தினசரி ஒன்றில் சென்னையிலிருந்து ராமேசுவரம் செல்லும் ரயிலில் பெரியவர் ஒருவர் மரணித்திருந்தார் என்ற செய்தி பார்த்தேன். உடனே என் கண் முன்னே நான் சமீபத்தில் ராமேசுவரத்திலிருந்து சென்னை வந்த போது சந்தித்த பெரியவரின் முகம் தோன்றியது. அவருடன் பழகிய நினைவுகள் என் மனதில் படமெடுத்து ஓடியது.
எனது அப்பாவின் காரியங்களை ராமேசுவரத்தில் முடித்துவிட்டு, நான், எனது அம்மா, மனைவி மற்றும் குழந்தைகளோடு சென்னை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தேன். ஸ்லீப்பர் கோச் தான். எதிரெதிராக இருந்த இருக்கைகளில் ஆறில் ஐந்து எங்களுடையாதாக இருக்க, ஆறாவது யார் வருவார் என்று எதிர்பார்த்து அமர்திருந்தேன். ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்களே இருந்த நிலையில், அந்த நபர் வரவில்லையென்றால் அவருடைய கீழ் பர்த்தில் யார் படுப்பது என்று நானும் என் மனைவியும் டெலிபதி மூலம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது, ஒரு அரிசி மூட்டை, ஒரு தேங்காய் மூட்டை, மற்றும், இரண்டு பெட்டிகளை சுமந்து கொண்டு போர்டர் ஒருவர் வந்தார். ஆமாம், சிவப்பு சட்டை, வெள்ளை வேட்டி அணிந்த போர்டர் தான். எனக்கு நினைவு தெரிந்த முப்பது வருடங்களில் போட்டர் பயன்படுத்திய நபரை எனது சுற்று வட்டாரத்தில் நான் பார்க்காததால் எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. புக் ஆகியிருந்த சீட்டின் அடியிலிருந்த இடம் முழுவதிலும் அந்த பைகளை அவர் நிரப்பினார். எங்கள் ஐவரின் பைகளை விட அது அதிகம். போர்டரின் பின் ஆஜானுபாகுவான பெரியவர் ஒருவர் வந்தார். அதிகாரத் தொனியில் நோட்டம் விட்ட அவர், எதிர்பார்த்தது போல எல்லாம் இருக்க, அவரது இருக்கையில் வந்து அமர்ந்தார். சினிமாக்களில் கிராமத்து பெரிய மனிதர்களை காட்சிப் படுத்துவார்கள் இல்லையா? வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் குங்குமக் கீற்று, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, கையில் தங்க முலாம் பூசிய கடிகாரம், காலில் கருப்பு நிற தோல் சாண்டல்ஸ் என்று, அச்சு அசல் அதே தோரணையில் மிடுக்காக இருந்தார் அவர். அவரைப் பார்த்த உடனேயே என்னையும் அறியாது அவர் மீது ஓர் மரியாதை ஏற்பட்டது.
இருக்கையில் அமர்ந்த மனிதர் தனது அலைபேசியை எடுத்து பல்வேறு நபர்களிடம் ரயில் கிளம்பிய முதல் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். என் குழந்தைகள் மேல் பர்த்தில் அமர்ந்து சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருந்தனர். என் அம்மாவோ அவளது கீழ் பர்த்தில் படுத்தே விட்டார். என் மனைவி ஜன்னல் ஓரமாக அம்மாவின் தலைமாட்டில் அமர்ந்து வார இதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு பயணம் என்றாலே புத்தகம் படிக்க மிகவும் ஆசை. நான் வழக்கம் போல எனது திறன்பேசியில் தஞ்சம் புகுந்தேன். அவர் பேசியதையும் அவ்வப்போது கேட்டேன். குடும்பத்தினரிடம் பேசினார், பிறகு தனது ஆதிக்கத்தை காட்டும் விதம் சிலரிடம் பேசினார். இதற்குள் நானும் என் மனைவியும் இவர் எதற்கு ஸ்லீப்பர் கோச்சில் வருகிறார்? என்று டெலிபதி மூலம் பேசிக் கொண்டோம். அது புரிந்ததைப் போல அவர் என்னை நோக்கி, “தம்பி, அவசரமா கிளம்ப வேண்டியதா போச்சு, ஃபர்ஸ்ட் கிளாஸ், ஸ்லீப்பர் ரெண்டுத்துலையும் டிக்கெட் போட்டிருந்தேன், கழுதை இது கன்பார்ம் ஆயிடுச்சு, ஃபர்ஸ்ட் கிளாஸ் வெயிட்டிங்லயே இருக்கு,” என்று கூறிவிட்டு மீண்டும் அலைபேசியில் பேசினார்.
சிறிது நேரம் பொறுத்து, ஓர் வாழை இலை பொட்டலத்தை எடுத்து, கட்டிவந்த இட்லி சட்னியை சுவைத்து சாப்பிட்டார். “நீங்கல்லாம் சாபிட்டாச்சா தம்பி?” என்று நடுவில் ஒருமுறை விசாரித்தார். ‘ஆம்’ என்று நான் தலையாட்டவும், ஒருவித திருப்தியுடன் இலையை மடித்து எடுத்துக் கொண்டு கழிப்பறை நோக்கி மெதுவாக நடந்து சென்றார். அவருக்கு எண்பது வயது இருக்கக்கூடும். இம்முறை டெலிபதி இன்றி என் அம்மா வாய்விட்டே புலம்பினாள், “இவ்வளவு வயசானவங்க எல்லாம் நல்லா நடமாடிட்டு இருக்காங்க, உங்க அப்பா, அறுபத்தி அஞ்சு வயசு கூட ஆகல, இப்படி போய் சேரணுமா?” என்று. அம்மாவை அமைதியாக இரு என்று செய்கை காட்டினேனே தவிர, என் மனதிலும் அந்த எண்ணம் எழத்தான் செய்தது.
ஓடும் ரயிலில், தத்தித் தடுமாறி, பத்து நிமிடம் கழித்து தன் இருக்கையில் வந்து அமர்ந்த அவர், தனது சட்டை பாக்கெட்டிலிருந்த பழுப்பு உரையிலிருந்து நான்கைந்து மாத்திரைகளை கையில் போட்டுக்கொண்டு தண்ணீர் கொண்டு விழுங்கினார். பிறகு, ஒரு பத்து நிமிடம் எங்கள் அனைவரையும் உற்று நோக்கினார். திடீரென என் மனைவியைப் பார்த்து அவர் அணிந்திருந்த வேட்டியை நகர்த்தி , “இரண்டு முட்டிலையும் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன், ஒண்ணு தேவலாம், இன்னொண்ணு இன்னும் செட் ஆகல. ஒரு முட்டிக்கு தங்க ஜாயின்ட், இன்னொண்ணு வெள்ளி. அதுல பாருங்க, அந்த தங்க ஜாயின்ட் போட்ட முட்டி தான் இன்னும் சரியா உக்காரல,” என்றார். அவள் பாவம் அதிர்ந்து போய் என்னை பார்த்தாள். அவரும் அவளது பீதியை புரிந்து கொண்டதைப் போல எங்கள் இருவரையும் பார்த்து இப்போது பேசத் தொடங்கினார்.
ஏற்கனவே சட்டையின் மேல் இரண்டு பட்டனை திறந்து விட்டிருந்த அவர், இப்போது அதனை மேலும் விலக்கி, ஹனுமானைப் போல என் மனைவிக்கும் எனக்கும் நெஞ்சைத் திறந்து காட்டினார். நடுவில் நீள கோடு ஒன்று ஓடியது. “போன வருஷம் பைபாஸ் பண்ணினாங்க தம்பி, உசுரு போயிட்டு வந்திருச்சு,” என்றார். “ஒரு பத்து வருஷம் முன்னாடி லங் கேன்சர் வேற இருந்துச்சு தம்பி. கழுதை, அப்பவே நான் போய் சேர்ந்திருக்க வேண்டியது. ஆபரேஷன், கீமோ தெரபின்னு வெச்சு செஞ்சுட்டங்க!” என்று கூறி தலையை இருபக்கமும் அசைத்தார். நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். இதில் டெலிபதி வேறு அவருக்கு புரிந்துவிடுகிறது, அதனால் கூடியமட்டில் என் மனைவியின் முகத்தைப் பார்க்காமல் சமாளித்தேன்.
“எதுக்கு உங்க கிட்ட சொல்லறேன்னா தம்பி, என் ஃபோன்ல நான் கடைசியா பேசின ரெண்டு பேர் என் பொண்ணும், பொண்டாட்டியும். சென்னையில் தான் இருக்காங்க. நான் அடிக்கடி தனியா தான் பயணம் செய்யணும், வேற வழி இல்ல. எனக்கு ஏதாவது ரயில்ல ஆயிடுச்சுன்னா அவங்களுக்கு தெரிவிச்சுடுங்க தம்பி.” என்றார் அவர். இது என்னடா நூதன கோரிக்கையா இருக்கேன்னு நான் பார்த்தா, அவர் அவளின் மகளை போனில் அழைத்து, “இங்கன ஒரு தம்பி, குடும்பத்தோட சென்னை வருது, சதீஷ்னு பேரு, எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா உன்ன கூப்பிடும் என்ன!” என்று கூறிவிட்டு நிம்மதியாக கண்ணயர்ந்தார்.
எனக்கு தான் வியப்பு மாளவில்லை. ஒரு பக்கம், ‘இப்படியும் ஒருவரா!’ என்று ஆச்சரியம், மறுபக்கம், ‘கடவுளே! அவருக்கு ஒன்றும் நேர்ந்து விடக்கூடாது!’ என்ற பயம். இரண்டும் என்னை பிச்சுத் தின்றது. அவரைப் பற்றிய எண்ணங்கள் என்னை ஆட்கொண்டிருக்க, என் செல்பேசியின் சத்தம் என்னை நிகழ் காலத்துக்குத் இழுத்தது. “தம்பி, நியூஸ் பார்த்தீங்களா? ராமேசுவரம் போற ரயில்ல பெரியவர் ஒருத்தர் செத்துப் போயிட்டாரு! போலீசுக்கு அடையாளம் தெரியலையாம். அதுக்குத் தான் தம்பி உங்க கிட்ட அன்னிக்கு அப்படிச் சொன்னேன். சாவுலையும் நம்ம தயாரா இருக்கணும்,” என்று கூறினார் நான் ரயிலில் சந்தித்த அந்த பெரியவர்.
“கடவுளின் பயங்கர ஏமாற்றத்துக்குக் குறைந்தபட்சம் அவரிடமிருந்து ‘திடீர் மரணம்’ எனும் அதிர்ஷ்டப் பரிசு லபிக்குமெனில் இழைக்கப்பட்ட துரோகமனைத்தையும் மறந்து அவரை கருணாமூர்த்தியென போற்ற சித்தமாகிறார்கள் முதியவர்கள்.” என்று நான் எப்போதோ படித்த சுந்தர ராமசாமியின் வரிகள் நினைவுக்கு வந்தது.
000

மஞ்சுளா சுவாமிநாதன்
நான் முதலில் ஓர் வாசகர். கோவிட் ஊரடங்கு எனக்கு புத்தகங்கள் படிக்க ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது. வாஸந்தி, ஜெயகாந்தன், சிவசங்கரி, ரசவாதி, எஸ்.ரா ஆகியோரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இப்போது தமிழில் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறேன். பல்வேறு மாத இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எனது கதைகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரம் ஆகி வருகின்றன. தொடர்ந்து தற்கால சமூகப் பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கதைகள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.