முத்துலட்சுமி அதிகாலையில் சிவப்பு அரளியையும், வெள்ளை அரளியையும் முற்றத்து செடியிலிருந்து பறித்து. பூஜை, அறையில் அழகாய் அலங்கரித்து வைத்திருந்தார். தர்மராஜ் பூஜை செய்துவிட்டு பட்டையுடன், அன்றைய நாளிதழை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு வாசிக்கத் தொடங்கினார். காகம் கரைந்துகொண்டிருந்தது. அப்பொழுது எட்டு மணியை அடித்து ஓய்ந்தது கடிகாரத்தின் பெண்டுலம்.
மஞ்சணத்தி வீட்டுக்குள் நுழைந்தாள் வாசலில் காலைக் கழுவிவிட்டு.
அதிகார வர்க்க மனநிலையில் இருந்துகொண்டு சாதி பார்த்தே எல்லோரையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டிருந்த தர்மராஜுக்கு, குறைந்த கூலிக்கு வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காதபோது சாதி பேதம் பார்க்காததைப் போன்றே பெண்களிடமும் அவர் சாதி பார்ப்பதில்லை. அப்படியே மஞ்சணத்தியையும் குறைந்த சம்பளம் பேசி பணிக்கு அமர்த்தினார்.
முத்துலட்சுமி எவ்விதப் பாகுபாடும் பார்க்காதவர். பெண் எந்த சாதியில் பிறந்தாலும் அவள் ஒடுக்கப்பட்டவள்தானே. முத்துலட்சுமி காபி தட்டை மஞ்சணத்தியிடம் கொடுத்துவிட்டு, “நீ ஒரு டம்ளரை எடுத்துட்டு, இன்னொரு டம்ளரை ஐயாகிட்டக் குடு” என நீட்டினாள்.
“ஏனுங்கம்மா, சர்க்கரையில்லாத காபி டம்ளர் இதுல ஏதுங்க?” எள்ளல் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள் மஞ்சணத்தி.
“ஏ புள்ள, என்ன சிரிக்கிற இந்த எழவெடுத்த சுகரு வந்ததிலிருந்து இனிப்பே பாக்காம செத்துக் கெடக்குது நாக்கு. உனக்கு நக்கலாத் தெரியுதா என்ன பாத்தா?” தர்மராஜ் அதட்டினார்.
“உடுங்கைய்யா, உங்க ரெண்டு கரண்டி சர்க்கரையும் சேர்த்து என்னோட காபில போட்டு இனிப்பா காபிய குடுச்சுப்புடறேன்….” சிரித்தாள் மஞ்சணத்தி.
“அடக் கழுத,… வரவர வாய்க் கொளுப்பு அதிகமாயிடுச்சு புள்ள. மரியாதையா போயி வேலய பாப்பியா…” நமட்டு சிரிப்புடன் தோப்பு வேலைக்கு வந்த ஆட்களைப் பணிக்கு பிரித்துவிடும் வேலையைத் தொடங்கினார் தர்மராஜ்.
வயக்காட்டுக்கு கொஞ்சம் பெண்களையும், கரும்புக் காட்டிற்கு கொஞ்சம் பேரையும், பட்டுப்பூச்சியின் உணவான மல்பெரி தோட்டத்துக்கு கொஞ்சம் ஆண்களையுமாய் பணிகளைப் பகிர்ந்து அளித்து அனுப்பினார் தர்மராஜ்.
தர்மராஜ்க்கு காலையும் மாலையும் இன்சுலின் ஊசி போட்டுவிடுவார் முத்துலட்சுமி. நாளாக நாளாக தர்மராஜின் சர்க்கரை நோயின் ஆதிக்கம் அதிகமாகியிருந்தது முத்துலட்சுமிக்கு வருத்தத்தைத் தந்தது. பாவக்கா ஜூஸ், வெந்தயத் தண்ணி, பத்திய சாப்பாடு, காசினிக் கீரை கசாயம் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து கொடுப்பார் முத்துலட்சுமி. வீட்டிலும் பெரிதாக இனிப்புப் பலகாரங்கள் செய்வதை நிறுத்திவிட்டார்.
இந்த முறைதான் கரும்பு பயிரிடப்பட்டிகுந்தது. நெல் சாகுபடிதான் எப்பொழுதும். அதனால் வெல்லம் ஆட்டி எடுக்கும்பொழுது ஊரிலிருக்கும் மகனுக்கும் மகளுக்கும் கொடுத்துவிட மனதிற்குள் நினைத்திருந்தாள். அப்படியே கொஞ்சம் மஞ்சணத்திக்கும்.
கரும்பு நட்டு பத்து மாதங்கள் நெருங்கிய நிலையில் விளைச்சல் முற்றியதும் ஆள்பிடித்துத் தரும் புரோக்கர் சந்தானம் அன்று மாலை தர்மராஜைப் பார்க்க வந்தார்.
“ஐயா, விசாரிச்சதுல சேலத்துல இருந்து கரும்பு வெட்டாளுக தோதா கிடைக்குறாங்க. நீங்க அட்வான்ஸ் பணம் கொடுத்தா நான் இன்னைக்கே போய் நாளைக்குக் காலைல ஆளுகளக் கூட்டியாந்திடுறேனுங்க” என்றார் சந்தானம்
அதற்குள் பணி முடிந்ததும் பணியாட்கள் தனது தினக் கூலியைப் பெறுவதற்காக வாசலில் வந்து நின்றுகொண்டிருந்தனர். அப்பொழுது தர்மராஜ் அவர்களிடம், “வியாழக்கிழமையே நாளத்தக் கூலிய சேத்தி வாங்கிட்டுப் போயிருக்கணுமில்ல. வெள்ளிக்கிழமை பணத்த வெளியே கொடுக்கறது, வீட்டில இருக்கிற லட்சுமியை விரட்டறதுக்கு சமம்னு தெரியாதாக்கும்! நேத்து வாங்காமப் போனது உங்க எல்லாரு மேலயும் தப்பு. ஏந்தப்பு இல்ல. இப்ப போயிட்டு நாளைக்கு எல்லாரும் கூலிய சேர்த்து வாங்கிக்ங்கங்க” என்றார் சினம் நிறைந்த முகத்துடன்.
“ஐயா, இந்த சம்பளத்தை வாங்கிட்டுப் போனாத்தானுங்க எங்க ஊட்ல இன்னைக்கு ஒல கொதிக்கும்”, “ஐயா பெரிய மனசு பண்ணி குடுங்கைய்யா” என்று எத்தனை முறை கேட்டும், தர்மராஜ் சற்றும் மனம் இறங்கவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பிய கூலி ஆட்கள் தெரு முக்கில் இருக்கும் மளிகைக் கடைக்காரரிடம் கடனாக அரிசியும் பருப்பும் சர்க்கரையும் கேட்டார்கள்.
“அண்ணாச்சி, எங்க ஐயா வெள்ளிக்கிமைனால எங்களுக்குக் கூலி தரல. நாளைக்கு உங்களுக்கு சம்பளத்தை வாங்கி பணத்த கொடுத்துப் போடுறேனுங்க.” கனிந்த குரலில் எல்லார் சார்பாகவும் கடைக்காரரிடம் கதிர்வேல் கேட்டான்.
“நீங்களும் வெள்ளிக்கிழமை சாங்கியம் பாப்பிங்களா?” என்று கேட்ட கதிர்வேலிடம் கடைக்காரர் சொன்னார், “ஏலே வாங்கிட்டு நாளைக்கு வந்து கொடும்ல. எனக்கு நெஞ்சு வலி வந்து படுத்துட்டேன்னா வெள்ளிக்கிழமை சாங்கியம் பார்த்து நான் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டாம இருக்க முடியுமா? போல வேலயப் பார்த்துக்கிட்டு! உங்க ஐயாவை மாதிரி எனக்கு என்ன பைத்தியமா புடிச்சுக் கெடக்கு?” பொட்டலத்தைக் கட்டிக்கொண்டே நக்கலாக பதில் அளித்தார்.
தர்மராஜிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அன்றே கரும்பு வெட்டு ஆட்களை அழைப்பதற்காக சந்தானம் டவுன் பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு ஊரிலிருந்து புறப்பட்டார் சேலம் நோக்கி.
சுற்றி இருக்கும் மரங்களில் பட்சிகள் கூடு அடையும் கீச்சொலிகளின் ஊடே இரவு வியாபித்துப் படர்ந்திருந்தது. பல்பின் சுவிட்சை அணைத்தவாறே முத்துலட்சுமி, “நேரங் காலமாப் படு புள்ள. துங்கோணும். நாளைக்குக் காலையில கரும்பு வெட்ட ஆளக் கூட்டிட்டு சந்தானம் வந்திருவான். நாளைலருந்து ஒரு வாரத்துக்கு வேல சரியாயிருக்கும்” எனக் கூறிக்கொண்டே உறங்கச் சென்றார்.
முத்துலட்சுமி வாசற்கதவைச் சாத்திவிட்டு வந்து படுத்தார்.
பொழுது புலர்ந்ததும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தர்மராஜ் கதவை திறந்தார். சந்தானம் ஒரு லாரி நிறைய ஆட்களும் – கரும்பு அரைக்கும் இயந்திரமும், கரும்பு பால் காய்ச்ச பெரிய கொப்பரையுமாய் வந்து இறங்கியிருந்தார்.
“ஐயா, ஆளுங்கெல்லாம் வந்தாச்சு. வேலைய ஆரம்பிச்சுப் போடுங்க” என வேப்பங்குச்சியின் இலையைக் கிள்ளியவாறே பல் துலக்க குச்சியை ரெடி பண்ணி காதில் சொருகிக் கொண்டு ப்ரோக்கர் தொகையை வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு புறப்பட்டார் சந்தானம்.
கருத்த தேகமும் ஆறடி உயரமுமாய் வயிரம் பாஞ்ச உடம்புடன் கருப்புசாமி வண்டியிலிருந்து இறங்கி தர்மராஜ் கவுண்டரைக் கும்பிட்டார்.
“ஐயா, வேலய ஆரம்பிக்கலாங்களா?” எனக் கேட்டவருக்கும், அவருடன் வந்த கூலி ஆட்களுக்கும் மஞ்சணத்தி தேநீர் கொண்டு வந்து. கொடுத்தாள்.
தர்மராஜ் கவுண்டர் முத்துலட்சுமிய அழைத்து மதியத்துக்கு சாப்பாடு தயார் செய்யச் சொன்னார்.
“காய்ங்க எல்லாம் ஒண்ணும் இல்லீங்க. டிரைவர் சுந்தரத்த. உட்டு வாங்கீட்டு வரச் செல்லுங்க” என்றார் முத்துலட்சுமி.
“அதுக்கெல்லாம் இன்னைக்கு நேரமில்ல புள்ள. ஊட்ல இருக்கிறத வச்சு ஏதாச்சம் செய்யப் பாரு.”
“அப்போ விசுக்குன்னு அரிசியும் பருப்பு சாதமும், பெரண்ட துவையலும் பண்ணிப் போடுறேனுங்க.” சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.
கரும்பரைக்கும் மிஷின் பொருத்த மண்ணைக் கொத்தி சரியாகப் பதித்தார் கருப்புசாமி. ஆட்கள் கரும்பை வெட்டிக்கொண்டு வந்து மிஷினுக்குள் வைத்து அரைக்கையில் அது சக்கையைத் தனியாக வெளித் தள்ளி கரும்புப் பாலை ஒரு கொள்கலனில் ஊற்றியது. குழாயின் துணைகொண்டு அதைக் கொப்பறையில் இரு ஆட்களும் கருப்புசாமியின் மனைவி வீரத்தாயும் கொண்டு வந்து ஊற்றினர். அரைமணி நேரத்திற்கு மேல் விடாமல் இரண்டு பேர் கிளறிக்கொண்டிருந்தார்கள். இரும்புத் துடுப்பில் மேலே மிதந்து வரும் தூசுகளை அப்புறப்படுத்த அதில் கொஞ்சம் சமையல் சோடாவைத் தூவினார் கருப்புசாமி. அது திரண்டு வரும்பொழுது வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதை எடுத்து தயாராக வைக்கப்பட்ட மர அச்சில் ஊற்றிக்கொண்டிருந்தார். இந்த வேலைகளை எல்லாம். பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் தர்மராஜ்.
“முதல் வெல்லத்தை சாமிக்கு சக்கரைப் பொங்கல் செய்யோணும். இந்தப் பையில எடுத்துக் குடு” என கருப்புசாமியிடம் நீட்டினார்.
சாமிக்கு தனியாக எடுத்துக் கொடுத்த வெல்லத்தை வாங்கி வைத்தார் தர்மராஜ்.
அச்சில் இருந்து உலர்ந்த ஒரு வெல்லத்தை எடுத்து கருப்புசாமி தர்மராஜிடம் கொடுத்து, “சாப்பிட்டுப் பாருங்க ஐயா” என்றார்.
அதில் ஒரு துளியைக் கிள்ளி வாயில் வைத்து, “வெல்லம் பதமாத்தான் வந்திருக்கு” எனச் சொன்னார் தர்மராஜ்.
“இன்னும் கொஞ்சம் கிள்ளி வாயில போடுங்க” என்று சொன்ன கருப்புசாமியிடம், “அட, சர்க்கரை நோய் முத்திக் கெடக்குது. வேணாம்யா” என்றார். “நீ வேணும்னா வாயில போட்டுப் பாரு, பதமா வந்திருக்கான்னு” என்றவாறே அந்த வெல்லத்தைக் கருப்புசாமியிடம் கொடுத்தார்.
“வேண்டாங்கைய்யா. இனிப்பு சாப்பிடறது இல்ல”
“ஏ….., உனக்கும் சுகரா?”
“அதெல்லாம். இல்லிங்க. சர்க்கரை, உப்புனு நோயெல்லாம் இல்லங்க இதுவரைக்கும்.”
“பின்ன ஏஞ்சாப்பிட மாட்டேங்குற?”
“பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இது மாதிரி ஒரு கரும்புக் காட்டுக்கு வெல்லம் காச்சப் போனேன்ங்க. அன்னைக்கு ஆளுங்க கம்மி. நானும் என் பொஞ்சாதியும் சேர்ந்துதான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுவோம். மும்மரமா வேல செஞ்சுகிட்டிருந்த நேரத்தில. என்னோட 2 வயசு மூத்த பையன் கரும்புப் பால் காய்ச்சுற கொப்பரைக்குள்ள ஓடி வந்து விழுந்துட்டான். அவனத் தூக்கிகிட்டு ஆஸ்பிட்டலுக்கு ஓடுனேனுங்க. அவனோட ஓடம்பிலிருந்து வெல்லமும் ரத்தமும் ஒண்ணா வழிஞ்சது. ஆஸ்பத்திரிக்குப் போயும் ஒன்னும் காப்பாத்த முடியல. அவன போய் அடக்கம் பண்ணீட்டு வீடு வர வரைக்கும் அந்த இனிப்போட பிசுபிசுப்பு என் உடம்பு முழுக்க ஒட்டிக் கிடந்துச்சுங்கைய்யா. அன்னைல இருந்து இனிப்ப தொட்டதே இல்ல. நானு.” சொல்லி முடிக்கையில் கருப்புசாமியின் கண்கள் நிறைந்திருந்தன.
தர்மராஜ் அதிர்ச்சியில் உறைந்து போய் கேட்டுக்கொண்டிருந்தார்.
கருப்புசாமி கையிலிருந்த அந்த அரைத்துண்டு வெல்லத்தைத் திட்டில் வைத்துவிட்டு மீண்டும் பணியைத் தொடர்ந்தார். அந்த வெல்லத்தை ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.
000
ச.ப்ரியா
தமிழ் கவிதாயினி மற்றும் திரைப்படப் பாடலாசிரியையான இவர் பிறப்பால் மலையாளி. பொள்ளாச்சி ஆனைமலையில் குடும்பத்தாரோடு வசித்துவருகிறார்.
ஓவியங்கள் வழியும் தூரிகை, அனலிக்கா என்ற இரு கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளின் தமிழ் டப்பிங் படங்களுக்கும் விளம்பரப் படங்களுக்கும் பாடல்கள் எழுதிவருகிறார்.
அனலிக்கா கவிதைத் தொகுப்பு கேரள மாநிலம் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் வணிக வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத் தொகுப்புக்கு ஓரிரு விருதுகளும் கிடைத்துள்ளன.
பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த மற்றும் இலக்கியம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சிறு உதவிகளையும் செய்து வருகிறார். தற்போது சிறுகதை எழுத்துக்கும் வந்துள்ளார். ’அச்சுவெல்லம்’ இவரது முதல் கதை.