(நையாண்டி நீள்கவிதை)

1.

“தமது ஓயாத அழகுப் போராட்டங்கள் – புரட்சிகள் – போர்களால்

உலகை அலங்கரிக்கும் பெண்களே,…

அவை அனைத்தையும் தாங்குகிற

வலிமையும் சகிப்புத்தன்மையும் கொண்ட

பரிதாபத்துக்குரிய ஆண்களே,….

மிஸ் யுனிவர்ஸ் நூற்றாண்டு சிறப்புப் போட்டி 2052

உங்களை அன்போடு வரவேற்கிறது…”

தொகுப்பாளர் Byte Thunderpants-ன் நகைச்சுவைத் தாக்குதலில்

அரங்கம் வாணவேடிக்கைகளாக வெடிக்கிறது

,

செயற்கை நுண்ணறிவுகள் புராதன விஷயமாக ஆகிவிட்டன

செயற்கை உணர்வுகளும் செயற்கை உணர்ச்சிகளும்

கேப்ஸ்யூல்களில் விற்கப்படும் காலம்

மனித அறிவுக்கு மதிப்பில்லாவிட்டாலும்

பெண்ணழகு இன்னமும் ஆராதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது

ஆனால் சிலிக்கான் முலைகள், ப்ருஷ்டங்களின்

கொடுங்கோலாட்சி முடிந்து

அசல் இறைச்சிகள் விரும்பப்பட்டன

,

உள்ளிருப்புகள் அல்ல, புறத் தோற்றங்களே பிரதானம்

அதுவே அழகு

ஆகவே, மிஸ் யுனிவர்ஸ் வயது வரம்பு நிபந்தனையில் திருத்தம்

28 வயது வரை மட்டுமல்ல;

அத் தோற்றம் கொண்ட முதிய பெண்களும்

போட்டியில் பங்கேற்கலாம்

மிஸ் என்பது விவாகரத்தான பெண்களுக்கும் பொருந்துமாதலால்

அவர்களும் தகுதியானவர்களே

ஆனால், குழந்தை பெற்றவர்களுக்கு அனுமதி இல்லை

,

MILF-களுக்கு ஆற்றாமையும் பொறாமையும்

வயதுத் தோற்றம் குறைந்த ஆன்ட்டி அழகிகளின் படையெடுப்பால்

இளம் நேஷனல் அழகிகள் மிரண்டனர்

இதற்காகவே 28 வயது வரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது

என எண்ணியிருந்த அழகிகள்

உவகையோடு திருமணம் செய்துகொண்டு

போட்டிக்கு முன் விவாகரத்துப் பெற்றனர்

,

கல்லூரியில் படிக்கும் மகளின் தாயை

உயர் நிலைப் பள்ளி மாணவியாக ஆக்கிவிடுகிற

இந்திய சந்தன சோப்பு

கருப்பினப் பெண்களைத் தக்காளிச் சிவப்பாக ஆக்கும்

ஃப்ரான்ஸ் ஃபேர்னஸ் க்ரீம்

கிழவிகளுக்கு மீண்டும் பல் முளைக்க வைக்கிற

அமெரிக்க லிப்ஸ்டிக்

விற்பனைகள் விண்ணைக் குடைந்தன

,

“பங்கேற்கும் போட்டியாள அழகுக் காட்டேரிகளை அறிமுகப்படுத்தி

உங்களை அதிர்ச்சியடையச் செய்வதில்

பெருமகிழ்ச்சி அடைகிறேன்

முதலாவதாக, ஜப்பானின் நடமாடும் ஹைகூ

Aiko Nanogarden, வயது 17”

,

ஜப்பானிய பொம்மையழகியின் வருகையால்

அரங்கம் குழந்தையாகிக் குதூகலித்தது

,

“இரண்டாவதாக, Amani Sonicbloom,

போட்ஸ்வானா சுரங்கத்தில் விளைந்த

மற்றொரு பெரிய வைரம்…”

,

கம்பீரமாக நடந்து வரும் குங்குமச் சிவப்பழகு இளைஞியைக் கண்டு

அரங்கம் திகைக்கிறது

ஆஃப்ரிக்க இயற்கை வழங்கிய கொடையான

பூசணி ப்ருஷ்டங்களை

இன்னும் தூக்கலாகக் காட்டுகிற உயர்குதிச் செருப்புகளோடு

அவள் திரும்பிச் செல்கையில் அரங்கம் சூடேறுகிறது

,

“இவர் இயல்பில் கருப்பினத்தவர்

இப்போது வயது 78

மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்காகவே விவாகரத்து பெற்று

இந்திய சந்தன சோப்பு, ஃப்ரான்ஸ் தக்காளி க்ரீம்

அமெரிக்க மாந்தரீக லிப்ஸ்டிக் ஆகியவற்றால்

23 வயது இளமைக்கு பரிணாமத் தாழ்ச்சியுற்றிருப்பவர்…”

,

அரங்கம் மூச்சடைத்துவிட்டது 

2

போட்டி நடக்கும் ஜோர்டான் கோலாகலங்களால் நிறைகிறது

,

வாழ்க்கை அசிங்கமாகவோ, பயங்கரமாகவோ, கேவலமாகவோ இருக்கலாம்

பெண்கள் என்றும் அழகானவர்கள்

அப்படித்தான் அவர்கள் நம்புகிறார்கள்

அவ்வாறே நம்புவது ஆண்களுக்கு நல்லது

,

மிஸ் யுனிவர்ஸ் நூற்றாண்டைக் கொண்டாடுவோம் –

மனைவிகளைத் தற்காலிகமாகவேனும் மறந்து

,

நீங்கள் மரபாளர், பண்பாட்டாளர் மற்றும் கறாரான ஒழுக்கவியல்வாதி எனில்

ரஷ்ய அழகுப் புரட்சி Lyubov Quantumfrost-ஐ ரசியுங்கள்

அவளின் அடர்த்தியான ஒப்பனை

ஒரு பழங்காலக் கலைப்பொருள் எனக் கருதச் செய்யும்

,

நீங்கள் நவீனத்துவவாதி, கலாச்சாரக் கலகக்காரர், ஒழுக்க மறுப்பாளர் எனில்

ஃபேஷன் விமர்சகர்களால் ‘துணிச்சலானது’ என்று பாராட்டப்படுவதும்,

காவலர்களால் ‘அநாகரீகமான வெளிப்பாடு’ என இழிக்கப்படுவதுமான,

‘கண்ணுக்குத் தெரியாத ஆடைகள்’ எனும் புதிய போக்கில்

நிச்சயமாகப் பேரின்பம் அடைவீர்கள் 

,

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அபிமான நட்சத்திரங்களாக

மறுசுழற்சிக் கைப் பை, தோள் பை அழகிகள்

பல்லுயிர்நேயத்தின் தூதுவராக

அசல் பறவைக் கூண்டு சிகை அலங்காரத்தில் ஒருத்தி

,

இவை எதையுமே நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும்

குறைந்த உடை சுற்றில் ஃப்ரான்ஸ் அழகி Etoile Luminaflux

புன்னகை மட்டும் அணிந்து போஸ் கொடுத்ததை

ஏழாம் அறிவு என ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்

,

3

உலகம் தொலைக்காட்சி, கணினி, அலைபேசிகளில்

நேரடி ஒளிபரப்பைக் கண்டு களித்துக்கொண்டிருக்கிறது

,

மாலை நேர கவுன் சுற்று முடிந்ததும் போட்டியாளர்களிடம்

ஊடகர்கள் கேமெராக்களோடு பாய்ந்து மைக்குகளை நீட்டுகின்றனர்

“ஆடை மிக இறுக்கமாக இருப்பதால்

என்னால் சுவாசிக்க முடியவில்லை

ஆனால், அழகு என்பது எப்போதும் வலி நிறைந்ததுதான்!”

லத்தீன் மாடல் Mariposa Hologlitter

பெருமையாக அலட்டிக்கொள்கிறாள்

,

“வயதாவதைத் தடுக்கும் க்ரீம்தான்

என்னையும் 48-லிருந்து 28 ஆக ஆக்கியிருக்கிறது

மீண்டும் குழந்தையாக மாறுவதற்கு முன்

நிச்சயமாக மிஸ் யுனிவர்ஸ் க்ரீடம் சுமப்பேன்!

ஒருவேளை அது இந்தப் போட்டியுடையதாகவும் இருக்கலாம்!”

இத்தாலியின் Fiore Velociluce உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கிறாள்

 ,

ஒரு போட்டியாளர் தனது தனித்திறனாக

இன்ஸ்டாகிராம் செல்ஃபி போட்டோக்களைக் காட்டினாள்

எஃப் டி.வி.  மாடல்கள் சிலர்

தங்களின் டர்ட்டி போட்டோக்கள், காணொளிகள் கொண்ட

இணையதளங்களுக்கு இணைப்பு கொடுத்தனர்

நடுவர்களில் ஒருவரான பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர்

அமெரிக்கர் Troy McFlex அலறினார்:

“அவற்றை இங்கே ஒளிபரப்ப முடியாது!

என் எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்!”

,

மேடையும் அரங்கமும் சிரிப்பில் வெடித்துச் சிதறின

,

4

ஐந்து நடுவர்களில் ஒருவரான

ஹாலிவுட் முன்னணி நடிகை Yara De Wilde

மிஸ் இந்தியா Vidhyutha Sparklesari-யிடம் கேட்டாள்:

“ஓருவேளை உனக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வழங்கப்பட்டு

அமைதித் தூதுவராக நியமிக்கப்பட்டால்

உலகிற்கு நீ சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?”

,

உலகம் ஆர்வத்தோடு நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருக்க

Vidhyutha ஆட்காட்டி விரலை

தன் உதடுகளின் குறுக்கே வைத்துக் காட்டினாள்

 ,

அவள் உத்தேசித்தது

எதுவும் சொல்ல மாட்டேன் என்பதுதான்

ஆனால், Troy McFlex அப்போதும் அலறினார்:

“எனக்குப் புரிந்துவிட்டது!

தீய விஷயங்களையோ, வெறுப்புப் பேச்சுகளையோ பேசாதீர்கள்

அதுதான் உலக அமைதிக்கான வழி என்று

அவர் சிம்பாலிக்காக சொல்கிறார்!”

,

மற்ற நடுவர்களும் பார்வையாளர் கூட்டமும் எழுந்து நின்று

பலத்த கரகோஷம் எழுப்பினர்

,

ஒரு கணம் குழம்பித் திகைத்த Vidhyutha

பிறகு எண்ணிக்கொண்டாள்:

‘வாயை மூடிக்கொண்டிருந்தது எவ்வளவு நல்லதாகப்போயிற்று! 

அந்த முட்டாள்

என்னை மாமேதையாக உலகத்திற்குக் காட்டிவிட்டானே…!’

,

5

“மேலும், வெற்றியாளர் யாரென்றால்….”

நடுவர் குழுத் தலைவரும்

ஃப்ரான்ஸின் ஃபேஷன் ஜாம்பவானுமான Benoît Dioré

மேடையில் நின்றபடி முழங்கி, இடைவெளி விட்டார்

,

Vidhyutha-வும், மற்ற பல மாடல்களும், அரங்கமும், உலகமும்

அவளது பெயர் சொல்லப்படும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க

“Amani Sonicbloom, மிஸ் போட்ஸ்வானா…!” என்கிறார் Dioré

யாவரும் உறைகின்றனர்

,

“78 வயது மூதாட்டி

23 வயது இளைஞியாக ஆன அரிய சாதனைக்காக

அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்படுகிறது…”

,

மக்கள் சுய உணர்வுக்கு வந்து கர கோஷம் எழுப்புகின்றனர்

,

மாடல்களின் வரிசையிலிருந்து Amani Sonicbloom 

வெற்றிச் சிரிப்போடு முன்னே வருகிறார்

,

தொகுப்பாளர் Byte Thunderpants கேட்கிறார்:

“எப்படி உணர்கிறீர்கள், மிஸ் பாட்டியம்மா?”

,

“எதிர்பாராதது என்று பொய் சொல்ல மாட்டேன்

போட்டியாளர்கள் ஒவ்வொருவருமே

தனக்கு இந்தப் பரிசு கிடைக்க வேண்டும் என்று

எதிர்பார்த்துத்தான் கலந்துகொள்கின்றனர்

என்னைப் பொறுத்தவரை

நிச்சயமாக பட்டம் வென்றாக வேண்டும் என

லட்சியத்தோடு இருந்தேன்

கடுமையாக உழைத்தேன், ஏராளமான தியாகங்கள் செய்தேன்

அதற்கான பலன்தான் இந்தப் பட்டம்…”

,

இனம்புரியா இரைச்சல் செவிப்பறைகளைத் துளைக்கிறது

ஒலிபெருக்கியில் தொழில்நுட்பக் கோளாறா?

இல்லை, சத்தம் கேட்பது கலையரங்கிற்கு வெளியிலிருந்து

சில நொடிகள் கட்டிடம் குலுங்குகிறது

பொருட்கள் சரிகின்றன

,

“நிலநடுக்கம்…!” மக்கள் பீதியில் கூச்சலிடுகின்றனர்

,

“ஆஃப்ரிக்கப் பாட்டியம்மா!

உங்களைத் தேர்ந்தெடுத்தது இயற்கைக்குப் பிடிக்கவில்லையோ?!

அல்லது, அது இப்படி வாழ்த்து தெரிவிக்கிறதா…?!”

அபாயத் தருணத்திலும் Byte Thunderpants கிண்டலடிக்கிறார்

பார்வையாளர்கள் மரண பயத்தோடு சிரிக்கின்றனர்

,

6

பூகம்பம் முடிந்துவிட்டதா? இனியும் தொடருமா?

எதற்கும் உயிர் காப்பாக இப்போதே வெளியே ஓடிவிடலாமா?

பார்வையாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கையில்

எட்டு நுழைவாயில்களிலும் அதிரடியாகப் பிரவேசிக்கின்றன

பல விதமான வேற்று கிரகவாசிகள்

,

மக்கள் வெலவெலத்து ஓலமிடுகின்றனர் 

,

“அச்சப்படாதீர்கள்! அவர்கள் நம் சிறப்பு விருந்தினர்கள்!”

Byte Thunderpants சமாதானப்படுத்த முற்படுகிறார்

,

“சிறப்பு விருந்தினர்களா…?

நாங்கள்தான் உண்மையான மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்கள்!”

ஆறு கண்கள், இருபது கைகள். பத்து முலைகள் கொண்ட

நீல ஜீவராசி கர்ஜிக்கிறது

,

காண்டாமிருகம் போன்ற தலை மற்றும் வால்

மனிதப் பெண் போன்ற உடல் கொண்ட

பச்சை உயிரினம் பார்வையாளர்களை நோக்கிப் பிளிறுகிறது:

“நாங்கள் உங்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டோம்.

எங்களின் உரிமைகளை நிலைநாட்டவே இங்கு வந்திருக்கிறோம்

தயவுசெய்து அமருங்கள்

இனிமேல்தான் இனிமைகள் நிகழ உள்ளன”

,

அறிவியல் புனைவுகள் நிஜத்தில் சம்பவிக்கிற வியப்போடு

மக்கள் அமைதியாக இருக்கைகளில் அமர்கின்றனர்

வேற்று கிரகவாசிகள் மேடையை அடைகின்றன

,

ஆறு கண் – பத்து முலை நீல ஜீவராசி கர்ஜிக்கிறது:

,

“மிஸ் யுனிவர்ஸ் போட்டி என்று பெயர் வைத்துக்கொண்டு

பூமியில் உள்ள மனிதப் பெண்கள் மட்டும் பங்கேற்பதும்

உங்களில் ஒருவருக்கே பட்டத்தை வழங்குவதும் எப்படி சரியாகும்?

யுனிவர்ஸ் என்றால் பூமிக்கு வெளியே உள்ள

அனைத்து கிரகங்களும், ஸ்பேசும் சேர்ந்ததுதானே!

ஆகவே, இப் போட்டியில் நாங்களும் கலந்துகொள்வோம்

எங்களுக்கும் போட்டி அமர்வுகள் அனைத்தையும் வையுங்கள்

எங்களின் அழகு, அறிவு, திறமை அனைத்தையும் காட்டுகிறோம்

அதன் பிறகு

மனிதப் பெண்களா – நாங்களா

யார் மிஸ் யுனிவர்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்!”

,

கலையரங்கில் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும்

போட்டி அமைப்பாளர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர்

வேற்றுகிரக ஜீவராசி ஆண்கள்

அதி பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டினால்

 உடன்படாமல் முடியுமா?

,

பத்து முலை ஜீவராசியின் நீச்சல் உடை நடையில்

பார்வையாளர்கள் பிரக்ஞை இழக்கின்றனர்

பச்சை காண்டாமிருகத் தோற்ற அழகியின் பூனை நடையில்

மேடை சாய்கிறது

அனைத்து சுற்றுகளும் அதிரடியாக நடந்து முடிகின்றன

,

ஆறு கண் – இருபது கை நீல ஜீவராசி

நீதிபதிகளிட,ம் எச்சரிக்கிறாள்:

“ஊழல் தீர்ப்பு அளித்தால்

நீங்கள் ஐவரும் எங்களுக்கு டின்னர் ஆகிவிடுவீர்கள்!”

,

நீதிபதிகள் நடுங்குகின்றனர்

“யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நீங்களே சொல்லிவிடுங்கள்!”

,

“எங்களில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!”

,

உள்ளதில் பயங்கரம் குறைந்த

புளூட்டோ கிரக ஜீவராசி ஆக்டோபஸ் அழகியின் தலையில்

மிஸ் யுனிவர்ஸ் நூற்றாண்டு சிறப்பு க்ரீடம் சூட்டப்படுகிறது

இரண்டாவது இடம்

வியாழன் ஜீவராசியான காண்டாமிருகத் தோற்றக்காரிக்கு

,

“மூன்றாவது பரிசை வேண்டுமானால்

நீங்கள் முதலில் தேர்ந்தெடுத்த ஆஃப்ரிக்கப் பாட்டிக்கே கொடுங்கள்!”

பெருந்தன்மையோடு சொல்கின்றனர் வேற்று கிரகவாசிகள்

,

Amani Sonicbloom வருத்தப் புன்னகையோடு சொல்கிறாள்:

“மிக்க நன்றி! ஆனால், என்னைப் பாட்டி என்று சொல்லாதீர்கள்

நான் உங்களின் சிறிய தங்கை போன்றவள்”

7

அழகுத் துறை அடுத்த மாதத்திலிருந்து

வேற்று கிரக அழகு சாதனப் பொருட்களை இறக்குமதி செய்து

விற்கத் தொடங்குகிறது

“இப்போது நீங்கள் மூன்று தலைகள் கொண்ட நெப்டியூன்வாசிகளின்

முதலைத் தோல் அழகுடன் போட்டியிடலாம்!”

,

அடுத்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு

மனிதப் போட்டியாளர்கள்

சனி கிரகத்திற்கு விண்கலத்தில் செல்கின்றனர்

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *