அந்த உயிர்க் கோளத்தில் கதைகள் இல்லாதிருந்தது..!!

அந்த உயிர்க்கோளத்தில் திடீரென அந்தச் சட்டம் அமுலுக்கு வந்திருந்தது. ‘கதைகள் இருப்பு வைத்திருக்காதவங்க காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’.! உயிர்க்கோளமே அழிந்து போகும் அபாயத்திலிருக்கிறதாம்..!! தொடர்ந்து பேரழிவுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது.

இன அழிப்பு ஒடுக்கு முறைகள், ஆழிப்பேரழிவு என பல்கிப் பெருகிவிட்டது.

அதன் காரணங்களை பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து அலசி காரணங்களைக் கண்டபிடித்தபோதுதான் தெரிந்தது… அந்த உயிர்க்கோளத்தில் கதைகள் மிகவும் குறைந்து கொண்டுவருவது கண்டுபிடிக்கப்படிருக்கிறது..!!

இது தொடர்ந்தால் விரைவில் இந்த உயிர்க்கோள சுழற்ச்சியே சுத்தமாக நின்று அழிந்துவிடுவது உறுதியாகி விடுமாம்… விளைவாக..

சட்டம்  கொண்டுவருவது என ஆலோசிக்கப்பட்டு உயிர்க்கோள “அறிவு ஜீவிகளின் மூலமாக அமுல் படுத்தலாம்” எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

இது மூட நம்பிக்கை என்ற எதிர்வாதம் உயிர்க்கோளம் முழுக்கக் கிளம்பியது. ஆதாரம் சாட்சிகளில் சந்தேகங்கள் பதுங்கியிருப்பதாக விமர்சனம் செய்து எதிர்த்தார்கள்.

இது அறிவு சீவிகளின் பிழைப்புவாதம் என கூக்குரலிட்டார்கள். இதுபோல் பல ஆண்டுகளாய் தாங்கள்தான் அறிவு ஜீவிதத்தின் குத்தகைக்காரர்கள் அல்லது உயிர்க்கோளத்தின் எஜமானர்கள் என நிருவிக் கொள்வதற்காகவே இத்தகைய அறிக்கைகளை விடுகிறார்கள் என எதிர்ப்புகள் வலுத்தன.

வழக்கம் போலவே பொதுமக்கள் பாமரர்களாக்கப்பட்டார்கள். அறிவுஜீவிகள் அறிவு ஜீவிகளாகவே தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள்.

வேறு வழியும் இருக்கவில்லை..! உண்மைகள் பல சமயங்களில் அவர்களின் மூலமாகத்தான் பல சமயங்களில் வெளிவரவும் செய்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லைதான் என்றும தங்களுக்குள் குழம்பிக்கொண்டார்கள்.

இவ்விதமான பாகுபாட்டுச்சதியை இயற்கை செய்திருக்காது என்பதில்தான் அவர்களின் குமுறல். ஏனென்றால் உலக உயிரினத்தில் எதுவும் இப்படி தங்களுக்குள் உள் முரண்பாடுகளை வைக்கவில்லை. ஒரு பூனைக்கோ, வவ்வாலுக்கோ தெரிந்திருக்கும் விஞ்ஞானம் உயிர்க்கோள அத்தனைப் பூனைகளுக்கும் வவ்வாலுகளுக்கும் எப்படி ஒரேவிதமாகத் தெரிந்திருக்கிறது..? என்ற கேள்வியோடு அமைந்ததுதான் அவர்களது நியாயம்.

 கண்டங்கள், நாடுகள்,தீவு,தீபகற்பங்கள்,மாநிலம், மாவட்டம், வட்டம், பஞ்சாயத்து, வார்டு என்று துள்ளியமாகப் பிரித்து அவற்றின் அதிகாரிகளாகக் கதைசொல்லிகளை உயிர்க்கோளம் முழுவதும் நியமிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

கதைகள் என்று ஏற்கனவே உள்ளவைகள் எதுவும் கதைகளே இல்லை என்றுதான் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளது. அதனைமட்டும் மககளிடம் மறைத்துவிட்டார்கள் அறிவுஜீவிகள்.

ஏற்கனவே கதைகள் சொல்லத் தெரிந்தவர்களாக அறிமுகமாயிருந்த அறிவுஜீவிகளே தங்களைத்தாங்களே கண்காணிப்பு அதிகாரிகளாக உயிர்க்கோளம் முழுவதுமாக பரவச் செய்தப்பிறகு ஒருவர்கூட மிஞ்சவில்லை கதை தெரிந்தவர்களாக அறியப்பட்டவர்கள்.

மற்ற அத்தனை மனிதர்களும் அந்த அந்தத் துறைகளின வல்லனர்களாக, பொதுப்புத்தி மணிதர்களாகவே இருந்தார்களே ஒழிய அவர்களில் யாருக்கும் கதை சொல்லவோ! கதை கேட்கவோ தெரிந்திருக்க ஞாயமும் இல்லை .!

யாராவது அவர்களுக்குக் கதை சொல்லிக் கேட்டிருந்தாலாவது கதை எப்படி இருக்கும என்றாவது தெரிந்திருக்கும்.!!

திருவள்ளுவர் ஆண்டுப் பண்ணிரெண்டாயிரத்து பண்ணிரணடில் இப்போது திடுதிப்பென்று கடுமையான சட்டம் வேறு போட்டாயிற்று.

இந்தச் சட்டத்தை மறுகாலணிய சதி அல்லது அண்ணிய நிதியின் சதி என்றெல்லாம் குரல்கொடுத்து தப்பிக்க வழி இல்லை .

இது ஆதாரபூர்வமாக “மயிர் 15” பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கு மட்டும் கதை சொல்லவும் கதை கேட்கவும் தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு கதை சொல்லவும் கேட்கவும் தெரிந்திருக்கிறது என்பதே ஒரு வினோதமான சூழ்நிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

யார் கதை சொல்ல உட்கார்ந்தாலும் இது கதை இல்லை என மறுத்து வந்துகொண்டிருந்தார்கள் காலம் காலமாய் குழந்தைகள். அழுது அடம்பிடித்து வந்தார்கள். பின்னர்தான் அந்த அழுகையில்கூட கதை இருக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது.

குழந்தைகளின் செய்கைகளை உற்றுநோக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் இவ்வளவு காலமும் சைகைகளாலும் கண் அசைவுகளினாலும், தொடுதல் தள்ளுதல், குதித்தல், போன்ற எண்ணற்ற அடவுக் குறியீட்டு மொழிகளால் தங்களுக்குள் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை கண்டறியப்பட்டது.

அவர்களிடம் பயிற்சி பெறமுடியாது. அவர்களும் மடத்தனமாக பெரியவர்களாய் வாழ்பவர்களுக்குச் சொல்லித்தருவதாகவும் இல்லை என்பதாய் தீர்மானித்திருந்தது போலிருந்தது அவர்களது நடவடிக்கைகள்.

இந்த இக்கட்டான நிலையில்தான் அறிவு ஜீவிகள் என சொல்லிக் கொண்டவர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக அமர்ந்துகொண்டார்கள்.

பொதுமக்களோ கதைகள் சொல்லவும் கேட்கவும் தெரியாமல் திணறுகிறார்கள்.

அப்படியே காதில் ஈயம் ஊற்றி கொல்லப்பட்டாலும், குழந்தைகள் யாவரும் தப்பித்துக் கொள்வது உறுதியாகிவிட்டது.

எல்லோருக்கும் கதை சொல்ல ஆசை அதிகமாயிருக்கிறதாலே திருட்டுத்தனமா அடுத்தவங்க கதையை அப்படியே திருடிச் சொல்லிர்றாங்க..

எல்லோர் கதைகளும் நல்லாருக்கிற மாதிரி இருக்கு ..

கடைசியில் விசாரித்துப்பார்த்தால் அத்தனையும் திருடியகதைகள்.

அதனால் கதையை திருடு கொடுப்பதுபோல் பாசாங்குபண்ணுற நிறுவனங்கள் நிறையப் பெருத்துப்போச்சு.

கதை சொல்றவங்கள்ளாம் யார் யாரு எந்தெந்த நிறுவனங்களோடக் கைப்பாவைன்னு அந்தந்த நிறுவனங்களுக்கும் தெரியாமல்போனதில் ஆச்சரியமில்லாமல் போனது.

கேட்டால்.. திருடுகொடுப்பதுபோல பாசாங்கு செய்வதும், புதுவகையான அரசியல் பிழைப்பு என்கிறார்கள்..!!

சிறுகுழந்தையாய் இருக்கும்போதே அரசியல் தெறிஞ்சுக்க வேண்டியிருக்கு.. கும்பலாக நாலு பேர் ஒரே கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டாலே அரசியல் ஆரம்பிச்சுடும் என்பது மீண்டும் நிரூபனமாகிவிட்டது.

ஒரு காலத்துலே நாலு குழந்தைங்க தங்களுக்குள் ஒரு மூனுவரிக் கதையை தங்களுக்குள் வழிவழியாக திரும்பத் திரும்ப  சொல்லிக்கிட்டு வரதாலேதான் பெண்ணினமே இன்றுவரை  அடிமைப்பட்டு கிடக்கு.

    “அம்மா வீட்டிலேருந்து சமைச்சு சாப்பாடு போடுவாங்க.. அப்பாவும் தம்பியும் வெளியே போவாங்க “

என்ற கதையை சில ஆயிரம் வருடங்களில்  உலகம் முழுக்க எழுதாத சட்டமாக்கிட்டாங்க …

காரணம் இல்லாமல் ஒரு கதை திருமபத் திரும்ப சொல்லப்பட்டால் சமுக நிறுவனங்களும் மத நிறுவனங்களும் அதைத் தத்து எடுத்துக் கொள்ளும். ஏன்னா ..மக்களால் திரும்பத்திரும்ப பெரும்பான்மையாய் பேசப்பட்டால்தான் நிறுவனங்கள் அதை பிரதிபலித்து ஒரு புதுக்கதையை உருவாக்கி உலவ விடும்.

அந்தக் கதையை ஊதி பெருசாக்கி எல்லோரையும் சொல்ல வைத்தால்தான்  அந்த நிறுவனத்திலிருக்கிறவங்க உழைக்காமல் பிழைப்பு நடத்த முடியும்.

அந்த மெருகூட்டப்பட்ட கதையை கேட்டு எல்லோரும் பிரமிப்பில் ஆழ்ந்திருக்கும்போது, அசந்திருந்த சாக்கிலே அதுவே தன்னைத்தானே சட்டமாக்கிக் கொண்டு நம்மோட மனசுலேயும் புகுந்துகொண்டு செயல்பட ஆரம்பிச்சிரும்.

குழந்தைங்க நினைச்சா எல்லாத்தையும் மாத்த முடியும் .

அதுககு அவங்க புதுசு புதுசா கதை சொல்லனும்.

கதை சொல்றதை எந்த குழந்தைக்கும் கத்துக்கொடுக்க வேண்டியதில்லே…

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துச் சட்ட அமலாக்கக் கெடு சிலநாட்கள் தளர்த்தப்பட்டது.

இல்லையென்றால் எல்லா பெரியவர்களுக்கும் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டியிருக்கும்…

இந்த அழிவிற்கு அந்த இயற்கைப் பேரழிவு எவ்வளவோ தேவலையாயிற்றே…

இந்த தளர்த்தப்பட்ட கெடுநாட்களில் கதை சொல்ல தெரிந்தவர்களாக அறியப்பட்ட உயிர்க்கோளம் முழுக்கவும் உள்ள அறிவுஜீவி கண்காணியர்கள் உதவியோடு கதை கேட்கவும், கற்றுக்கொளள்ளவும் என்றும் சட்டம் தளர்த்தி கெடுநாள் மாற்றியமைக்கப்பட்டது ஒருமனதாக..  குழந்தைகளிடமும் ஆலோசனை பெருமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பிறகு தாங்களாகவே மக்கள் யாவரும் தினம் ஒரு புனைவுகதை உருவாக்கி சொல்லியாக வேண்டும். மற்றும மற்றவரிடமிருந்து ஒரு புனைவுக் கதையைக் கேட்டும் ஆகவேண்டும்.

அதைத்தொடர்ந்து கதைக்கான வரைமுறையில் எந்தவிதமான விதிமுறை மாற்றமும் கிடையாது.

கதை முழுக்க முழுக்க புதியப் புனைவாகவே இருக்க வேண்டும். தழுவலோ, மொழிமாற்றமோ கூடாது. தங்களது துறை சார்ந்ததாக இருந்தாலும் கண்டிப்பாக சுய புனைவு கராராகப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. முழுக்க முழுக்க புனைவாகக்கூட இருக்கலாம்.

குழந்தைகளைப் பொறுத்தவரை  அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அவங்க விரும்புறது எல்லாமே சுதந்திரமா.. சந்தோசமா இருக்குறதுதான்.

எப்படி சுதந்தரமா சந்தோசமாயிருக்கிறதுன்னு அவங்களுக்குமட்டும்தான் தெரியும். ஒவ்வொரு நொடியையும அவங்களுக்குத் தகுந்த மாதிரி மாத்திக்குவாங்க.

           ‘ஓ…’ன்னு கூச்சல் போட்டோ.. எதயாவதுத் தட்டிப்பார்த்தோ உடைச்சுப்பார்த்தோ அதோட விளைவுகளை அனுபவிச்சுக்கொண்டே.. சக குழந்தைகளோடு கூட்டம் கூட்டமாக சந்தோஸமா கதைகளை உருவாக்கிக்கொண்டு அதை நாடகமாக்கி தாங்களே பங்குகொண்டு நாள் முழுக்க காலத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.

உலகத்திலே எல்லா கண்டுபிடிப்புகளும் விளையாட்டுத்தனமா யோசிக்கும்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு…

ஒன்றை போதிக்கும்போது விளையாட்டுத்தனத்துக்கு வாய்ப்பே இல்லாமல் போகும்போதும்… போதிக்கும்போது் விளையாட்டுத்தனமா இருக்கவே முடியாது என்கிறபோதும்.. அந்த போதனையே தேவையில்லையே..!!

போதிக்குறதுக்கு எல்லையில்லாமல் விசயங்கள் உலகத்துலே கொட்டிக்கிடக்குதுங்கிறாங்க..

அப்படின்னா அதைவிட பலமடங்கு விளையாட்டுகளும் கொட்டித்தானே கிடக்கனும்.

எடிசன், கலிலியோ. நியூட்டன, ஐன்ஸ்டீன் எல்லோரும் அவர்களது ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் போதும் ஒரு விளையாட்டு நிகழ்ந்திருக்கனும். அந்த விளையாட்டு என்ன விளையாட்டுன்னு யாரும் அவங்ககிட்டே அக்கறையாகக் கேட்டுப் பதிவு பண்ணவேயில்லே..!!

ஏற்கனவே இருக்கிற விளையாட்டையெல்லாம் விளையாட்டுன்னு சொல்லவே முடியாது.. அதேமாதிரி ஏற்கனவே இருக்கிற கதைகளையெல்வாவற்றையுமே கதைகள்னும் சொல்லமுடியாது.

ஏற்கனவே இருக்கிற விளையாட்டுக்களை மீறி விளையாடுறதும், ஏற்கனவே இருக்கிற கதைகளை மீறி கதை சொல்ல முயலும்போதுதான் ஏற்கனவே இருப்பனவற்றுக்கு ஏதாவது அர்த்தம் கிடைத்து வளர்ச்சி என்ற ஒன்று நீள்கிறது.

வாழ்க்கை  முழுக்க விளையாடிக்கொண்டிருப்பவன் அறிஞன், சாதனையாளன், கண்டுபிடிப்பாளன்.

வாழ்க்கை முழுக்க விளையாடிக்கொண்டோ..  கதைசொல்லிக்கொண்டோ இருக்க யாரையும் நாம் விடுவதில்லை.

நம்மையோ நம் விளையாட்டுகளையோ நம்பாமல் போலியான சமூக நிறுவனங்களை நம்பிக்கொணடிருக்கிறோம். நிறுவனங்கள் எப்போதுமே போதிப்பவை.

போதனைகளில் உள்நோக்கங்கள் நிரம்பியிருக்கும். உள்நோக்கங்கள் யாவுமே நம் மகிழ்ச்சியை காவு கேட்பவைகள். போதனைகளில் சடங்குகள் இருக்கும். சடங்குகளில் பிற்போக்கு சூட்சுமங்களும் பதுங்கியிருக்கும்.

அதிகாரிகளாயிருந்த அறிவுஜீவி கதைசொல்லிகள் பணி தொடங்கியபோதுதான் மிகப்பெரிய அடிப்படை பிரச்சினை ஆரம்பமானது…

பாமரர்கள், பொதுப்புத்தியாளர்கள், பொதுமக்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிற பெரிய பெரும்பாண்மை மக்கள் திரலுக்கு அறிவுஜீவிகள் சொல்லித்தர முயற்ச்சிப்பது கதைகளே அல்ல என்று கண்டுபிடித்ததில் ஆச்சரியமே இல்லாதுபோனது.

இனி எப்படி இந்த பூக்கோளத்தை அழிவிலிருந்து காப்பது என்று அவர்கள் சோர்ந்து போயவிடவில்லை.

தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள  வேண்டிய தருணத்தை ஒட்டுமொத்தமாக உணர்ந்து உடனே உள்ளுணர்வோடு செயல்பட்டு குழந்தைகளை துணைக்கழைத்தார்கள்.

குழந்தைகளும் தங்களது கவுரவப் பிரச்சினையாக இதைப்பார்க்காமல் களமிறங்கி  பெரியவர்களுக்குப் பயிற்சி  அளிக்க ஆரம்பித்தார்கள் .

இந்த இக்கட்டான சமயத்தில் குழந்தைகள் உதவியது  அந்த உயிர்க்கோளம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது

பயிற்சி முடிந்த பொதுப்புத்தி என்ற பாமரர் எனப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த துறைகளில் இருந்தே தங்களுக்கானப் புனைவுகளை தாங்களே உருவாக்கும் அளவுக்கு  முழுமையடைந்தார்கள்.

இது குழந்தைகள் சொல்லிக்கொடுத்தது.

குழந்தைகள் தங்களுக்குக் கிடைக்கும் எளிமையான பொருட்களை வைத்தே பெரிய புராணத்தையே தங்களுக்குள் பகிர்ந்து கொள்பவர்களாயிற்றே ..!!

அறிவுஜீவி  எனப்பட்டவர்களுக்கு இது வினோதமாகப்பட்டது. ஆச்சரியப்பட்டும் போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எந்தத்துறையும் உறுப்படியாய்த் தெரிந்திருக்கவில்லை .

அதனால் பொதுமக்களின் புனைவுகளை அறிவுஜீவிகளால் புரிந்துகொள்ள இயலவில்லை.

ஆனால் மற்ற துறைகளில் இருக்கும் பொதுபுத்தியாளர்கள் என அறிவுஜீவிகளால் அறிவிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு இப்போது கதை பகிர்தல் என்பது இப்போது மற்ற கடமை போல இதுவும் வாழ்க்கை கடமையாக மாறியது.

இப்படியே காலம் உருண்டோடியது.

மருத்துவமனைகளில் டாக்டர்களும் நர்சுகளும் கதைசொல்ல வேண்டியிருந்தது.

அவர்களுக்கு மருத்துவத் துறை தவிர ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புதிய புனைவு கதை உருவாக்கி  சொல்லியாக வேண்டியது கட்டாயம் என்பதால் தங்களது துறையின் நுணுக்கங்களையும்  சிகிச்சை முறைகளையும் கதையாக நோயாளிகளிடம் கூறவேண்டியதாகிவிட்டது.

இதனால் நோயாளிகளும் அந்தக்கதைகள் புதுமையாக இருந்ததால் அதை சக நண்பர்களிடம் சமூகத்தில் கண்டவர்களிட மெல்லாம் கதையாகக் கடத்தி பரிமாறிக்கொண்டார்கள்.

சமீபகாலமாக நோயாளிகளின் பூமியாக மாறிக்கொண்டிருந்து.

இதனால் நாளடைவில் எல்லோருக்கும் மருத்துவம் என்பது பொதுவான எல்லோருக்கும் நன்கு தெரிந்த துறை ஆகிவிட்டது. அதனால் நாளடைவில் மக்களே மருத்துவர்களாகியிருந்தார்கள்.

மருத்துவமனைக்கு காலப்போக்கில் யாரும் சிகிச்சை பெற வருவதில்லை என்றாயிற்று. தாங்களாகவே சுய மருத்துவ முறைகளை செய்து டாக்டர்களாகச் செயல்பட்டார்கள்.

அறுவை சிகிச்சையை கூட அவரகளே செய்துகொண்டார்கள்.

மருத்துவத்துறையில் பொதுமக்களே நாளுக்கொரு கண்டுபிடிப்புக்களை புனைவு கதை சொல்லல் மூலம் கண்டுபிடிககக் காரணமாயிருந்தார்கள்.

இப்படியே உலகின் அத்தனை துறைகளும் துறைகள் மாறி புனைவுக் கதைகளாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்ததாகி விட்டது.

ஒரு காலகட்டத்துக்குப் பிறகு மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டுக் கொண்டிருந்தன.

யாரும் அங்கு செல்லாததால் அந்த நிறுவனங்களில் இருந்தவர்கள் வேறு வழியின்றி தங்களது நிறுவனங்களைக் களைத்துவிட்டு பொதுமக்களோடு கலந்துவிட்டார்கள்.

இப்போது உயிர்க் கோளம் முழுக்க விழிப்புணர்வு அதிகரித்துக் கொணடிருந்தது.

உயிர்க்கோளத்தின் சுழற்சியை பரிசோதித்துப் பார்த்ததில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்ததாக தகவல் வந்திருந்தது. பருவகாலங்கள் தங்கள் பருவ நிலைகளை அந்தந்த நேரங்களில் சரியாக நிகழ்த்தின.

இப்பொழுது எல்லாம்  கதை சொல்லல் என்பது காலப்போக்கில் செம்மைப் படுத்தப்படுத்தப்பட்டு அதி நவீனமாயிருந்தது.

செய்கைகள் மூலமாகவும் குறியீடுகளைப் பயன்படுத்தியும் நவீன நாடகங்களைப் பயன்படுத்தியும் கதை சொல்லல் நிகழ்ந்தது.

இதுவரைக்கும் யாருக்கும் எசசரிக்கை அட்டைகள் வழங்கும் நிலை வந்திருக்கவில்லை. அதனால் ஈயம் காயச்சி ஊற்றும் தண்டனைக்கு அசியமில்லாது போயிற்று.

குழந்தைகள் எல்லாம் தங்களது கதைகளை உன்னத நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள் .

ஒவ்வொரு மனிதர்களின் அசைவிலும் கூட கதைசொல்லல் இருந்தது என்றால் மிகையாகாது.

புதிதாக ஒரு கதை சொல்லல்  முறை உயிர்க்கோளம் முழுக்கவும் பரபரப்பாயிருந்தது.

 இதைகூட குழந்தைகள்தான் கண்டுபிடித்து பரப்பியிருக்கிறார்கள். வெறுமனே உடல் மொழி மூலம் கதை சொல்லிக் கொள்கிறார்கள். அதனால் ஒரு நன்மையும் ஏற்பட்டிருந்தது. எல்லோரும் எல்லோரையும் நுணுக்கமாக உற்று நோக்கிக்கொண்டே இருக்கவேண்டியதாயிற்று. இதனால் சமூக ஒற்றுமை பலமாயிற்று .

அதனால் ஒரு பயமும் உருவானது உண்மைதான். மொழிகளுக்கு வேலையில்லாமல் அழிந்து விடுமோ என்ற பயம்தான்.

ஏனென்றால் அவர்களுக்கு இதுநாள்வரை எதையாவது ஒன்றை பினபற்றியே ஆகவேண்டும்.

ஒன்றைப் பின்பற்றினால் பழையதை மறந்துவிடுவார்கள். அந்த ஒன்று .. அதுவும் அவர்கள் உயர்வாகக் கருதும் இடத்திலிருந்து அமலுக்கு வநதிருக்க வேண்டும். உடனே கண்களை மூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் ஆராயாமல் கும்பல் கும்பலாகப் பின்பற்றும் பொது புத்தி இயல்பிலேயே ஊறியிருந்தது இப்போது வசதியாகப் போயிற்று.

இயல்பிலேயே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அந்த குணம் பொது புத்தியாளர்களிடையே மரபு அணுக்களில் ஊறியிருந்ததால் அவர்களுக்கு எளிதாயிருந்தது.

இது உயிர்க்கோளத்தின் அறிவுஜீவிகள் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வரவேயில்லை.

கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்கள். பொதுபுத்தி சராசரி மனிதர்கள் என்று இதுநாள்வரை பெரும்பான்மை மக்களை ஒதுக்கியே பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

இதில் ஒரு கூத்து என்னவென்றால் இந்த ஆணைபிறப்பித்தவர்களே இந்த அறிவு ஜீவி கும்பல்கள்தான். கடைசியில் அவர்களுக்கே நிர்வாணப்பட்டு நடுச்சாலையில் சவுக்கடிபட்டதுபோல் அவமானமாகிப்போய்விட்டது.

தங்களுக்கே இரண்டு எச்சரிக்கை அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து சாணிப்பட் என்ற இடத்தில் பீப்பாய் கலகம் செய்தார்கள். தண்டணையிலிருந்து தப்பிப்பதற்கு.

அவர்கள்தானே அதிகாரிகளாக உயிர்க்கோளம் முழுக்க பதவியில் இருக்கிறார்கள் என்ற துணிச்சல் அவர்களுக்கு இருந்தது.

தங்களால் சட்டத்தை திரும்பப்பெரும் வல்லமை இருப்பதாகக் கருதி மெத்தனமாக இருந்துவிட்டார்கள் இதுநாள்வரை.

பொதுபுத்தியாளர்களுக்கு அறிவுஜீவிகள் நடத்திய  “பீப்பாய் கலகம்” கொதிப்படைய வைத்தது.

இதுநாள்வரை இவர்கள்தான் உயிரக்கோளம் முழுவதும் தவறான வரலாற்றையும், தவறானக் கல்வித்திட்டத்தையும், உருவாக்கியிருக்கிறார்கள் என்ற கோபம் ஏற்கனவே அவர்களுக்குள் உள்ளுக்குள் அரசல் புரசல்களாக இருந்திருந்தால் இந்த “பீப்பாய் கலகம்” மூலம் கோபம் மேலும் அதிகமாகியது.

கல்வி, நீதிமன்றம், காவல்துறை, டாக்டர், பொறியாளர், மருத்துவத்துறை, பத்திரிக்கைத் துறை ,விஞ்ஞானத்துறை ,மதம், வாணிகம் என்று கும்பல்லாக தனி உடைமை  ஆக்கிய சதியின் உள்நோக்கம் இன்று அவர்கள் உருவாக்கிய அவர்களது சட்டத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டு பொறியில் மாட்டிக்கொண்டதால் கொதிப்பை ஏற்படுத்தியது.

பொதுபுத்தியாளர்கள் உடனடியாக ஒன்று திரண்டார்கள், அறிவுஜீவிகள் குழுவை கலைப்பதற்காக ஒரேசமயத்தில் புனைவுக்கதைகளை உருவாக்கி அவரவர் தங்கள் தனித்தன்மையோடு பரிமாறிககொண்டார்கள் தங்களுக்குள். உடனே அது அடுத்த ஒருமணிநேரத்துக்குள்ளாக மக்களுக்கான ஒட்டுமொத்த தீர்ப்பாக அமலுக்கு வந்தது.

எந்தத் தீர்வு என்றாலும் இப்போதெல்லாம் உடனடியாக புனைவுக்கதைகளை உருவாக்கி உடன் கண்டுபிடித்து தங்களுக்குள் கடத்திக் கொளகிறார்கள்.

விளைவு..

அறிவுகுத்தகைக்காரர்கள் குழு பூமிக்கோளம் முழுவதும் கலைக்கப்பட்டு அவர்களும் பொதுபுத்தியாளர்களாக மாற்றப்பட்டதாய் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டார்கள்.

“சாணிப்பட்”ல் பீப்பாயோடு சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.

அவர்கள் யாவருக்கும் ஈய அட்டையும் கொடுக்கப்பட்டது.

பீப்பாய்களிலிருந்து அவர்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து தனிமைப்படுத்தினார்கள்.

அவர்களுக்கு காதுகளில் ஈயம் ஊற்றி தண்டிப்பதைவிட அவர்களையும் புதியப் புனைவுக்கதைகள் சொல்லவும் கேட்கவும் பழக்கி விடலாம் என மனிதாபத்துடன் முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் சுட்டுப்போட்டாலும் அவர்கள் மாறுவதாக இல்லை. அவர்களுக்கு புதியபுனைவுக் கதைகள் என்பது வரவே இல்லை.

அவர்களுக்கு எப்படி வரும்..!

அவர்கள் எப்பவுமே ‘சொறிந்து விடும் சிரங்கு சிப்பாய்கள்” என்ற நையாண்டி சித்தாந்தத்தின்படி வாழ்ந்து பழகியவர்கள்.

யார் யாருக்கு எவ்வப்போது சொறிதல் ஏற்படும் என்பதையே பாடமாகப் பயின்றவர்கள் அவர்கள்.

தங்களுக்கென ஏதாவது ஒரு பிழைப்பை எப்பொழுதும் சுகமாக வாழ ஏற்ப்படுத்திக் கொள்வார்கள்.

பொதுப்புத்தியாளர்களாகிய அன்றாடங்காச்சிகளின் இன்பச் சொறிதல்கள் தவறான சொறிதல்கள், அதன்மூலம் வரும் புண்கள், சீல்கள், இதுபற்றியெல்லாம் விலா எலும்பு புடைக்கப் பேசுவார்கள் எழுதுவார்கள் இந்த அறிவுஜீவிகள்.

இது பொது புத்தியாளர்களுக்கு தங்கள் சிரங்குகளையும் புண்களையும் வேதனைகளையும் பற்றிய ஞாபகங்களுக்கு உதவிகரமாக இருப்பதால் மேலும் சொறிந்து விடமாட்டார்களா என்ற ஏக்கம் வந்துவிடும் பொதுபுத்தியாளர்களுக்கு. விளைவு..

சொறிந்து விடுபவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும். போட்டியாளர்களும் பெருகிக்கொண்டேயிருப்பாரகள்.

அதே சமயம் இதையே முழுநேரப் பிழைப்பாகவும் மாற்ற முயற்ச்சிக்கமாட்டார்கள். அதற்குக் காரணங்களும் கசப்பாய் இருந்தன.

சொறிந்துவிட சொறிந்துவிட சீழ் அதிகமாகி வலியும் அதிகரிக்கும்போது விலகிக்கொள்வார்கள். தவணைமுறை இன்பச்சொறிதல் தேவைப்படுதல் இருக்கும்வரைதான் இந்மாதிரி பிழைப்பெல்லாம் நடக்கும் என்ற புரிதலில் தெளிவாயிருப்பார்கள்.

அதனால் எச்சரிக்கை உணர்வோடு வெறும் சொறிதலோடு நிறுத்திக்கொள்வார்கள். இதற்காகவே பொதுபபுத்தியாளர்கள் யாவரும் மும்முரமாக புதியப்புனைவுகளை உடனுக்குடன் உருவாக்கி தண்டனைக்கானத் தீரவுகண்டுபிடிக்க முற்ப்பட்டாரகள்.

இப்பொழுதெல்லாம் அந்த பூக்கோளத்தில் ஒரு தீர்வுகிடைக்க வேண்டுமெனறால் அவ்வபபோது புனை கதைகளை நிகழ்த்திப்பார்த்து உடனடியாக தீர்வுகண்டுவிடுகிறார்கள்.

ஒருவழியாக இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. தண்டனைகளுக்கே வேலையில்லாத நிலை வந்துவிட்டது. இது சமத்துவ உலகமாகிவிட்ட பிறகு இவர்களைமட்டும் ஏன் தண்டித்து களங்கப்பட வேண்டுமென முடிவாக அவர்களை தனிமைப்படுத்தி அடையாளம் காண்பதற்காகவும் அவர்கள் தொற்றுநோய்போல் பரவாமல் தவிர்க்க பட்டமளிக்க தாற்காலிகமாக முடிவெடுத்து “காலத்தால் காயடிக்கப்பட்டவர்கள் அல்லது கருத்து மலடுகள்” என்று அடைமொழிப்பட்டம் தரப்பட்டது அறிவுஜீவிகளுக்கு.

இது மீண்டுமொரு சாதீய சமுதாயத்தையோ இனஉருவாக்கத்தையோ உண்டுபண்னும் அபாயம் இருப்பதாக உயிர்க்கோளம் முழுக்க முனுமுனுக்கப்படுகிறது.

ஆனாலும் இது தவிர்க்க முடியாமல் போயிற்று. அந்த உயிர்க்கோளத்தில் இப்போது எந்த நிறுவனங்களுமோ, அரசியலோ இல்லாதிருந்தது. சமத்துவ சமூகமாக மாறியிருந்தது தாற்காலிகமாக.!!.

எஸ்.ராஜன்

வயது:57

ஊர்: திருச்செந்தூர் வட்டம்,

நாலு மாவடி (கிராமம்)

படிப்பு: சென்னை ஓவியக்கல்லூரியில் பெய்ண்டிங் (வண்ணக் கலைப் பிரிவு) 5ஆண்டுகள் பட்டம்.

இன்றுவரை நவீன அகாடமிக் ஓவியர்களுள் ஒருவர்.

1989_ல் கணையாழியில்  ஒரு சின்னக் கவிதை பிரசுரமானது. 1990_ல் தாய் பத்திரிகையில் ஒரு சிறுகதையும்,  1991_ல் மங்களம் என்கிற தமிழ் பத்திரிகையில் ஒரு சிறுகதை வந்துள்ளது.

எப்போதாவது எழுதுகிறேன். தொடர்ந்து எழுத ஆசை. திரும்பவும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *