-பாலமுருகன்.லோ
“வீணா, ஏண்டி எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்? அப்படி என்னடி உன்னோட ரூம்ல பண்ணிக்கிட்டு இருக்கே? காது கேட்கலையா?” என்றாள் மாதவி.
“ம்மா, ஏம்மா சும்மா கத்திக்கிட்டே இருக்கீங்க? இதோ வரேன்,” என்றாள் வீணா.
சமையற்கட்டில் பாத்திரத்தை அலம்பிய மாதவி, கிச்சன் சிங்கில் இருந்த குழாயைத் திறந்த மேனிக்கு எதையோ யோசித்துக்கொண்டிருந்ததால், தண்ணீர் பாட்டுக்கு கிச்சன் சிங்க் முழுக்க நிரம்பி வழிந்தது. அந்தத் தண்ணீர் கால்களில் பட்டவுடன் தான் சுய நினைவுக்கே வந்தாள் மாதவி. “அடடா, இப்படி தண்ணீரைத் திறந்துவிட்டுட்டு இவளைப் பத்தி நினைச்சுட்டு இருந்துட்டோமே,” என்று அவளை அவளே திட்டிக்கொண்டாள்.
“ஆக்கங்கெட்ட கூவை! இவளுக்கு எவ்வளவு தடவை மனசு எடுத்துச் சொன்னாலும், இந்த மூளை அப்பப்ப அவளை, அதான் வீணாவைப் பத்தி நினைக்க வைக்குது.”
“பேசாம அவ சின்னக் குழந்தையாவே இருந்திருக்கலாம். ஏன்னா அவ இப்பவும் அப்படித்தான் இருக்கா. நல்லா பட்டப்படிப்பெல்லாம் படிச்சிருக்கா. ஆனா, படிச்சு என்ன பிரயோஜனம்? அவளோட குழந்தைத்தனம் இன்னும் குறையவே இல்லையே.”
“எந்நேரமும் காதுல அந்த இயர்போனை மாட்டிக்கிட்டு பாட்டு கேட்கிறா. இல்லைன்னா தன்னோட மொபைல்ல இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கிறா, அதுவும் இல்லைன்னா ஃபேஸ்புக்ல மூழ்கியிருக்கா.”
“ஞாயிற்றுக்கிழமையாச்சே, அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்னு நினைக்கிறாளா? கழுதை வயசு ஆச்சு. இவளை நினைச்சா பயமா இருக்கு. இவளை ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுத்தா அவனோட கதி என்னவாகுமோ! யோசிக்கவே முடியலை. ஒரு நாளும் கிழமையுமா வீட்டுல இருக்கிறவங்களுக்கு உதவலாம். ஆனா இவ இப்படி இருக்காளே,” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொண்டாள் மாதவி.
“ஏம்மா, சொல்லு, ஏன் இப்படி என் பேரைச் சொல்லி ஏலம் விடுற? ஒரு தடவை கூப்பிட்டா நான் வர மாட்டேனா?”
“நீ வரலைங்கிறதுதானே என் கவலையே. அதான் பல தடவை ஏலம் விடுற மாதிரி ஆயிடுது.”
“சரி சொல்லும்மா, எதுக்கு என்னைக் கூப்பிட்ட இப்போ?”
“ஏண்டி, ரூம்ல கதவைச் சாத்திக்கிட்டு அப்படி என்னடி செஞ்சுட்டு இருந்த?”
“என்னம்மா, எப்பப் பார்த்தாலும் உன்கிட்ட விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்குது. வாரம் முழுக்க ஒரே வேலை, சில வாரம் நைட் ஷிஃப்ட் போயிட்டு வர்றேன். எனக்குன்னு இருக்கிறது இந்த ஒரு நாள் சண்டேதான். அதுல கூட என்ன என் பாட்டுக்கு இருக்க விடமாட்றியா நீ? சும்மா தொணதொணன்னு எதையாவது கேட்டுக்கிட்டே இருந்தா என்ன பண்ணச் சொல்லுற?”
“ஏண்டி, உன் வயசு எவ்வளவு ஆகுது தெரியுமா?”
“அதுக்கென்ன இப்போ? இருபத்தஞ்சு ஆகுது.”
“ஏண்டி, இருபத்தஞ்சு ஆயிடுச்சேன்னு எனக்கு வயித்துல புளியைக் கரைக்குது. பெத்தவளுக்குத்தான் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்குது. உனக்கென்ன, நல்லா ஜாலியாத்தான் ஊர் சுத்துற.”
“சரி சொல்லு, சும்மா புலம்பாத. இப்ப என்ன செய்யணும்?”
“இந்த அடுப்பைக் கொஞ்சம் பார்த்துக்கோ! நான் பக்கத்துல கடைக்குப் போயிட்டு வர்றேன்.”
அவளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மாதவி கடைக்குக் கிளம்பினாள். தன் கையில் இருந்த லிஸ்ட்டில் உள்ள சாமான்களை எல்லாம் ஒவ்வொன்றாக வாங்க ஆரம்பித்தாள்.
“அட, மாதவியா! என்ன இந்தப் பக்கம்?” என்றாள் சங்கவி.
“யாரு, சங்கவியா? பார்த்து ரொம்ப நாளாச்சே, எப்படி இருக்க?”
“நாங்க எல்லாரும் சௌக்கியம். உங்க வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?”
“மாதவி, உன்னோட பொண்ணு இப்போ வேலைக்குப் போயிட்டு இருக்கா இல்லையா?”
“ஆமாம்டி சங்கவி, வயசு போயிட்டே இருக்கு. அவளுக்குத்தான் ஒரு நல்ல வரன் தேடிக்கிட்டே இருக்கேன், ஆனால் இன்னும் அமைய மாட்டேங்குது.”
“அதெல்லாம் கவலைப்படாதே, அமையுற காலத்துல அதுவா அமையும்.”
“சங்கவி, எனக்கு ஒண்ணு மட்டும்தான்டி புரியவே இல்லை!”
“என்ன? எதைப் பத்தி உனக்குப் புரியலை?”
“அதான், இந்தக் காலத்துக் குழந்தைங்க இருக்காங்களே, அவங்களைத்தான்.”
“ஏன்? என்ன அவங்களுக்கு?”
“ஒரு நாள் லீவு கிடைச்சா போதும், ரூமே கதியா இருக்காங்க. கொஞ்சமாவது வீட்டுல இருக்கிறவங்ககிட்ட பேசலாம் இல்ல?”
“ஏன்டி, நீ ஏன் வீணாப் புலம்புற?”
“நான் உன்கிட்ட புலம்பலை, அவ்வளவுதான். வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ன செய்யச் சொல்ற? இந்த உலகம் நவீனமயம் ஆனதுல இருந்து, எல்லாப் பசங்க, பொண்ணுங்க கையிலயும் இந்த உலகத்தையே கொண்டு வந்துட்டாங்க.”
“ஏன், என் பையன்தான் என்கிட்ட ஏதேதோ சொல்றான். இன்ஸ்டாங்கிறான், டுவிட்டர்ங்கிறான், மெசஞ்சர்ங்கிறான். இதுல என்ன வேடிக்கைன்னா, அவனுக்கு ஃபிரெண்ட்ஸ்ன்னு பார்த்தா ஒருத்தர், ரெண்டு பேர்தான். ஆனா பாரு, இந்த ஃபேஸ்புக்ல ஐந்நூறு, அறுநூறு ஃபிரண்ட்ஸ் இருக்காங்கன்னு சொல்றான். அதைத்தான் என்னால ஜீரணிக்கவே முடியலை.”
“ஏண்டி மாதவி, உன்னை மாதிரி ஃப்ரெண்ட்ஸை நம்ம நேர்ல பார்த்தா மணிக்கணக்கா பேசுவோம். ஆனா, இப்ப இருக்கிற உலகத்துல எல்லாம் மெசேஜ்தான்டி, என்ன பண்ணச் சொல்ற? நவீனமயம்னு சொல்லி, எல்லாத்தையும் அவரவர் அறையில கட்டுப்போட்டுருச்சு இந்த மாடர்ன் டெக்னாலஜி.”
“சரிடி மாதவி, உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. அப்ப கிளம்பலாமா!”
“ஆமாம்டி, நானுமே உன்கிட்ட நேரம் போனதே தெரியாம பேசிக்கிட்டு இருந்திருக்கிறேன். வா, வீணாவை சமையல்கட்டுல விட்டு வந்தேன். என்ன பண்ணி வச்சிருக்காளோ தெரியல, போய்ப் பார்த்தாதான் தெரியும். அப்ப எப்போ ஃபிரியா இருக்கியோ அப்ப கூப்பிடு, பேசலாம், சரியா?” என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு தங்களது வீட்டிற்கு நகர்ந்தனர்.
வீடு வந்த மாதவி, தன் அத்தையைப் பார்த்து, “வாங்க அத்தை, எப்போ வந்தீங்க?” என்றாள்.
“வாடியம்மா, எங்க கடைக்குப் போயிருந்தாயா?”
“ஆமாம் அத்தை. அங்கே பழைய சிநேகிதி ஒருத்தியைப் பார்த்தேன். நேரம் போனதே தெரியாமல் பேசிக்கிட்டே இருந்துட்டேன். பின்தான் நினைவு வந்தது, வீணாவை சமையல்கட்டில் விட்டுவந்தது. அதான் அடித்து பிடித்து ஓடிவந்தேன்.”
“ஏதாவது குடிக்கிறீங்களா அத்தை?”
“இல்லையம்மா, வீணா எனக்கு சாப்பாடே போட்டுட்டா!”
“என்ன, வீணா சாப்பாடு கொடுத்தாளா? என்ன சமைச்சிருந்தா?”
“அவ வந்து சுண்டவத்தல் குழம்பும், வாழைக்காய் வறுவலும், ரசமும், கூடவே அப்பளமும் பொரித்தாள்.”
“எம்மாடி, ரொம்ப நல்லா இருந்தது எல்லாமே!”
“என்னமோ போங்க, நீங்கதான் மெச்சிக்கணும் இவளை.”
“இல்ல, நான் உன்கிட்ட கேட்கிறேன், ஏன் அப்படி சொன்ன? அவ எல்லாத்தையும் அருமையா செஞ்சிருந்தா, நானே இன்னும் கொஞ்சம் போடச் சொல்லி கேட்டு வாங்கிச் சாப்பிட்டேனா பாரேன்!”
“இல்ல அத்தை, அவ எப்பப் பார்த்தாலும் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறா. சமையல் எல்லாம் இப்பதான் கத்துக் கொடுக்கிறேன். வயசு வேற ஏறிக்கிட்டே போகுது இல்லையா? இப்ப கத்துக்கலைன்னா அப்புறம் எப்படி? கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் கஷ்டமில்லையா? அங்க போயி, ‘இது தெரியலை, அது தெரியலை’ன்னு சொல்லவா முடியும்?”
“அடியே மாதவி, ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கோ, இந்தக் காலத்துப் பசங்கெல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. நீதான் அவங்ககிட்ட பொறுப்பை ஒப்படைக்கணும். நீயே எத்தனை காலம் எல்லாத்தையும் சுமந்துகிட்டு இருப்ப? பொறுப்பை இறக்கி வச்சாத்தானே தெரியும், இவ ஒழுங்கா பண்றாளா இல்லையான்னு.”
“இப்ப புரிஞ்சுதா? இந்தக் காலத்துப் பசங்களுக்கு கம்ப்யூட்டர்லயும் வேலை செய்யவும் தெரியும், சமையல்கட்டுல சமைக்கவும் தெரியும். அவங்களை கொஞ்சம் ஃப்ரீயா விடு, அப்புறம் பாரு,” என்றாள் மாதவியின் அத்தை.
வாயடைத்துப்போய் வீணாவைப் பார்த்தாள் மாதவி.
ஒரு புன்முறுவலுடன் வீணா, “அம்மா, நீ வேணும்னா டேஸ்ட் பண்ணிப் பாரேன்,” என்றாள்.
00

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

