அன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றவர்களுக்கு மேம்பால வேலை நடைபெறும் இடத்திற்கு கீழே ரயில்வே தண்டவாளத்தினருகில் ஒரு பெண்ணின் நிர்வாண சடலம் எத்தகைய மனச்சலனத்திற்கு உட்படுத்தியிருக்கும்? “எந்த கும்பலோ நேற்று இரவு பலாத்காரப்படுத்தி கொன்று தூக்கி வீசியிருக்க வேண்டும்” என்று தான் கிட்டத்தட்ட அனைவரின் எண்ணமாக இருந்திருக்கும். ஏன் இதைப்படிக்கும் நீங்கள்கூட அப்படியொரு இயல்பான முடிவிற்கு வந்திருக்கக்கூடும், ஆனால் உண்மை அதுவல்ல.
இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னாள் ஒரு வெள்ளிக்கிழமை மாலை அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திருப்பூர் பனியன் கம்பெனி வாசலில் உள்ள டீக்கடையில் தன்னுடைய சமவயது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“முத்தண்ணே….நாளைக்கு ஊருக்கா…?”
“ம்….’’ முதியவர் வாயைத் திறக்காமல் அழுத்தமாக பதில் கூறினார்.
“இந்தத்தடவை திரும்பும் போது எப்படியாவது பாலரமணியை கூட்டிட்டு வந்துருங்க ….. அதான் சூபர்வைசர் பாலு ஆபீஸ்ல ஏதாவது வேலை போட்டுத் தரேன்னு சொல்லியிருக்கான்ல…….”
“உடனே அது முடியாது கனகு….. அங்க வேலைய விட்டு அவ இன்னும் நிக்கல….. அவங்கம்மாகாரிக்கு தெரியாம தான் நாங்க சில காரியம் பண்ணனும் ……. கொஞ்ச நாளாகும்னு நினைக்கிறேன் பாக்கலாம்”…..
“என்னவோ போங்கண்ணே … நீங்க சொல்லறதெல்லாம் கேக்குறப்ப நானா இருந்தன்னா கதை வேற மாதிரி இருந்துருக்கும் … நீங்க அப்புராணி வேற என்னத்த சொல்ல”….
பேசி முடித்த கனகு என்ற நபர் நல்ல திடகாத்ரமாக இருந்தார். முத்தண்ணனுக்கு அவருடன் இருக்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத பாதுகாப்புணர்ச்சிக்கு ஆட்பட்டிருப்பதாக தோன்றும்.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து முத்தண்ணன் இறங்கும்போது பத்துமணி வெயில் சுளீரென்று அடித்தது. பொதுக்கழிப்பிடம் சென்று வந்து தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கி வந்து முகம் கழுவி சிறிது நீரை அருந்திய பிறகுதான் சற்று தெம்பாக இருந்தது. பழனிக்குச் செல்லும் பஸ் ஸ்டாப்பில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சற்று ஆசுவாசமாக அமர்ந்து கொண்டார்.
நினைவுகள் திடீரென்று முப்பது வருடம் பின்னோக்கி சென்றன,
ஊமைச்சிக்கும் தமக்கும் பழனி திருஆவினன் குடியில் வைத்து திருமணம் நடந்த சம்பவம் மனதில் நிழலாடியது. ஊமச்சி என்ற பெயருக்கு என்ன விளக்கம் என்று தெரியாது.
கல்யாணமாகி பாலரமணி பிறந்து வருடங்கள் போனதே தெரியாமல் பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியுடன் தான் இருந்தனர். இவர்கள் குடியிருப்புக்கு அருகில் குடிநீர் வடிகால் வாரியம் பொதுத்துறை நிறுவன அலுவலகம் வந்தது தான் இவர்களுடைய வாழ்கையில் சொல்ல வொன்னாமாற்றத்தை உருவாக்கி விட்டது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் உதவியாளர் சிவசரனுக்கும் ஊமைச்சிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நீண்ட நாட்களாக யாருக்கும் உறுத்தாமலும் மாசில்லாமலும் தான் தெரிந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை முத்தண்ணன் தான் வேலை செய்யும் திருப்பூர் பனியன் கம்பெனியிலிருந்து சற்று முன்னதாகவே கிளம்பி வீட்டுக்கு வந்தார். மகள் பாலரமணி வேலைக்கு சென்று இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டிற்கு சென்று உடை மாற்றிக்கொண்டு புழக்கடைக்கு சென்றபோது பக்கத்து குடிநீர் வாரிய அலுவலகத்திலிருந்து யாரோ இருவர் சத்தமாக பழைய பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தது கேட்டது, உற்று கவனித்ததில் அது சிவசரனும் ஊமைச்சியும்தான் என்று உறுதியானது.
முத்தண்ணன் இதைக்கூட பெரிதாக எண்ணிக் கொள்ளாமல் இருவருடைய நட்பையும் சந்தேகிக்காமல் தன்வேலையுண்டு என்று அறைக்குத் திரும்பி படுத்துக் கொண்டார். ஆனால் அதற்குப்பின் நடந்த நிகழ்ச்சிகள் தான் அவர் வாழ்கையை திருப்பிப் போட வைத்தன.
அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்த உருவம் ஊமச்சி தான் என்று தெரிந்ததும் :”என்ன அங்கு?” (இப்படித்தான் முத்தண்ணன் ஊமைச்சியை அழைப்பது வழக்கம்) என்றார் பணிவாக…
“என்ன மாப்பிள்ளே நேரமே வந்துட்டாப்ல இருக்கு” என்ற ஊமைச்சியின் குரலில் கேலியும் சற்று தடுமாற்றத்தையும் உணர்ந்தார் முத்தண்ணன்.
ஊமச்சி அருகில் வந்ததும் சற்று அதிர்ந்து தான் போனார், கண்கள் இரண்டும் சிவப்பாக, கேசம் கலைந்து தடுமாறியபடி இவர் அருகில் வந்ததும் சாராய வாடை வீசியது. அவள் குடித்திருந்தாள்.
“என்ன அங்கு இது கோலம் .. குடித்திருக்கிறாயா? எப்போதிருந்து இந்த பழக்கம்..? அக்கம் பக்கத்தில் பார்த்தால் என்ன நினைப்பார்கள்….? கல்யாண வயதில் ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு பொம்மனாட்டி செய்யும் காரியமா இது….?
இவருடைய அத்தனை கேள்விகளுக்கும் சிறு புன்னகை ஒன்றை பதிலாக தந்துவிட்டு பக்கத்து அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். அதிர்ச்சியுடன் எழுந்து அவளைத் தொடர்ந்து சென்று அறைக்கதவை தட்டினார். அதற்குள் “அப்பா” என்றழைத்தவாறு ‘பாலரமணி’ வந்துவிட தட்டுவதை நிறுத்திவிட்டு “வாம்மா.. என்று மகள் பக்கம் திரும்பிக்கொண்டார்
“என்ன அப்பா.. அம்மா உள்ளார இருக்கா?” என்கிற பாலரமணியின் கேள்விக்குள் எல்லா விசயங்களும் அவளுக்கும் தெரியும் என்பது போல் பட்டது.
“என்ன ரமணி … உனக்குத் தெரியுமா? “
“ஆமாப்பா ரெண்டு நாளா அம்மாவின் நடத்தை சரியில்ல … இத எப்படி உங்ககிட்ட சொல்லறதுன்னு நானும் பேசாம இருந்துட்டேன்”.
தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே இடிந்துபோய் தரையில் அமர்ந்து கொண்டார் முத்தண்ணன்.
உதவியாளர் சிவசரனுக்கு அப்படியே டி.எம் .எஸ் குரல். மாலை ஆனதும் அவருடைய பா ட்டை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் அவருடைய ஆபீசிற்கு வரும். அப்படி கேட்கப்போனவள் தான் ஊமச்சியும். அவளுக்கும் நல்ல குரல்.நன்றாக பாட வரும். எப்படியோ இருவரும் சேர்ந்து பாடி பழகி விட்டிருந்தனர். ஆனால் இதையும் மீறி சிவசரனிடம் உள்ள மதுப்பழக்கம் இவளையும் தொற்றிக் கொண்டது தான் வேதனை.

இச்சம்பவத்திற்கு பின் இரு வாரங்களாக அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை முத்தண்ணன். வாராவாரம் சனி ஞாயிறு தினங்கள் திருப்பூரிலிருந்து ஊருக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தவருக்கு போன வாரம் வீட்டிற்கு வரவே பிடிக்காமல் திருப்பூரில் வேலை பார்த்த இடத்திலேயே தங்கி விட்டார். இருவாரமாக பார்க்காமல் மகள் பாலரமணி ஞாபகமாகவே இருந்ததால் புறப்பட்டு வந்துவிட்டார். ஊர் வந்திறங்கினாலும் வீட்டிற்கு செல்ல மனம் பிடிபடாமலேயே இருந்தது. ‘அண்ணே முத்தண்ணே எங்க இங்க உக்கார்ந்துட்டு இருக்கீங்க?’ என்று கேட்டவரை திரும்பி பார்த்தார்.
வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி சகிதமாக பாபுஜி நின்றிருந்தார். பாபுஜி முஸ்லிம் தான் என்றாலும் முத்தண்ணன் குடும்பத்துடன் நன்றாக பழக்கம் உள்ளவர், முத்தண்ணன் வசிக்கும் தெருவில் தான் சைக்கிள் ஸ்டான்ட் வைத்திருக்கிறார்.
“வாங்க பாபுஜி … மனசு சரியில்ல …. அப்படியே உக்காந்துட்டேன் “
“என்னவோ போங்க கொஞ்ச நாளா உங்க வீட்டு நிலைமை சொல்லிக் கொள்ளறாப்ள இல்ல ..உங்க பொண்ணு நேத்து ராத்திரி என்கிட்டவந்து பேசி அழுதுட்டு போச்சு” என்றவரின் முகத்தை நேரில் பார்க்கவே முடியாமல் முகத்தை மூடிக்கொண்டார்.
“சரி சரி வாங்க வீட்டுக்குப் போய் ஆக வேண்டியதை பார்க்கலாம்’’ என்ற பாபுஜியின் வார்த்தைக்கு மதிப்பளித்து அவருடனேயே எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
ஞாயிற்றுக்கிழமையாதலால் வாசலில் அமர்ந்தவாறு பாலரமணி எதோ புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தாள். முத்தண்ணனை நேரில் பார்த்ததும் கண்களில் பொல பொல வென கண்ணீர் கொட்டியது.
“ஏம்ப்பா…… போன வாரம் வரல…. உங்களைப் பார்க்கம என்னால சரியா சாப்பிட முடியல தூங்க முடியல’’ என்று கோபித்துக் கொண்டாள்.
“வேலை அதிகம் ரமணி வேற ஒன்னும் இல்ல.” பாபுஜி விடைபெற்றுக் கொண்டதும் மகளைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்.
“எங்க அவ ..?’’ முத்தண்ணனுக்கு ஊமச்சியின் பெயரைச் சொல்லக்கூட பிடிக்கவில்லை.
“இன்னைக்கு ஆபீஸ் லீவுனால காலையிலேயே பாட்டு கிளாஸ் ஆரம்பிச்சாச்சு”..
“இரு நான் நேர்ல போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன் இப்படியே பேசாம இருந்தா அவளுக்கு ரொம்ப துளிர்விட்டுப் போயிடும்”……
“வேண்டாம்ப்பா … எதுவும் கேட்க வேணாம் அம்மா இப்படி பண்ணறது யாருக்கும் தெரியாது, பாபுஜி மாமாகிட்டத்தான் நான் போய் நேத்து ராத்திரி சொன்னேன் அவரும் இதப்பத்தி பேசாதமான்னுட்டார்’’.
மகளின் பேச்சைக்கேட்டு துக்கம் தொண்டையை அடைக்க கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டார்.
மதியம் சாப்பிட அழைத்த மகளிடம் எதுவும் வேண்டாமென்று துக்க நினைவுகள் அசைபோட்டவாறே மாலை 7 மணி வரை படுத்தே கிடந்தார், ஊமச்சி வரவேயில்லை.
”முத்தண்ணே..முத்தண்ணே” வெளியே பாபுஜியின் குரல். எழுந்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார்.
“வாங்க சித்த காலார வெளியில போயிட்டு வருவோம் எத்தன நேரம் தான் வீட்டிலேயே கிடப்பீங்க” என்றவரிடம் சரியென்று கிளம்பி நடக்கத் தொடங்கினார்.
“என்ன சொல்றா … உங்க அருமை பொஞ்சாதி “… என்று பாபுஜியின் கேள்வியில் அக்கறை தெரிந்தது.
“இன்னைக்கு காலைல இருந்தே வீட்ல இல்லையாம்… ஞாயிற்றுக்கிழமையானதால காலையிலேயே பாட்டு கிளாஸ் தொடங்கிடுச்சாம்” ..என்றவரின் குரல் உடைந்து கம்மியது.
“விடுங்க.. இன்னைக்கு ரெண்டுல ஒன்று பாத்துபுடலாம்னு இருக்கேன்… ஒன்னு அவ நான் சொல்லறத கேட்கணும்.. இல்லாட்டி நடக்கறதே வேற” என்றவரின் பேச்சில் தீவிரம் தெரிந்தது.
இருவரும் காலரா நடந்து வீடு திரும்பும்போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது, பாபுஜியிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு நுழைந்தவருக்கு பாலரமணி தான் முதலில் கண்ணில் பட்டாள்.
“என்ன ரமணி சாப்பிட்டாச்சா .. எங்க அவ…?”
என்றவரின்கேள்விக்குகண்களாலேயேசமையலறை பக்கம் பதிலளித்துவிட்டு
“சாப்பிட்டாச்சு நான் படுக்க போறேன்” .. என்று அவள் தினமும் படுத்துறங்கும் முன் அறைக்கு சென்றுவிட்டாள்.
முத்தண்ணன் நேராக சமையலறைக்கு சென்று அடுப்படியில் வேலையாயிருந்தவரிடம் “இங்க என்ன மசுரு வேலை உனக்கு” என்று கத்தினார்.
கத்திய இவரை முறைத்து பார்த்த ஊமச்சியின் கண்கள் இன்றும் கோவைப்பழமாக சிவந்துதான் இருந்தது. அதே சாராய நெடி. ஆவேசம் வந்தவராக அவளின் பிடரியை பிடித்திழுத்து முகத்தில் பளாரென்று அறைந்தார் முத்தண்ணன்.

“என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு … நான் என்ன உனக்கு அவ்வளவு எளக்காரமா போய்ட்டனா” என்று சொல்லியவாறு மறுபடியும் அடிக்க கையை ஓங்கியவரை தடுத்து,
“நான் என்ன உலகத்துல நடக்காததையா செஞ்சுட்டேன்.. இப்படி கோபத்துக்கு வர்ற? இனி ஒரு அடி விழுந்துசுனாநடக்கறதே வேற’’ என்று அவரை எதிர்த்து நின்றாள்.
“எதிர்த்தாடி பேசற எச்சக்கல நாயி! இரு உன்ன என்ன செய்யறன் பாரு’ என்று அங்கிருந்து தடி ஒன்றை அடிக்க எடுத்தார். அதற்குள்
“இரு உன்னெ போலீசுல புடிச்சு குடுத்துட்டு மறு வேலை பாக்குறேன்” என்று சொல்லியவாறு விருட்டென்று வீட்டுக் கதவைத் திறந்து வீதிக்கு வந்தாள் ஊமச்சி .
“வேண்டாம் அங்கு.. நாலு சுவத்துக்குள்ள நடக்கறது வெளியில தெரிய வேணாம் வந்துரு உள்ள”என்று கதறியவரை காதில் வாங்கிக்கொள்ளாமல் மளமளவென்று வீதியில் நடக்கத் தொடங்கினாள்.
“வேண்டாம்ப்பா அம்மா வந்துடும். நீங்க ஒன்றும் செய்யதிங்கப்பா” என்று அழத் தொடங்கிவிட்டாள்.
”நீ வீட்டுலேயே இரு ரமணி நான் ஏதும் பண்ணல..பின்னாலையே போய் பேசி அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தர்றேன்:” என்று சொல்லிட்டு ஊமச்சி சென்ற திசையில் வேகமாக நடந்தார். அவர் நினைத்தது போலவே மகளிர் காவல் நிலையம் உள்ள தெருவை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் ஊமச்சி.
இரவு ஒன்பதுமணிக்கு மேல் அவ்வீதியில் கூட்டம் அவ்வளவாக இருக்காது மேலும் மேம்பால வேலை நடந்து கொண்டிருப்பதால் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அமைத்திருந்தனர், சரியாக பாலத்திற்கு அடியில் அவளை நெருங்கி விட்டுருந்தார் முத்தண்ணன்.
“இரு அங்கு.. நான் சொல்லறத கேளு..”என்றவாறு அவள் கையை பற்றினார். வெடுக்கென்று அவள் இவர் கையை உதற ஆவேசமடைந்தவாறு அவளை இறுக்கிப்பிடித்து கீழே தள்ளினார். அருகில் இருந்த கல் ஒன்றில் பின்மண்டையில் பலத்த அடியுடன் வீரிட்டு விழுந்தாள் ஊமச்சி. எந்த அறிகுறியும் இல்லை முத்தன்ணனுக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. சிறிது நேரம் தலையில் கை வைத்தவாறு அவளருகில் அமர்ந்தார்.
ஊமச்சி இறந்து விட்டாள் என்று உறுதி செய்த பின்பு அவருக்கு ஞாபகமெல்லாம் பாலரமணி மேலதான் இருந்தது. நானும் ஜெயிலுக்கு சென்று விட்டால் அவள் கதி ?
திடீரென்று அவருக்கு விபரீத யோசனை ஒன்று தோன்றியது. வெறி கொண்ட மனிதனைப் போல அவளை பக்கத்தில் உள்ள முட்புதருக்கு இழுத்துச் சென்றார். அவளின் ஆடைகளை முழுவதும் அகற்றி முள் செடியை கொண்டு உடம்பை காயப்படுத்தினார். அந்த இரவில் நடக்காத பலாத்காரம் ஒன்று நடந்து முடிந்தது.
000
