பிரித்தெடுக்கத் தெரியாத பினைப்பு.

பார தூரமாக

பற்றி வந்த

நினைவொன்றை

சற்றைக்கு முன்

நிகழ்ந்தது போல

மனம் எனக்குள்

சொல்லிக் கொண்டு இருந்தது.

எப்பொழுதும் போல

சில நினைவு தப்பித்தல்கள் இருக்கத்தான் செய்தன.

வேறொரு

எண்ணம் சுவீகரிக்கும்வரை

அரைத்துக் கொண்டிருந்த மாவை

அப்படியே போட்டுவிட்டு போயேப் போய்விட்டது மனம்

வழக்கம்போல.

என்னைப்போல அவனுக்கும்

இதுபோல என் நினைவு வந்திருக்குமாவென தெரியவில்லை.

அம்மாவிடம் கேட்டுச்சொல்லச் சொல்லலாம்.

இருவருமே தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார்கள்.

மின் விசிறியால் கீழே விழுந்த சட்டை

அவரொவரின் பிரசன்னமாவென்ற

பரிசோதனைகள் எல்லாம் எனக்கெதுவும் தெரியாது.

பழுதுபட்டு கிடக்கும்

கால் பற்றியோ

பார்க்காது கிடக்கும் தொழில் பற்றியோ  சிந்தனையற்று

அதிகாலையில் முறுவலிக்கும் இம்மனத்தை எப்பொழுதும்

நம்ப முடியாது.

அதலபாதாளத்தில்

தள்ளிவிட்டு

அழ வைத்து வேடிக்கை பார்த்து

அடுத்தடுத்து

கூத்துக்கட்டிவிடும்

அச்சமும் இருக்கத்தான் செய்கிறதென

நினைக்கும்போதே

எழுதிக்கொண்டிருக்கும்

என்னை

அப்பாவிப் பூனைபோல

எட்டிப் பார்க்கும்

இம்மனம்

அடுத்தென்னை

எங்கழைத்து

எது செய்யுமென

இப்பொழுது

என்னால்

உறுதிபட

உங்களிடம்

எதுவுமே

சொல்ல முடியாது.

***

என்ன

சொல்லப் போகிறாய்.

மழை வராதென்று

நம்பி

தூங்கி இருக்கக்கூடாது.

எழுந்து பார்த்தபொழுது

எவருமில்லை

வீட்டில்.

,

வெளியில்

மரங்களும்

புற்களும்

பச்சையாகி

மகிழ்ந்திருந்தது.

வானம் பார்த்த

ஊரில்

மழையினால்

வயலுக்கு சென்றிருந்தார்கள்

வாழ்க்கையை ஓட்டுவதற்கு.

,

எடுத்து வந்த

மண்ணும்

அழகாக செய்த

பொம்மையும்

பெய்த மழையில்

காணாமல் போயிருந்தது.

,

நேற்று மட்டும்

அழகாக செய்த

பொம்மையை

அடித்துச் செல்ல

எப்படி

உனக்கு மனம்

வந்தது

மழையே.

,

பொங்கி வழியும்

கண்ணீரோடு

பொம்மை செய்த

மணலில்

புரண்டு

அழுததைப் பார்க்க

நல்ல வேளை

வீட்டில் யாருமில்லை.

,

எழுந்து நின்று

‘ஏய்…மழையே…’ என்று

கத்தியபொழுது

இப்படி

மழை மறுபடியும்

கொட்டி இருக்கக்கூடாது

கோவத்தைக் கிளறுவதாக.

,

கைகள் விரித்து

வானம் பார்த்து

‘என்னையக் கரைச்சுப் பாரூ..

என்னையக்

கரைச்சுப் பாரெ’ன

கத்தியபொழுது

என்னவானது

எனக்குள்.

,

கூச்சலிட்டு

குதூகலித்து

மழையாடியதைத்

தடுக்க

மாபாதகர்கள்

யாருமில்லை

இங்கே.

,

என் பொம்மையும்

இப்படித்தான்

உருகி உருகி

கரைந்திருக்குமோவென

நினைவுவர

ஓடி விட்டேன்

வீட்டிற்குள்

பயம் சூழ.

,

இன்னொரு

பொம்மை செய்து

கரையவிட்டால்

தேவலாமெனத்

தோன்றியது.

அதற்கு

இவர்கள்

காடு மேட்டைக் கடந்து

மண் எடுக்க

என்னை

அழைத்துக் கொண்டல்லவா செல்லவேண்டும்.

,

குழந்தைகள்

கேட்க்கும்போதே

கொடுக்கத்தெரியாத

நீயெல்லாம்

ஒரு சாமியாவென்று

குதித்த போது.

,

‘அய்யோ

சாமி

என்

கண்ணக் குத்திராதே.

என்

கண்ணக் குத்திராதே.’

என்று

கெஞ்சி

அழுததில்

உடம்பு லேசாக

சூட்டில்

நடுங்கியது.

,

வயலிலிருந்து

இவர்கள்

வருவதற்குள்

துணிகள்

காயவேண்டுமென

ஏக்கமாக

வானத்தையேப்

பார்த்துக்கொண்டு இருந்தேன்.

,

மழை பெய்யும்பொழுது

சூரியன்

வரக்கூடாதா என்ன.

கடவுளே..

நீயேன்

இவ்வளவு

முட்டாளாக

இருக்கிறாய்

எங்களின் விசயத்தில்

எப்பொழுதும்.

,

அய்யோ….

அய்யோ….

கண்களை

மூடி

திறந்துப் பார்த்தேன்.

ஹிஹீ..ஹிஹீ….ஹிஹீ….

நல்லவேளை

கடவுளே…

நீ

நல்லவன் தான்.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *