இரவு நெடுநேரம் அகிலா யோசித்துக் கொண்டு இருந்தாள். என்ன பரிசு கொடுக்கலாம் …?

நாளை அவள் வகுப்புத் தோழி அதிதிக்கு பிறந்த நாள். ஏதாவது பரிசு தரவேண்டுமே?

காலையிலெழுந்து பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அகிலாவின் அம்மா அவசரத்தில் இருந்தாள். இன்று அவள் வேலை செய்யும் வீட்டில் சீக்கிரம் வரச் சொல்லி இருக்கிறார்கள்.

“அகி, நா கிளம்பறேன். இட்டிலி வச்சுருக்கேன். சாப்டு. ஆங், சாமி படத்துக்கிட்ட ஒரு ரோசாப் பூ வச்சுருக்கேன் பாரு ! பூக்காரம்மா உனக்காக கொடுத்துச்சு ! தலைல வச்சுட்டுப் போ ! ஸ்லைடும் வச்சுருக்கேன்”

குளித்து விட்டு சாமி கும்பிட்ட அகிலா, அந்த ரோசாப்பூவைப் பாத்து  குஷியானாள்.

“ஹையா… எவ்வளவு அழகான பூ ! செக்கச் சிவப்பா … இதழ் இதழா… ரொம்ப நல்லா இருக்கே! ஐடியா … இத அதிதிக்கு கொடுக்கலாமா… ?

ஸ்கூலுக்குப் போவதற்குள் உதிராமல் இருக்க ஒரு டப்பாவில் பத்திரமாக வைத்தாள்.

வகுப்பறையில் நுழைந்த போதே அகிலாவுக்கு பரபரப்பாக இருந்தது. சீக்கிரம் அதிதி கிட்ட இந்த ரோசாவைக் கொடுக்கணும் என்ற பதட்டம்.

அதிதி முன்பே வந்துவிட்டாள்.

அவளைச் சுற்றி தோழிகள் !

குட்டி குட்டியாய் அழகாய் பரிசுகள்…

அகிலா அந்த அதிக விலை உள்ள பரிசுப்பொருள்கள் முன் தன்னுடைய ஒற்றை ரோசா மதிக்கப்படுமா என நினைக்கவே இல்லை.

அன்புடன்  ஆரவார வாழ்த்துடன் தோழியை நெருங்கி, “ஹேப்பி பர்த்டே அதிதி !” என்று சொல்லி அந்த அழகிய ரோசாவைக் கொடுத்தாள்.

அதே சமயத்தில் புயல் போல் அருகில் வந்தாள் பாவனா.

பெரிய ஐஸ்கீரிம் கோன் அவள் கையில் !

“தள்ளுடி” என பாவனா, அகிலாவை முழங்கையால் தள்ளினாள்.

ஐஸ்கீரிமைச் சுவைக்கும் ஆர்வத்தில் அதிதியும் அவளைத் தள்ளினாள்.

அகிலா கொடுத்த ரோசா, அதிதி கையில் தான் இருந்தது. ஆனால், ஐஸ்கீரிம் அழுத்தத்தில் சிதைந்தது. ஐஸ்கீரிம் சொட்டுகள் தெறித்துக் கசங்கியது.

“ரோசாவைத் தலையில வச்சுக்கடி. இதோ ஸ்லைடு கூட வச்சுருக்கேன்.”

அகிலாவின் குரல் வெறுமே காற்றில் கரைந்தது.

அதிதியும் பாவனாவும் ஐஸ்கீரிமைச் சேர்ந்து சுவைத்துக் கொண்டு இருந்தனர்.

ஐஸ்கீரிம் முடிந்தது. ரோசா இதழ்கள் தரையில்… சில ஐஸ்கீரிம் சொட்டுகளின் இடையில்…

அதிதிக்கு ரம்யா ஒரு ஆடும் பொம்மை கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்டு, அதிதியும் ஆடினாள்.

சில அசைவுகளுக்கு உள்ளாகவே, தரையில் வழுக்கிக் கொண்டு விழுந்தாள் அதிதி.

எல்லோரும் கை கொட்டி சிரித்தனர்.

அவள் கோலம் அப்படி இருந்தது.

தரை அழுக்கு, ஐஸ்கீரிம் கறைகள், சிராய்ப்பு காயங்கள்…

அகிலா சட்டென அதிதிக்குக் கை கொடுத்துத் தூக்கினாள்.

தனது சீருடையின் பாக்கெட்டில் இருந்து கர்சீஃபை  எடுத்து அதிதியின் புத்தாடையில் ஒட்டிக் கொண்டிருந்த ஐஸ்கீரிம், தரை தூசு எல்லாவற்றையும் சுத்தப்படுத்தினாள்.

அகிலாவின் கர்சீஃப் என்பது அவள் அம்மாவின் சேலைத் துணி கிழிசல் தான். பெரிதாக , துடைப்பதற்கு வசதியாக இருந்தது.

துணியின் மற்றொரு முனையை ஈரப்படுத்தி, முகத்தை அழுந்த துடைத்து, சிராய்ப்பு காயங்களையும் துடைத்து விட்டாள்.

இதற்குள் அதிதி அழத் தொடங்கியிருந்தாள்.

எல்லோரும் தன்னைப் பார்த்து சிரித்தது அவளுக்குப் பெருங்குறையாக இருந்தது.

அகிலா அவளைப் பார்த்து, “அதிதி, அழாத… பிறந்த நாள் அன்னிக்கி அழலாமா ? சும்மா ஜஸ்ட் விழுந்தா பரவா இல்ல“

மற்ற தோழிகளும் சிரிப்பதை நிறுத்தினர்.

அகிலா அவர்களைக் கடிந்து கொண்டாள்.

அதிதி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ரோசாப்பூ கீழே கிடந்தது. பல இதழ்கள் சிதறி காம்புடன் சில இதழ்கள் ஒட்டிக் கொண்டு !

அதிதி அதைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

“ரொம்ப தேங்ஸ் அகிலா . எவ்வளவு அழகான பூ குடுத்துருக்க நீ !

இது தான் எனக்குக் கிடைச்ச விலை உயர்ந்த பரிசு.” என்றாள் அதிதி.

   ++++

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *