் பெரிய பபூன் (கோமாளி) ஆகிவிட்டான். அவன் தன் தண்டி மூக்கின்மேலே களிமண் உருண்டையை வைத்து, அதற்கு வர்ணம் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்தாலே எல்லோரும் கைதட்டுவார்கள்; சிரிப்பார்கள். மேலும் அவன் நல்ல வேடிக்கைகள் செய்வான். அதனால் அவனை எல்லோரும் புகழ்ந்தார்கள். சர்க்கஸ் கம்பெனிக்கு அவனால் நிறைய வரும்படி கிடைத்தது. அவனது தண்டி மூக்கே இப்பொழுது அவனுக்கு பெரும் புகழ் வரும்படி செய்வதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தான். அவன் ஒன்றுந் தெரியாத பழைய தண்டி மூக்கன் இல்லை. இப்பொழுது அவன் வேடிக்கை செய்வதில் புதிய புதிய முறைகளை நாள்தோறும் கற்பனை செய்வான். அதற்கு அவனுடைய தண்டி மூக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
+++
நன்றி :- மஞ்சள் முட்டை –குழந்தைகள் தின வெளியீடு -1977 சிறுகதை தொகுப்பிலிருந்து.