பூமித்தாய் தன் மடியினின்றும் வளமான செல்வத்தை கரங்களால் வாரி எடுத்து கருணைக் கனிவுடன் அளிக்கச் சற்றே மறந்து கண்ணுறங்கினாலும் ராமண கவுண்டரும் அவருடைய சகோதரர் சின்னக் கவுண்டரும் இரவென்றும் பகலென்றும் பாராமல் எந்த நேரமும் அன்னையின் துயிலைக் கலைத்துக்கொண்டே இருப்பார்கள்!

காட்டைக் காத்துக்கிடப்பதிலே ஆனந்தம் கண்டார்கள். நிலத்தைக் கிளறிக் கொண்டிருப்பதிலே அவர்களுக்குப் பூரண திருப்தி. ஓய்ந்திருப்பதென்பது அவர்களால் முடியாத காரியம். உதவாக்கரைப் பேச்சுக்கள் அவர்கள் இருக்கும் திக்கையே நாடக் கூடாது.

சகோதரர்கள் சதா விழித்திருந்தார்கள்! நன்றாகப் புசித்தும் வந்தார்கள்! ஆனால் அவர்களைப் பற்றி இருந்த ‘பசி’தான் வேறு ரகத்தைச் சார்ந்தது!

பரமனைக் காணும் பசி அவர்களுக்கு ஒருநாளும் உண்டானதில்லை. தங்கள் குடும்பச் சண்டை சச்சரவுப் பசிதான் நாளுக்கு நாள் கபந்தனைப்போல் பேய்க் கரத்தை விரித்து அவர்களை எடுத்து விழுங்கி விடும்போல் இருந்தது!

தனிப்பட்ட முறையில் ராமண கவுண்டர் நல்லவர். அவருடைய தம்பி சின்னப்ப கவுண்டர் அவரைவிட நல்லவர். ஊருக்குள் எல்லோருக்குமே அவர்கள் நல்லவர்கள்! யாரைக் கேட்டாலும் ஒரே அபிப்பிராயந்தான் சொல்வார்கள். தப்புத் தண்டாக்களுக்கும் ஊர் வில்லங்கங்களுக்கும் அவர்களுக்கும் நெடுந்தூரம்!

அவர்கள் இருவருடைய மனைவிமார்களும் தங்க மனுஷிகள்தான். வெங்காத்தாளும் ரங்காத்தாளும் பெயர் ஓர் ஒலியாக ஒலிப்பதுபோல் ஊருக்கு நல்லவர்கள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வேண்டாத விஷயங்களுக்கும் அவர்களுக்கும் வெகு தூரம்!

ராமண கவுண்டன் குடும்பத்தில் சள்ளை சச்சரவு என்றால் பிறர் நம்பக்கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கிடையே உட்பூசல் எவ்வளவு பெரிதாக வளர்ந்து விஷ விருட்சமாக பயங்கர சொரூபத்தில் ஆட்டி அசைத்துக்கொண்டிருக்கிறது என்பதை குருசாமி முதலியார் அறிவார். மாத்திரமா? ஆயிரத்தெட்டுத் தடவை பஞ்சாயத்துக்கள் பண்ணி ஆயிற்று. சமரசம் செய்கையில் குரோதம் மண்ணுக்குள் புதைந்து விட்டாற் போன்று தோன்றும். பெண்களும் வாய்திறக்கமாட்டார்கள். ஆண்களும் அப்படியே! பத்து நாட்களுக்குள் அணை உடைத்த வெள்ளம்போல் முன்னிலும் வேகத்தோடு உக்கிரமாக உஷ்ண அலைகள் தாக்கும்! பக்கத்து வீடு, ஆதலால் அங்கே அடிக்கும் புயலின் கொடுமையை குருசாமி முதலியாரும் காமாட்சி அம்மாளும் எத்தகையதென்று உணர்ந்திருந்தார்கள். ‘யுத்த மேகங்கள்’ கவிழ்ந்ததும் இரு வீட்டுக்கும்

ஒரே செல்வமான ருக்குமணி – அருக்காணியின் அருமைத் தோழி முதலியார் வீட்டைச் சரணடைந்து விடுவாள். சிறுமியின் சோகம் கப்பிய முகத்தைப் பார்த்து உள்ளூர முதலியார் தம்பதிகள் வருந்துவார்கள்.

‘ஐயோ! பாவம்’ என அனுதாபப்படுவார்கள். அன்றைக்கு முழுக்க ருக்கு அங்கேதான் தங்கி விடுவாள். முதலியார் அம்மாளுக்கு வேலையே ஓடாது. “நீங்க போயிட்டு வாங்க. நல்லாச் சொல்லிப் பாருங்க!” என்பாள்.

குருசாமி முதலியார் நன்றாகச் சொல்வதில் ஒன்றும் கோளாறில்லை. “இது நல்லா இருக்குதுங்களா?” என்று ஆரம்பிப்பார். சச்சரவிடுவது நல்லதல்ல. இதைச் சகோதரர்கள் தெரியாமலா இருக்கிறார்கள்? மனைவிமார்களும் ‘அரகம்’ பேசுவதே அசங்கியம் என்பதை அறிந்துதான் இருந்தார்கள். அறிவது வேறு! அதை அனுசரிப்பது வேறு! எப்படியோ முதலியார் தலையீடில்லாவிட்டால் குழப்பம்தான். கண்றாவிதான்!

உண்மையாக அவர்கள் குடும்ப மனஸ்தாபத்திற்குத் தான் காரணம் என்ன?

மூத்தவருடைய மனைவி உரியிலிருந்து வெண்ணெய்ச்சட்டி கீழே விழுந்து உருண்டு கிடப்பதைப் பார்ப்பாள். பூனை தள்ளிவிட்டிருக்கலாம். “அலே முண்டை ஊரா உருட்டு உட்ட உங் கையில ‘கள்ளான்’தா வரும். நா எனத்தை ஒளிச்சு வெச்சிருக்கறன்னு ‘கடமுட’ண்ணு உருட்டீருக்கறே’

என்பாள். இளையவன் மனைவி தக்க சொற்களால் பதிலடி தருவாள். “வாந்தி வேதி வந்துதான் உன்னை வளிச்சுக்கிட்டுப் போகும். உன்ற நாக்கிலே ‘புத்து’ எந்திரிக்காமே போனா நா ‘இப்பிந்தி’க்குப் பொறந்தவோ”

பெரியவர் கூறுவார்:

“ஏண்டா! பள்ளும் பறையாட்ட வெள்ளாம் பயனூட்டிலே சாதி நாயம் போடறா, பாத்துக்கிட்டு சும்மா இருக்கறயே?”

கோபம் கொதிக்கும் மூத்தவருக்கு, சின்னவர் சினம் பொங்கச் சீறுவார்; “சாதி கெட்ட நாயிகதாஞ் சாதியை இளுக்கும். நீங்க எப்படியோ நாசமாப் போங்க! இந்த ஊடு எண்ணைக்கும் மேலுக்கு வரவே வராது. தூம்பு மொளச்சுத் துப்பை மொளச்சுப் போறதுக்கு நாள் அடுத்துக்கிட்டது!!

இப்படி ஒரு உதாரணம். இது போதும், நாலு நாட்களுக்கு வீடு அல்லோல கல்லோலப்பட!

பண்ட மேய்க்கிற பையன் நாய்க்குச் சோறு வாங்கி வர வீட்டுக்குப் போவான். காலையில் பால் கறக்கக் கன்றுக்குட்டியை சற்று அவித்துவிட வேண்டும். சின்னப்பன் பால் பாத்திரத்துடன் தொண்டுப்பட்டிக்கு வருமுன்பே பெரிய கவுண்டர் அவிழ்த்து விட்ட கன்று அதிகமாகப் பாலைக்குடித்திருக்கும். அவர் இன்னொரு மாட்டில் பால் கறந்து கொண்டிருப்பார். அதைக் கவனித்திருக்கமாட்டார். ‘மடி’யைக் கண்டதும் கன்று ரொம்ப ‘ஊட்டி’ விட்டிருக்கிற தென்பதைச் சின்னக் கவுண்டர் தெரிந்து கொள்வார். உடனே பால் பாத்திரத்தை வீசி எறிந்து விட்டு சாளைக்குள் போய் கால் நீட்டிப் படுத்துக்கொள்வார். அந்தச் சமாச்சாரத்தை பண்ட மேய்க்கிற பையன் மூலம் அறிந்து கொண்ட பண்ணாடிச்சிகள் இருவரும் நாய்ச் சோறு தந்து அனுப்பமாட்டார்கள். ஆத்திரத்தை எந்த வழியிலாவது காட்டித் தீரவேண்டும். ‘நாய்த் தலை’யில் கை வைப்பதைத் தவிர வேறு வழி?

“வாயில்லாச் சீவனை பட்டினி போட்டா கொல்றாய்?” என்று பண்டமேய்க்கும் பையனைப் புளியன் விளார் பிய்ந்து போகு மட்டும் தீட்டித் தள்ளுவார் பெரிய கவுண்டர்.

கட்டிலில் கிடந்த சின்னக் கவுண்டர் ‘ஜிவ்’வென்று எழுந்து காடே அதிரக் காட்டுக்கத்தாகக் கத்துவார். “நா பட்டினியிலே செத்துத் தொலைஞ்சால் அக்கடாண்ணு இருப்பீங்க’ நாளு வரமாட்டீங்குதே!”

“நீ ஏண்டாப்பா சாகறே’ மகராசனா ஆண்டுகப்பா, தூத்தரி! இப்பவே நா பரதேசம் போயிர்ரேன்.’’

உடனே சின்னவர் தாழ்ந்து விடுவாரா? “அவெ எங்கடா போய்ட்டா சக்கிலிப் பையன். அந்தக் கவுத்தை எடுத்தாங்கடா. இந்தப் புளிய மரத்திலியே போட்டுக்கறேன்.’

இதற்குள் அங்கே ருக்கு இருந்தால்- அவள் வீட்டிலிருந்தாலும்- ‘குய்யோ முறையோ’ என்று கதறுவாள். சிறுமிக்கு கண்கள் கண்ணீர் சிவந்து, உலர்ந்தது, தொண்டை கட்டி விக்கல் நிற்காமல் எடுக்க- ஆள் அம்புகள் ‘தண்ணி, தண்ணி’ என்று அங்குமிங்கும் கிணற்றுப் பக்கம் ஒட, சித்தப்பனும் பெயரிப்பனும் மகளைத் தேற்ற வந்து சேருவார்கள். பரதேசம் போகப் போகிறவரும், தூக்குப் போட்டுச் சாகப் போகிறவரும் என்ன சமாதானப்படுத்தினாலும் ருக்மணி தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருப்பாள்.

மற்றொரு நாள் மனத் தாங்கல் அப்படி ரூபத்தில் வந்து சேரும். அதுதான் ‘சண்டைக்குச் சிங்காரம் ஏது?’ என்று பெரியவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கிறது! ஒரு குடும்பத்தின் ஒற்றுமைக்கான காரணத்தை எளிதாக விளக்கிவிடலாம். ஆனால் வேற்றுமைக்குரிய காரணத்தை வேலைப் படைத்த வேலாயுதக் கடவுளாலும் விண்டுரைக்க முடியாது.

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ருக்மணிக்குத் தானும் படிப்பதற்காக திருப்பூருக்குப் போயிருந்தால் அருக்காணியோடு எவ்வளவோ நன்றாயிருக்கும் என்று எண்ணுவாள். அருக்காணி கூப்பிட்டாள். அப்படி ஆசை ஆசையாக கையைப் பிடித்துக்கொண்டு ’ருக்கு! வா! ருக்கு!’ என்று தூறி ஆடினாளே! அருக்காணியின் அப்பாவும் பலதரம் சொல்லிப் பார்த்தார். ‘ஐயந்தா வேணாமிண்டாங்களா? நா என்ன செய்யறதாம்?’ என்று மெள்ள வாய்க்குள் முனகிக் கொள்வாள். இப்போது ருக்கு வளர்ந்து விட்டாள். விவரம் தெரிந்த பெண், வயசு பதிமூன்று பதினான்கு ஆகிறதே! அருக்காணி இரண்டு வயசு சிறியவளாக இருந்தாலும் எத்தனையோ கதையும் காரணமும் கூறுகிறாள். நாலைந்து வருஷம் சேர்ந்தாற்போல் இருவரும் இணைந்திராவிட்டாலும் நேசம் என்பதென்ன மறந்துபோய் விடக் கூடியதா? “படியூரிலே நா ஒருத்திதானே இருக்கறேன் அருக்காணிக்கு! எங்கிட்டே சொல்லாத சங்கதியை அவ ஆருகிட்டே சொல்லப் போறா?” என்று எண்ணி ருக்கு மகிழ்வாள்.

போன தடவை அருக்காணி ஊருக்கு வந்திருந்த போது மூணு நாளும் ருக்மணியின் தோட்டத்தில்தான் குடியிருந்தாள் என்று சொல்லவேண்டும். இரவு படுக்கைக்குப் போகுமட்டும் காடு கரைக்குள்ளே சுற்றித் திரிந்தார்கள். சாப்பாடு முதற்கொண்டு தோட்டத்திற்கே வந்து விடவேண்டும். அருக்காணியின் உத்திரவுக்கு எதிர் உத்திரவு ஏது? காளிமுத்து இருந்தே இருக்கிறான். சைக்கிளை எடுத்தால் கண்மூடி விழிப்பதற்குள் எல்லாம் கொண்டு வந்து விடுகிறான். ‘ஐஸ் கலர் வேணும் முத்து, நம்ம ஊரிலே ஐஸ் கிடையாதே!’ என்பாள் அருக்காணி.

“அதுக் கென்னுங்க பன்றது?” என்பான் காளிமுத்து. ஆனால் பொல்லாத பயல்! ஒரு மணி நேரத்தில் காங்கயம் சென்று ஃப்ளாஸ்கில் ஐஸ் நிறைத்து, ஏழெட்டுக் கலர்களும் கொண்டு வந்து முன் வைப்பான்.

“காளி நீயும் பழகிக்கிட்டாயா? எங்களைப்போட்டோ எடுக்க மணியைத்தான் கூட்டியாரோணுமா?” என்று கேட்பாள் அருக்காணி. அவர்கள் முன்பே இரண்டு மூணு போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மணிதான் அழகாக எடுத்துத் தந்தான். கடையில்கூட நேர்த்தியாக சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கிறான்.

மணியின் குணத்தைப் பற்றி அவர்களுக்குள் பேச்சு வரும். “என்னை என்னண்ணு மணி பேர் சொல்லிக் கூப்பிடும் தெரியுமா?” என்று அருக்காணி கேட்டாள்.

ருக்மணிக்கு கேள்வியே அர்த்தமாகவில்லை.

“இதென்ன அருக்கு? பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.”

“இல்லவே இல்லை”

‘அப்படீன்னா?” ஆச்சரியத்தோடு ருக்மணி தன் சினேகிதியின் முகத்தைப் பார்த்தாள்.

‘‘அருணா தேவி”

“ஐ! நானும் அப்படியேதான் இனிக் கூப்பிடுவேன்’

“பள்ளிக் கூடத்திலே கூட ‘அதென்ன அருக்காணி’ன்னா நாங்க எங்கியும் கேட்டதே இல்லையே? கொங்கு நாட்டிலே தானம்மா இப்படிப் பேரைக் கேட்டேன்’ன்னு எங்க திருநெல்வேலித் தமிழ் மிஸ் சொன்னாங்க” இதைக் கூறும்போது அருக்காணிக்குச் சோர்வாக இருந்தது.

“இப்பத்தா உனக்கு நல்ல பேரா கெடைச்சுப் போச்சே’ என்ன தேவியம்மா” என்று சொல்லிச் சிரித்தாள் ருக்கு.

‘இவ படிக்க வந்திருந்தா நல்லா மார்க்கு வாங்கு வா’ என்று அருக்காணி நினைத்தாள். பிறகு திடீரென்று ஞாபகப்படுத்திக் கொண்டவளைப்போல “நீயும், வாரயா?” என்றாள் அருக்கு.

“எங்கே?” என்றாள் ருக்கு.

“படிக்கத்தான்”

“படிக்கறதுக்கா? எஞ் சோட்டுப் புள்ளைகளை நாலாங் கிளாசிலே சேத்திக்குவாங்களா?” என்று கூறி, “நம்ம ஊர் அஞ்சாவது அங்கே நாலாவது தானாம்” என்றாள் சிறிது வருத்தத்துடன்

‘அட நீ ஒண்ணு! ஒரு வாத்தியாரை வெச்சு படிக்கறது. அப்பறம் ஆறாவதிலேயே சேந்திர்ரது’ என்று வெடுக்கெனக் கூறினாள் அருக்காணி.

“என்ன இருந்தாலும் வயசானாப் படிப்பு வராதாம்” என்று தன் சந்தேகத்தை அப்படியே கொட்டினாள் ருக்கு.

கைதட்டிச் சிரித்தாள் அருக்கு. ருக்குவின் கழுத்தில் கையைக் கோர்த்துத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, “திருப்பூரிலே எங்க ஊட்டுக்குக் கிட்டத்தில் தாத்தாக்களே படிக்கிறாங்க! ‘ஆ, ஆ’ன்னு தாத்தாக்க சொல்றதைப் பாத்தா, எழுதிக் காட்டறதைப் பாத்தா சிரிப்புச் சிரிப்பா வருமாக்கும்” என்றாள் அருக்கு.

‘அட சேமலை ஆண்டவா’ அவுங்க எதுக்குப் படிக்கறாங்க?’

“ருக்கு! படிக்கறது எப்பவுமே நல்லது. வயசுக்கும் அதுக்கும் சேர்த்தியே இல்லை. ஒரு காயிதம் வந்துது. படிக்கத் தெரிஞ்சாத்தானே நாமாகப் படிக்கலாம். இல்லாட்டி இன்னொருத்தர்கிட்டே போக வேண்டியது தான். அந்தத் தாத்தாக்கள் பள்ளிக்கூடத்துக்கு பேர் என்ன தெரியுமா? ‘முதியோர் பள்ளி!” மூச்சுவிடாமல் சொல்லி நிறுத்தினாள் அருக்கு.

“அப்ப என்னைக் கொண்டுபோய் முதியோர் பள்ளியிலே தாத்தாக்க கிட்டே உக்காத்தி வைக்கப் போறே!” என்றாள் ருக்கு. அருக்காணியின் சிரிப்பும் ருக்குவின் சிரிப்பும் ராமண கவுண்டரின் செவிகளுக்கும் எட்டியது. தூரத்தில் எருமையை மேயவிட்டு ‘முளை’ அடித்துக் கொண்டிருந்த அவருக்கு அந்தச் சிரிப்போசை தேனாகவும் பாலாகவும் நெஞ்சில் பாய்ந்தது!

000

இந்த மாதம் நடுகல் வெளியீடாக வரவிருக்கும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *