ஊஞ்சவலசு கிராமத்தின் கிழமூலையில் கையோடு வேயப்பட்டு சிதிலடைந்த நிலையில் ரெட்டை கோம்பு வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டின் விஸ்தாரமான தாழ்வாரத்தின் முன்புறம் மாரப்பன் அப்பாரு தனது அந்திம காலத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார்.

கால் முதல் கழுத்து வரை இழுத்து போர்த்தப்பட்ட வெள்ளை வேட்டி, அழுக்கேறிய தலையணை, தலைமாட்டில் நீர் செம்பு, இடது பக்கமாக அப்பாரின் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு பாசிவண்ண தகர பெட்டி ஒரு ஆள் சாதாரணமாக தூக்கி நகர்த்தி விடக் கூடிய அளவில் இருந்தது.

அப்பாரின் மேட்டாங்காட்டு பூமி பட்டயம் அதில் தான் இருந்தது. வானம் பார்த்த பூமி தான் வருடத்தில் ஆடி, ஆவணி மாதங்களில் கெடுவு தவறாது மழை பெய்தே விடும். மீதி நாட்களில் எப்போதாவது தூத்தல் போடுவதோடு நின்று விடும்.

இரண்டு உழவு மழை பெய்தால் போதும் அந்த வருடத்து பண்டங்களை பொருத்து மேவுக்கு தட்டு வேண்டும் என்று சோளம் விதைப்பார். மீதம் இருக்கின்ற இடத்தில் பனிக்கடலை, கொள்ளு, அல்லது பருத்தி போடுவார்.

பருத்தி வியாபாரி ஒன்றுக்கு இரண்டு முறை வீடு தேடி வந்து பருத்தி போட சொன்னால் அவர் முகத்திற்காக காட்டில் கால் பாகத்துக்கும் குறைவாக போட்டு வைப்பார்.

வியாபாரி கோயமுத்தூரில் இருக்கும் ஜின்னிங்க் ஃபேக்டரிக்கு எடுத்து சென்று நல்ல விலைக்கு விற்று விடுகிறார் என்று ஊர் முழுதும் பேச்சு நிலவியது.

பண்ணையத்தின் விஸ்தாரத்தை பொறுத்து, ஆள் பழக்கவழக்கம், பஞ்சில் அடைபட்டு இருக்கும் விதைகள், புழுதி மண் அனைத்தும் பார்த்து தான் விலை நிர்ணயிப்பார். அந்த வியாபாரி சொல்வது தான் இறுதி விலையாக இருக்கும்.

பருத்தி பறிக்கும் நாட்களில் தனது மனைவி மாரக்காளை அழைத்துக் கொண்டு காட்டுக்கு இரவு  தங்கலுக்கு  சென்று விடுவார். மாராக்காள் வேறு யாரும் இல்லை மாரப்பன் அப்பாரின் சொந்த அக்காளின் மகள் தான், பெண் குழந்தை பிறந்த உடனே மாரப்பனுக்குதான் என்று பேசி முடிவு செய்து விட்டு அதற்கு மாரக்காள் என்று பெயரும் வைத்துவிட்டனர்.

தனது மனைவி அணிந்து வந்த பொன் நகைக்கு மேலே இரண்டு பவுனு நகை வாங்கி. அதையும் பத்திரமாக பெட்டியில் பூட்டி வைத்திருந்தார்.

பொளர்ணமி அன்றோடு அடுத்த இரண்டு நாட்களுக்கும் இரவில் பருத்தி பஞ்சுகளை பறித்து துணியில் சுற்றி மூட்டை கட்டி காட்டிலேயே உள்ள சிறிய தென்னங்கிடுகு வேய்ந்த சாளையில் மோளி சேர்த்து அதன் அருகில் படுத்துக் கொள்வார்கள்.

அந்த இரவுக்கு தீ பந்தம், லாந்தர் விளக்கு என எதுவும் தேவைப்படாது. பொளர்ணமி வெளிச்சத்தில் ஒரு கல் தொலைவுக்கு அப்பால் வரும் ஆள் நடமாட்டத்தை கூட கண்டுகொள்ளலாம்.

அப்படியான ஒரு இரவில் மாராக்களிடம்  அப்பாரு சொன்னார் “ரவைக்கெல்லாம் கண்ணு முழுச்சு பருத்தி எடுத்து அந்த வியாவாரி குட்ட குடுத்தா எத்தினி சலீசா கேட்பாம்பாரு” காட்ல பருத்திய போடுனு சொல்றப்ப மட்டும் பல்ல கிஞ்சிட்டு வருவான் பாரு” என்றார்.

” ……”

“இந்த கெடுவு அவனுக்கு குடுக்கறதில்ல புள்ள நேரா வண்டிய பூட்டிட்டு  கோயந்தூரே போயி அந்த சின்னிங் கம்பெனிய கண்டுபிடிச்சு நானே குடுத்துப் போட்டு காசு வாங்கியாராலாம்னு இருக்கேன் “

என்றார்.

“……..”

ஆனால் “அதாரு அத்தன தொலவ வண்டி பூட்டிட்டு போறது” கிளம்பற நாள் அன்று மொடைபட்டு இங்கேய வியாபாரிக்கே கொடுத்து விடுவார். மாரப்பன் தனது பண்ணையம் மற்றும் பண்டங்களின் மீது எப்போதும் கவனமாக இருப்பார்.

மாரப்பன் அப்பாருக்கு நடை தளர்ந்து இத்தனை வயது ஆன பின்பும் காட்டை உழவு ஓட்டி பண்ணையம் பண்ண ஒரு கெடுவும் தனது மூன்று மகன்களில் ஒருவருக்கு கூட விட்டதில்லை.

எந்த கெடுவு என்ன வெள்ளாமை போடலாம், எந்த மாடு கட்டை வண்டி இழுவைக்கு ஆகும், தட்டுப் போர் கோம்பு காட்டுல எங்க போடனும் போன்ற எல்லா முடிவுகளையும் தான் ஒருவனால் தான் சரியாக கணிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்.

அதையும் மீறி மகன்கள் ஏதேனும் யோசனை சொன்னால் சட்டென கோவம் வந்து கண்டபடி பேசிவிடுவார்.

“எனக்கு எப்ப என்ன பண்ணோனும்னு தெரியும் எவனும் வந்து என்றகுட்ட பண்ணாட்டு மசுரு பேசக் கூடாது” என்பார்.

ஊரில் உள்ள  வயசாளிகள் சாவுக்கு போய் வரும் போதெல்லாம் நமக்கும் இந்த கூட்டம் வருமா? காரியங்கள் செய்ய மகன்களில் யார் யார் முன்னுக்கு நிற்பார்கள் மாராக்காளின் மனது எப்படி துடியாய் துடிக்கும் என்று அடுத்த இரண்டு நாட்களுக்கு யோசனையாகவே திரிவார்.

பொளர்ணமி நாளன்று காலை எழுந்ததும் மாரப்பன் அப்பாரு தனது ஊன்று தண்டை தேடி எடுத்து மெதுவாக வீட்டின் முன் இருக்கும் கல் திட்டை மீது அமர்ந்து கொண்டு,

“மாராக்க த்தேம்புள்ள நம்ம தங்கப்ப நேத்து ரவைக்கு வந்து கருக்கருவா வேணும்னு கேட்டு வாங்கிட்டு போனானே என்ன விசயம்….?

“…..”

மாராக்காள் அடுப்பு சாம்பலை ஊதி தட்டி பல் தேய்த்தவாறே யோசனையோடு தனது கணவன் மாரப்பனை ஏறிட்டார். இந்த மனசனுக்கு நினைவு தப்பிப்போய் சில நாட்களாக இப்படி தான் புடித்த புடியாக எதாவது ஒன்று பேசிக் கொண்டே இருக்கிறார் என்று விசனப்பட்டாள்.

அடுத்த நாள் அதிகாலையில் எப்போதும் எழுந்திரித்து கொள்ளும் மாரப்பன் அப்பாரு கிடையாகவே இருந்தார். மாராக்கள் அருகில் சென்று பார்த்த போது அப்பாரு அசைவற்று படுத்துகிடந்தார். அருகில் தனிகுடித்தனம் இருக்கும் தனது பெரிய மகன் தங்கப்பனை அழைத்து வந்து காட்டினாள். “ரவைக்கு வெகுநேரம் பெனாத்திட்டே இருந்தாப்ல. நான் தான் கொஞ்சம் அசதியா இருக்குனு படுத்துட்ட வெடியால எந்திரிச்சு பார்த்தா இப்ப இப்படி கிடக்கிறாப்ல’’ என்று கேவி கேவி அழுதார்.

அப்பாரின் உடலில் மூச்சு மட்டும் இருந்தது. கை கால்கள் அசைவு இன்றி கிடந்தார். அப்பாரின் உயிர் தற்போது நெஞ்சுக்குழி விட்டு ஏறி தொண்டைக்குழியில் இருந்தது. அங்கே மட்டும் காற்றுக் குமிழ் அடைபட்டு மேலே கீழே வருவதும் போவதுமாக இருந்தது.அடுத்த நான்கு நாட்களும் இதே நிலைதான் நீடித்தது. வெறும் நீராகாரம் மட்டும் கொடுத்து வந்தனர். மல சலமெல்லாம் படுக்கையிலே என்று ஆயிற்று. மாராக்காள் தான் முகம் சுளிக்காமல் பார்த்து கொண்டார்.

தனது பழைய சேலையை கிழித்து மாரப்பன் அப்பாருக்கு கோவணமாக கட்டி விட்டார். அடுத்த நான்கு நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று சலக்கண் மாரியம்மன் கோவிலில் சாமியாடி குறிச்சொல்லும் நிகழ்வுக்கு மாரப்பன் அப்பாரின் மூத்த மகன் தங்கச்சாமியை அழைத்துக் கொண்டு மாராக்காள் சென்று இருந்தார்.

ஊர் சாமியாடி மற்றும் பச்சிலை வைத்தியர் நஞ்சப்பன் தனது நீளமான தலைமுடியை பந்து போல சுருட்டி கழுத்துக்கு பின்புறம் கைகளால் முடி போட்டு இருந்தார். நெற்றி நிறைய விபூதி பூசி வெற்றிலையால் சிவந்திருந்த வாயால் ஏதோ ஒன்றை முனுமுனுத்தபடியே இருப்பார். சலக்கண் மாரியம்மன் கோவிலில் திண்ணையில் தான் எப்போதும் இருப்பார். அமாவாசை அன்று நடக்கும் குறி கேட்கும் நிகழ்வில் அக்கம் பக்கம் ஊர்காரர்கள் அதிக அளவில் வருவார்கள்.

சில நேரங்களில் வெள்ளிக்கிழமைகளிலும் குறி சொல்ல அமர்ந்து விடுவார். பல சாங்கியங்களை அந்த ஊருக்கு அறிமுகபடுத்தியவரும் அவர்தான். மாதக்கணக்கில் கோவில் குளங்களுக்கு பயணம் கிளம்பி விடுவார். யாரேனும் குடும்பத்தோடு தெற்கே பழனிக்கோ, வடக்கே காரமடைக்கோ பயணம் செய்ய முடிவு செய்தால் கண்டிப்பாக இவருக்கான கூட்டுவண்டியில் இருக்கை இடம் பெற்றே தீரும். எந்த ஊரில் யார் தோட்டத்தில் தங்கலாம் எங்கே தண்ணீர் கிடைக்கும் எல்லாமே இவருக்கு தான் அத்துபுடி. கோவில் தேடி போகும் இடத்தில் அங்கு இவரைப் போன்ற நபர்களை கண்டு கொண்டு சிநேகம் வளர்த்து அந்த ஊருக்கான பண்டிதங்களை அறிந்து கொள்வார்.

சிறிய அளவிலான கூட்டமே வந்திருந்தது. பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள் தான். “த்தாரு சீக்காளிக்கு நோவு தீரோனும்னு வந்தது” என்று சத்தமாக கத்தினார். கூட்டத்தில் இருந்த மாராகாகாள் முன் வந்து நின்று வணங்கினார். “உம்பிரிசன் கிடை விட்டு எழுந்து வர சாமி உத்தரவு கிடைக்கல. வர அமாவாசைக்குள்ள உம்பிரிசனுக்கு இருக்குற மண்ணாசை, பொன்னாசை, எல்லாத்தையும் தீர்தது விடுங்க சீவன் நிம்மதியா போய் சேரட்டும்”

“அமாவசை தாண்டிச்சுனா அடுத்த ஒரு மண்டலத்துக்கு இந்த சீவனு இழுத்திகிட்டேதான் கிடக்கும். கிடையில விழுந்தது விழுந்தது தான்” என்று மூலி முறித்து சொன்னார்.

நன்றாக நீட்டு போக்கு உடம்புக்கு சொந்தக்காரரான அப்பாரின் அந்திம காலத்தை கண் கொண்டு பார்க்க முடியாமல் அவரது மூன்று மகன்களும் விசனப்பட்டு வீட்டு தாழ்வாரத்திற்குள் வரக்கூட யோசித்தனர்.

கடந்த 15 நாட்களாக படுத்த படுக்கையில் இருப்பதால் அந்த தாழ்வாரமே  மொடை நாற்றமெடுக்க ஆரம்பித்து இருந்தது. மாரக்காளை தவிர அனைவரும் சாமியாடி சொல் பேச்சு கேட்க முடிவெடுத்தனர்.

ஒரம்பரைகள் வருவதும் கலைவதுமாக இருந்தனர். ஆனால் மாரப்பன் அப்பாரின் உடல் கூடு விட்டு போக மறுத்தது.

ஆள் கிடைவிழுந்த வீட்டில் கம்பஞ்சோறு, சோளச்சோறு என எதுவும் பொங்க மாட்டார்கள். மொச்சைப் பயிறுகள் மூட்டை அவிழ்த்து சுடு தண்ணீர் விளாவும் அடுப்பை பற்ற வைத்து உப்பு வேக்காடு போட்டு விடுவார்கள். தேவைப்படும் நேரம் எடுத்து உண்ணலாம், நீண்ட நேரத்துக்கு பசி இருக்காது.

அமாவாசைக்கு முந்தின இரவு மூத்த மகன் தங்கப்பன் சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அமாவாச தாண்டுனா நல்ல சாவா இருக்காதாமா அப்பறம் நம்ம குடும்ப தலையெடுத்து மின்னுக்கு வாரம போயிடுசுன்னா யாருக்கு சங்கட வரும் எங்க ஐயன்பேரு என்னத்துக்கு ஆகுறது ?”

“ஊருக்குள்ள ஆளாளுக்கு ஒன்னுன்னு பேசத்தா செய்வாங்க…?”

“பேசறவன் வந்து மல்லு, பீ துணிய கசக்கி குடுப்பானா?”

“இன்னும் எத்தனை நாளைக்கு எந்த வேலை வெட்டிக்கும் போகாம இவடத்தாளைக்கே குச்சிட்டு இருக்குறது…”

”வழக்கமா நம்மூர்ல நடக்கறது தானே! நாம என்ன ஊர்ல உலகத்துல நடக்காததையா செய்யப் போறோம்”.

மாராக்காள் நிம்மதி இழந்து மகனை பார்த்து “உங்கப்பன இப்படியே இழுத்துட்டு மாசக் கணக்குல ஆனாலுஞ் சரி நா உடமாட்டன்டா? உங்கய்ய இப்படியே கிடையா கிடந்தலும் பருவாயில்லீடா ஒன்னும் பண்ணி போடாதீங்கடா? என்றாள்.

மாரப்பன் அப்பாரின் நடுமகன் ரெங்கன் “ஆத்தா சும்மா இரு அந்த சாங்கியத்த பண்ணி வுட்றலாம் அதுக்கப்புறம் எங்கப்பன் எப்ப போகோனும்னு இருக்குதோ அப்ப போகட்டும்” என்றான்.

அப்பாரின் தலைமேட்டில் அமர்ந்து தலையை மெதுவாக தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டாள் மாரக்காள். இன்னும் உயிர் தொண்டைக்குழியில் தான் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

மாராக்காள் மெதுவாக விசும்பி அழத் தொடங்கி வாய்விட்டு கதறி துடித்தாள். தாய் அழுவதை கண் கொண்டு பார்க்க முடியாமல் தங்கப்பன் தாழ்வாரத்தை விட்டு இறங்கிப் போய் நின்று கொண்டான்.

மகன்கள், மருமகள்கள் நிர்பந்தமும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மல்லுத்துணியை கசக்கிய நினைவும் வாட்டி எடுக்க, தனது வீட்டுக்காரன் இல்லாத காலத்தில் மகன்கள் அவரவர் விருப்பபடி காடு ஓட்டி பண்ணையம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என எண்ணி  கைமுறித்து கடவுளை வேண்டி முதல் சாங்கியமாக அப்பாருக்கு சங்கடையில் பாலூற்றும் நிகழ்வு ஆரம்பம் ஆனது. வரிசை கட்டி மாராக்காள், மகன்கள், பேரப்பிள்ளைகள், இரத்த சொந்தங்கள் அனைவரும் ஆளுக்கொரு மிடறு அளவில் ஊற்றி கடமையை முடித்தார்கள்.

பெரிய மருமகள் கையில் வைத்து இருந்த பால் செம்பில் மாராக்காளின் தங்க சங்கிலியை கழட்டி பாலில் சிறிது உரசி குறைந்த அளவே தான் அப்பாரின் வாயிற்குள் சென்றது. பெரும்பாலும் அது உதட்டோரம் வடிந்து ஒழுகியது பொன்னாசை சாங்கியத்தை இவ்வாறாக முடித்தனர்.

அப்பாரின் காட்டில் இருந்து எடுத்து வந்த மண்ணை சிறிது பாலில் கரைத்து மண்ணாசை விட்டு வைகுண்டம் அனுப்பும் காரியம் செய்யலாயினர்.

தாழ்வாரத்தில் கிடையில் இருந்த அப்பாரை மகன்கள் மற்றும் மாராக்காள் அனைவரும் சேர்ந்து தூக்கி வந்து வெளியில் போடப்பட்டு இருந்த கல்திட்டை மீது அமரவைத்தனர்.

அமர வைக்கப்பட்ட நான்கு பக்கத்தில் இருந்தும் ஆட்கள் மாரப்பன் அப்பாரை பிடித்துக் கொண்டனர், தலை சிறிது தொங்கிய நிலையில் இஸ்திரமில்லாமல் அமர்ந்து இருந்தார்.

ஊர் கிணற்றிலிருந்து சேர்ந்தி இரண்டு மொடா நிறைய குளுந்ததண்ணீரை நிரப்பி வைத்தார்கள். அப்பாரு தலையில் தண்ணீரை மெதுவாக கைவத்து ஊற்றினார்கள், குளிர்ச்சி பட்டதும் உடலை மெதுவாக குறுக்கி சிறிய நடுக்கத்தை காட்டினார். அப்பாரு கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக விழுந்தது.

மாரக்காள் தனது கைக்குழியில் பச்சை அரப்பை வாங்கி கொண்டாள். தண்ணீருடன் குழைத்து உச்சந்தலையில் வைத்து அழுது கொண்டே தேய்க்க ஆரம்பித்தாள். சுற்றி இருந்த ஒரம்பரைகள் விசும்பி அழத் தொடங்கினர். உடலை சுத்தப்படுத்தி புது கோவணம் கட்டுவித்து முன்பிருந்த கிடைக்கே கொண்டு சென்றார்கள்.

அமாவாசை மையிருட்டு அந்த கிராமத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டு இருந்தது. வீட்டுத் தாழ்வாரத்தில் இருந்த சுவர்விளக்கு திரி தூண்டபட்டு எரிந்து கொண்டு இருந்தது. வெளிச்சம் அப்பாரின் முகத்தில் பட்டு சொலிசொலித்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து இருந்த ஒரம்பரைகள் கைகளில் இருந்த  லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்துக்கு சிறு சிறு பூச்சிகள் சுற்றி பறந்து வந்து சூடுபட்டு விழுவதும் பின்பு புதிதாக பூச்சிகள் மீண்டும் பறந்து வந்து சூட்டில் பட்டு இறப்பதுமாக இருந்தது. அந்த இரவில் மாரப்பன் அப்பாரின் தொண்டைக்குழி காற்று அடைபடுவதும் விலகுவதுமான சத்தம் மிக சன்னமாக கேட்டுக் கொண்டே தான் இருந்தது.

இரா.சேனா (புனைப்பெயர்)

எனது பெயர் D.ரமேஷ்குமார் நான் கோயமுத்தூரில் பிறந்தேன். எனது பள்ளி கல்லூரி காலத்தில் கோயமுத்தூரில் இருந்தேன். பிறகு மென்பொருள் துறையில் வேலை கிடைத்தது. பிறகு பெங்களூருக்கு சென்று விட்டேன். தற்போது கரூரில் வசிக்கிறேன். புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். தற்போது தான் எனது அனுபவங்களை கதைகளாக எழுதி கொண்டு இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தும் எனது பள்ளி நண்பர்களுக்கு நன்றி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *