கடந்தவாரம் ஊரில் ஒரு வீட்டைப்பற்றிய பேச்சு வந்தபோது அக்கா சொன்னாள் “அந்தூடூ மூலக்குத்து ஊடு அதுல ஆருங்குடியிருக்க முடியாது, அது அந்தூட்டுக்காரனுக்கே தெரியும். அவனே, பிரசனும் பொண்டாட்டியுமா வந்திருந்து பாத்தான் ஒரு வருசங்கூட தாக்குபுடிக்க முடியல அவங்களால… ஊருக்கே மூட்டையக்கட்டிக்கிட்டு பூட்டான்.. அதில்லாம அந்த மேற்க்கால சந்துல மினிநடமாட்டம் இருக்கு அங்க யாரும் குடியிருக்க மிடியாது” என்று பேசிக்கொண்டிருந்தாள்.
இவ்வார்த்தைகளை கேட்டதும், வளர்ந்து இத்தனை பெரியவனான பின்னும், பல நெடுஞ்சாலைகளில், கும்மிருட்டில் மலைகளில் தனித்து பயணித்த என்னால் நடு இரவில் முட்டிக்கொள்ளும் மூத்திரத்தை கழிக்க வெளியே வந்தால் அக்கா சொன்ன மினி கதை நினைவுக்கு வந்து சிறிய பயம் தொற்றிக்கொள்ளும். சிறுவயதில் முனி நடமாட்டம், மாரியம்மன் மெரமனை போகிறாள் என்று பகலில் வீட்டு வேலைகளை முடித்தபின் அம்மா பக்கத்து வீட்டு பெண்களிடம் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த இரவுகளெல்லாம் பயம் உடலை தின்ன அம்மாவிடமோ, அப்பாவிடமோ உடலை குறுக்கிக்கொண்டு உறங்கிப்போவேன். சில இரவுகள் அப்பாவே சாமியாடிபோல எழுந்து அமர்ந்துகொண்டு “ஏய் மாரீம்மா ஊரவிட்டு போறாடி! நானு அவளப்போய் கூட்டிக்கிட்டு வரேன்” என்று எழுந்து ஊர்எல்லை வரை ஓடிப்போவார். இதை அந்த நட்டநடு இரவிலும் ஊரே வந்து நின்று வேடிக்கை பார்க்கும். பிறகு கற்பூரத்தட்டோடு அம்மா பின்னாலேயே ஓடி நீர் போட்டு அப்பாவை சாந்தப்படுத்தி கூட்டிவருவாள்.
நம்முடைய வாழ்வின் கட்டமைப்பெங்கும் இதுபோன்ற கதைகள் அல்லது புனைகதைகள் வழியே நிறுவப்பட்டிருக்கின்றன. இது இந்து மதங்களில் மட்டுமல்ல பிற மதங்களிலும் உண்டு. அவரவர் வழிபாட்டு முறைப்படி மாறுமே தவிர பொருள் என்னவோ ஒன்று தான்.
மாயாதீதம் என்றால் உண்மை நிலையை மறப்பது என்கிற அளவில் நான் புரிந்து வைத்துள்ளேன். அப்படித்தான் இந்த குறுநாவலில் வரும் கதைக்களமும் அமைகிறது. பொதுவாக மாயங்களை புனைந்து எழுதுபவர்கள் முழுக்க அதற்குள்ளாக இறங்கிவிடுவதால் அதுவொரு அமானுஷ்ய எழுத்தாகவே மாற்றிவிடும் கதை, நாவல்கள் நிறைய இருக்கிறது.
நாஞ்சில் நாட்டு எழுத்துக்காரரான மீரான் மைதீன் இதுபோன்ற மாயாதீத இடைச்செருகல்களை தன்னுடைய கதை மாந்தர்களினூடே பரவவிடுவார். ஆனால் அவை முழுமையாக இராது. துயரமான ஒரு சூழலை கொஞ்சம் மகிழ்வித்துக்கொள்வதாக மாறிவிடும். பிற்பாடு காணாமல் கூட போய்விடும். அதூபோலவே பா.வெங்கடேசனின், ராஜன் மகள், வாராணசி நாவலும்கூட. உண்மையை கடந்து இன்னொரு கற்பனா உலகத்திற்குள் பிரவேசிக்கும் மனநிலை அது. ஒருகட்டித்தில் எது நிஜம்? எது கற்பனை என்கிற குழப்ப சிந்தைகள் வாசகனுக்கே வந்துவிடும்.
அப்படித்தான் இந்த மாயாதீதம் கதைக்களம் முழுக்க உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே புனையப்பட்ட ஒரு யதார்த்த எழுத்தாக இருக்கிறது. கதை நிகழும் களம் கொங்கு மண்டலத்தில் உள்ள தாராபுரம். ஸ்ரீராம் அவர்களின் நிலமும் என்பதால் தன்னுடைய நில வரவியலை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்த நிலத்திற்கே உரிய மரங்கள், பறவைகள், விலங்குகள், பூக்கள் முதற்கொண்டு நிகழ்வுகளில் இந்த நாவலின் வாசிப்புத்தன்மை சுவாரஸ்யம் குன்றாமல் நகர்கிறது. பொதுவாக ‘சாலையில் நிழல் படர்ந்திருந்தது’ என்பதற்கும், ‘குடைச்சீத்தை மரத்தின் நிழல் சாலையெங்கும் பரவியிருந்தது’ எனும்போது வாசகனுக்குள் ஒரு காட்சி சித்திரம் விழுகிறது. கீழே ஒரு அத்தியாயத்தின் தொடக்கத்தை தருகிறேன்.
//தோட்டவெளியின் கிளுவை வேலிகள் எங்கும் கன்னிவிழிப் பூக்கள் மலர்ந்திருந்தன. அடுத்தடுத்த புயலினால் அனுதினமும் மழை பொழிந்துகொண்டேயிருந்தது. சுற்றுவெளியில் குளங்களும், ஏரிகளும் நீர் நிறைந்து தளும்பிற்று. அமராவதியிலும், உப்பாற்றிலும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி நிகழ்ந்தது கரையோரத்து நெல்வயல்கள் எல்லாம் நீரில் மூழ்கின. நீலவர்ண மார்புச் சம்பங்கோழிகள் எங்கிருந்தோ வந்து நீரோரங்களில் பதுங்கித்திரிந்தன. //
இப்படி நிலவியலை படிக்கும்போது மிக துல்லியமாக காட்சிகள் நிழலாடுகிறது. கதைக்கோ, நாவலுக்கோ மிக முக்கியமானது நிலமும், காலமும் தான். அதை இவரின் மற்ற படைப்புகளிலும் கூட அனாயாசமாக காணமுடியும்.
ஒரு படைப்பில் நிலத்தையும், காலத்தையும், அம்மக்களின் புழங்கு மொழியையும் எழுதும்போதே அது முழுமையாக உயிர்கொள்கிறது. இந்த நாவலின் நாயகனுக்கு சிறுவயதில் பார்வை குறைபாடு இருக்கிறது. அதற்கு அந்த ஊரிலுள்ள ஒரு கோவிலில் வேண்டிக்கொண்டால் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை அந்த மக்களிடையே இருப்பதால் சில மாதங்கள் தன்னுடைய சித்தப்பனோடு கோவிலிலேயே தங்கி வேண்டிக்கொள்கிறான். கண்பார்வை குறைபாடும் நீங்கிவிடுகிறது. பிறகு வளர்ந்து பெரியவனாகிய பின் அவனொரு திறமையான ஓவியனாகிறான் அதன்பிறகு அவனுடைய வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பதுதான் நாவலின் சுருக்கமாக நாவலின் வடிவம்.
இதில் குறைந்தளவே கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள். புற ஆட்களின் பாத்திரங்கள் வெகு குறைவு. அவர்களும் திரும்ப திரும்ப வந்துபோகிறவர்கள். கண்பார்வை குறைபாடுள்ளபோது வேணுவிற்கு உறக்கத்தில் மாயாதீத கனவுகள் வருகிறது. அதுவே நிகழவும் செய்கிறது அல்லது நிகழ்வதாக எண்ணிக்கொள்கிறான். ஒரு தேசாந்திரியும், கருநிற நாயும் கதைப்போக்கின் அடுத்த முடிச்சுகளை அவிழ்க்கும் குறியீடாக வந்துபோகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் இறந்துபோன பின்பும் வேணுவின் கற்பனை வெளிகளில் வந்து அடுத்த திறப்பதற்கான சாவியை தருகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக இந்த நாவல் நிஜத்தையும் நிழலையும் தன்னகத்தே வைத்து ஒரு மாயாஜால போக்கை வாசகரிடத்தில் நிகழ்த்துகிறது.
மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைக்கான தெளிவையும், வாழ்வு சார்ந்த தெளிவையும் குழப்பிடாமல் தெளிந்த நீரில் அலையும் மீன்களைப்போல தனித்து காட்டுகிறது. ஓவியன் கற்பனை வளம் மிக்கவன். நிஜத்தை கற்பனையாக்குகிறான், கற்பனை நிஜமாக அவனுடைய வாழ்வில் நிகழ்கிறது. ஆனால் இறுதியில் நிஜமே எஞ்சி நிற்கிறது. அவனுடைய ஆழமான காதல் சந்தர்ப்பவாத நியமங்களால் தோற்கடிக்க படுகிறது. ஆனாலும் அவனுடைய காதலை அவன் குறைத்துக்கொள்ளாமல் பயணிக்கிறான்.
ஒரேமுச்சில் படிக்க கூடிய அளவில் 104- பக்கங்களே இருந்தாலும் இந்த மாயாதீதம் திறந்துவிடும் வெளியும், ஏற்படுத்தும் தாக்கமும் அளவில் பெரியது. அது வேணுவின் ஓவியத்தை போல, பார்கவியின் சத்திய வார்த்தைகளைப்போல, திரும்ப திரும்ப வழிகாட்டிடும் கருநாயைப்போல. அல்லது இருவரும் கூடிக் களிக்கும்போது அவளின் கூந்தலில் சூடியிருக்கும் ராமபான பூவின் வாசத்தைப்போல வாசிப்பவர்களுக்கு நாவல் முடிந்தபின்னும் பெருவெளியை திறந்துவிடுகிறது.
மாயாதீதம் எளிய மனிதர்களின் வாழ்வுகளில் ஊடாடிக்கிடக்கும், நம்பிக்கைகளையும், அவர்தம் வாழ்வின் உளச்சிக்கல்களை, பாடுகளை பூடகமின்றி எளிமையான உரையாடல்களின் வழி வாசகரின் மனதோடு பேசுகிற நாவல். வாசித்தபின் மாயாதீத தாக்கத்திற்கு ஆட்பட வைக்கும் என்பதில் மாற்றில்லை. குறுநாவல் வரிசையில் எளிய மக்களின் வாழ்விற்குள் ஊடாடிக்கிடக்கும் நம்பிக்கைகளை அவர்களுடைய மொழியில் பேசிச்செல்லும் சிறந்தநாவல் இது.
நூல்: மாயாதீதம்.
ஆசிரியர் : N. ஸ்ரீராம்.
வெளியீடு: தமிழ்வெளி. விலை: 120
++
சேலம் ராஜா.
இதுவரை இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
பத்தாண்டுகளாக இலக்கியம் வாசிப்பு என தொடர் செயல்பாடுகளில் ஈடுபாடு.
பணி: கனரக வாகன ஓட்டுனர்.
சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நடுப்பட்டி.