மரபான இசையை ரசிக்கும் பின் நவீனத்துவவாதி

எண்பதுகளில் எழுதத் தொடங்கி தொண்ணுறுகளில் தீவிரமாக இயங்கியப் படைப்பாளிகளுக்கு நவீனத்துவம், பின்நவீனத்துவம் என இரண்டு வகையானக் காலகட்டங்களின் போக்குகளையும், அவற்றின் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டு தங்களுடையப் படைப்புகளைப் புனையும் வாய்ப்பு அல்லது சவால் இருந்தது. இந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் காணாமல் போனவர்கள் அல்லது நவீன போக்கிலேயே தொடர்ந்து இயங்கியவர்கள் ஒருவகை. இந்த சவாலை எதிர்க்கொண்டு தங்களுடைய பின் நவீனத்துவப் படைப்பின் வழியாக தமிழ் இலக்கியச் சூழலில் கவனம் பெற்றவர்கள் மற்றொரு வகை. 

இதில் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். எண்பதுகளின் துவக்கத்தில் எழுதத் துவங்கியவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். தனக்கு முன்னோடிகள் என்று எவறுமில்லை. ஆனால் சிறிய வயதில் எழுத்தாளர் ஜெயகாந்தனையும் பின்பு வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜனையும் பிடிக்கும் என்கிறார். சா. கந்தசாமியின் “தக்கையின் மீது நான்கு கண்கள்”, ராஜேந்திர சோழனின் “சாவி”, சுந்தர ராமசாமியின் “பல்லக்குத் தூக்கிகள்”, “வாசனை” முதலான கதைகள் தனக்கு பிடித்தமான கதைகள் என்றும், வண்ணநிலவனின் “பாம்பும் பிடாரனும்” போர்ஹெஸின் “The approach to Al-Mutasim” லாவண்யா என்பவரின் “The clowns” முதலான கதைகள் தான் அடிக்கடி வாசிக்கும் கதைகள் என்கிறார். 

இதுவரை ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து நாவல்கள், இரண்டு குறுங்கதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “ஒற்றைச் சிறகுகள்” (1982) எதார்த்தவாதத்தைச் சேர்ந்தவை. தனிமனித இருத்தலியல் சார்ந்தப் பிரச்சனைகளை மையப்படுத்தியவை. பிறகு “மறைந்து திரியும் கிழவன்” (1992) என்ற சிறுகதைத் தொகுப்பும், இந்த இரண்டு தொகுப்புகளோடு புதிதாக எழுதப்பட்டச் சிறுகதைகள் அடங்கிய “மாபெரும் சூதாட்டம்”(2005) என்கிறத் தொகுப்பு நூலும் வெளியாகின. இத்தொகுப்புகளில் உள்ள பெரும்பாலானக் கதைகள் பின் நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்டக் கதைகள்.

தொண்ணுறுகளின் துவக்கத்தில் பின் நவீனத்துவம் சார்ந்தக் கோட்பாடுகள் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டு, அது சார்ந்தப் படைப்புகளும் மொழிப்பெயர்க்கப்பட்டன. குறிப்பாக மீட்சி இதழ் வெளியிட்ட ”லத்தின் அமெரிக்கச் சிறுகதைகள்” தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இதன் தாக்கத்திலிருந்து வெளிப்பட்ட படைப்பாளிகள் என கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், தமிழவன், யுவன் சந்திரசேகர், எம்.ஜி.சுரேஷ், விமலாதித்த மாமல்லன், பா.வெங்கடேசன் என்று சில படைப்பாளிகளைக் குறிப்பிடலாம். அவர்களில் ஒருவராக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் இருக்கிறார். “இலத்தின் அமெரிக்க கதைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன. கதை மையமற்று இருக்கலாம், மறைந்து இருக்கலாம், கதையற்ற வரலாற்று எழுத்து மாதிரி எழுதலாம். இந்த முரட்டு குதிரை மீது சவாரி செய்து பார்க்கலாம் என்ற உத்வேகம் தந்தது” என்று பின் நவீனத்துவ எழுத்துக்கள் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து கூறியிருக்கிறார். 

இவருடைய கதைகளில் நான் முதலில் வாசித்தது “திரை” என்ற சிறுகதை. தன் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணோடு உறவு கொள்ள விடுதியறையில் தங்கியிருக்கும் ஆணுக்கு ஏற்படும் பயத்தையையும் குற்றவுணர்ச்சியையும் மார்கேஸின் மேஜிக்கல் ரியலிசப் பாணியில் எழுதியிருப்பார்.

”என்னுடைய கதைகளில் விவரணைகள் இருக்காது. விவரணைகள் இருந்தால் அதை வாசிக்கவே மாட்டேன். ஈடுபாடு இல்லாமல் ஆகிவிடும்” என்பவரின் சிறுகதைகளில் விவரணைகளோடு சூழல் சித்தரிப்புகள், கதை மாந்தர்களின் எண்ண ஓட்டங்கள் என்று எதுவும் இடம் பெறுவதில்லை. அதை திட்டமிட்டே தவிர்கிறார். கதாபாத்திரங்களின் குடும்பப் பின்னணி, அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் என எளிமையும் வசீகரமும் கொண்ட மொழியில் எழுதி அதைச் சமன் செய்கின்றார்.

”ஒரு வரைபடத்தை அளிப்பதே என் வேலை. அது இந்த இடத்துக்குத்தான் போய்ச் சேரும் என்பது எனக்கே திட்டவட்டமாகத் தெரியாது. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவரின் அனுபவத்திற்கும் இயல்பிற்கும் வாசகப் பரப்புக்கும் உகந்ததுபோல் ஓரிடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்” என்று தன் சிறுகதைகளைப் பற்றி சொல்லும் இவரின் பெரும்பாலானக் கதைகளில் முடிவுகள் ஒற்றைத் தன்மையோடு இருப்பதில்லை. இரண்டு, மூன்று, ஐந்து எனப் பல்வேறு முடிவுகள் வாசகர்களின் யூகத்திற்கே விடப்படுகின்றன. இந்த வாசக இடைவெளிகள் நுட்பமானதாகவும், வாசகனைச் சவாலுக்கு அழைப்பதாகவும் அமைவதால் கவனம் பெறுகின்றன.

“விரிந்த கூந்தல்” என்றக் கதையில் அருவியில் தலைவிரித்து நிற்கும் பெண்களின் காட்சியும், தேரின் அடியில் காய்ந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு ஒரு காலை மடித்து மறுகாலை குத்துக் காலிட்டு மணமகள் போல் அமர்ந்திருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்திரம் படிமமாக்கப்பட்ட விதம் “பீஹாரும் ஜாக்குலினும்” என்றக் கதையில் ஜாக்குலினுக்கும் கதைச் சொல்லிக்குமான இணைவுப் புள்ளிகள் விவரிக்கப்பட்ட முறையும் தனித்துவம் வாய்ந்தவை. துப்பாக்கி, லத்தியுடன் தன்னை நோக்கி ஓடி வரும் காவலர்கள் முன்பு ” புத்தரைக் கண்ட, மௌரியர்களைக் கண்ட, அசோகரைக் கண்ட, ஷெர்ஷாவை கண்ட, பின்னர் வங்காள நவாப்பிற்கு சொந்தமாகி 1764 ஆம் ஆண்டு நடைபெற்ற பக்ஸார் போரில் பிரிட்டிஷருக்கு கைமாறி தற்போது சுதந்திர இந்தியாவில் நான் கைகளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தேன்” என்ற வரிகளின் மூலம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றையே ஒரு பத்தியில் சுரேஷ்குமார இந்திரஜித் சொல்லிவிடுகிறார். ” புனைவுகளின் உரையாடல்”, “மாபெரும் சூதாட்டம்”, “மறைந்து திரியும் கிழவன்” முதலான கதைகள் இவரின் படைப்பில் உச்சமானக் கதைகள் எனலாம்.

“மாபெரும் சூதாட்டம்” தொகுப்பிலுள்ள முப்பத்தியொன்பது கதைகள் அவர் பணியில் இருந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை. அதற்குப் பிறகு வெளிவந்த நான்குத் தொகுப்புகளில் உள்ள நாற்பத்து நான்கு கதைகள் பணி ஓய்வுக்குப் பிறகு எழுதப்பட்டவை. பணிக் காலத்தில் பத்து வருட இடைவெளியில் தொகுப்புகள் வெளிவந்துள்ளதையும், பணி ஓய்வுக்குப் பிறகு இரண்டு மூன்று வருடச் சீரான இடைவெளியில் இவருடையத் தொகுப்புகள் வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது. ஒவ்வொருத் தொகுப்பிலும் கதைச்சொல்லல் முறையில் மாற்றம் தெரிகிறது. சம்பவங்களின் அடுக்குகள், குறியீடுகள், வடிவச் சோதனை முயற்சிகள் சற்றே குறைந்து மையத்தைப் பிரதிபலிக்கும் கதைச்சொல்லல் முறை நோக்கி நகர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

தர்க்கமற்ற அபத்தம் (இல்லாஜிகல் அப்ஸர்டிட்டி), தலைகீழ் விஷயங்கள் தன்னுடைய கதைகளின் பிரதானமான மையம் என்கிறார். இவருடைய படைப்புகளைத் தொகுத்துப் பார்க்கும் போது ஆண் பெண் உறவில் இருக்கும் சிக்கல்கள், கணவன், மனைவி என்ற உறவைத் தாண்டி வேறொருவரோடு ஏற்படும் காமம் சார்ந்த பிணைப்புகள், அதனால் ஏற்படும் குற்றவுணர்வுகள், மன நெருக்கடிகள், நட்புக்குள் இருக்கும் துரோகம், பொறாமைகள்,  சமூகத்தில் எப்படியாவது பிழைத்திருப்பதற்காகப் போராடும் எளிய மனிதர்கள், கொலை, குற்றங்கள் செய்த வன்முறையாளர்கள், கவர்ச்சி நடிகைகள், துணை நடிகைகளின் துயரம் நிறைந்த வாழ்க்கை, சாதிய அடுக்கின் மேல், கீழ் நிலையில் இருக்கும் பார்ப்பனர்கள், தலித்துக்களின் சமகால நெருக்கடிகள் எனப் பல்வேறு கதைக் களங்களைப் பேசுகிறன.

0

பத்துக் கதைகள் கொண்ட ”அவரவர் வழி(2009)” தொகுப்பில் மூன்று கதைகளை முக்கியமானதாகப் பார்க்கிறேன். ஒரு திருமணம் அதில் தாலிக்கட்டும் நேரத்தில் மணமகன் ஓடிவிடுகிறான். திருமணத்திற்கு வந்த உறவுக்கார இளைஞனுக்கு அப்பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்தது என்பதைப் பல்வேறு சிக்கலான முடிச்சுகளோடு ”புதிர்வழிப் பயணம்” எழுதப்பட்டுள்ளது. குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டக் கொலையாளிகளின் குற்றப் பின்னணியில் சொல்லப்பட்டக் கதை ”புதுவிதமான செடிகளும் வர்ணப் பூக்களும்” இரண்டு தலைமுறை (அம்மா,மகள்) நடிகைகளின் துயர் நிறைந்த வாழ்வைச் சொல்லும் ”நிகழ்காலமும் இறந்தகாலமும்” முதலானக் கதைகளை முக்கியமானக் கதைகளாகப் பார்க்கிறேன். இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ”அவரவர் வழி” ஆபாசமில்லாத கவித்துவமான முடிவைக் கொண்டுள்ளது.

0

”நானும் ஒருவன்”(2012) தொகுப்பு இரண்டு விஷயங்களை மையப்படுத்தி இருப்பதாக உணர்கிறேன். ஒன்று நம்ப முடியாத குணங்களைக் கொண்ட வித்தியாச மனிதர்களின் (எக்ஸ்ட்ரீம் கேரக்டர்ஸ்) வாழ்க்கையைச் சொல்கிறது. இரண்டு எதிர்பாராத யூகிக்க முடியாத தலைகீழ் முடிவுகளைக் கொண்டுள்ளது. 

இதில் “நானும் ஒருவன்” என்றக் கதைக்கு இரண்டு முடிவு. ஒன்று கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற மரபானது. மற்றொன்று அவன் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என வளர்ந்து கார் பங்களா, மனைவி குழந்தைகளோடு சுகபோகமாக வாழ்கிறான் என்ற மற்றொரு முடிவு. வாசகமனம் மரபார்ந்த முடிவைத் தான் எதிர்பார்க்கிறது. ஆனாலும் எதார்த்தம் வேறொன்றாகத்தான் இருக்கிறது.

இதற்கு நேரெதிரான கதை “உறையிட்ட கத்தி”. இதில் வரும் மையப்பாத்திரம் தான் எந்த நேரமும் கொள்ளப்படலாம் என்றப் பயத்தோடே வாழ்கிறது. தூங்கும் போதும் கூட உறையிட்ட கத்தியை தன்னுடைய இடும்பில் சொருகிக் கொண்டிருக்கிறது. “மினுக்கும் கண்கள்” கதையில் வரும் சிறுவன் தன் மீது இரக்கப்பட்டு உணவு கொடுத்த வீட்டிலேயே திருடுகிறான். அவனைப் பிடிக்க வரும் வீட்டின் உரிமையாளனின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடுகிறான். இப்படி வன்முறையின் பல்வேறு அம்சங்களையும் அதை நிகழ்த்தும் புதிரான மனிதர்களையையும் காட்சிபடுத்தியிருக்கிறார்.

”மனைவிகள்” கதையில் இறந்தக் கணவனை சுடுகாட்டில் புதைத்து வந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே நேர்த்தியாக உடை உடுத்திக் கொண்டு, துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் போலியாகக் கூட துக்கப்படாமல், அதிக வேட்டு வைத்ததைப் பற்றியும், நிறையக் கூட்டங்கள் வந்ததை பற்றியும் பெருமையாகப் பேசுகிற பெண்ணின் எதார்த்தம் இயல்பானதா? இல்லை துக்கம் விசாரிக்க வருவர்களிடம் துக்கமில்லை என்றாலும் துக்கப்படுவதைப் போல் நடிக்க வேண்டும் என்று  கதைசொல்லி எதிர்பார்ப்பது இயல்பானதா? என்றக் கேள்வியை உருவாக்குகிறது. 

இந்த தொகுப்பில் சற்றே வித்தியாசமானக் கதை “ஒரு திருமணம்”. திருப்பாவை எழுதிய ஆண்டாளின் வாழ்க்கையைத் தன்னுடையப் பார்வையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். அவர் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார். தொன்மத்தை எழுதுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் சொல்லி இருக்கிறார். இந்த பின்னனியோடு இக்கதைகளை அணுகும் போது ஆண்டாளை கடவுளின் அவதாரமாகப் பார்க்காமல், அக்ரஹாரத்தில் வளரும் அனாதைப் பெண்ணை வைதீக மரபு எந்த முடிவை நோக்கி தள்ளுகின்றது என்ற திராவிடப் பார்வையில் எழுதியிருப்பது இக்கதைக்கு வேறொரு நிறத்தைக் கொடுக்கிறது.

0

திருமணம் பெண்களுக்கு எந்த மாதிரியான நெருக்கடிகளைக் கொடுக்கிறது அதன் பல்வேறு சாத்தியங்களை வெவ்வேறு கதைகளில், வெவ்வேறு விதங்களில் “நடன மங்கை”(2013) தொகுப்பில்

சொல்லியிருக்கிறார். மொத்தம் உள்ள பத்து கதைகளில் ஏழு கதைகள் திருமணம் சார்ந்த நெருக்கடிகளைத் தான் சொல்கிறது.

“கோவில் பிரகாரம்” என்றக் கதையில் பணம் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.  “வீடு திரும்புதல்” கதையில் திருமணம் ஆகி எட்டு மாதங்கள் இருபத்தி நான்கு நாட்கள் ஆன நிலையில் கணவன் இறந்து விடுகிறான். தன்னுடைய வீட்டிற்கு திரும்பும் பெண் இனி தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியோடு தவிக்கிறாள். “புன்னகை” என்ற மற்றொரு கதையில் கைம்பெண்ணாகி தங்கள் வீட்டில் இருக்கும் மகள், தங்களுக்குப் பின் என்ன ஆவாள் என்ற பயம் அவருடைய தந்தைக்கு எழுகிறது. தந்தை பெரியாரின் பேச்சால் மனம் மாறி மறுமணம் செய்து வைக்கிறார். கணவன் மனைவி” என்றக் கதையில் தந்தை இல்லாததால் (அவர் யாரென்றே தெரியாது) இரண்டாம் திருமணம் செய்து வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானப் பெண்ணின் வாழ்க்கையையும்,   “கால்பந்தும் அவளும்” என்ற கதையில் வரும் ஆங்கிலோ- இந்தியன் பெண் விருப்பப்பட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டவளின் நிலை. “அம்மாவின் சாயல்” கதையில் மன அழுத்தத்திற்கு ஆளாகி கிட்டத்தட்ட பைத்திய நிலையில் இருக்கும் கணவனை மீட்க போராடும் மனைவி என்று தொகுப்பில் உள்ள பெரும்பாலானக் கதைகள் ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்புடையதாக இருக்கின்றன. ஒரு விஷயத்தின் பல்வேறு சாத்தியங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. காரணம் இவை நாவல் எழுதுவதற்கான விஷயங்கள். இவற்றை நான் பல சிறுகதைகளாக எழுதி இருக்கிறேன் என்கிறார் சுரேஷ் குமார இந்திரஜித். 

இத்தொகுப்பில் மீதம் இருக்கும் கதைகளான “சொப்பன வாழ்வில் மகிழ்ந்து”, “நடன மங்கை” இரண்டும் உளவியல் சார்ந்து அணுக வேண்டியக் கதைகள்.

இடப்பக்க மூக்குத்தி(2017) தொகுப்பில் உள்ள கதைகள் மிகவும் இலகுவான மொழியில் எளிமையான கதைக் கருக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு அவர் தொடர்ந்து குறுங்கதைகள் எழுதி வருவதும் காரணமாக இருக்கலாம் என யூகிக்கிறேன்.  இதில் ”முற்றுப்புள்ளி”, “சிலந்தி வலை”, ”ஆங்கில புத்தகம் படிக்கும் பெண்” முதலான கதைகள் அதிக ஈர்ப்புடையதாக இருக்கிறது. 

இடப்பக்க மூக்குத்தி என்பது ஆண்களின் ரகசிய வேட்கையின் குறியீடாக இருப்பதும். ஆங்கில புத்தகம் படிக்கும் பெண் என்றக் கதையின் முடிவில் அந்தப் பெண் சொல்லும் ஒரு வார்த்தை உண்மையா? பொய்யா? என்று குழப்புவது. ரகசிய வார்த்தை கதையில் வரும் குரூப் டேன்ஸர் பாட்டி, காஃப்காவின் உருமாற்றம் நாவலின் முதல் வரியைக் கேட்கும் தலப்பாக்கட்டு சாமியார் என குறிப்பிட்டுச் சொல்லும் படியான விஷயங்கள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

0

பின் நவினத்துவப் படைப்பாளிகளில் சிலர் மரபான இசையின் ரசிகர்களாக இருப்பதைப் பார்க்கிறேன். யுவன் சந்திரசேகர் இந்துஸ்தானி இசையின் மீது ஆழ்ந்த ஈடுபாடுக் கொண்டவர். அதே போல் சுரேஷ் குமார இந்திரஜித் கர்நாடக இசையின் மீது தீராதப் பற்றுக் கொண்டவர். பாடகர் சஞ்சய் சுப்ரமணியன், மதுரை மணி அய்யர், மதுரை சோமு முதலானவர்களைத் தனக்குப் பிடித்தமானப் பாடகர்கள் என்கிறார். எழுத்தில் மரபான விஷயங்களைக் கடந்து புதுமையை விரும்பும் இவர்கள். தங்கள் ரசனைகளில் மரபான விஷயங்களை விரும்புவது என்னளவில் ஒரு முரண் தான்.

இந்த இசை ரசனையைத் தன் படைப்புகளில் எழுதியிருக்கிறாரா? எனத் தேடியதில் “வழி மறைக்குதே” என்றச் சிறுகதையில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் “வழி மறைக்குதே! மலைப்போல ஒரு மாடு படுத்திருக்குதே! என்றப் பாடல் மூலம் பல்லவி,சரணம் என வடிவச் சோதனையில் தலித் கதையையும்,  ”கர்னாடக ஸ்வரங்களின் மார்க்வெஸ்” என்ற தலைப்பில் சஞ்சய் சுப்ரமணியம் பற்றி ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். அதில் ”லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் விநோதமான, சம்பிரதாயமற்ற வித்தியாசமான புனைவுகள். இத்தகைய புனைவுகளையொத்த பாணியில் பாடுபவர் சஞ்சய் சுப்ரமணியன்” என்கிறார்.  மரபான இசையை ரசிக்கும் பின்நவீனத்துவவாதி என்ற இந்த பிம்பம் இவரின் கதைகளில் தென்படும் முரண்களைப் புரிந்துக் கொள்ள உதவுகிறது.

“பழைய சமூக மதிப்பீடுகளைக் கலைப்பதிலும் மாயத்தன்மை வாய்ந்த பாணியினால் பல வழிகளைத் திறப்பதிலும் தர்க்கத்திற்கு புலப்படாத வாழ்வின் அபத்த திருப்பங்களை கூறுவதிலும் பிடிபடாத வாழ்வின் மர்மங்களை காண்பிப்பதிலும் நான் ஈடுபாடாக இருந்தேன். இவற்றை நவீன செவ்வியல் படைப்புகளாக மாற்ற வேண்டும் என்ற நினைப்பு எனக்கு இருக்கிறது” என்றுச் சொல்லும் அதே வேளையில் ”தமிழ் சமூகத்தில் கிளாசிக்கல் கதைகள் மட்டும் தான் வெகுஜனங்களின் அங்கீகாரத்திற்கு வரும். நவீனத்துவ, பின்நவீனத்துவக் கதைகளுக்கு இன்று என்றில்லை, என்றுமே அங்கீகாரம் கிடைக்காது என்பதே என் அபிப்பிராயம். இது ஒரு வகையில் பாதுகாப்பு. இன்னொரு வகையில் சிக்கல் என்னும் யதார்த்தத்தைப் புரித்துக் கொண்டப் படைப்பாளியாகவும் சுரேஷ் குமார இந்திரஜித் இருக்கிறார்.

அதனால் தான் விருதுகளையோ பெரிய அங்கீகாரங்களையோ எதிர்பார்க்காமல் நாற்பதாண்டுகளாகப் புனைவிலக்கியதில் அவரால் தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது. விஷ்ணுபுரம் வாழ்நாள் சாதனையாளர் விருதும், மா.அரங்கநாதன் இலக்கிய விருதும் சமீப ஆண்டுகளில் பெற்றிருக்கிறார் என்பது ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. அவர் மேலும் பல உயரிய விருதுகள் பெற என்னுடைய அன்பான வாழ்த்துகள்.

                                                            000

(குறிப்பு: இது 20.07.2024 அன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத் துறை மற்றும் சிற்றில் அமைப்பு இணைந்து நடத்திய எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் குறித்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

++

சிவபிரசாத்

பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கிய சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ என்கிற புத்தகத்தின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *