பின்மாலை நேரத்து மின்னொளி பளபளப்புடன் அந்த பஜார் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மாநகரில் அந்த பஜாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. “ஸ்மார்ட் சிட்டி” என்றறிவிக்கப்பட்ட திட்டத்தின் முன்மாதிரி அங்காடி வீதி அது. நெருக்கடியான பிற கடைவீதிகளைப் போலன்றி, இரண்டு பக்கமும் விரிவான நடைபாதைகள். நடைபாதைத் தளம், பூங்காக்களில் போடப்பட்டது போலிருக்கும். ஆங்காங்கே மரங்களைச் சுற்றி, அமர்ந்து இளைப்பாறுவதற்கு, வட்ட சிமெண்ட் இருக்கைகள். அந்த மரக் கிளைகளைச் சுற்றி சர விளக்குகள். எப்போதும் எரியும் என்று சொல்ல முடியாது. உலோகத்திலான இரட்டைக் குப்பைத் தொட்டிகள். மக்கும், மக்காத குப்பைகளுக்கு தனித்தனி. குப்பை கொட்டுவதில், குறிப்பாக கூடாத இடத்தில் கூடாததை கொட்டுவதில் நமது மக்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு நாமறிந்ததே. பான்பராக்கோ அல்லது இன்னபிறவோ போட்டு மாமக்கள் துப்பிய எச்சில், தொட்டியின் மேலே பட்டுத் தெறித்து பக்கவாட்டில் வழிந்து, காய்ந்து போயிருக்கும். உங்கள் நுகர்திறன் கூர்மையெனில், அப்படியான குப்பைத் தொட்டிகளை நெருங்கிக் கடக்கும்போது, கையில் முகக்கவசம் இருந்தால் சமாளிக்கலாம் எனத் தோன்றும். அடுத்தடுத்து இது தொடரும் என்பதால், எதற்கும் கைவசம் கவசம் வைத்திருப்பது நலம்.

வார இறுதி நாள்களில் அல்லது விடுமுறை தினங்களில் சுயாதீனக் கலைஞர்கள் இணைந்த வீதி இசைக் குழுவின் இசையும் ஒலிக்கும். பஜாருக்கு வருபவர்கள் நேரம் இருந்தால் அல்லது பாடல் சுண்டி இழுத்தால் நின்று கேட்பார்கள். பெரும்பாலும் 2k கிட்ஸ்களின் “பிளே லிஸ்ட்” பாடல்களாக இருக்கும். இளைய குழாம் சோஷியல் மீடியா போஸ்டிங்குக்காக செஃல்பி, வீடியோ எடுத்துச் செல்லும்.

அந்த சாலையின் குறிப்பிட்ட பகுதி வரைதான் இத்தனையும். அப் பகுதியில் மட்டும் இருவழிப் போக்குவரத்து கிடையாது. ஒருவழிதான் என்பதால், இந்த நடைபாதையிலிருந்து எதிர் நடைபாதைக்கு கடந்து செல்வது எளிதாக இருக்கும். பிற சாலைகளைவிட “ரிஸ்க்” குறைந்ததாக இருக்கும் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்.

இந்த “ஸ்மார்ட் சிட்டி” தொடங்கும் பகுதியிலிருந்து முடிவு வரை கடக்க, சுமாரான நடைக்கார்களுக்குகூட அதிகபட்சம் 20 நிமிடங்கள் பிடிக்கலாம். நடக்கும்போது, பெரிய “பிராண்ட்” கடைகள் சிலவற்றில் கூட்டம் இருக்கும். பல, வெறிச்சோடிக் காட்சியளிக்கும். கோட், சூட்டுடன் உள்ளேயிருக்கும் கடையின் ஊழியர்கள் காதில் கைபேசியை அழுத்தியவாறு கண்ணாடி வழியே, வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்தப் பக்கமிருந்து யாரும் பேசுவார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால் விதவிதமான ஆடைகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த பொம்மைகள் நம்மிடம் ஏதோ பேசுவது போலிருக்கும்.

அந்த நடைபாதையில், வாக்கிங் செல்லும் போது மட்டும் அணியக்கூடிய பிரத்யேக ஆடை மற்றும் உயர்தர காலணிகளுடன் (மற்றும் காதில் சொருகப்பட்ட புளூடூத் அல்லது கைபேசியிலிருந்து வரும் இயர்போன்) சிலர் வேர்க்க, விறுவிறுக்க நடந்து செல்வதைப் பார்க்கலாம். எதிரே வரும்போது, அவர்களது வேகம், இடப் பக்கமா அல்லது வலப்பக்கமா எந்தப் பக்கம் நாம் விலகிச் செல்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம். விறைப்புடன் வரும் அவர்களுக்கும் அதே குழப்பம் நம்மால் நேரிடக்கூடும். மற்றபடி, மாநகரின் பிற நடைபாதைகளைப் போலன்றி இங்கே ஃப்ரீயாக நடந்து செல்லலாம்.

ஓரிரு இடங்களில் பெண்கள் நடைபாதையில் பூக்கடை வைத்திருப்பார்கள். அந்தப் பகுதியைக் கடக்கும் போது நீங்கள் தூக்கலாக உணரும் சுகந்தம், உங்கள் திருமண வாழ்வின் தொடக்கப் பருவத்தை நினைவூட்டலாம். ஆனால் அது நீடிக்க வாய்ப்பில்லை. சட்டென்று சுகந்தப் பிரதேசத்தைக் கடந்துவிடுவீர்கள்.

விண்டோ ஷாப்பிங் என்று பேசப்படும், வாங்கும் பாவனையுடன் கடைகளில் ஏறி இறங்கும் சிலர் அங்குமிங்கும் அலைந்து திரிவதைப் பார்க்கலாம். கடைகளுக்குள் நுழைந்தால் எல்லோரும் எப்போதும் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே… உள்ளே நுழைந்தால் பில் போட்டே அனுப்பவேண்டும் என்கிற ரீதியில் இயங்கும் கடைக்கார்களுக்கு இவர்கள் சூடம் காட்டிவிடுவார்கள்.

அந்தப் பகுதியில், ஒருகாலத்தில் மிகப் பிரபலமாக இருந்த உணவகம் அது. இப்போது அப்படிச் சொல்ல முடியாது. இருந்தாலும், முந்தைய தலைமுறை நிர்வாகம் ஈட்டி வைத்திருந்த நற்பெயரில், இன்றும் ஓட்டமிருக்கிறது. உணவகத்தின் முன்பகுதியில் ஒரு துரித உணவு ஏற்பாட்டை – அதாவது நடைபாதைவாசிகள் போகும் வழியிலேயே காபி, டீ மற்றும் பானி பூரி, பாவு பாஜி போன்ற சமீப காலங்களில் தமிழர்களை கொள்ளைகொண்ட இதர வகை உணவுகளை வாங்கிச் செல்வதற்கு வசதியாக – அமைந்திருந்தது.

ஒரு பானி பூரியும் ஒரு பாவு பாஜியும் ஆர்டர் செய்துவிட்டு அந்த இளம் பெண்கள் இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஹீ இஸ் நாட் ஸோ காம்பிட்டன்ட்…. காட் இட் த்ரு மேனிபுலேஷன்” – வேலை பார்க்கும் இடம் சார்ந்த பிரச்சினையை, ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் ஆதங்கத்துடன் சொன்னாள். “அவனுக்கு பெரிதாக தகுதி ஒன்றும் இல்லை. குறுக்குவழியில் எப்படியோ அந்தப் பொறுப்புக்கு வந்துவிட்டான்” என்பதைத்தான் அவள் அப்படிச் சொன்னாள்.

“ஆமா, அதுக்கென்ன… உலகமே அப்படித்தான் இருக்கு. இதுல புதுசா நீ என்னத்த பார்க்குற…” இவள் கேட்டாள்.

“மத்தவங்கள மேனேஜ் பண்ற பொறுப்புக்கு வருகிறவர்களுக்கு ஒரு மாரல் வேல்யூ வேண்டாமா….”

“அப்படிப் பார்த்தா போன வாரம் பக்கத்து டிபார்ட்மென்ட்ல சேர்ந்தாளே… அவளப் பத்திக்கூடத்தான் அப்படி ஒரு டாக் ஓடுது. அதுக்கு என்ன சொல்ற..?”

உரையாடல் அப்படியே நின்றது. இருவரிடமும் மௌனம். வடஇந்திய இளைஞன் பானி பூரியை கடப்பாட்டோடு தயார் செய்வதை இருவரும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

இருவரில் முதலில் விவாதத்தை தொடங்கிய பெண், கழுத்து வரை முடியை வெட்டிக் கொண்டு, ஸ்லீவ்லெஸ் கவுன் போல போட்டிருந்தாள். இடுப்பில் ஒரு துணிக் கயிறு சுற்றிலும் கட்டப்பட்டு மீதம் குஞ்சலம் போல, இரண்டாக நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆடையின் டிஸைன் அப்படி. இன்னொரு பெண் சுடிதார் அணிந்திருந்தாள்.

பானி பூரி தயாரிப்பை கவனித்துக்கொண்டிருந்த ஸ்லீவ்லெஸ் பெண் சட்டென்று லேசான அதிர்வுடன் முகத்தை திருப்பினாள். ஆடையில் தொங்கும் அந்தக் கயிற்றுக் குஞ்சலத்தை யாரோ இழுப்பது போலப் பட்டது. குனிந்து பார்த்தாள். அந்தச் சிறுமிக்கு மூன்று வயதிருக்கலாம். வாயில், ஏதோ உடைந்த பிளாஸ்டிக் பொம்மையின் கை அல்லது கால் போலிருந்தது. ஒரு பக்கமாக அதைக் கடிப்பது போல சுவைத்துச் கொண்டே, விரலால் இடுப்பிலிருந்து தொங்கிய குஞ்சலத்தை இழுத்தாள். அந்தப் பெண் லேசான முன்முறுவலுடன் சடாரென்று விலகி நின்றாள். சிறுமி நகர்ந்து வந்து மறுபடியும் இழுத்தாள். சற்றே இறுகிய முகத்துடன் மீண்டும் தள்ளிப் போய் நின்றாள். அங்கும் அந்தச் சிறுமி வந்து அதே போல  செய்தாள். இவள் எதுவும் கேட்காமல் இறுகிய முகத்துடன் அவளை “நிறுத்து” என்பது போல, உற்றுப் பார்த்தாள். பக்கத்தில் ஒரு உருவம் நெருங்கி வந்தது. அந்தக் குழந்தையின் தந்தை போல. பகலெல்லாம் சுற்றிக் களைத்த முகம். அழுக்கான பேண்ட், சட்டையுடன் காணப்பட்டான். கடைவீதிகளில், செல்வோரை இடைமறித்து சிறுவர்கள், சிறுமிகள் விற்கும் “கலரிங்” புத்தகம் ஒன்றை கையில் வைத்திருந்தான்.

அடிக்குரலில் அந்தப் பெண்ணிடம் சொன்னான்.

“பசிக்குதுன்னு குழந்த கேக்குது. ஒரு பானிபூரி வாங்கிக் கொடுங்க…”

சிறுமி மீண்டும் நெருங்கி வந்து அந்தக் குஞ்சலத்தை இழுக்க வந்தாள். அவன் இன்னும் அருகே வந்து மீண்டும் சொன்னதையே சொன்னான்.

இவள் முகம் கடுகடுக்க மாறியது. அவர்களுக்கு உறுதியான பதிலைச் சொல்லும் வகையில், விருட்டென்று அந்த இடத்தைவிட்டு கடைப் பக்கமாக நகர்ந்தாள்.

“மேடம், பானிபூரி ரெடி…” சர்வர் குரல் கொடுத்தான். இன்னொரு தட்டை வாங்கிகொண்டு தோழியும் அழைத்தாள். இருவரும் கடையின் மறுமுனைக்கு சென்று சாப்பிடத் தொடங்கினார்கள்.

புரிந்துவிட்டது. அந்தச் சிறுமியும், தந்தையும் அங்கிருந்து அடுத்த முயற்சிக்கு நகர்ந்துவிட்டார்கள்.

சாப்பிடத் தொடங்கினாலும் அந்தச் சிறுமியும் தந்தையும் அடுத்து என்ன செய்கிறார்கள் என்பதை அவள் கவனித்துக்கொண்டேயிருந்தாள்.

தனியாக நடந்து சென்ற ஒரு இளைஞனின் பின்னால் நெருங்கி, அவனது சட்டையின் பின்பகுதியைப் பிடித்து இழுத்தாள் சிறுமி. அவன் திரும்பிப் பார்த்தான். தந்தை அருகில். ஏதோ பேசிக் கொண்டார்கள். அவன் ஒரு இருபது ரூபாய் நோட்டை அந்தச் சிறுமியின் தந்தை கையில் கொடுத்துவிட்டு வேகமாக நடந்தான்.

“நீ எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதே…” என்பது போன்ற உணர்வுடன் சிறுமி தந்தையிடம் டாட்டா காட்டிவிட்டு திரும்பி நடக்க முற்பட்டாள். தந்தை, பதிலுக்கு கையைக் காட்டி எதையோ சொல்ல, அவள் நின்றாள்.

மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் உரையாடத் தொடங்கினார்கள்.

“குழந்தைங்கள வச்சு எமோஷனல் பிளாக்மெயில் பண்ற மாதிரி பிச்சை எடுக்குறாங்க…” லேசான குமுறலுடன் சொன்னாள் ஸ்லீவ்லெஸ் பெண்.

“நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். அவங்க கேக்குறாங்க…. நீ விருப்பபட்டா கொடு. இல்லேன்னா, இல்லேன்னு சொல்லிட்டுப் போ…” சுடிதார் தோழி ஓங்கிச் சொன்னாள்.

“அதுக்கு இப்படியா பண்றது…. அதுவும் பானிபூரிதான் வேணுமாம்…” இவள் கோபம் அடங்காமல் சொன்னாள்.

“ஆமா, ஒரு பானிபூரியும் பாவ் பாஜியும் நான் சர்வர்கிட்ட சொல்றத அந்த ஆள் பார்த்துக்கிட்டு இருந்தான். அதனால தன்னோட பொண்ணுக்கும் அத வாங்கிக் குடுங்கன்னு கேட்டுருக்கான்…”

“அப்போ நாம எது சாப்டுறோமோ அத வாங்கி கொடுக்கணுமா…”

“கொடுக்கறவங்க இருக்காங்க. நீ கொடுக்கலேன்னே போ… அவங்களுக்கு இது ஒரு அட்டம்ட். அவ்வளவுதான்.”

“அதுக்கு ஏன் டிரஸ்ஸ போட்டு இழுக்கணும். அந்த குழந்தைய நல்லா டியூட்டர் பண்ணியிருக்கான். அது எமோஷனல் டாக்டிஸ்.”

“சரி. மேடம், என் சின்னஞ்சிறு மகளுக்கு ஒரு பிளேட் பானிபூரி வாங்கித் தரமுடியுமான்னு அவன் கேட்டிருந்தால், நீ மறுபேச்சு பேசாமல் வாங்கி கொடுத்துருவியா……. எடுக்கறது பிச்சை, இதுல கொழுப்ப பாரு…. அப்படின்னுதானே நினைச்சுட்டு போவே….”

“அப்போ… பிச்சைக்காரங்ககூட ஸ்டிராட்டஜிக்கலா ஆபரேட் பண்றாங்கன்னு சொல்றியா…”

“யெஸ்… பண்ணலாம். பிச்சை எடுக்கறவங்களுக்கன்னு, கார்பரேட் கம்பெனிகளில் பெயருக்கு இருக்கிற மாதிரி, பெஸ்ட் பிராக்டீஸ் ஏதும் இருக்கா, என்ன? டிராஃபிக் ரூல்ஸேலிருந்து வரி கட்டுறது வரை எல்லாத்துலேயும் அத்துமீறும் ஆட்கள்தான் நம்மை சுற்றிலும் அதிகம். இதுல, பிச்சைக்காரங்களுக்கு ரூல்ஸ் ஃபிக்ஸ் பண்ண, நாம யாரு?”

சாப்பிடுவதை நிறுத்தி, தோழியை முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் அடுத்த பானி பூரியை கவனமாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். சிறுமி போன திசைக்கு எதிராக திரும்பி நின்று கொண்டாள். ஆனால் சுடிதார் தோழி அவர்கள் பக்கம் ஒரு கண் வைத்திருந்தாள்.

அதே உணவகத்தில் ஆளுக்கொரு பெரிய கோன் ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள் ஒரு இளம் தம்பதியர். அவன் தன்னிடமிருந்த ஐஸ்கிரீமையும் மனைவியிடம் கொடுத்தான். மீதம் வாங்கிய சில்லறையை பைக்குள் போட்டு, ரூபாய் நோட்டுகளை பர்ஸில் பத்திரப்படுத்திவிட்டு, ஐஸ்கிரீமை மனைவியிடமிருந்து வாங்கிக்கொண்டான். மனைவி, ஏற்கெனவே அவளது ஐஸ்கிரீமை வேகமாக ருசிபார்க்கத் தொடங்கிவிட்டாள். இவனும் வாயருகே ஐஸ்கிரீமை கொண்டு சென்றான். உதட்டில் ஐஸ்கிரீம் உரசிவிடும் தருணம். அவன் பேண்ட்டின் முட்டுப் பகுதியை சிறுமி பிடித்து இழுத்தாள். அதே பழைய சிறுமிதான். தந்தை பக்கத்தில் வந்தான். மெல்லிய குரலில் ஏதோ சொன்னான். கணவன் தனது கையிலிருந்த ஐஸ்கிரீமை குழந்தையிடம் கொடுத்துவிட்டான். போகலாம் என்ற பாவனையில் மனைவியைப் பார்த்தான். அவள் கடுப்பான முகத்துடன் ஐஸ்கிரீமை ருசித்தவாறே முன்னே நடந்தாள். கணவன் பின்தொடர்ந்தான்.

சிறுமி உற்சாகமான சிரிப்புடன் தந்தையைப் பார்த்தாள். பெரிய கோன் ஐஸ்கிரீமை அவளது சிறிய கைகளால் சரியாகப் பிடிக்க முடியவில்லை. தந்தை, சிறுமியின் கைகளில் இருந்த ஐஸ்கிரீமை சரிப்படுத்தி இறுக்கிப் பிடிக்க உதவினான். வேகமாக சிறுமி முன்சென்றாள்.

சற்று தொலைவில், ஒரு மரத்தின் கீழ் அந்தச் சிறுமியின் தாயும் சகோதரியும் நின்று கொண்டிருந்தார்கள். இவள் ஓடிச் சென்று ஐஸ்கிரீமை அவள் தாயிடம் கொடுத்தாள். அவள் அதை வாங்கி ஆசையுடன் ருசித்தாள். தொடர்ந்து வந்த கணவனை “போதும்… ரெஸ்ட் எடு” என்று சொல்வது போல பக்கத்தில் கைகாட்டினாள்.

ஐஸ்கிரீமை கொடுத்தவன், அவர்களைக் கடந்து சென்றவாறே திரும்பித் திரும்பி பார்த்தான். குழந்தை சாப்பிடுகிறதா என்று தெரிந்த கொள்ள ஆவல். மாறாக, குடும்பமே பகிர்ந்துகொள்வதைக் கண்டு கூடுதல் நிறைவுடன் வேகமாக நடந்தான். முன்னால் சென்ற மனைவி, கணவன் உள்பட யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை

தாய், இரண்டு, மூன்று முறை ஐஸ்கிரீமை ருசித்துவிட்டு மூத்த குழந்தையிடம் கொடுத்தாள். அவள் ருசித்தாள். பக்கத்திலிருந்து அதைப் பார்த்து குதூகலித்த சின்னக் குழந்தை, அதாவது ஐஸ்கிரீம் வென்றாள் – கைநீட்டி வாங்கி ருசித்தாள். அவளால் தொடர்ந்து அதைக் கையில் பிடித்து ருசிக்க முடியவில்லை. அக்காவிடம் கொடுத்தாள். அம்மாவிடம், நீயும்…. என்று கைகாட்டினாள். இரண்டு கைகளையும் மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு பக்கவாட்டில் படுத்தான் குடும்பத் தலைவன். மனைவியும் குழந்தைகளும் மாறி, மாறி பெரிய ஐஸ்கிரீமை ருசித்துக் கரைப்பதை கண் இமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான்.

“டிஸ்யூ பேப்பர் இருக்கா…?” சாப்பிட்டு முடித்துவிட்டு தோழிகள் இருவரும் புறப்படத் தயாரானார்கள்.

சிறுமி, தந்தை கூட்டணி ஐஸ்கிரீம் முயற்சியில் வெற்றிபெற்றதை, சாப்பிட்டுக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தவள் தோழியிடம், அதாவது, சிறுமி பற்றி கேள்வி எழுப்பிய ஸ்லீவ்லெஸ் பெண்ணிடம் சொன்னாள்.

“என்னது… ஐஸ்கிரீமா… முழு ஐஸ்கிரீமை அப்படியே கொடுத்தாங்களா….?”

“ஆமா, தே ஆர் ஜெனரஸ்….” என்றாள் சுடிதார் தோழி.

“நீ பெரிய ஹியூமனிஸ்ட் மாதிரி பேசாதே…. பானிபூரி, ஐஸ்கிரீம்னு விதவிதமா சாப்பிடறதுக்கு இப்படியெல்லாம் வழியிருக்குன்னு அந்த குழந்தை மனசில ஆழமா போயிடுச்சுன்னா…. ப்யூச்சர்ல அது மைன்ட் ஸெட்டிங் எப்படி ஆகும்னு யோசிச்சு பாரு….” – சற்றே வெடிப்புடன் பேசினாள்.

“அந்த குழந்தையாலே ஒரு குடும்பமே இந்தக் கணத்துல சந்தோஷமா இருக்கு. இருக்கட்டும்னு நான் நினைக்கிறேன். அதுதான் லைஃப்.” – தோழியிடமிருந்து வந்த பதில் இவளை இன்னும் எரிச்சலடைய வைத்தது.

மேற்கொண்டு பேசிக்கொள்வதை விரும்பாமல் இருவரும் ஆட்டோவை நோக்கி நகர்ந்தார்கள்.

கடைசியாக மிச்சமிருந்த கோனை, அப்படியே சாப்பிடலாமா என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டு சிறுமி வாயில் போட்டு சுவைத்து மென்றாள். சொக்கும் கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்த தந்தை, வந்து படுத்துக்கொள்ளுமாறு சைகை காட்ட, பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டாள் சிறுமி. மரக்கிளைகளுக்கிடையே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே தூங்கிப் போனாள்.

மறுநாளும் ஒரு பெரிய கோன் ஐஸ் சாப்பிடுவதாக அவளுக்கு கனவு.

*****

சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *