துரைக்கண்ணு அய்யாத் தவறி இரண்டு நாளான தகவல் செல்வனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .உண்மையில் அவருக்காகத் தான் ஜெகதேப்பூரிலிருந்து ஊர் வந்து இருந்தான்.
அவரை நாலு மாதத்திற்கு முன் ஊரில் மூன்று நாள் நடந்த ஸ்ரீவெங்கடேசா பெருமாள் கோயில் விசேஷத்தில் அவன் சந்தித்த போது ஒரு ஜோசியர் போல அவர் சொன்ன விசியம் அவன் நினைவில் இன்னும் தங்கி இருந்தது. இந்த ஜோசியர்கள் உண்மைச் சொல்றாங்களா இல்ல தன் காரியத்திற்காகச் சொல்றாங்களானு புரிய சற்று நேரம் பிடிக்கும். எதிர்பார்த்த வார்த்தை வந்து விட்டால் டக்குனு மனசில் உட்காரும் வார்த்தைகள் விளக்கேத்தி வைக்கற மாதிரி ஒரு ஆறுதல் வரும்.அன்று,வெண்ணைத் தடவியது போல அவர் பேச்சு மீண்டும்,மீண்டும் அவரையே அவனுள் நினைக்க வைத்துக் கொண்டு இருந்தது. அதுவும் கோயிலில் வைத்து பேசியது கண் திறந்த சாமியாக நினைத்தான்.
“என்ன முகம் ஒரு மாதிரி வாட்டமா இருக்கு தம்பி?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க ஐயா. தூரத்துல இருந்து வந்த களைப்பு”
“இல்லையே, மூக்கு மேல மக்கு வேற விழுந்து கிடக்கு. கண்ணுக்கு கீழே கருப்பு வேற விழும் போல. முகமும் பார்க்கப் பொழிவா இல்லையே”
“எனக்கொண்ணும் அப்படித் தெரியலே ஐயா”
“இல்ல தம்பி, உம் மனசுகுள்ளே ஏதோ வாட்டம் இருக்கு. அதை வெளிகாட்டாம நீ வெள்ளைச் சட்டைப் போட்டு பளபளப்பக் காட்டி மறைக்கற”
“கோயிலுக்குனு வந்தா வெள்ளை உடுத்தினாத் தானே அழகுய்யா”
“அந்த அழகு இருக்கட்டும் தம்பி. மனசுல கஷ்டத்தையும்,உடம்புல நோயும் இருந்தா என்னத்தெ அழகு காட்ட முடியும்? எப்பவும் பார்க்கறவங்களுக்கு எதும் தெரியாது தம்பி. எப்போதாவது என்னை மாதிரி தெரிஞ்சவங்கப் பார்க்கறவங்களுக்கு எல்லாம் புரியும். இந்த நல்ல நாளுல சாமிய வேண்டிக்கோ நல்லது நடக்கட்டும்”
அவர் பேச்சுக்கு அவன் எதும் பதில் சொல்லவில்லை. ஒரேப் பார்வையில் அவனை அவர் அளந்து விட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது தான் மனிதனுக்குள் ஒளிந்து இருக்கும் அனுபவச் சக்தியா? இல்லை இவர் ஏதும் மனநிலை வைத்தியரா? மாந்தீரம் செய்யும் வித்தைக்காரரா? உறவுகளே சொல்லாத வார்த்தையைச் சொல்லி வியப்படைய வைக்கறாரே? என்று பலவாறு அப்போது அவனுள் யோசனை ஓடியது. இந்த மாந்தீரகக்காரர்கள் அவர்களைத் தேடி வருபவர்களின் தேவைகளைக் கேட்டு மேற்கொண்டு அவர்களை குழப்பிக் குளிர்காய்வார்கள். அப்படி ஏதேனும் இவர் செய்ய உத்தேசமா? என்ற சிந்தனை அவனை கொஞ்சம் ஐயப்பட வைத்தது.
“என்ன தம்பி…என் பேச்சு உங்கள யோசிக்க வைக்குதா? நா ஒண்ணும் மந்தரவாதியோ, தந்திரவாதியோ இல்ல. என் சிவன் யாருக்கிட்ட என்ன பேசச் சொல்றானோ அவர்களிடம் மட்டுமே பேசுவேன். ஒரு ருத்ராட்சமாலை வாங்கி கழுத்துல போடு. எல்லா கஷ்டமும் பறந்து போகும்”
“எனக்கு அதுல நம்பிக்கை இல்லிங்கைய்யா”
“நம்பிக்கைங்கறது ஒரு திருப்தி தம்பி. அது எப்போதும் மனிதனுக்குள் இருக்க வேண்டிய கலசம். அது இல்லையின தேவை இல்லாத வினைகள் சாத்தானாக தேடி வந்து குழியிலத் தள்ளும். கம்முனு நா சொல்றதக் கேளு”
அவர் பேச்சுக்கு பதில் சொல்லாமல் இருந்தான். அவரே மீண்டும் பேசினார்.
“இதோ நான் போட்டு இருக்குறது அஞ்சு முகம் மாலை. இது சாதாரண எல்லாரும் போடலாம். ஆனா ஒரு முகமும், இருத்தியேழு முகம் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். சொல்லி வைக்கனும். அது நம்மகிட்ட இருந்தா நாம் வணங்கற தெய்வம் நம்மக்குள்ளே இருக்கற மாதிரி. நா தேடுனப்போ அது கிடைக்கல. விலையும் அதிகம். இந்த அஞ்சு,ஆறு முகமெல்லாம் ஆயிரம் ரெண்டாயிரத்துல கிடைக்குது”
“அது அப்புறம் பார்க்கலாம் ஐயா”
“சரி…நா சொல்றதச் சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க பிரியம் தம்பி”
அவர் சொன்னதிலிருந்தே ருத்ராட்சத்தைப் பற்றி அவனுள் சிந்தனை படிந்து கொண்டது. அன்று கோயில் விசேஷத்தில் அவன் மனம் ஒன்றவில்லை. ௯ம்புக் குழாயில் அலறியப் பாடல்களும் இடை…இடையே மைக்கில் அன்னதானப் பற்றியும், அன்பளிப்புத் தருபவர்களின் அறிவிப்புகளையும் அவனால் கேட்க முடியவில்லை. ௯டிய இருந்த ஜனத்திரளில் நசிந்து போவது போல் இருந்தான். அவர் இப்படி தேடி வந்து சொல்வதற்கு காரணமென்ன? அப்படி என் முகத்தில் என்ன ஒட்டிக் கொண்டது? ஒரு கிராமத்தில் நாலாயிரம்,ஐந்தாயிரம் பேர் வாழ்கிற இடத்தில் யார் என்ன செய்கிறார் என்று தெரிந்து விடுகிறது. யாருக்கு யார் என்ன உறவு என்பதும் அத்துபடியாகி விடுகிறது. அண்ணன், தம்பி,மாமன், மச்சான் என்று சொல்லவும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. கடந்த இரண்டு கோயில் விசேஷத்தில் அன்னதானத்திற்கு சுப்ரமணியனுடன் அவனும் இணைந்து பொறுப்பேற்ற போது அப்போதும் தேடி வந்து,
“அன்னதானத்தை மிஞ்சி எந்த தர்மமும் பெரியதல்ல தம்பி” என்று சொன்னார்.
இந்த முறை கோயில் பொறுப்பில் எதிலும் தான் ஈடுபடாததால் தானாக வந்து பேசுகிறாரோ? ஏன் இப்படி அவர் பேச்சு எனக்குள் போராடச் செய்கிறது? தொடர்ந்து பெரு சிந்தனை அவனூள் ஒட்டிக் கொண்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சாப்பிடும் இடத்தில் சந்தித்தார்.
“தம்பி, நான் பேசியது உன்னை குழப்பி இருக்கும். அது எதையும் மனசில் வெச்சுக்காத. உங்களைப் பார்த்ததும் ஏதோ மனசு உறுத்துச்சு அது தான் ருத்ராட்சம் மாலையைப் பற்றி பேசினேன். இப்படி சுத்தி…சுத்தி வந்து பேச வைக்கிறது. இது நாம்ப கும்பிடுகிற தெய்வத்தோட வேலையாக இருக்கலாம். இப்படி அதிசயங்கள் எங்கையாவது நடக்கும்.நடந்துட்டு தான் இருக்குது. இவ்வளவு பேரு இங்க இருக்க உங்களிடம் மட்டும் ஏதுக்கு எம் மனசு பேசச் சொல்லுதுனுத் தெரியல. முன்னாடி யெல்லாம் கோயிலுக்கும்,அன்னதானத்திற்கும் நிறைய செஞ்சீங்க. இந்த முறை நீங்க எதுவும் செய்யாதது எனக்கு எப்படியோ இருந்துச்சு. அப்புறம் உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்கத்தொழில் முடங்கிக் கிட்டதாகச் சொன்னாக எதுவா இருந்தாலும் தளராதீங்க”
“சரிங்கய்யா”
“மறக்காம நா சொன்ன மாதிரி ஒரு ருத்ராட்சம் மாலைப் போடுங்கத் தம்பி. எல்லாம் சரியாகும்”
மீண்டும் சரியென அவருக்கு தலையாட்டினான். அவர் பேச்சு அவனை ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. வலது இடதுமாய் ஆயிரம் உறவு இருந்தாலும் எப்போதாவது பார்வையில் பட்டு நலம் விசாரித்து நாலு வார்த்தைப் பேசும் நல்ல உறவுகளில் அவரும் ஒருவராக அவனுக்குத் தெரிந்தார். கிட்ட நெருங்கி பேசும் தன்மையிலேயே ஆளை அடையாள கண்டு விட முடியும். அப்படி அவரின் பேச்சும்,நெற்றி நிறைய விபூதியும், அதே போல் கைகளின் மத்தியில் இரண்டு கோடுகளாக பூச்சும், வாழ்க்கையில் ஒரு பக்குவப் பட்டத் தன்மையும், நரை விழுந்து அறுபது வயதைத் தொட்ட முகத்தில் ஒரு களையும் அவனுக்கு அவரைப் பார்க்க நிறைவாக இருந்தது.
“நம்மள சுற்றி சாத்தான்கள் நிறைய வேலை செய்யும் தம்பி. நாம்ப எதிர் நோக்கும் செயலை தடுக்கும். கண்ணுளையும்,கையிலேயும் அகப்படாது. அது ஏதோ ஒரு வடிவல நம்மள பின் தொடரும்.அதைய கண் திஷ்டி,சொல்லடினு ௯ட சொல்லலாம். கம்முனு ருத்ராட்சம் மாலைப் போட்டுக்க தம்பி. சிவ சக்தி எல்லாப் பிரச்சனையும் தூரம் பண்ணிரும். எனக்கு தெரிஞ்ச ராசிக் கல்லு விக்கிற ஆளு பிச்சைகிட்ட சொன்னம்னா நல்லதா கொண்டாந்துருவான். அவன் அடிக்கடி டில்லி,ஜெய்பூர்னு போவான். ஸ்ரீலங்காவுக்கு ௯டப் போவதாகச் சொன்னான். நம்பிக்கையா வாங்கலாம். அவனிடம் தான் நானும் ருத்ராட்சம் வாங்கினேன்”
அவர் இறுதியாய் சொன்ன இந்த வார்த்தைகள் அவனுள் சுழன்றுக் கொண்டே இருந்தது. கோயில் விஷேச முடிந்து இரண்டு நாள் கழித்து மீண்டும் அவன் ஜெகதேப்பூர் போயும் அவர் பேச்சு அவன் மனசை விட்டு அகலவில்லை. அவர் சொன்ன மாதிரி தான் திஷ்டிகளில் தொழில் முடங்கிருச்சோ யென எந் நேரமும் ஒத்த தலைவலியாக அவன் மனசைக் குடைந்துக் கொண்டு இருந்தது.
—
“என்னடா இன்னைக்கு லையினுக்கு போகலையா?”
“எந்த லையினுக்கு போகச் சொல்ற?அது தான் ஆடு மாடு பன்னிக மாதிரி நாலு பேர் சேர்ந்து ஒழிச்சுட்டானுகளே”
செல்வன் பேச்சில் போணியாத எரிச்சல் இருந்தது.
எப்போதும் நெகிழிக் குடங்களை தன் இரு சக்கர வாகனத்தில் கட்டிக் கொண்டு கிராம,கிராமமாய் போய் சொந்தமாய் தயாரித்து விற்பனை செய்யும் செல்வன் சலித்துக் கொண்டு ரபிக்கு பதில் சொன்னான். இருவரும் முத்துநாயக்கன் பட்டியில் ஆரம்பப் பள்ளியில் படித்ததிலிருந்தே நண்பர்கள். எப்போதும் நல்லது கெட்டதுப் பேசிக் கொள்வது அவர்களின் வழக்கம். சில நேரத்தில் அவர்களுக்குள் எம்.ஜி.ஆர்.,நம்பியார் மாதிரி விவாதமும் இருக்கும். திரைக்கு பின்னால் நல்ல நண்பர்கள் இருப்பது போல இருப்பார்கள். இருவரும் ஜெகதேப்பூரில் தனி,தனியாக இருந்தாலும் முக்கிய காந்திச் சாலையிலுள்ள நாயர்கடையில் தான் நாள் தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தவூருக்கு செல்வனுக்கு முன்பே ரபி தான் வந்திருந்தான். அவனின் அப்பா பசீர் பாய் அவனை விவசாயம் சார்ந்த படிப்பைப் படிக்க வைத்தும் அவனுக்கு அது ஒட்டவில்லை. யாரையும் மதிக்காத திமிரில் இருந்தவனுக்கு அப்பா செய்யும் வட்டிக் கடை வியாபாரம் தான் அவனுக்கு நிரந்தரமானது. அவன் சொன்ன யோசனையில், மதுரையில் நெகிழிக் குடங்கள் தாயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து குடங்களைத் தயாரிக்கும் முறையும் கற்றுக் கொண்டு ஊரில் கம்பெனிப் போட வேண்டுமென்று இருந்த செல்வனை திசை மாற்றி ஒடிசா ஜெகதேப்பூர் வரை ரபி அழைத்து வந்து இருந்தான். மொழியேப் புரியாத புதிய ஊரில் ஒரு புதிய புரட்சியே செல்வன் செய்வானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மண் குடத்தையும்,இரும்புக் குடங்களைத் தூக்கிப் பழகியவர்களுக்கு வண்ண…வண்ணமான நெகிழிக் குடங்கள் அவன் வரவால் ஒரு வரபிரசாதமாக இருந்தது. அவன் கோயமத்தூரிலிருந்து கொண்டு வந்து இறக்கிய இயந்திரத்தையும், மதுரையிலிருந்து வந்த மூட்டை…மூட்டையாய் பாலிதீன் சம்மந்தமானப் பொருட்களையும் கன்னத்தில் கை வைத்து எல்லாம் அவன் கம்பெனியை அதிசயமாய் பார்த்தார்கள். இரண்டு ஆள் வைத்து தினமும் நூறு,இரநூறுயென குடங்களுடன் செய்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிராமத்திற்கு அவன் செல்கையில் சாமி வரம் தந்தது போல் கொண்டாடினார்கள். ஒரு குடம் எட்டுக்கும், பத்துக்கும் வித்தான். அந்த விலைகளே அன்று அங்கு பாரமாக இருந்தது. குறைத்து கேட்டவர்களுக்கு தாரளமாக தந்தான். எல்லாம் கொஞ்ச நாள் தான் அவன் வேகம் இருந்தது. அவன் வளர்ச்சியைக் கண்டு விஜய நகரப் பேரரசு படையெடுத்து போல விஜய நகரத்திலிருந்தும்,வைசாக்கிலிருந்தும் சிலர் லாரிகளில் குடங்களை இறக்கிய போது நொறுங்கிப் போனான். அவர்களுடனான போட்டியில் தடுமாற்றம் அவனுக்கு ஏற்பட்டது. “அவன் அசலூர்க்காரன்”என்ற ஒரு பிரச்சனையும் அவர்கள் அங்கு உருவாக்கினார்கள். அவன் அடைந்த உயரத்தை இப்போது அவனேத் தொட முடியாமல் தவித்தான். அவர்கள் குடம் தண்ணீயிலப் போட்டால் மிதந்தது, செல்வனின் குடமோ சாய்ந்து படுத்தது. மட்டிக் குடங்களுக்கும்,நைலான் குடங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் காட்டியது. அவர்கள், வீட்டில் மூலையில் கிடக்கும் பழையப் பொருட்களை வாங்கிப் புதிய குடங்கள் கொடுத்தார்கள். இவன் பணத்திற்கு மட்டுமே விற்றான். இப்படியொரு நிலையிலும் வாழ வைத்த மண்ணை விட்டு வர அவனுக்கு மனசு இல்லை. எப்படியும் மீண்டும் ஒரு பத்து பேரை வைத்து முன் போல,புது இயந்திரம் போட்டு வியாபாரம் பார்க்க வேண்டுமென்று அவனுக்குள் வெறி ஏற்பட்டது. இப்போ இருக்கும் சூழ்நிலையில் எல்லாம் சரியா வருமா?அவனது இரண்டு யோசனையை நிராகரித்து, ரபியும்,நாயரும் முதலாவது யோசனைக்கு அவனுக்கு ஊக்கம் கொடுத்தார்கள். தன் இரு குழந்தைகள் தாய்மொழியை படிக்க வேண்டும் என்பதற்காக செல்வன் குடும்பத்தை ஊரில் விட்டு இருந்தான்.
“ஏன்டா…இத்தனை வருசமா இங்கு இருக்கோம்.ஒரு வியாபாரத்த நிலை நிறுத்த முடியலையே” ரபி தான் செல்வனிடம் பேசினான்.
“ஆமாண்டா நாம எப்பவும் ஊர் நெனப்புல இருக்கறோம். எப்போ நாலு பணம் கையில சேரும் அதை ஊர்லக் கொண்டுப் போய் சேர்த்துவோம்னு இருக்கோம். நாயரு பாரு ஊர்ல எவன் செத்தாலும் கவலப் படறதில்ல. ஓணத்திற்கு மட்டும் போறாரு. நாம அப்படியா? ஊர்ல எதுனாலும் ஓடிறோம். இதுல வேற வியாபாரத்தெ இன்னும் பெரிசா செய்யனும்னு மனசு வெறியாத் துடிக்குது”
செல்வனின் பேச்சில் ஒரு விரக்தியும், அதிசயமாய் ஏதோ ஒண்ணு மந்திரம் தன்னை தாங்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். எப்போதும் ஒரு சோகத்தைத் தாங்கி இருப்பதும் அவனுக்கு பிடிக்கவில்லை. இருபது வயசில் இங்கு வந்து பதினைஞ்சு வருசத்திற்கு மேலேயே முக்கி முணகி இங்கையே காலத்தை ஓட்டி விட்டோம். இப்போது சம்பாதனைக் குறைந்தாலும் சௌரியத்திற்கு குறைவில்லை. அவர்கள் அசலூர்காரனென்று ஒரு பேச்சை உண்டாக்கி இருந்தாலும், “பாலகுறிசி?நலமா இருக்கிங்களா” என்று இயல்பாய் கேட்கும் உள்ளங்களுக்கும் குறைவில்லை. இன்னும்,இங்குள்ளவர்கள் உலகமறியாத வெள்ளந்தியான மனிதர்கள். இப்படியாப்பட்ட மனிதர்களுடன் வாழ்வது ஒரு நிம்மதி. நாள் முழுவதும் உழைத்தும் கையிக்கு எட்டாத ௯லியும் போதுமென ஏற்றுக் கொண்டவர்கள். அவர்களை ஏமாற்றுவது பெரும் பாவம். அவ்வப்போது ரபி கணக்கில் குளருபடி செய்து அஞ்சு பத்து ஏமாற்றி நாயர்கடையில் விருந்து தருவது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.
“இந்த திருட்டு வேணாம்டா. பாவத்தைத் தொடர்ந்து செய்ற. ஒரு நாள் அவமானப் படனும்”
“ஆமா…நீ மட்டும் யோக்கியமோ. அஞ்சு ரூபாயிக்கு விற்கிறதப் பத்து ரூபாயிக்கும் ஆளப் பார்த்து விற்கிற. அது மட்டும் நியாயமா?”
அதுக்கு மேல் ரபியிடம் விவாதத்தை நிறுத்திக் கொள்வான். உன் உழைப்பு வேறு. என் உழைப்பு வேறு. உழைப்புக்குண்டான ஊதியத்தைப் பார்ப்பதில் தவறில்லை என்று அவனுக்குள் எண்ணங்கள் எழும். ஊரில் சும்மா இருந்தவனை ஆயிரத்து ஐநூறுக் கிலோமீட்டர் அப்பால் அழைத்து வந்து பொழைக்க வழிகாட்டியவனை எந்த நிலையிலும் கோபித்துக் கொள்வதில் நியாமில்லை என்று நினைப்பான். ஏதோ விசியத்தில் மனசு அடித்துக் கொண்டாலும் வெளியே காட்டமாட்டான். என்ன தான் ஊரில் சம்பாதித்தாலும் வீடு வாசல் வாங்கினாலும் “எவன ஏமாத்திப் பொளைக்கறானோனு ஒரு பேச்சு இருக்கும்.அவுங்க வம்சமே அப்படித் தான்பா”னு பின்னாடி பேசுவார்கள். இப்படி ஊர் மக்கள் கண் கணாத இடத்தில் நாலு பணம் பார்த்த ஊர் போனால் அதன் மதிப்பேத் தனி. அவன் மனைவி பொன்னி “ஊருக்கே வந்துருங்க” என்று சொல்லும் போதெல்லாம் இந்த யோசனைகள் தான் அவனுக்கு முதலில் வரும்.
“என்னடா…ஒரு மாதிரியா முகத்த வெச்சுட்டு இருக்க?”
“ஆமாண்டா முச்சர்லாக் கிராமத்திற்கு போலாமுனு போன ராய்ப்பூர் பஸ்ல குடத்த இறக்கி ரோட்டு மேலேயே கடையப் போட்டு வியாபாரம் பண்றானுக. அதையப் பார்த்துட்டு திரும்பி வந்துட்டேன்”
“ஒண்ணும் கவலப் படாதடா. அவுனுகப் பாட்டுக்கு வித்துட்டு இருக்கட்டும். நீ அவுனுகளத் தாண்டிப் போயி இருக்க வேண்டியது தானே”
“போய் இருக்கலாம். பாதி தூரம் திரும்பி வந்தப் பின்னாடித் தான் அந்த யோசன வந்துச்சு. ஏதோ என்னத் தடுக்கற மாதிரி இருக்குது.முன்னேப் போக முடியல. கம்முனு அவுனுக மாதிரி விஜய நகரத்துலேயே சரக்கு வாங்கி விற்கலாமுனு தோணுது”
“முதல்ல ஒண்ணுக்கு,ரெண்டு புது மெஷின் போடு. மொத்த வியாபாரம் செஞ்சம்ன அவுனுகளே உன்னையத் தேடிட்டு வருவானுக.”
ஏற்கனவே செல்வன் குடம் செய்யத் தேவைப் படும் பாலிதீன் பொருட்களை மதுரையிலிருந்து தருவிக்காமல் கொஞ்ச காலமாய் வைசாக்கிலேயே வாங்கத் துவங்கி இருந்தான். மதுரையிலிருந்து வர போக்கு வரத்து செலவு அதிகமாக போட்டி வியாபாரத்தில் கட்டுபடி ஆகுவதில்லை என்று தவிர்த்திருந்தான். ரபி சொன்ன யோசனை ௯ட அவனுக்கு நல்லாகப் பட்டது. நாயர் அவர்கள் சொல்லாமலேயே மூன்றாவது முறையாக தேநீர் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்து விட்டுப் போனார். “பேச்சைக் குறைங்கடா…அடுத்த வேலையாப் பாருங்க” என்பது போலவே அவர் சைகை இருந்தது. அவர்கள் இருவரும் அவரை முறைத்துப் பார்த்து விட்டு தேநீரைக் குடிக்கும் போது தான் கழுத்தில் துளசி மாலையும்,ருத்ராட்சம் மாலையும் வெளியேத் திரிய அணிந்த படி இடம்புரி சங்கை வலது கையில் பிடித்து ஊதிக் கொண்டு அவர்கள் முன் நிற்காமல் முகத்தில் சந்தோசத்தை வைத்துக் கொண்டு கடந்து போனார் ஒரு சாது. சாதுவைப் பார்க்கும் போது செல்வனுக்கு துரைகண்ணுவின் நினைவு வந்தது.
00
துரைக்கண்ணு ருத்ராட்சம் பற்றி சொன்னதிலிருந்தே செல்வன் அதே எண்ணத்தில் இருந்தான். குடங்களோடு முறம் இன்னும் சின்ன…சின்ன நெகிழிப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கியும் வியாபாரத்தில் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை. விருட்சமுமில்லை. ஏதோவொரு சக்தி அவனைத் தொந்தரவு செய்வது போல ஒரு உணர்வு அவனுக்கு தட்டுப் பட்டுக் கொண்டே இருந்தது. அது என்னவென்று அவனுக்கேப் புரியாமல் தவித்தான். அன்றாடும் தேவைகளின் தேடலில் இருக்கும் சாதுக்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி ௯ட நம்மிடையே இல்லையே? இனம் புரியாதக் கவலை அவனைப் பிடித்துக் கொண்டது.
ஒரு நாள் வியாபாரத்தைப் பார்க்காமல் வைசாக் கடற்கரையில் அலைகளை கால் பதித்து விட்டு கடை வீதிகளில் துரைகண்ணு அய்யா நினைத்துக் கொண்டு நல்ல ருத்ராட்சம் தேடினான். ஒவ்வொரு மாலையும் ஒவ்வான்றாக அவனுக்கு தெரிந்தது. கடைக்காரர்கள் ஏதோச் சொல்லி தன்னை ஏமாற்றுவதாக நினைத்தான். ஒரு கடையில் அஞ்சு முகம்,ஆறு முகம் உள்ள ருத்ராட்சத்தை ஏற்கனவே அறுத்து வைத்ததைக் காட்டினார்கள். அது உள்ளேயும்,வெளிலேயும் பளபளப்பாக நெகிலி போல இருந்தது. இது பொய்யான ருத்ராட்சம். எல்லாம் புரட்டு செய்கிறார்கள் என்று அவனேப் தீர்மானம் செய்து கொண்டான். எப்படி தான் ஆரம்பத்தில் மட்டிக் குடத்தை சுத்தமான நைலான் குடமென்று சொல்லி இரண்டு குடத்தை கையில் பிடித்து ஒன்றாக அடித்தாலும்,கீழே விழுந்தாலும் உடையாது என்று நம்ப வைத்தனோ அதைப் போலவே இவர்களும் தன்னை நம்ப வைக்கறார்களென்று நினைத்தான். எதுவுமே அவன் மனசுக்கு சரியாகப் படலை. முதல் முதலாக மிக அருகில் பார்த்த துரைகண்ணு அய்யாவின் கழுத்தில் இருந்த மாதிரி எதுவுமில்லை என்று அவனுக்குத் தோன்றியது. வலம்புரி,இடம்புரி சங்கை எப்படி சலஞ்சலமென ஏமாற்றுகிறார்களோ அதே நிலையில் எல்லாம் இங்கு இருப்பதாகவும் நினைத்தான். சலஞ்சலம் கிடைப்பது மிக கஷ்டம். கடலில் ஆயிரம் வலம்புரியோ,இடம்புரியோ கிடைத்தால் அதிலொரு சலஞ்சலம் கிடைக்கும். கடலில் முழ்கி சங்கெடுப்பது பெரும் கஷ்டம். நிலத்தில் மணிக்கணக்கில் மூச்சு முட்ட ஓடுவது போல கடலுக்கடியில் காலை கால்களுக்கு இயக்கம் வேண்டும். அப்போது தான் சங்கைப் பார்க்க முடியும். சங்குகளின் விசியத்தைத் தெரிந்து வைத்தவனுக்கு அப்படித் தான் இந்த ருத்ராட்சம் கதையும் இருப்பதாக நினைத்தான். “ஒரு முகம்,இருபத்தியேழும் முகம் வேண்டுமென்றால் முன் பணம் கொடுத்து விட்டு போங்கள், அது ராசி பலன் பார்த்து போடனும் இல்லாவிட்டால் விபரிதமாகும்” என்று சில கடைக்காரர்கள் பயமுறுத்திச் சொன்னதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. துரைகண்ணு அய்யா அப்படிச் சொல்லவில்லை. சண்டாளப் போக்குகளைக் குறைக்கும்.விருத்தியின் முதலிடம் அது.நம்பிக்கை உள்ளவர்களுக்கு சிவனின் அருளது.அஞ்சு,ஆறு முகம் போல எல்லோரும் அணியாலாம்.ராசித் தேவையில்லை. தேகத்தோடு ஒட்டி இருந்தால் போதும்.உடலிலும்,உள்ளத்திலும் உள்ள விணைகள் ஓடி விடும்.கோபத்தில் வெட்ட வருபவனும் ஒதுங்குவான். அப்படி சக்தி உள்ளவை அது.இப்படித் தானே அவர் சொன்னார். பின் எப்படி இவர்கள் அதற்கு ராசி அமைய வேண்டும் என்று சொல்கிறார்கள்? அவனுக்கு குழப்பமானது. கம்முனு ஊர் போய் துரைகண்ணு ஐயாவிடமேச் சொல்லலாமென வந்து இருந்தவன் அவரின் மறைவுச் செய்தி அவனை ஒரு மாதிரி ஆக்கி விட்டது. சாதாரணமாக எப்போதும் போல் இருந்தவன் இந்த ருத்ராட்சம் பற்றி அவர் சொன்னதிலிருந்து அதன் மீது கவனமும்,தொழில் தொய்வும் அவனுள் பல கண்ணாடிச் சிதறல்களை உருவாக்கி இருந்தது. பொன்னி கொடுத்த காபியைக் குடித்து விட்டு துரைகண்ணு அய்யா வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்து வரலாமா?வேண்டாமா? ஒரே யோசனை அவனுக்கு. தான் ஊர் வந்த விசியம் நடக்க வேண்டுமே அது வேறு அவனைக் குடைந்தது. ருத்ராட்சம் அணிந்து பழையபடி ஆகும் கனவும் இருந்தது. எல்லாம் நம்பிக்கை. நம்பியவர்களை கடவுள் கை விட மாட்டார். துரைக்கண்ணு அய்யாவின் வார்த்தைகள் அவன் மனசில் ஒரு சுழலலாய் இருந்தது. கடை முன் பூசனிக்காய் அல்லது பட்டிக்காரக் கல் கட்டுவது போல, வீட்டு தோஷம் போவ சலஞ்சலத்தைப் பூஜையறையில் வைப்பது போல நம்பிக்கை. பொன்னி சொல்ற மாதிரி கையில் இருக்கும் தொழிலை விட்டு விட்டு வேறொன்றைத் தேடுவது எளிதல்ல. இருப்பதை நிரந்தமாக்க வேண்டும் அது தான் நல்லது.எல்லாம் யோசித்துக் கொண்டே துரைக் கண்ணு அய்யா வீட்டுக்குப் போனான். இன்னும்,அங்கு துக்கம் களைந்திருக்கவில்லை. தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் யார்…யாரோ இருந்தார்கள். எல்லோரையும் ஒரு முறை முறைக்காகப் பார்த்தப் பின் தயக்கத்தோடு முன்னறையில் நுழைந்து அவன், அவரை கோயில் பார்த்தது போலவே பூ மாலைப் போட்ட புகைப் படத்தில் அசலாக இருந்தவரை வணங்கி விட்டு வந்து வராண்டாவில் இருந்த நெகிலி நாற்காலியில் அமர்ந்தான். வந்தவுடன் போகக் ௯டாது.சற்று நேரம் யாரிடமாவது துக்கம் விசாரித்து விட்டு போலாமென அவனுக்குள் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. இடையில்,பிச்சை எங்கு இருப்பார்? அவனாக உள்ளுக்குள் கேட்டுக் கொண்டான்.
“வாங்க தம்பி உங்களப் பத்தி அண்ணன் நிறையச் சொல்லி இருக்கார். யாருனுப் பார்க்க மாட்டார். எந்த ஜாதினு ௯டப் பார்க்க மாட்டார். அவருக்கு யாரைப் புடிக்குதோ அவரிடம் மட்டுமே பேசுவார். கோயில் விசேஷத்துல உங்களப் பார்த்து பேசுனதாகச் சொன்னார்”
“அண்ணே நீங்க யாருனு எனக்கு தெரிலணே”
“என்ன தம்பி என்னையத் தெரியலையினு சொல்ற? உறவு எல்லாம் மறந்து போச்சா? பக்கத்துல இருக்கிற அய்யம் பாளையத்துல போய் கொஞ்ச நாள் தான் ஆச்சு. அண்ணோட ஒண்ணு விட்ட தம்பி நானு. பேரு முத்து. நா உங்கள நிறையத் தடவைப் பார்த்து இருக்கேன். மதுரையில இருந்து வந்து நீங்க சும்மா இருந்த காலத்திலிருந்து உங்கள எனக்குத் தெரியும். எங்க சொந்தகாரப் பொண்ணத் தான் கட்டி இருக்கீங்க”
அவன் தயங்கிக் கேள்வி கேட்டதில் அவரின் விளக்கமானப் பதில் அவனை கடந்த காலத்தை நினைக்க வைத்தது. எல்லோரும் ஒரே ஊர். எப்படி இவரை அறியாமல் இருந்தோம்? என் நினைவெல்லாம் நகரத்திலேயேத் தங்கி விட்டதா? பொழைக்க ஜெகதேப்பூர் போய் உறவுகளின் நூலை அறுத்து விட்டனா? என யோசித்துக் கொண்டே சங்கடத்தில் நெழிந்தான்.
“அண்ணன்…,நீங்க எப்ப வந்தாலும் பிச்சைகிட்ட அறிமுகப் படுத்தனும், எப்படியும் நீங்க அவரப் பார்க்க வருவீங்கனு கொஞ்ச நாளாச் சொல்லிட்டு இருந்தார். அதே மாதிரி வந்துட்டீங்க. ஆன உங்களப் பார்க்கத் தான் இப்போ அண்ணன் இல்ல”
என்று சொல்லி விட்டு அவர் கண்ணீர் விட்டதை அவனால் பார்க்க முடியவில்லை.
“அண்ணே இந்த பிச்சையினு சொன்னீங்களே இப்போ அவரு எங்கு இருப்பாரு?”
பேச்சை மாற்றினான். அப்பத் தான் மனசு திசைமாறும். அழுவது என்பது நேசிப்பிற்கும்,இரத்த உறவுக்கும் அடையாளம். அவனுக்குள்ளும் அவர் முகம் நெருக்கத்திலேயேத் தெரிந்தது. இன்னும்,அவருடன் கோயில் விசேஷத்தில் நிறையப் பேசி இருக்கலாமோ தவற விட்டுட்டனே என்று வருத்தப் பட்டான். அன்று அவனைத் தேடி வந்து பேசியது,இன்று அவரைத் தேடி தான் வந்தது எல்லாம் அவர் சொன்ன மாதிரி சிவனின் சக்தியா? இப்போது அவன் மனதில் சிவப் பெருமான் தங்கி விட்டார். நம்பிக்கைப் பற்றி நிறைய யோசிக்க ஆரம்பித்தான். இத்தனை நாள் இதை ஏன் நான் உணராமல் போனேன். ரபி விளையாட்டாய் அங்கு அழைத்துப் போய் வாழ்க்கையிக்கு உயிர் கொடுத்ததும் நம்பிக்கை தானோ?
“தம்பி என்ன கேட்டீங்க” முகத்தைத் துடைத்துக் கொண்டு பேசினார்.
“பிச்சைங்கறது யாருணே”
“ஓ…அண்ணெ சொன்ன ஆளா. அவரு இப்பத் தான் வந்துட்டுப் போறாரு தம்பி. ஜெய்பூரு,டெல்லினு வியாபாரத்திற்காக எல்லாம் பக்கம் போயிட்டு அண்ணன் தவறிய விசியம் தெரிஞ்சு வந்தார். காரைக்கால் காரரு. திண்டுக்கல்லுல தான் இருக்கார். இன்னும்,பஸ் ஏறி இருக்க மாட்டாரு. நீங்க சட்டுனு போனீங்கனா ஆள பஸ் ஸ்டாப்புலப் பார்த்தரலாம். தலையிலக் குல்லா இருக்கும். அதை மறைச்சு துண்டும் கட்டி இருப்பாரு. கை விரல்ல மோதிரம் நிறையப் போட்டு இருப்பாரு”
அவர் சொன்ன அடையாளத்தை மனதில் வைத்துக் கொண்டு தாமதிக்காமல் பஸ் நிறுத்ததிற்கு வந்து பிச்சையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். முத்து சொன்னது போல பிச்சை தலையில் போட்டு இருக்கும் குல்லாவை மறைத்து துண்டும்,கை விரல்களில் சுக்கிரன் வைரத்தைத் தவிர்த்து மாணிக்கம்,பவளம்,கனக புஷ்பராகம்,முத்து இப்படி மொத்த ராசிக் கற்களையும் அவர் தன் கை விரல்களில் வண்ண…வண்ணமாய் அணிந்திருந்ததைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. மனிதனுக்கு ஆகாத ஒரு கல் அணிந்தாலே ஆளைப் போட்டுப் பார்க்கும் ராசியில் இவர் இத்தனைப் போட்டு இருக்காரே தொடர்ந்து அவரை அதிசயப் பிறவியாகப் பார்த்தான்.
“என்ன தம்பி இப்படிப் பார்க்கற?வியாபாரம் செய்யறவன் எல்லா கல்லையும் கையில வெச்சு இருக்கனும் அது தான் இப்படிப் போட்டு இருக்கேன். ஒரு ராசிக் கல்லு உடம்புக்கும் உழைப்புக்கும் ஒத்து வராது. இன்னொரு ராசிக் கல்லு எல்லாத்துக்கும் ஒத்துப் போகும். அடிக்கு அடி. இது அதைய சரி பண்ணிடும். அது தான் வியாபாரக்காரனின் கணக்கு”
அவர் சொல்லும் காரணங்கள் அவனுக்கு பிடித்து இருந்தது. ஆனால், இத்தனை தான் அணிய முடியாது. நமக்கு தேவை ஒரு முகமோ,இருபத்தியேழு முகமோ ருத்ராட்சம். துரைகண்ணு ஐயா சொன்ன மாதிரி அது நேரடியான சிவ சக்திக் கொண்டது. அது கிடைச்சாப் போதும் என்று நினைத்தான். நேரத்தை விணாக்காமல் ருத்ராட்சம் பற்றி பேச்சை எடுத்தான்.
“ஆமா…யாருக்கோ ருத்ராட்சம் வேணும்னு சொன்னார். அது உங்களுக்கு தானா தம்பி”
“ஆமாணே”
“ஒரு முகம்,இருபத்தியெழு முகமெல்லாம் கிடைக்கறது கஷ்டம் தம்பி. கடை விலையை விட எங்கிட்ட அதிகமாகத் தான் இருக்கும். எது எங்கு கிடைக்குமோ நா அந்த இடத்திற்கு நேரிடையாப் போய் வாங்கித் தான் பழக்கம். அதுனால தான் என்னை நம்புவாங்க. இந்த பக்கம் வாங்கி அந்தப் பக்கம் கை மாத்தி விடற வேலையில்லாம் எங்கிட்ட இல்ல”
“சரிணே இப்ப இருக்கா? அதுக்காகத் தான் ஊர் வந்து இருக்கேன்”
“இருக்குபா. ஒரு முகம் தானிருக்கு. இருத்தியேழு முகத்தெ போன மாசம் வித்துட்டேன்”
“சரி கொடுங்கணே”
ஊர் வந்து இவ்வளவு சீக்கிரம் வந்த வேலை முடியும்னு அவன் யோசித்துப் பார்க்கவில்லை. துரைகண்ணு அய்யாவின் பேச்சு எவ்வளவு கண்ணியமுனு மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான். இது தான் அதிஷ்டமா? இல்லை என்னை நாடு உனக்கு தேவையானதைத் தருவேன் என்று சொல்லும் தெய்வச் செயலா? பூரித்து போனான். “ஒரு முகம் இருக்கிறது” என்ற சொல்லே அவனுள் அமுதமாய் விழுந்தது. ஒரு சூரிய உதயம் போல அவன் மனசு விரிந்தது. ஒரு தோட்டத்தை வாங்கியவன் அதில் பயிர்களின் பச்சையத்தை நினைத்து ரசிப்பவனாக ஆனான். ருத்ராட்சம் அணிந்து கொண்டு வியாபாரத்தையும் எப்படி மாற்றத்திற்கு கொண்டு வர வேண்டுமென்று சட்டென அவனுள் நம்பிக்கைப் பரவியது. ஒரு புதிய உலகத்தில் பயணிக்க காத்திருப்பவனாக அவனுக்குள் எண்ணங்கள் இறக்கை முளைத்துக் கொண்டது. அவர் மெதுவாக அவனைப் பார்த்துக் கொண்டே பையிலிருந்து,மஞ்சள் கயிற்றில் கோர்த்த ஒரு முக ருத்ராட்ச மாலையை எடுத்து அவனிடம் கொடுத்தார். பயபக்தியாய் அதை வாங்கியவனின் உடம்பு சிலிர்த்தது. அந்த ருத்ராட்சம் ஒரு பத்தாவது நாள் நிலாப் பிறைப் போன்றும்,சுற்றியும் கொப்பளிக்கும் சிறு நீர் குமிழியாக, இன்னும் முனை கட்டாத முட்களாக ஒரு சொரசொரப்பும் அதில் இருப்பதையும், மேல் நோக்கிய நடுப்பார்வையின் இடையில் நீர் வீழ்ச்சி தடமாகவும், தப்பித்து போகும் வழிகாவும் ஒரு கோடு இருப்பதைக் கண்டு அதனை நீண்ட நேரம் பார்த்தான். இறைவன் எங்கேயும் இருப்பான் என்பதற்கு இந்த சின்ன ருத்ராட்சம் சாட்சியாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ருத்ராட்சம் வைத்திருந்த உள்ளங்கை அப்படியே ஜில்லுனு ஆவதை உணர்ந்து அவன் உடம்பு மீண்டும் சிலிர்த்தது. கோயிலுக்காக அள்ளிக் கொடுத்த கை இனி பலமாகட்டும் என்று நினைத்தான். துரைகண்ணு அய்யா சொன்ன பின் இந்த ஒரு கோடுக்காக எங்க யெல்லாம் அலைய வேண்டி இருந்தது? கோடுங்கிற வழி தானே எல்லாக் கணக்கையும் சரி படுத்துகிறது. நம்பிக்கை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் மனிதனின் ஊசலாட்டம் குறைகிறது. ஒரு பொருளிலிருந்து துவங்கிறத் துளி நம்பிக்கை அது வானளவு மனசுக்குள் உயர்ந்து போகிறது. அவன் கையிலிருந்த ஒரு முக ருத்ராட்சத்தின் சக்தி அவன் கவலையை மறக்கும் மருந்தாக நினைத்துக் கொண்டான்.
“தம்பி இப்படியே எவ்வளவு நேரம் அதையப் பார்ப்பீங்க? இதொண்ணும் அழகு பொருள் இல்ல தம்பி. கோடுக தான் முகங்களில் கணக்கு. ஒத்தக் கோடு,ஒற்றைத் தடம்,ஒத்துப் போகிற மனசு எல்லாம் மனுசனுக்குத் தேவை. அதெல்லாம் இதில் இருக்கு”
“இந்த ருத்ராட்சம் எனக்கு அதிசயமாக இருக்குணே”
“அதனோட அதிசயம் இன்னும் நிறைய இருக்கு தம்பி. அணிஞ்சா மலைச்சு போயிரனும். துரைகண்ணு அண்ணங் ௯ட நா சொல்லித் தான் ருத்ராட்சம் மாலை போட்டார். அதைப் போட்டப் பின்னாடி அவருக்கு எந்த குறையுமில்லை. தண்ணீ அடிக்கறப் பழக்கத்தையும் விட்டுட்டாரு. நல்ல விருத்தி,மனசுல சாந்தி,யாரப் பார்த்தாலும் ஒரு அன்பு வருது. இதுக்கு மேல என்ன வேணும் மனுசனுக்கு?”
“சரிணே இது வெலை என்ன?”
“தம்பி விலைச் சொன்ன ஓடிப் போயிருவ. இதுக்கா இன்ன விலையினு ஆச்சரியம் படுவே. கிராம் கணக்கா சங்கு விலை இல்ல இதுக்கு.ஒரே விலை தான்.அண்ணே சொல்லி இருப்பாரே”
“விலை அதிகமாக இருக்கும்னு மட்டும் சொன்னார்ணே”
“இது உண்மையான ருத்ராட்சம். எனக்கு தெரிஞ்ச இமாச்சல ஆள்கிட்ட வாங்கினது தம்பி. நாலு கடையில விசாரிச்சுக்கிட்டு வந்து எனக்கு பணம் கொடு, ஒண்ணும் அவசரமில்ல”
அவர் சொன்னதற்கு எதுவும் பேசவில்லை அவன். ஏற்கனவே அவன் விசாரித்த வகையில் முப்பது ஆயிரம் வரை எல்லாம் சொன்னார்கள். தயாராக வைத்திருந்த இருபதாயிரத்தை எடுத்துக் கொடுத்தான்.
“தம்பி…அண்ணேப் பேச்ச மதிச்சு இதைய தங்கம் மாதிரி ஒன்றை மாசமா யாருக்கும் தராமப் பாதுகாத்து வெச்சு இருக்கேன். ஒரு சுத்து விட்டாக் ௯ட நிறைய லாபம் பார்த்து இருப்பேன்”
“அண்ணே…இப்ப எங்கிட்ட இவ்வளவு தான் இருக்கு. இன்னும் எவ்வளவு தரனும்னு சொல்லுங்க ரெண்டு நாள்லக் கொடுக்கறேன்”
“தம்பி, நம்பிக்கைக்கு எப்போதும் நான் விலை வைக்கறவனில்லை. ராசிக்கல்லச் சொல்லு ஒரு விலையச் சொல்லிருவேன். இது சாமி சம்பந்தப் பட்டது. பணத்த கையில வெச்சுக்கிட்டு ஓடிப் போய் ஒரு முகத்த வாங்கவும் முடியாது. நீ கொடுத்தது போதும் லாபமோ நஷ்டமோ அது என்னை சார்ந்ததாக இருக்கட்டும். நீ நல்லா இருந்தீனா என்னைய நெனச்சுப் பாரு அது போதும் எனக்கு”
“இல்லணே…சொல்லுங்க”
செல்வன் திருப்பி…திருப்பி இரண்டு முறைக் கேட்டான். அவர் பதில் சொல்லவில்லை.
“தம்பி…இதை வாங்கிட்டோம்னு வீட்ல வெச்சுக்காத. உங்க தெய்வம் சிவன வழிப் பட்டு கழுத்துலப் போடு. சட்டைக்கு வெளியேப் போடாம,எப்போதும் தேகத்தோட ஒட்டி இருக்கனும். அப்பத் தான் அதுக்கு சக்தி.வாய் சுத்தமும்,கை சுத்தத்தோட உடம்பு சுத்தமும் அவசியம் தம்பி. இது கழுத்துல இருக்கறப்போ எதுவும் அண்ண மாதிரி தப்பு செஞ்சராத கவனம்”
இறுதியாய் பிச்சை சொன்ன வார்த்தை அவனை நெஞ்சைப் பிடிக்க வைத்தது. நம்பாமல் அதிர்ந்து போனான். கை கால் மரத்து போனவனாய் அப்படியே நின்றான். மூச்சு விடுகிறான? இல்லையா?என்று சோதிக்க வேண்டி இருந்தது.
“ஆமாம் தம்பி, தோட்டத்துல வேலையில இருந்த பொம்பளைய கை வெச்சுட்டாராம். அவசரத்துல ருத்ராட்சத்தைக் கழட்ட மறந்துட்டதாக பின்ன எங்கிட்டச் சொல்லி அழுதாரு. யாருக்கும் தெரியாது. இத்தனை நாள் சம்பாரிச்சப் பேரும்,பொருளும் என்னை விட்டு போயிடும் போல இருக்கே. இந்த வயசுல எனக்கு எதுக்கு இந்த கெட்டப் புத்தி வந்ததுனு தெரியலையேனு அவரு அழுத அழுகை கொஞ்சம் நஞ்சமில்ல தம்பி. நா ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். தெய்வம் நின்று கொல்லும்னு. கடந்த பத்து நாளாவே படுத்தா கெட்ட…கெட்ட கனவா வருது, பயமா இருக்குதுனு தொடர்ந்து போன் பண்ணுனாரு. நா என்ன செய்ய முடியும்? தெய்வ குத்ததெத்த யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. தெய்வம் உங்ககிட்ட விளையாடுதுணே. மனுசன விட்ட தெய்வம் யாரோட விளையாடும்? உங்களுக்கு வயசு ஆகிப் போச்சு,ஆனதும் ஆகிப் போச்சு. மனசப் போட்டு அலட்டிட்டு இருங்காதீங்க, சாவு ௯ட உங்களுக்கு தொந்தரவா இருக்காதுணேனு சொன்னேன். அப்படியே ஆகிப் போச்சு தம்பி. படுத்தப் படுக்கையிலேயே அவர் உயிர விட்டுட்டார். எப்போ உயிர்ப் போச்சுனு யாருக்மேத் தெரியாது. எதுமே நல்லது நெனைச்சா நல்லது கெட்டது நெனைச்சா கெட்டது. இந்த ருத்ராட்சங்களுக்கு அவ்வளவு மகிமை இருக்கு தம்பி”
பிச்சை, துரைகண்ணு பற்றியும்,ருத்ராட்சம் பற்றியும் பெருங்கதையாகச் சொன்னதைக் கேட்டு அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. .இப்போ இந்த ருத்ராட்சத்தை நாம போடலாம? வேணாமா?ஒரு கணம் அவனுள் யோசனை எழுந்து அடங்கியது. துரைகண்ணு அய்யா ஏன் இப்படிச் செஞ்சார்?அவரைப் போல யாருமில்லை ரொம்ப நல்லவர்னு தானே இத்தனை நாளா நெனைச்சுட்டு இருந்தேன். இந்த கெட்ட புத்தி அவருகிட்ட எப்படி ஒட்டுச்சு? அவனாக சற்று நேரம் யோசித்தான்.
“தம்பி,வாழ்க்கையில நாலு நல்லதும் இருக்கும், கெட்டது இருக்கும். அதற்கெல்லாம் நல்ல வழிகாட்டி தான் இந்த ருத்ராட்சம். போங்க…வேலையப் பாருங்க,வியாபாரத்தப் பாருங்க. ஆனா,சுத்தமா இருக்கறத மறந்தறக் ௯டாது”
அதுக்கு மேல் செல்வன் எதுவும் பேசவில்லை. மனசில் முன்பு இருந்த பாரம் போய் புதிய பாரம் வந்ததாக நினைத்தான். தொடர்ந்து சுத்தமாக இருக்க முடியுமா? இருக்க வேண்டுமென்று அவனே சொல்லிக் கொண்டான். “சிவாய நமக” என்று அவனை அறியாமல் வெளிப்பட்ட வார்த்தையை பிச்சையிடம் சொல்லி விட்டு ஒரு ஏக முக ருத்ராட்சத்திற்கு முத்தம் கொடுத்தபடி நகர்ந்தான்.
00
முஸ்தபா
என் சொந்தவூர் திண்டுக்கல் மாவட்டம், ஜவ்வாது பட்டி புதூர் கிராமம். பிறந்து வளர்ந்தது, படித்ததெல்லாம் கோபியில். தற்சமயம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். 1989யில் முதல் சிறுகதை “பாக்யா”இதழில் வெளி வந்தது.1991ல் தாராமதி, நண்பர் வட்டம் சிற்றிதழ்களில் 1995 வரை அவ்வப்போது எழுதினேன். கடந்த நான்கு வருடத்தில் மூன்று சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு உள்ளேன்.