”ஏ…உள்ள வாப்பா….ஏட்டையா வந்துட்டாரு பாரு. போய் உன் கம்ளெய்ண்ட சொல்லு”

”……” 

“சொல்லுப்பா. என்ன பிரச்ன ?”

“சம்சாரத்த காணங்கையா…”

“யாரு சம்சாரம் ?”

“எஞ்சம்சாரந்தானுங்க !”

“ம்….அப்படி தெளிவா சொல்லு. புரியுதா ?”

“சரிங்கையா”

“சொல்லு. உன் பேரென்ன ?”

”ராமனுங்க”

“ரா….ம….ன்….- வயசு ?

“42ங்க…”

“ஊரு…..?”

“இங்கதாங்க….வாய்க்காமேட்டுல இருக்கறனுங்க”

“உஞ்சம்சாரத்து பேரு…?”

“லட்சுமிங்க”

“வயசு ?”

“32ங்க..”

“கொழந்தைங்க இருக்கா….?”

“இருக்குதுங்க”

“எத்தன ?”

“ரண்டுங்க”

“எத்தனாவது படிக்குதுங்க ?”

“அஞ்சாவதுங்க”

“ரண்டுமே அஞ்சாவதுதான் படிக்குதா ?”

“ஆமாங்க.  ரட்டப்புள்ளைங்க”

“ஓ….”

“சரி நீ என்ன பண்ற ?’

“பழய இரும்பு யேவாரம் பண்றங்கையா”

“கட வெச்சிருக்கியா ?”

“இல்லீங்கையா. வண்டில ஊரு ஊரா போய் யேவாரம் பண்றங்க”

“ஓ….சரி, உஞ்சம்சாரம் என்ன பண்ணுது? அதும் வேலைக்கு எதும் போவுதா ?”

“இல்லீங்கையா. ஊட்லதான் இருந்துச்சுங்க” 

“சரி…எப்ப இருந்து காணம்?”

”போனவாரம் வெள்ளிக்கெழமைல இருந்து காணங்கையா”

“தேதி தெரியுமா?”

“தேதி…….18ங்கையா. நா சாயந்திரம் ஊட்டுக்கு வந்து பாத்தப்ப புள்ளைங்க மட்டும் தான் இருந்துச்சுங்க. ’அம்மா எங்க’ன்னு கேட்டதுக்கு, ’தெரிலப்பா’ன்னு சொல்லுச்சுங்கையா”

“சரி….எதனால காணாம போச்சு? சண்டகிண்ட போட்டியா?

“இல்லீங்கையா”

“தண்ணி போடுவியா?”

“ஐயா….அது…..”

“சும்மா சொல்லுயா. யாரு குடிக்காம இருக்கா இப்ப!?”

“எப்பவாச்சும்  விசேசம்னா, ஒரு நல்லது கெட்டதுன்னா போடுவனுங்க”

“தண்ணி போட்டுட்டு சம்சாரத்த அடிச்சுகிடுச்சு தொந்தரவு பண்ணுவியா?”

“அதெல்லாம் இல்லீங்கையா. நாம்பாட்டுல சாப்ட்டு படுத்துருவனுங்க”

“சரி….வேறென்ன பிரச்ன? வீட்ட விட்டு போறளவுக்கு..!?”

“ஐயா….அது வந்துங்க……”

“சொல்லுயா”

“வேறொரு ஆளுகூட பழக்கமாகிடுச்சுங்க….”

“யாருக்கு? உனக்கா….?”

“ஐயா…எனக்கில்லீங்க; எஞ்சம்சாரத்துக்குங்க…!”

”ஓ….ஆளு யாருன்னு தெரியுமா?”

”தெரியும்ங்க. பக்கத்துல, குறிக்காரம்பாளயத்துக்காரந்தானுங்க”

“ஓ…அந்தாளு என்ன பண்றான்?”

“அவன் மார்கெட்ல வெங்காயம் விக்கறானுங்கையா” 

“ஓ….கடைக்கு போகவர பழக்கமாயிருச்சா?”

“இல்லீங்கையா. அதெல்லாம் எங்கயும் போவாதுங்க. ஊட்டு செலவெல்லாம் நா வாங்கியாந்து போட்ருவனுங்க”

“அப்புறம்….!?”

“வெள்ளிகெழமையானா நம்ம மாரிம்மங்கோயிலுக்கு போவாளுங்க. அங்க பழக்கமாயிருக்கும்போலருக்குங்க!”

“ஓ…! உனக்கு முன்னாடியே தெரியுமா?”

”இல்லீங்கய்யா. இதே, அவ அத்தமகஞ்சொல்லித்தான் தெரியும்ங்க!”

”ஓ….யாரு அத்த மகன்? அவரு எங்கருக்காரு?”

“அது, எம்மாமனோரோட அக்கா பையனுங்க. வண்டிக்காரம்பாளயத்துல இருக்கறாங்க”

“ஓ….சரி உஞ்சம்சாரம் வெங்காயம் விக்கறவன் கூடத்தான் போயிருச்சுன்னு எப்படி சொல்ற?”

“ஐயா….அவ காணாம போனன்னிக்கு சாயந்திரம், நா ஊட்டுக்கு வந்து பாத்துட்டு, அவள காணாம்னு புள்ளைங்க சொன்னதும், அதுங்களையும் கூட்டிட்டு எம்மாமனாரு ஊட்டுக்கு போனனுங்க. அங்க போய் கேட்டதுக்கு அங்கெல்லாம் அவ வரல்லன்னாங்கையா.

சரி என்ன பண்றதுன்னு தெரியாம, கொழந்தைங்கள அங்கயே எம்மாமியாகிட்ட உட்டுட்டு, நானும், எம்மாமனாரும் வண்டி எடுத்துகிட்டு புங்கம்பாடி வாய்க்கால்லயும், ரயில்வே  பாலத்துக்கு கிட்டயும் போய் தேடுனம்ங்க. ஆனா, அவ கெடைக்கலீங்க. சரி என்ன பண்றதுன்னு தெரியாம மறுபடியும் நாங்க ஊட்டுக்கு வந்தப்பதான், அவ அத்த மகன் சென்னியப்பன் எனக்கு போன் பண்ணி, ’லட்சுமி, அந்த வெங்காயம் விக்கிற செந்திலு கூட போய்ட்டா’ன்னு  சொன்னானுங்கையா. அதுமட்டுமில்லாம ’என்னைய தேடிட்டு வந்தீங்கன்னா தற்கொல பண்ணிக்குவேன்’னும் சொன்னாளாம்ங்கையா” 

“பார்றா….! அப்புறம்….?” 

”அதுக்கப்பறம் நாங்க மூனு பேரும் சேந்து, பழனி, திண்டுக்கல் வரைக்கும் தேடிட்டோம்ங்கையா. புடிக்க முடிலீங்க”

“ஏய்யா….வெங்காயம் விக்கிறவங்கூட போன உஞ்சம்சாரம், அத எதுக்குய்யா அவ அத்த மகங்கிட்ட கூப்டு சொல்லிட்டு போய் இருக்கு!?” 

“அதா எனக்கும் புரிலீங்கையா”

“ஓ…ஹோ….”

”ஒருவேள, சிறுசுல இருந்து ஒண்ணுமண்ணா வளந்தவீங்க, அந்த பழக்கத்துல சொல்லீருக்கும்னு நினைக்கறங்கையா”

”ஓ…. நீ அப்படீங்கறயா…!?”

“ஆமாங்கையா”

“எனக்கென்னமோ அந்த அத்த மகன் மேல தான் சந்தேகமாயிருக்கு” 

“அப்படி இருக்காதுங்கையா. அவனபத்தி வீட்ல நொட்ட சொல்லு சொல்லிட்டேதானுங்கையா இருப்பா. அதனால அவனா இருக்க வாய்ப்பில்லீங்க. அதும்மில்லாம இவஞ்சொன்னதும், அந்த வெங்காயம் விக்கிறவனோட ஊர் ஆளுங்கள புடிச்சு விசாரிச்சுட்டோம்ங்கையா. ஆளு ஊர்ல இல்லீங்க. அவன் போன் நம்பரையும் வாங்கி பாத்துட்டோம்ங்கையா. அது சுச் ஆப்புன்னு வருதுங்கையா. உறுதியா அவந்தானுங்கையா”

“உஞ்சம்சாரத்துக்கிட்ட போன் இருக்கா?”

“இல்லீங்கையா. அவளுக்கு தனியா போன்லாம் இல்லீங்க. கோயிலுக்கு போறப்ப பழக்கமானதுதாங்க அவங்கூட”

“சரி நீ, அந்த வெங்காயம் விக்கிறவனோட போன் நம்பர் குடுத்துட்டு போ. ரண்டு நாள் கழிச்சு வா. பாக்கலாம்”

“சரிங்கையா”

“இந்தா பேனா, இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு ரசீது வாங்கிட்டு போ. போய்ட்டு நாளன்னிக்கு வா. பாத்துக்கலாம்”

“சரிங்கையா…..வரங்கையா”

”டேய் ரவி, வேறெதும் கேசு இருக்கா வெளிய ?”

“இல்லீங்க ஏட்டையா”

“சரி, டீ சொல்லு” 

“ஏண்டா இந்த கேச கேட்டியா? பக்கத்துல தான உக்காந்திருந்த?” 

“கேட்டங்க ஏட்டையா”

“ நெசமாலுமே அந்த பொம்பள அந்த வெங்காயம் விக்கிறவனோடதான் போயிருப்பாளா? எனக்கென்னமோ அவ அத்த மகன் மேல தான்டா டவுட்டா இருக்கு”

“இல்லீங்க ஏட்டையா.  நூறு சதவீதம் அவ வெங்கயாம் விக்கிறவனோடத்தான் போயிருப்பா”

“சரிடா. அப்படியே இருந்தாலும் அத, அவ அத்த மகங்கிட்ட ஏன் போன் பண்ணி சொல்லிட்டு போகனும்? பேசாம இவபாட்டுக்கு போயிருக்க வேண்டியதுதான ?”

“ஏட்டையா….அந்த பொண்ணுக்கு இவனுங்க ரண்டு பேர் மேலயும் எதோ காண்டு இருக்கும் போல. அதான் அவ அத்த மகன இவனோட கோர்த்துவுட்டு போயிருக்கும்னு நினைக்கிறேன்”

“என்னடா சொல்ற!?”

“ஆமாங்க ஏட்டையா. இப்பல்லாம் யார் மனசுக்குள்ள என்ன இருக்குன்னே யூகிக்க முடியாது. அவங்க மனசுக்குள்ள இருக்குறது அன்பா ? வன்மமா? எதும் தெரியாது. எதோ அந்த பொண்ணால ஆனது, அவங்கள பழிவாங்கிட்டதா ஒரு சின்ன சந்தோஷம் இருக்கும். அவ்ளோதான்!”

“டேய் உளறாதடா !”

“ நீங்க வேணா பாருங்க ஏட்டையா, அந்த பொண்ணு சிக்குனதுக்கு அப்புறம் கேட்டு பாருங்க, அப்ப தெரியும் நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு. இருங்க டீ சொல்லிட்டு வர்றேன்…”

—— 

எனது பெயர் ஜி.சசிகுமார் (ஜியெஸ்கே).

வயது 51. ஈரோடு.

மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரபல நாளிதழ்  ஒன்றில் ஈரோட்டில் செய்தியாளராக பணியாற்றி வருகிறேன்.

இதற்கு முன்னர் குமுதத்தில் எனது ஒருபக்க கதை (வசதி) வெளியாகியுள்ளது.

கதிர்’ஸ் மின்னிதழில் 3க்கும் மேற்பட்ட ஒருபக்க கதைகள் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *