“நண்பரே, ஒவ்வொருவரும் தங்களின் நெருக்கமானவர்களை மறக்காமல் இருப்பதற்காக அவர்களுடைய நினைவு தினத்தன்று சமாதியில் மலர் வைப்பது, படங்களை வணங்குவது, நினைவு நாள் கூட்டம் நடத்துவது என்று சில முறைகளை பின்பற்றுவது வழக்கம். அவையெல்லாம் அப்போதைய தலைப்பு செய்தி. சில நாட்களில் பழைய செய்தி. மறைந்த என் தாத்தாவின் பிரேம் போட்ட படம் என் அப்பா உயிருடன் இருந்த வரை மாலை போட்டு வணங்கி மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. அப்பா இறப்புக்கு பின் தாத்தாவின் படம் பரண் மீது போடப்பட்டது. இப்போது என் அப்பாவின் படத்திற்கு நான் மாலை போடுகிறேன். அதற்கு பிறகு எனக்கு. என் தந்தையோ பரணில் படுத்திருப்பார். சில படங்கள் குப்பையில் போடப்படும்”
“உலகில் முக்கிய நாவல்களில் ஒன்றான ‘கரமாஸவ் சகோதரர்கள்’இல் தஸ்தயெவ்ஸ்கி கூறியுள்ளார். ‘இறந்தவர்களை நினைத்துக் கொண்டே இருங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்கிற அஞ்சலி’ என்று. ஆனால் நாமோ மறக்க வேண்டிய பட்டியலில் மறக்க கூடாததையும் அல்லவா சேர்த்துக் கொள்கிறோம்” என்று இலங்கை வானொலியில் யாரோ ஒரு புதிய எழுத்தாளர் பேசிக் கொண்டிருந்தார்.
ஜூன் மாதத்தில் ஒருநாள் பள்ளியில் மாணவர்களை அங்குவல்ல பிரதேதத்தில் அமைந்திருந்த பிரபல்யமான மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து சென்றனர். கொழும்பு மிருகக்காட்சி சாலையை விட அங்குவல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மிருககாட்சி சாலையின் சிறப்பம்சமே மிருகங்கள் அருகில் சென்று படம் பிடித்து கொள்வதுதான். புலியை தொட்டுப் பார்க்கவும். முதலை வாயில் கையை விடவும், பாம்பை கழுத்தில் மாலையாக்கவும் முடியும். அதற்கேற்றப்படியான முன் ஏற்பாடுகளை தயார்நிலையில் அங்கு செய்திருப்பார்கள். இதனால் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் இங்கு சுற்றி பார்த்து மிருகங்கள் அருகில் நின்று படம் பிடித்து கொள்வது வழக்கமானது.
பலமுறை பிள்ளைகள் வீட்டாருடன் மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருந்தாலும் பள்ளியில் அழைத்து செல்வதாக அறிவித்தவுடன் அவர்களிடையே ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காலைக்கும் மதியத்திற்கும் உணவு கட்டிக்கொண்டு, இடையில் சிற்றுண்டிக்கு தேவையான போதிய அளவு பணமும் வாங்கிக் கொண்டு என்றுமில்லாத சிரிப்போடு அவர்கள் புறப்பட்டார்கள்.
வரிக்குதிரைகள், மீன்கள், பறவைகள் என ஒவ்வொரு பிரிவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் காட்டிக் கொண்டே வந்தனர். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு பிடித்த விலங்குகளை கூறி ‘காட்டுங்களே காட்டுங்களே’ என ஆசிரியர்களை நச்சரித்தனர். கரடி முன் நடனமாடியதோடு, குரங்குகளுக்கு பேன் பார்க்க தலையை நீட்டுவது, பறவை இனங்கள் என பார்த்துக் கொண்டே மதிய உணவையும் அனைவரும் முடித்தார்கள். நான்கு பேர் கைப்பிடித்து தூக்க வேண்டிய காயமான செம்மறி ஆடு ஒன்றை இரண்டு ஊழியர்கள் கஷ்டப்பட்டு தூக்கி செல்வதை பார்த்து ‘பாவம்’ என்று அனைவரும் அதன்மேல் இரக்கப்பட்டார்கள்.
அடுத்ததாக ஆசிரியர்கள் சிங்கம் படுத்திருந்த மேடையை காட்டியவுடன் மாணவர்கள் அனைவரும் ‘ராஜா’ என்றும், சிங்கம் கர்ஜிப்பது போல செய்கிறேன் என்று ர்ர்ர்… என்ற ஒரு சத்தத்தை உண்டாக்கி ஆசிரியர்களை சிரிக்கவும் வைத்தார்கள். சிரிப்பு சத்தம் அடங்கியதும் மாணவர்களை ஆசிரியர்கள் வரிசையாக நிற்க வைத்து மியூசியத்தில் கண்ணாடி பேழையில் வைரங்களை பார்வைக்கு வைத்திருப்பது மாதிரி காலில் சங்கிலியால் கட்டி வைத்திருந்த சிங்கத்தின் அருகில் படம் பிடிக்க ஒவ்வொருவராக அழைத்து சென்றனர். படம் பிடிப்பதற்கென்று ஒரு ஊழியர் தனக்கு கொடுத்திருந்த ஸ்டூலில் கேமராவை கழுத்தில் மாட்டிக் கொண்டு மேடைக்கு சற்று அருகில் அமர்ந்திருந்தார்.
ஒவ்வொரு மாணவரையும் சிங்கத்தின் மேடைக்கு அருகில் கூட்டிச் சென்று ஆசிரியர்கள் சற்று விலகியதும் படம் பிடிப்பவர் தனது தொழில்திறனை ஒரு விநாடியில் நிருபித்து ‘ஓகே’ என்ற வார்த்தையை சொல்லி, வாயில் வடியும் வெற்றிலை எச்சிலை துப்பி முடித்து மற்ற மாணவரை மேடைக்கு வர சொல்லுவார். மாணவர்கள் அவரின் வாயோரம் வடிந்து சட்டையில் படும் எச்சிலை பார்த்து கேலி செய்தபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் ஆறு ஏழு மாணவர்கள் படம் பிடித்ததற்கு பின்னர் சிங்கம் உறுமிய சத்தம் மெதுவாக கேட்டது.
“தூங்குறதுனால குறட்ட விடுது. மருந்து கொடுத்து இருக்கோம். பயப்பட வேணா” என்றார் படம் பிடிக்கும் அந்த ஊழியர்.
திலீப் சிங்கத்தின் அருகில் சென்றதும் மற்ற மாணவர்களை போல கையை விரித்து போஸ் கொடுத்தது தான், சடாரென்று பெரும் சத்தத்துடன் சிங்கம் அவன் கையை வாயால் பிடித்து இழுத்து தனது அருகில் விழ வைத்து, அவனின் கழுத்தை தன் கூரிய பற்களால் கவ்வியது. ராஜாவின் பக்கத்தில் செல்ல எவருடைய கால்களும் உடன்படவில்லை. திலீப் பல பாகங்களாக இரத்தமும் சதையுமாக பிரிந்து கிடந்தான். எல்லாம் அந்த ஓரிரு நிமிடத்தில்.
பொட்டலமாக இருந்த மகனை பார்த்த தர்மன் பல நூறு சிங்கங்களை போல கர்ஜித்தார். எங்கே தவறு நடந்தது என்பதை போலீசார் ஒரு பக்கம் ஆராயவும் தவறு நடந்து விட்டதே என்று மக்கள் ஒரு பக்கம் தர்மனுக்கு ஆதரவும் தெரிவித்தார்கள். சில நாட்கள் வரை இலங்கையில் தலைப்புச்செய்தியாக இருந்த இந்த நிகழ்வால் அங்கிருந்த மிருகங்கள் கொழும்பு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பட்டு அங்குவல்ல மிருகக்காட்சி சாலை மூடப்பட்டது. நிர்வாக குழுவோ தாங்கள் தப்பிப்பதற்கு வேலையை கச்சிதமாக செய்து அதில் வெற்றியும் பெற்றனர், பொறுப்பாளர் அரசியலில் முக்கிய பிரமுகர் ஆதலால்.
இந்த சம்பவத்திற்கு பிறகு இலங்கையில் பல பிரச்சினைகள், அரசியல் சம்பவங்கள் நடந்து முடிந்தது. தலைப்புச்செய்தி பலவற்றின் மத்தியில் இந்த பழைய செய்தி மக்களிடையே மறந்தும் போனது. காலமும் அதன் வேகத்தில் சரியாக ஓடிக் கொண்டு போனது.
பல்வேறு பாதுகாப்புடன் சிங்கத்தை கொழும்பு மிருகக்காட்சி சாலையில் பார்த்த போது அவள் கேட்டாள்:
“என்னங்க, இதுல உள்ள விழுந்த என்னாகும்”
“சிங்கம் கடிக்கும் அம்மா” என்றான் மகன்.
“என் புள்ள என் புள்ள” என்று கத்திக் கொண்டே சட்டென்று பிரசன்னா மகனை தூக்கிக் கொண்டான்.
மனைவி கேட்ட அந்த ஒரு கேள்வியால் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் தன் நண்பன் திலீப் சிங்கத்திடம் இரையானபோது தான் கத்தி அழுது புரண்ட காட்சி ஏனோ பிரசன்னாவுக்கு அச்சமயம் கண்முன் வந்து போனது. மகனின் நெற்றியில் முத்தமிட்டான். திலீப் நினைவு வரவே தன்னையறியாமல் கண்ணீர் விழிகளில் ஆறானது. தற்போது திலீப்பின் பெற்றோர்கள் என்ன செய்கிறீர்கள்? எங்கு இருக்கிறீர்கள்? என்ற யோசனையுடன் நடந்தான்.
00

சாந்தி ஜொ
என் இயற்பெயர் ரகுநாத். இலங்கையில் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட நான் ‘சாந்தி ஜொ’ என்ற பெயரில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகள், இணையதளங்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். நான் எழுத்தாளராவதற்கு காரணமானவர் என் ஆசான் எழுத்தாளர் அகிலன் ஆவார். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அலெக்ஸ் ஹேலி எழுதிய ‘ஏழு தலைமுறைகள்’ ஆகும். வாசிப்பை ஊக்குவிப்பதற்காக நான் வசிக்கும் தெருவில் ‘அப்துல் கலாம் நூலகம்’ என்ற பெயரில் சிறிய நூலகம் ஒன்றை நடத்திக் கொண்டு வருகிறேன்.